எங்கே நீயோ
நானும் அங்கே
உன்னோடு….
சுசீலாம்மாவின் பிறந்த நாளை மனசு நினைப்பூட்டியதும் அதுவாக இந்தப் பாடலைத் தான் பாடத் தொடங்கியது.
பாடகருக்கும் நமக்குமான பந்தம் கூட அந்தப் பாட்டு வரிகள் தான்.
ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப்படித் தான் ஆரம்பித்தது அன்றைய நாளும். பியானோ இசைக்கிறது, மெல்ல மெல்ல அந்தப் பியானோ இசை தன் ஓட்டத்தை நிறுத்த முயலும் போது ஊடறுத்து வருகின்றது "உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்" இசைக்குயிலின் குரலைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்த தோரணையில் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆர்ப்பரிப்போடு பியானோ இசை சேர, இந்த முறை சாக்ஸபோனும், கூடவே மெல்லிசை மன்னரின் தனித்துவமான வாத்திய அணிகளான கொங்கோ தாள வாத்தியம் அமைக்க, மற்ற இசைக்கருவிகளும் அணி சேர்க்கின்றன.
உன்னை ஒன்று கேட்பேன் என்று சுசீலா வரிகளுக்கு இலக்கணம் அமைக்கையில் உற்றுக் கேட்டுப் பாருங்கள் கூடவே ஒரு வயலின் அதை ஆமோதிப்பதைப் போல மேலிழுத்துச் செல்லும்.
"தனிமையில் வானம்" "சபையிலே மெளனம்" என்று ஒவ்வொரு ஹைக்கூ வரிகளுக்கும் இடையில் கொங்கோ வாத்தியம் இட்டு நிரவியிருக்கும் அந்த இடைவெளியை.
இந்தப் பாடல் ஒன்றே போதும் மெல்லிசை மன்னர் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்துக் காட்ட
https://youtu.be/ONHG8_zF9K0?si=ifqIl-p9gznP5D8r
இருள் சூழந்ததும் கொல்லையில் சிறுநீர் கழிக்கச் செல்லும் போது கூடவே அண்ணனோ, அம்மாவோ துணைக்கு வரவேண்டிய சிறு பருவம் அது. அந்த நேரத்தில் நிகழ்ந்து நினைவில் ஒட்டாத நினைவுகள் ஏராளம். ஆனால் தசாப்தங்கள் பல கழிந்தும் இன்னும் மனதில் தார் போல ஒட்டிக் கொண்டிருக்கும் நினைவுகளில் அடிக்கடி மீண்டும் மழைக்குப் பூக்கும் காளான் போலத் துளிர்த்துப் போவது " அத்தா.....ன் என்னத்தான் அவர் என்னைத் தான் எப்படி சொல்வேனடி" இலங்கை வானொலியின் இரவின் மடியில் நிகழ்ச்சியில் சுசீலா கிசுகிசுக்கிறார்.
https://youtu.be/4hHz6ap7ViE?si=yZwkhWvdq2yLNYK2
அப்படியே வெட்கம் குழைத்த குரல் அதில் தொக்கி நிற்கும் சேதிகள் ஆயிரம் சொல்லாமல் சொல்லும். இங்கேயும் இசைக்குயில் சுசீலாவுக்கு மாற்றீடைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. "கிறுக்கா", "லூசுப்பையா" என்றெல்லாம் ஏகபோக உரிமை எடுத்துப் பாடும் இந்த நாள் அதிரடிப்பாடலுக்கு முழு நேர்மறை இலக்கணங்களோடு நாணம் கலந்து குழைத்த மெட்டு. குறிப்பா முதல் அடிகளைச் சுசீலா பாடிய ஒரு நிமிடம் கழித்து வரும் இடையிசையைக் கேளுங்கள் அப்படியே குறும்பு கொப்பளிக்குமாற்போலச் சீண்டிப்பார்க்கும் இசை. "அத்தான் என்னத்தான்" மாலை நேரத்து வீட்டு முற்றத்தில் ஈரும் பேனும் எடுக்கையில் நம்மூர்ப்பெண்கள் முணுமுணுத்துப் பாடியதை அரைக்காற்சட்டை காலத்தில் கேட்ட நினைவுகள் மங்கலாக.
