அமைதிப்படை
மகா நதி
ராஜகுமாரன்
வீட்ல விசேஷங்க
சேதுபதி ஐ.பி.எஸ்
இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இசைஞானி இளையராஜாவின் இசைப் பங்களிப்பில் வெளிவந்த படங்கள்.
இப்போது நினைத்துப் பார்த்தால் ஒரு பிரமிப்பை எழுப்பக்கூடிய யுகத்தைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதைத் தற்காலச் சூழலோடு ஓப்பிட்டு வியக்க முடிகிறது. இது அன்றைய பொங்கலுக்கு மட்டுமல்ல 25 ஆண்டுகளுக்கு முந்திய தீபாவளிகள், தைப்பொங்கல்கள், சித்திரைப் புத்தாண்டுகள் என்று இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டுகளோடு ஒரு சேரப் படங்கள் வெளியாகிப் பட்டையைக் கிளப்பியிருக்கின்றன.
இதை single, single ஆகப் பாடல் வெளியிடும் இக்காலத்தில் மட்டுமல்ல இனி எக்காலத்திலும் நினைத்தே பார்க்க முடியாத சாதனை என்ற அளவிலேயே வைத்துப் போற்ற முடிகிறது.
இம்மட்டுக்கும் இம்மாதிரித் தொகையாக வரும் படங்களின் பாங்குகளைப் பாருங்கள். உதாரணத்துக்கு 1994 ஆம் ஆண்டுப் பொங்கல் படங்களை எடுத்துக் கொண்டால் “மகா நதி” ஒரு துன்பியல் பின்புலத்தோடு நகரும் குடும்பச் சித்திரம், “அமைதிப் படை” எக்காலத்து அரசியலோடும் ஓப்பு நோக்கக் கூடிய முழுக்க முழுக்க யதார்த்தம் மிகுந்த உதாரணங்கள் கொண்ட அரசியல் நையாண்டி, “ராஜகுமாரன்” ஒரு நட்சத்திர நாயகனின் நூறாவது படம் எனவே எல்லாவிதமான பொழுது போக்கு அம்சங்களும் கலந்திருக்க வேண்டியதொரு படைப்பு, “சேதுபதி IPS” ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் டயரி, பாக்யராஜ் தனமான என்ற அளவுக்கு முத்திரை பதிக்கும் குடும்பச் சித்திரங்கள் வரிசையில் “வீட்ல விஷேசங்க”.
இந்தப் படங்களை எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு கதைக்களமும் ஒவ்வொரு நிறம். அந்த நிறத்தைத் தூக்கி நிறுத்துவது இசை என்ற ஆதார வேர் என்ற அளவுக்கு இசைஞானி இளையராஜாவின் இசை இயங்கியிருக்கிறது.
ஒரு மனிதன் எப்படிச் சட்டுப் புட்டென்று தன் சுபாவத்தை மாற்றிக் கொண்டு நகர முடிகின்றது என்ற ஒரு யதார்த்த உலகின் வியப்பை, இளையராஜாவின் இசையிலும் எழுப்ப முடிகிறது. இந்தப் படங்களுக்கெல்லாம் இசையமைக்கும் போது ஒரு குறுகிய கால இடைவெளியில் மனுஷர் எப்படித் தன் இயல்பை நொடிகொரு தரம் மாற்றி இன்னொரு படைப்பில் இறங்கி வித்தியாசப்பட்டு நிற்கும் இசைக் கோவையைப் படைக்க முடிகிறது? இது சாதாரணர்களின் உலகில் நினைத்துப் பார்க்க முடியாதவொரு பண்பும், உழைப்பும்.
“சொல்லி விடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற சேதிகளையே” அமைதிப் படை படத்தின் மொத்தம் ஆறு பாடல்களில் என்னமோ திரையில் காட்சிப்படுத்தாத இந்தப் பாடல் தான் காலத்தைத் தாண்டிப் பரவலாக நிலைத்து நிற்கின்றது. தொடர்வது “முத்துமணித் தேர் இருக்கு”. இந்தப் பாடல்களை விட அமைதிப் படை படத்தில் ஒரு வரண்டதொரு போக்கில் நகரும் அரசியல் படத்துக்குத் துணை நின்றது இளையராஜாவின் பின்னணி இசை.
