Pages

Thursday, June 6, 2024

ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்



https://youtu.be/3gNEWIe-Zxk?si=-nbuoPMWp6vf46DS


இந்தப் பாடலைக் கொண்டாடும் அளவுக்கு, இடம்பெற்ற “ஒரே ஒரு கிராமத்திலே” படத்துக்குப் பின்னால் எழுந்த பெரும் சர்ச்சையை இன்று காலம் மறந்து விட்டது.


சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை விமர்சித்த முதற்படைப்பு என்று கொள்ளப்படும் இப்படம் வெளிவந்த காலத்தில் நீதிமன்றத் தடை வரை போய்த் தான் மீண்டு வந்தது.


காயத்ரி (லட்சுமி) என்ற பிராமணப் பெண், கருப்பாயி  என்ற பெயரை மாற்றி, இட ஒதுக்கீட்டில் அடங்கும் சாதி அமைப்பைச் சேர்ந்தவர் என்று பிறப்புச் சான்றிதழை மாற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மாறி அந்த ஒரே ஒரு கிராமத்திலே மக்களுக்காக உழைக்கும் சூழலில் ஒரு சந்தர்ப்பத்தில் வினுச்சக்கரவர்த்தியின் சவாலில் நீதிமன்ற வழக்கைச் சந்திப்பது தான் கதை.


ஒரே ஒரு கிராமத்திலே படத்தின் முடிவு போலவே, வெளியிட முடியாத தடையாக உயர் நீதிமன்ற வழக்கைச் சந்தித்தது.

முடிவில் பொய்ச் சான்றிதழ் தயாரித்த குற்றத்துக்காக காயத்ரியையும் அவரது தந்தையையும் மூன்றாண்டு சிறைத்தண்டனை அனுபவிப்பது போலக் கதையின் முடிவு மாற்றப்பட்டதால் படமும் வெளியானது.

கூடவே சமுதாயச் சிக்கல்களைப் பேசும் படம் என்ற தேசிய விருதையும் தட்டிக் கொண்டது.



உண்மையில் இது ஒரு அபத்தமான கதைப் பின்னணி. இப்படியான படைப்புகள் மோசடிகளை நியாயப்படுத்தும்.


பொருளாதார இட ஒதுக்கீட்டை மிக வலுவாக வெளிப்படுத்தாத ஒரு படைப்பு இது. இன்னும் ஆழமாகப் போயிருக்க வேண்டும்.


இப்பேர்ப்பட்ட சர்ச்சையோடு உருவான இந்தப் படத்தின் 

கதையை எழுதியது சாட்சாத் கவிஞர் வாலி தான். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என்று பல பொறுப்புகளை இந்தப் படத்தில் அவர் எடுத்துக் கொண்டார்.


இந்த மாதிரியான கதையை இப்போது படமாக்க வேண்டும் என்ற நினைப்பே எழாத அளவுக்கு சமூக விழிப்புணர்வு வந்து விட்டது தான் கால மாற்றம்.

ஒரு சமயம் “ரெட்டை கிளிகள்” பாடலை ராஜா புதிர்ப் போட்டியில் நான் பகிர்ந்த போது இந்தப் படத்தையெல்லாம் நினைப்பூட்ட வேண்டுமா என்று போட்டியாளர் ஒருவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


ஒரே ஒரு கிராமத்திலே படத்தின் கதைப் பின்னணியே தெரியாத அளவுக்கு “ரெட்டைக் கிளிகள்” பாடலும் மூடி மறைத்து விட்டது.

இந்தப் படத்தில் மற்றைய பாடல்களிலும் சாதி ஒழிப்பு, சமதர்மம் பேசப்பட்டாலும் வெகுஜன மட்டத்தில் பரவலாகப் போய்ச் சேரவில்லை.

ஏன் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் “நல்லதோர் வீணை செய்தே” 


https://youtu.be/5BzS2uArmeY?si=bOHLO1Hfs7NfaOIl


பாடலை இன்னொரு வடிவமாகவும் இசைஞானி இளையராஜா கொடுத்திருந்தார். அது கூடப் பரவலாகப் போய்ச் சேரவில்லை.


சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

இந்தப் பதிவை இன்று காலை சிட்னி ரயில் பயணத்தில் எழுதி விட்டு வேலைத்தளத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன்.

ஒரு பழமையான கடை வளாகத்தின் மூலையில் ஒரு மெத்தை அமைப்பில் இருவர் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டே காலை நீட்டுகிறார்கள்.

ஒருவரின் பாதணியை (shoe) துடைத்துக் கொண்டிருக்கிறார் ஒரு பணியாளர். இன்னுமாடா என்று மனதுக்குள் நொந்து கொண்டே வந்தேன்.


கானா பிரபா

0 comments: