Pages

Wednesday, November 19, 2025

சலீல்தா ❤️100❤️❤️❤️


இனிக்கும் வாழ்விலே
என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும்
என் தெய்வம் நீ
சலீல் செளத்ரி என்னுமொரு இசை மேதையை அவர் பெயர் உச்சரிக்காமலேயே காலம் தோறும்
கொண்டாடிக் கொண்டிருக்கிறது

“பூ வண்ணம் போல நெஞ்சம்”
https://youtu.be/CzPca6-I6iQ?si=9LY3ufZs_TtG_MlS

அழியாத கோலங்கள் அந்தக் காலத்தில் எழுப்பிய தாக்கம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் என்பதை அதன் அதிர்வலை போலப் பிறப்பிக்கும் இந்தப் பாடல்.

இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் இனம் புரியாதவொரு வலி என்னுள் எழும். சந்தோஷம் மிகுந்தவொரு பாடலில் கூட இப்படியானதொரு கலவையான உணர்வு எழுவதற்கான காரணத்தைத் தேடிக் கொண்டே போகலாம்.

ஆனால் ஒன்று மட்டும் பொதுவானதொரு காரணமாக இருக்கும், அதுதான் கழிந்து போன அந்த அழகிய பால்ய வாழ்க்கை. பசுமை பூத்த அந்த நினைவுகளைக் கிளப்பிவிடுவது கூட ஒரு காரணியாக இருக்கலாம். போருக்கு முந்தி இருந்த நம் தேசத்தின் வாழ்வியலில் கொண்டாடித் தீர்த்த நினைவுகள் எல்லாம் கிளர்ந்தெழும். பள்ளி வாழ்க்கையில் கடந்து போன டீச்சர் ஒருவரைக் கூட ஞாபகப்படுத்தும். ஏன் அந்த மூன்று பையன்களில் ஒருவனைக் கூட நம்மில் பொருத்திப் பார்க்கலாம். ஆற்றில் மூழ்கிச் செத்த இவர்களின் நண்பன் போல நம் சகபாடியும் ஒருவன் இருந்து இறந்து போயிருக்கலாம்.

“நெஞ்சில் இட்ட கோலம்
எல்லாம் அழிவதில்லை
என்றும் அது கலைவதில்லை
எண்ணங்களும் மறைவதில்லை” என்று இதே படத்தில் ஒரு பாட்டு வருமே அது போலவே. சொல்லப் போனால் இந்தப் படத்தின் இந்த இரண்டு பாடல்களுமே உணர்வு ரீதியாக ஒரே மாதிரியான எண்ண அலைகளைக் கிளப்பவல்லவை.

“பூவண்ணம் போல நெஞ்சம்” கேட்கும் போது நஷனல் கசற் றெக்கோர்டரில் றேடியோ சிலோன் கொண்டு வந்த பொங்கும் பூம்புனலில் இந்தப் பாடல் அடிக்கடி சுகம் பரப்பிப் போன காலமும் நினைவுக்கு வரும்.

இன்னமும் “அவள் அப்படித்தான்” படத்தில் வரும் உறவுகள் தொடர்கதை பாடலை ஜெயச்சந்திரன் தான் பாடியது என்று குழப்பிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பாடலைப் பாடிய ஜேசுதாஸ் “பூவண்ணம் போல நெஞ்சம்” பாடலின் மலையாள வடிவத்தைத் தனியே பாடியிருக்கிறார். அதுவும் இன்னொரு வித்தியாசமான சூழலுக்காக. “பூமானம்”
https://www.youtube.com/watch?v=4kpnuJZWttU