பாடல்கள் மீது நான் கொண்ட நேசத்தை மட்டும் புரிந்து கொண்டவர்கள் தமது உறவினர்களின் வீட்டுத் திருமணங்களுக்கு அணி சேர்க்க என்னிடம் திருமணப்பாடல்களைச் சேகரித்துத் தருமாறு கேட்பார்கள். அப்போது நான் ஏதோ ஒரு இயக்குனர் இசையமைப்பாளர் ஒருவரிடம் சிச்சுவேஷன் சாங் போடுங்க என்று கேட்ட தோரணையில் அதீத ஆர்வம் மேலிடப் பாடல்கள் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்துக் கொடுப்பேன். ஆனால் "இதெல்லாம் சரிவராது, நல்ல குத்துப்பாட்டு ரெக்கார்ட் பண்ணித் தாருங்கள்" என்று என் தொகுப்பை நிராகரிக்கும் போது அங்கீகரிக்கப்படாத புது இசையமைப்பாளரின் உணர்வோடு மனதைத் தொங்கப் போடுவேன். ஆனால் சிலபாடல்கள் நான் ரசிக்க மட்டுமே என்று கேட்டுக் கேட்டு அனுபவிப்பதுண்டு. அந்த ரகமான பாடல் தான் இது.
"வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி" என்று நிதானித்து ஆரம்பிக்கும் இந்தப் பாடலைக் கேட்க ஆரம்பியுங்கள். அப்படியே பிரமாண்டமானதொரு மனம் ஒருமித்த கல்யாண வீட்டை உங்கள் மனம் மெல்ல மெல்லக் கட்டத் தொடங்கும். ஒவ்வொரு வரிகளும் அந்தக் காட்சிப்புலத்தை உணர்ந்து பாடும் வரிகளாக அழுத்தமாகப் பதித்திருப்பார் இசையரசி பி.சுசீலா.
இங்கும் வழக்கமான எம்.எஸ்.வியின் ஆவர்த்தனங்கள் தான், ஆனால் மணமேடையின் காட்சிப்புலத்துக்கு இயைவாக ஒலிக்கும் நாதஸ்வர மேள தாளங்கள் பொருந்திப் போகும் இசைக் கூட்டணி.
https://www.youtube.com/watch?v=e2Fod2T0ZDQ
"காத்திருந்த மல்லி மல்லி பூத்திருக்கு சொல்லிச் சொல்லி " மல்லுவேட்டி மைனர் படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் என்றாலும் நீங்கள் அதிகம் கேட்டிராத பாடல் வகையறா இது என்பது எனக்குத் தெரியும், அதைப் போல நான் அடிக்கடி கேட்கும் அரிய பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இந்தப் பாடலை அதிகம் கேட்டு நான் வளரக்காரணம் சென்னை வானொலியில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஞாயிறு தோறும் நான்கு மணி வாக்கில் வந்து போன "நேயர் விருப்பம்" நிகழ்ச்சி. ஷெனாய் வாத்தியத்தை சோகத்துக்குத் தான் சங்கதி சேர்த்து திரையில் கொடுப்பார்கள். விதிவிலக்காக பாவை விளக்கு படத்தில் வரும் "காவியமா நெஞ்சின் ஓவியமா" என்ற சந்தோஷப் பாட்டுக்குப் பயன்படுத்தினார்கள். அதே வரிசையில் காதல் பூத்த யுவதியின் சந்தோஷக் கணங்களாய் வரும் "காத்திருந்த மல்லி மல்லி" என்ற பாடலில் அடியெடுத்துக் கொடுப்பதும் இந்தக் ஷெனாய் இசைதான்.பதிவை எழுதியவர் கானா பிரபா
ஒரு பதினாறு வயதுப் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோரணையில் தன் குரலினிமையை இந்தப் பாடலில் காட்டிச் செல்லும் சுசீலா இந்தப் பாடலைப் பாடும் போது அவருக்கு 55 வயது என்று சொன்னால் தான் நம்புவீர்களா? (அவர் பிறந்த ஆண்டு 1935, இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1990)
இந்தப் பாட்டின் இசையில் இப்படி ஒரு வரிகள் வரும்
"ராசா நீங்க வரம் கொடுத்தா படிப்பேன் ஆராரோ" (1.35 நிமிடத்தில்) அந்தக் கணம் பின்னால் முறுக்கிக் கொண்டு தபேலா இசையைக் கேட்டுப்பாருங்கள், இசைஞானி இந்த வாத்தியத்தை ஓடிக்கொண்டிருக்கும் இசையில் பெண் குரல் ஒலிக்கும் போது மட்டும் வித்தியாசப்படுத்திப் பயன்படுத்திய இலாவகம் புரிந்து நீங்களும் ரசிப்பீர்கள் மீண்டும் மீண்டும்.
https://youtu.be/cnvfl_TUFMY?si=6mNkgFq6GyzF2cWI
இந்த நான்கு முத்தான பாடல்களுமே போதும் நான்கு பரிமாணங்களில் பி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும் என்று.