அமைதிப் படை பாடல்களைக் கேட்க
“சின்ன வீடு” படத்துக்குப் பின் தொடர்ந்த ஆண்டுகளில் இசையமைப்பாளராகவும் இயங்கிய பாக்யராஜை மீண்டும் இளையராஜாவின் கூடு திரும்ப வைத்தது பஞ்சு அருணாசலம் தயாரித்த “ராசுக்குட்டி”. அதன் பின் மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் பாக்யராஜ் இளையராஜாவோடு சேர்ந்தது பாக்யராஜே தயாரித்து இயக்கிய “வீட்ல விசேஷங்க” படத்தின் வழியாக. முதலில் மலையாள இயக்குநர் பாலசந்திர மேனன் இயக்குவதாக இருந்த படம் இது. எண்பதுகளின் நாயகி விஜிக்கு மீள் வரவு என்பதோடு பிரகதி, மோகனா என்ற இரண்டு அறிமுகங்கள். சுரேஷுக்கு கெளரவமான வேடம்.
அந்தக் காலத்து ஒலி நாடா யுகத்தில் தேயத் தேயக் கேட்டுக் குளிர்ந்த பாட்டு “மலரே தென்றல் பாடும் கானம் இது”. அருண்மொழி & எஸ்.ஜானகி ஜோடிப் பாட்டுத் தான் அந்த வயசுக்கு அப்போது இன்னும் இனித்தது. ஜேசுதாஸ் ஒற்றையாகப் பாடிய அதே பாடல் பின்னாளில் பிடித்தது. இப்போதோ “பூங்குயில் ரெண்டு ஒண்ணோட ஒண்ணாச் சேர்ந்துச்சாம்” பாடலில் தான் கட்டுண்டு கிடக்கிறது.
“கொஞ்சம் சங்கீதம்” என்று எஸ்.ஜானகிக்கும், “ஜிங்கான் ஜினுக்குத்தான்” என ஸ்வர்ணலதாவுக்கும், “இந்த பஸ்ஸு தான் PTC” என்று மால்குடி சுபாவுக்குமாக மூன்று பெண் குரல்களுக்குத் தனித் தனிப்பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் பாருங்கள்.
வீட்ல விசேஷங்க பாடல்களைக் கேட்க
எப்படி “இந்த பஸ்ஸு தான் PTC” வீட்ல விசேஷங்க படப்பாடலின் அந்தத் துள்ளும் இசையை ஓட விட்டுத் தாளம் தட்டி ரசித்தோமோ அது போல “சாத்து நடை சாத்து” என்று சேதுபதி IPS கதவைத் தட்டியது. காவல்துறை அதிகாரியின் கதைப்புலத்தில் ஒரு நீரோட்டம் போலப் பாய்வது படத்தின் பாடல்கள். “வண்ணமொழி மானே” என்று ஜேசுதாசுக்கு மட்டும் ஒரேயொரு பாடல் இட ஒதுக்கீடு செய்து விட்டு மீதி நான்கு பாடல்களும் நான்கு முன்னணிப் பாடகிகளுக்கு. “விடியும் நேரம்” (சுனந்தா) பாட்டு இன்னமும் அதிக வெளிச்சம் பட்டிருக்க வேண்டிய, பள்ளிகளில் கீதமாக இசைக்கக் கூடிய மாசற்ற கீதம், “மழலை என்று” (சித்ரா) திரையிசையில் இன்னொரு குழந்தைப் பாட்டு என்று சேதுபதி IPS இசை
இன்னொரு தளத்தில் மின்னியது.
சேதுபதி IPS பாடல்களைக் கேட்க
இந்த வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் படங்களில் இன்றைக்கும் உலகத் தமிழ் வானொலிகளில் வாரத்துக்குக் குறைந்த பட்சம் ஒருமுறையாதல் தீனி போடுவது “ராஜகுமாரன்” படப் பாடல்கள். அத்தனை பாடல்களும் தித்திக்கும் முத்துகள். நடிகர் பிரபுவின் 100 வது படம், சிவாஜி புரடெக்ஷன்ஸ் தயாரிப்பு, தொடர்ந்து நட்சத்திர நாயகர்களை வைத்துப் பெரு வெற்றி போட்டுக் கொண்டிருந்த ஆர்.வி.உதயகுமார் இயக்கம் என்று பரபரப்பைக் கிளப்பிய படம்.
திரும்பிய பக்கமெல்லாம் சுவர் விளம்பரங்கள், பஸ் தரிப்பு நிலையங்களைக் கூட விட்டு வைக்காத சோடனைகள் என்று ராஜகுமாரன் படத்துக்கான விளம்பரங்கள் இப்படியாக என்னுடைய அம்மாவின் சிறிய தந்தை அப்போது சென்னை போய் விட்டுத் திரும்பியவர் பிரமிப்போடு சொன்னார் அப்போது.