என்று தொடங்கும் அந்தப் பாடல் “ஏதோ ஒரு ஸ்வப்னம்” படத்திற்காக இடம் பெற்றது. பாடலின் பின்னணி இசையில் சிறிதே மாற்றக் செய்து கொடுத்திருப்பார் இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி.
“பூவண்ணம் போல நெஞ்சம்” பாடலில் ஜெயச்சந்திரன், P.சுசீலாவின் ஒத்த அலைவரிசையும் பெரிதும் துணை புரிந்திருக்கிறது. பாடல் காட்சிக்கு வாயசைக்குமாற் போல அல்லாது நாயகன், நாயகியை அவர்கள் போக்கில் பயணிக்க விட்டுப் படமாக்கும் பாணி பாலுமகேந்திராவுக்குத் தனித்துவமானது. இந்தப் பாடலிலும் அந்த அழகியலை அனுபவிக்கலாம்.
https://www.youtube.com/watch?v=DwlkE0SijEg

“கோகிலா” கன்னடப் படம் அதனைத் தொடர்ந்து அழியாத கோலங்கள் இரண்டுக்கும் சலீல் சவுத்ரியே பாலுமகேந்திராவோடு கூடப் பயணித்த இசையமைப்பாளர். அழியாத கோலங்கள் படத்தில் இளையராஜா இல்லாத குறைக்கு பாடல்கள் கங்கை அமரன். பதிவு கானா பிரபா
சந்தியா ராகம் படத்திற்கு எல்.வைத்தியநாதன் இசை. மீதியெல்லாம் இளையராஜாவின் இசையோடு பயணப்பட்டவை. அழியாத கோலங்கள் இல் கிட்டிய பாடல்கள் இந்தப் படத்தில் சலீல் சவுத்ரியே ஏக பொருத்தம் என்று காட்டிக் கொள்கின்றன.

செம்மீன் படத்தின் இயக்குநர் ராமு காரியத் “கரும்பு" என்ற மலையாளப் படத்துக்காக சலீல் செளத்ரியோடு கூட்டுச் சேர்ந்த போது இளங்கோவடிகளின் சிலப்பதிகாரப் பாடலான “திங்கள் மாலை வெண்குடையான்" ஐப் பயன்படுத்தினார்கள்.
கே.ஜே.யேசுதாஸ் குரலில்
https://www.youtube.com/watch?v=eayNB4fDH6Y

பி.சுசீலா குரலில்
https://www.youtube.com/watch?v=ZtwYjL1gbuI



பால்ய காலத்தில் மனதில் ஊன்றிப் பதியம் போட்ட இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் இதை அள்ளி வழங்கிய இலங்கை வானொலிக் காலத்தின் பொற்”காலை” நினைவுகள் தானாக எழுந்து பெருமூச்சைக் கொடுக்கும்.
25 வருட வானொலி வாழ்வுக்கு உரம் போட்டவை இந்தப் பாடல்களை வழங்கியவர்கள் அன்றைய வானொலிக்காரத் துரோணாச்சாரியர்கள். அவர்களால் தான் இசையமைப்பாளர் பேதமின்றி எல்லோரையும் ரசிக்க முடிந்தது
“மாடப் புறாவே வா” இதன் இனிமையைக் கரைத்து விடும் அவலம் நிரம்பிய கதையோட்டம் கொண்டது “மதனோற்சவம்" மலையாளச் சித்திரம். அப்படியே “பருவ மழை” என்று தமிழில் வந்து அந்தக் காலத்து யாழ்ப்பாணத் திரையரங்கையும் தட்டிய ஞாபகம்.
கமலைத் தங்கள் தேசத்தவர் என்று இன்றும் உரிமையெடுக்கும் கேரளத்தவர் மண்ணில் அவர் புடமிடப்பட்ட காலத்தில் வந்த படங்களில் ஒன்று.
மலையாளிகளின் இரசனையே விநோதமானது என்பதற்கு இதுவுமொரு சான்று. இல்லையா பின்னே?
இந்தியாவின் ஒரு அந்தத்தில் இருக்கும் மேற்கு வங்கம் தந்த சலீல் சவுத்ரியை இன்னொரு அந்தத்தில் இருக்கும் தம் மண்ணில் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்று இன்று வரை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது சூப்பர் சிங்கர்களில் சலீல் சவுத்ரி இல்லாத வருஷங்கள் இல்லை எனலாம். அவ்வளவுக்கு உச்சத்தில் வைத்திருக்கிறார்கள்.