இனி எனக்குப் பிடித்த சில பாடல் தொகுப்புகள்
இவை மட்டும்தான் என்றில்லை ஆனால் முந்திக் கொண்டு என் பட்டியலில் வருபவை இவை
திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில்
1. மன்னவன் வந்தானடி – திருவருட் செல்வர்
2. பூந்தேனில் கலந்து – ஏணிப்படிகள்
3. ஆயிரம் நிலவே வா – அடிமைப்பெண்
4. மயக்கம் என்ன – வசந்த மாளிகை
5. மறைந்திருந்து பார்க்கும் – தில்லானா மோகனாம்பாள்
6. மாறியது நெஞ்சம் – பணமா பாசமா
7. மனம் படைத்தேன் – கந்தன் கருணை
8. உன்னைக் காணாத கண்ணும் – இதய கமலம்
9. மலர்கள் நனைந்தன – இதய கமலம்
10. மடி மீது – அன்னை இல்லம்
11. மானல்லவோ கண்கள் தந்தது – நீதிக்குப் பின் பாசம்
12. இதயவீணை – இருவர் உள்ளம்
13. காவியமா – பாவை விளக்கு
14. தேவன் வந்தாண்டி – உத்தமன்
15. கல்யாணக் கோவிலில் – சத்யம்
16. நதி எங்கே போகிறது – இருவர் உள்ளம்
17. சொல்லச் சொல்ல இனிக்குதடா – கந்தன் கருணை
18. ஒருத்தி ஒருவனை – சாரதா
19. கண்மலர் சிரிப்பிலே – குலமகள் ராதை
20. கங்கைக்கரைத் தோட்டம் – வானம்பாடி
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி கூட்டில்
1. கண்கள் இரண்டும் – மன்னாதி மன்னன்
2. அத்தான் என் அத்தான் – பாவ மன்னிப்பு
3. மலர்ந்தும் மலராத – பாசமலர்
4. மயங்குகிறாள் ஒரு மாது – பாசமலர்
5. உன்னை ஒன்று கேட்பேன் – புதிய பறவை
6. என்னை யார் என்று பாலும் பழமும்
7. காதல் சிறகை – பாலும் பழமும்
8. நான் பேச நினைப்பதெல்லாம் – பாலும் பழமும்
9. மாலைப் பொழுதின் – பாக்யலட்சுமி
10. கொடி அசைந்ததும் – பார்த்தால் பசி தீரும்
11. சொன்னது நீதானா – நெஞ்சில் ஓர் ஆலயம்
12. தண்ணிலவு – படித்தால் மட்டும் போதுமா
13. நீரோடும் வைகையிலே – பார் மகளே பார்
14. கண்கள் எங்கே – கர்ணன்
15. ஆலயமணியின் – பாலும் பழமும்
16. முத்தான முத்தல்லவோ – நெஞ்சில் ஓர் ஆலயம்
17. ஆயிரம் இரவுகள் வருவதுண்டு – கற்பகம்
18. நான் உன்னைச் சேர்ந்த செல்வம் – கலைக்கோயில்
19. தங்கரதம் வந்தது – கலைக்கோயில்
20. நெஞ்சம் மறப்பதில்லை – நெஞ்சம் மறப்பதில்லை
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்ததில்
1. எங்கே நீயோ நானும் – நெஞ்சிருக்கும் வரை
2. என்னை மறந்ததேன் – கலங்கரை விளக்கம்
3. காலமிது காலமிது – சித்தி
4. தேடினேன் வந்தது – ஊட்டி வரை உறவு
5. வசந்தத்தில் ஓர் நாள் – மூன்று தெய்வங்கள்
6. மதனமாளிகையில் – ராஜபார்ட் ரங்கதுரை
7. சந்த்ரோதயம் ஒரு பெண் ஆனதோ – சந்திரோதயம்
8. நாளை இந்த வேளை – உயர்ந்த மனிதன்
9. இயற்கை என்னும் – சாந்தி நிலையம்
10. இறைவன் வருவான் – சாந்தி நிலையம்
சங்கர் கணேஷ் இரட்டையர் தந்தவை
1. ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் – சிவப்பு மல்லி
2. பொன் அந்தி மாலைப் பொழுது – இதய வீணை
3. நான் கட்டில் மேலே – நீயா
4. உனை எத்தனை முறை பார்த்தாலும் – நீயா
5. தேவியின் திருமுகம் – வெள்ளிக்கிழமை விரதம்
6. உனது விழியில் – நான் ஏன் பிறந்தேன்
7. வடிவேலன் மனசு வச்சான் – தாயில்லாமல் நானில்லை
