பக்கத்தில்
நீயும் இல்லை…..
ஒருவர் நம்மோடு இருக்கும் நேரத்தை விட இல்லாத நேரத்தில் தான் இன்னும் இன்னும் நினைக்கப்படுவார்.
அது நம்மோடு வாழ்ந்த சக மனிதர்கள் மட்டுமன்றி நம்மை உயிரூட்டியவர்களுக்கும் சாலப் பொருந்தும். அப்படி ஒருவர் தான் எங்கள் SPB.
அவரின் இன்மையில் தான் அவர் பாடிச் சென்ற அதுவரை கேட்காத பாடல்களைத் தேடித் தேடிக் கேட்டேன் ட்ரங்குப் பெட்டியைக் கிண்டிக் கிளறிப் பழைய புகைப்பட ஆல்பத்தைத் தேடியெடுத்துக் கேட்பது போலவொரு சுகத்தைக் கொடுப்பார்.
ஒரு பாடலை எப்படி
மனம் திறந்து பாட வேண்டும்
இன்னொரு பாடலை எப்படி
மனசுக்குள் பாட வேண்டும்
என்று பாடமெடுப்பார்.
இசைக் கலைஞர்கள், தன் முன்னோர்கள் தன் சமகாலத்தவர் என்று ;
SPB அளவுக்கு
இசையமைப்பாளர்களைப் பற்றி விலாவாரியாகப் பேசிய யாருமே இல்லை,
SPB அளவுக்கு
இசைக் கலைஞர்களைப் பற்றி விலாவாரியாகப் பேசிய யாருமே இல்லை,
SPB அளவுக்கு
ஒவ்வொரு பாடல்களின் பிறப்புக்கும் பின்னால் உள்ள கதையை யாரும் அதிகம் பேசியதில்லை.
அவர் நம்மோடு இல்லாத இந்தச் சூழலிலும் SPB விட்டுச் சென்ற அவரின் பாடல் நுணுக்கங்களை எத்தனை இசைக் கலைஞர்கள், பாடகர்கள் ஆழமாக ஆய்ந்து பேசுகிறார்கள் என்பது கூடக் கேள்விக்குறியே.
“இசைஞானி இளையராஜா திரையிசைத் துறையில் என்னவெல்லாம் உத்திகள், நுணுக்கங்கள் உண்டோ அவற்றையெல்லாம் நிகழ்த்திக் காட்டி விட்டார், அவர் ஒரு முழுமையான பல்கலைக்கழகம்”
என்று அண்மையில் சாய் வித் சித்ராவில் இசையமைப்பாளர் ரகுநந்தன் சொன்னார் இப்படி.
அதை அப்படியே பாடகர் உலகத்தில் பொருத்தி விட்டால் சர்வ இலட்சணமும் SPB க்கே பொருந்தி நிற்கும்.
ஒவ்வொரு பாடல்களிலுன் அந்தந்த ஜீவனைக் கொடுக்கத் தன் ஜீவனை அவர் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்.
“ஒரு பாடல் பாட வந்தவர்
நம் பாடல் ஆகிறார்”
SPB யின் ஒவ்வொரு பாடல்களைக் கேட்கும் போதும் அவர் உயிர் பெற்று நம்முள் ஊடுருவுகிறார்.
உயிர் பிரிந்தாலும்
நடமிடுவேனே 🙏
SPB ❤️
கானா பிரபா
25.09.2023
0 comments:
Post a Comment