அதிக எதிர்பார்ப்பே இந்தப் படத்தை மண் கவ்வ வைத்தாலும் பாடல்களில் குறை வைக்காத திரவியம் இது.
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை, காட்டிலே கம்பங்காட்டிலே, சித்தகத்திப் பூக்களே,பொட்டு வச்சதாரு, ஆடி வரட்டும் மயிலைக்காளை, சின்னச் சின்னச் சின்ன்ஸ் சொல்லெடுத்து என்று கேட்டுக் கொண்டே இருக்கலாம். மஞ்சள் நிறத் தவளை என்று வாலியைக் கிண்டலடித்து வைரமுத்து ஜல்லியடிக்கவும் “என்னவென்று சொல்வதம்மா” பயன்பட்டது.
ராஜகுமாரன் பாடல்கள்
“தைப்பொங்கலும் வந்தது” என்ற மகாநதி படப் பாடல் பின்னணியில் ஒலிக்க, நேற்று தமிழ் நாட்டின் ஒரு குக்கிராமத்தில் பொங்கல் விழாக் கொண்டாடியதை ஒரு செய்தித் தொலைக்காட்சியில் பார்த்து நெகிழ்ந்தேன். பண்டிகை தோறும் இம்மாதிரி ஆதார சுருதி ஒன்றை நினைவுபடுத்தும் பாடலைக் ஓடுது விட்டார் ராஜா.
“ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி” என்றும் “பேய்களா பூதமா” என்றும் ஒரு அழகான குடும்பத்தின் நிலைக்கண்ணாடியாக இசை நின்று நிறுவிய அதே வேளை
“தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது ..
செவ்வானம் மின்னல் வெட்டி மண் மீது வீழாது...”
என்று இன்னொரு தளத்தில் போய் நின்று
“அன்பான தாயை விட்டு
எங்கே நீ போனாலும்
நீங்காமல் உன்னைச் சுற்றும்
எண்ணங்கள் எந்நாளும்”
என்று வலி மிகு தருணங்களை நதியில் அலைக்கலைந்து இழுத்துச் செல்லும் மரக்கிளையாய் அந்த அழகிய குடும்பம் சிதறிப் போகும் போது கண்ட வலியை மீண்டும் பார்க்கும் திராணியே இல்லாது இருப்போரைக் கண்டிருக்கிறேன். ஆம் மகாநதியை இன்னொரு தரம் பார்க்க விரும்பாதவர்களே அதிகம். அவ்வளவுக்கு அது அவர்களை ஆக்கிரமித்து விட்டது.
படத்தோடு பயணிக்கும் பின்னணி இசை அந்த வலியை இன்னும் உள்ளிழுத்து வெளிக் கொணர்ந்தது.
மகா நதி என்ற காவியம் தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத கலைச் சித்திரம். பழம் பெரும் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரிப்பில் மகாநதி ஷோபனாவை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய படம். அத்தோடு சங்கீதாவுக்கும் ஒரு வாழ்நாள் படமிது.
தைப்பொங்கல் போன்ற
ஒரு பண்டிகை நாளில் இவ்வளவு துயரம் தோய்ந்ததொரு காவியத்தை வெளியிடும் துணிச்சல் எப்படி எழுந்தது என்ற வியப்பு 25 வருடம் கடந்து இன்னும் மாறவில்லை. கமல்ஹாசன் என்ற ஒப்பற்ற நாயகனின் தேடலில் இன்னொரு மைல்கல்.
இளையராஜா என்ற மகா கலைஞனின் ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரிச் சாதனைகளோடு நிரப்பப்பட்டிருக்கிறது. மகாநதி கமலுக்கு மட்டுமல்ல இளையராஜாவுக்கும் தீனி போட்ட படம்.
மகா நதி பாடல்கள்
இந்தப் படங்கள் ஒவ்வொன்றையும் பற்றி, அவற்றின் இசை நுணுக்கங்கள் குறித்து இன்னும் விரவலாக எழுத முடியும். குறிப்பாக மகாநதிக்கு ஒரு தனிப்பதிவே அர்ப்பணிக்கலாம். அர்ப்பணிப்பேன்
கானா பிரபா
16.01.2019
1 comments:
அன்று முதல் இன்று வரை என்றும் இனிக்கும் பாடல்கள். பலமுறை கேட்டு ரசித்த, இன்றும் ரசிக்கும் பாடல்கள்.
Post a Comment