8. பூ முகம் – அம்மா
9. அழகிய அண்ணி – சம்சாரம் அது மின்சாரம்
10. நேரம் வந்தாச்சு – தாய் மீது சத்தியம்
இன்னும் பல இசையமைப்பாளர்கள் கொடுத்தவை
1. ஆயிரம் பூக்கள் மலரட்டும் – வி.எஸ்.நரசிம்மன் – ஆயிரம் பூக்கள் மலரட்டும்
2. மனசுக்குள் உட்கார்ந்து – வி.எஸ்.நரசிம்மன் -கல்யாண அகதிகள்
3. ஆவாரம்பூவு – வி.எஸ்.நரசிம்மன் – அச்சமில்லை அச்சமில்லை
4. தானே பாடுதே – வி.எஸ். நரசிம்மன் – கண் சிமிட்டும் நேரம்
5. கண்ணுக்கு மை அழகு – ஏ.ஆர்.ரஹ்மான் – புதிய முகம்
6. மாம்பூவே – சந்திரபோஸ் – மச்சானைப் பார்த்தீங்களா
7. செவ்வந்திப் பூவெடுத்தேன் – சிற்பி – கோகுலம்
8. கூண்டை விட்டு ஒரு பறவை – தேவா – கட்டபொம்மன்
9. கருணை மழையே – ஜி.தேவராஜன் – அன்னை வேளாங்கன்னி
10. வரவேண்டும் மகராஜன் – சக்ரவர்த்தி – பகடை பன்னிரண்டு
11. அந்த சிவகாமி மகனிடம் – கோவர்த்தனம் - பட்டணத்தில் பூதம்
12. இன்பம் பொங்கும் வெண்ணிலா – ஜி.ராமநாதன் - வீரபாண்டிய கட்டபொம்மன்
13. விண்ணுக்கு மேலாடை – நாணல் - வி.குமார்
14. ஒரு நாள் யாரோ – மேஜர் சந்திரகாந்த் – வி.குமார்
15. தாமரைக் கன்னங்கள் – எதிர் நீச்சல் – வி.குமார்
16. உன்னைத் தொட்ட காற்று – நவக்கிரகம் – வி.குமார்
17. அம்மா என்றொரு – பத்தாம் பசலி – வி.குமார்
18. நான் உன்னை வாழ்த்தி – நூற்றுக்கு நூறு – வி.குமார்
19. ஆண்டவனின் தோட்டத்திலே – அரங்கேற்றம் - வி.குமார்
20. தேவன் வேதமும் – ராஜ நாகம் – வி.குமார்
இசைஞானி இளையராஜா இசையில் தனித்துப் பாடியவை
1. கற்பூர பொம்மை ஒன்று (கேளடி கண்மணி)
2. ஏலே இளங்கிளியே ( நினைவுச் சின்னம்)
3. ஆராரோ பாட வந்தேனே ( பொறுத்தது போதும்)
4. சொந்தமில்லை பந்தமில்லை (அன்னக்கிளி)
5. காத்திருந்த மல்லி மல்லி (மல்லுவேட்டி மைனர்)
6. தேனில் ஆடும் ரோஜா (அவர் எனக்கே சொந்தம்)
7. எந்தன் பொன் வண்ணமே (நான் வாழ வைப்பேன்)
8. ராஜா சின்ன ராஜா (பூந்தளிர்)
9. தேர் கொண்டு சென்றவன் ( எனக்குள் ஒருவன்)
10. என்ன சொல்லி நான் எழுத (ராணி தேனி)
11. ஹே தென்றலே ( நெஞ்சத்தைக் கிள்ளாதே)
12. டார்லிங் டார்லிங் (ப்ரியா)
13. கேளாயோ கண்ணா ( நானே ராஜா நானே மந்திரி)
14. காலைத் தென்றல் (உயர்ந்த உள்ளம்)
15. தோப்போரம் தொட்டில் கட்டி (எங்க ஊரு காவக்காரன்)
16. ஆசையிலே (தனித்து) – எங்க ஊரு காவக்காரன்)
17. பூப்பூக்கும் மாசம் (வருஷம் 16)
18. மனதில் ஒரேயொரு (என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்)
19. கானலுக்குள் மீன் பிடித்தேன் (காதல் பரிசு)
20. பூங்காவியம் (கற்பூரமுல்லை)
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல ...
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத
நெஞ்சம் நெஞ்சல்ல…
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இசையரசி ❤️❤️❤️
கானா பிரபா
13.11.2025
ஒளிப்படம் நன்றி : இசையரசி சுசீலா தளம் (மேம்படுத்தப்பட்டது)
Thursday, November 13, 2025
இசையரசி சுசீலா 90 ❤️❤️❤️
Subscribe to:
Comments (Atom)