“மாடப் புறாவே வா ஒரு கூடு கூட்டான் வா”
https://www.youtube.com/watch?v=S3xNcBXDiQE

மலையாள அசலைக் கேட்டாலேயே ஏதோ தமிழ்ப்பாட்டுக் கேட்குமாற்போல இருக்கும். ஓ.என்.வி குரூப்பின் பாடலை கூகுளில் மொழி பெயர்த்தாற் போல அன்றி, ஒரு நிலைக்கண்ணாடியை வைத்துத் தமிழாக்கியது போல கவியரசு கண்ணதாசன் கண்ணதாசன் தமிழாக்கியிருப்பார்.
இந்தப் படம் ஹிந்திக்குப் போன போதும் அங்கேயும் கான கந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸ் தான் குரலாகியிருப்பார்.
அங்கு சென்றும்
https://www.youtube.com/watch?v=MMFAKOUFQV8

அதே ஜீவனைக் கொடுப்பார்.
இசையமைப்பாளர் சலீல் செளத்ரியின் இசைக் கோப்பில் சிக்கல் இராது. சலசலப்பில்லாத தெளிந்த நீரோடை போல இருக்கும்.

மத்திமமான ஸ்தாயியில் பயணிக்கும் அதற்குள் ஏராளம் உணர்வலைகளைப் புதைத்து வைத்திருக்கும்.

“மாடப் புறாவே வா” பாடலைக் கேட்கும் போதெல்லாம் குடும்பமாக இருந்து வானொலி கேட்டு மகிழ்ந்த, அந்த அழகிய காலம் மிதந்து வந்து மனதில் இலேசானதொரு வலியைக் கிளப்பி விட்டுப் போகும்.
நீர் வயல் பூக்கள் போல் நாம் பிரிந்தாலும்
நேர் வழியில் கண்ணே நீ கூட அரும்பு...
பாட விரும்பு...
மடியும் வரை எனது புறாவே..
தேன் வசந்த காலம்
கை நீட்டி, கை நீட்டி
வரவேற்பதால் நீ வா...
மாடப்புறாவே வா...
ஒரு கூடு கொள்வோம் வா..❤️


“கடலினக்கரே போனோரே” , “மானச மயிலே வரூ”
என்று செம்மீன் படத்தின் பிரபல பாடல்களை வழங்கிய சலீல் செளத்ரி தான் இதற்கு இசை. உதவி இசையை ஷியாம் வழங்கியிருந்தார்.

பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடும்
“வலை ஏந்திக் கொள்வோம்”
https://www.youtube.com/watch?v=y4MAh-S8KZk



“உள்ளம் எல்லாம் தள்ளாடுதே”

https://www.youtube.com/watch?v=7pxZqzajmsk

என்று கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடல், ஜேசுதாஸ் குரலில்

“மணி விளக்கா அம்மா”, “செவ்வள்ளிப் பூவே”
என்ற எஸ்.ஜானகி பாடல்,
இவற்றோடு “There is
Rainbow in the distant sky” என்ற பாடலின் ஆங்கில வரிகளை இசையமைப்பாளர் சலீல் செளத்ரியே எழுதி
அவரின் மனைவி, ஜெயச்சந்திரன், ஷெரின் மற்றும் Dr ரவி குழுவினர் பாடியுள்ளனர்.
விஜயகாந்த் முதன்மைக் கதாநாயகனாக நடித்த தூரத்து இடி முழக்கம் திரைப்பட விழா சென்ற கெளரவமும் அவருக்குக் கிட்டியது

பிறக்கும் ஜென்மங்கள்
பிணைக்கும் பந்தங்கள்
என்றென்றும் நீ
https://youtu.be/CzPca6-I6iQ?si=SbhME3Tr8K_2qtBA

பிறந்த நாள் நூற்றாண்டில் (19 November 1925) சலீல்தா எனும் சலீல் செளத்ரி என்ற இசை மகோன்னதனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ❤️
✍🏻 கானா பிரபா
19.11.2025

0 comments: