Pages

Wednesday, April 26, 2017

என்.கே.விஸ்வநாதன் இழப்பில் சில நினைவுகள் 🎬

ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர்


தன்னுடைய பெரியப்பா என்.கே.விஸ்வநாதன் காலமானதாக நண்பர் Ars Senthilarasu பகிர்ந்திருந்த அஞ்சலி இடுகையைக் காலை காண நேரிட்டது.

என்.கே.விஸ்வநாதன் நான்கு தசாப்தங்கள் திரையுலகில் ஒளிப்பதிவாளராக, இயக்குநராக அறியப்பட்டவர்.
எண்பதுகளின் திரைப்பிரியர்களுக்கு குறிப்பாக இராம.நாராயணன் படங்கள் பலவற்றின் வழியாக இவரை அறிந்திருப்பார். இராம நாராயணன் படங்களில் தந்திரக் காட்சிகள், இரட்டை வேடக் காட்சிகளை எல்லாம் இன்றைய தொழில் நுட்ப உள்வாங்கல் இல்லாத காலத்தில் இருந்தே தன்னுடைய ஒளிப்பதிவு வித்தையால் காட்சி வடிவம் எடுப்பவர் என்ற பெருமையைத் தன்னகத்தே கொண்டவர்.

இவர் இயக்குநராக ஒரே ஆண்டில் இரு படங்களினூடாக அறிமுகமானர். ஆபாவாணனின் பிரமாண்டப் படைப்பான "இணைந்த கைகள்" படம் அதிலொன்று. இந்தப் பட அனுபவம் குறித்து நான் ஆபாவாணனோடு எடுத்த வானொலிப் பேட்டியில்
http://www.radiospathy.com/2012/06/blog-post.html
அதே 1990 ஆம் ஆண்டில் இன்னொரு மாறுபட்ட படம் "பெரிய வீட்டுப் பண்ணக்காரன்" ஐ இயக்கினார். இது சங்கிலி முருகன் தயாரிப்பு.
சங்கிலி முருகன் படங்களில் பாண்டி நாட்டுத் தங்கம், எங்க ஊரு காவக்காரன் போன்றவை T.P.கஜேந்திரன் இயக்கியவை. கங்கை அமரன் இயக்கம் ஏனோ அந்தப் படங்களில் இல்லை. கங்கை அமரன் இயக்கிய படங்களாகவே இன்று பலர் அவற்றைக் கருதுகிறார்கள். இவற்றோடு சங்கிலி முருகன் தயாரித்து என்.கே.விஸ்வநாதன் இயக்கிய பெரிய வீட்டுப் பண்ணக்காரன், நாடோடிப் பாட்டுக்காரன் போன்றவையும் அடங்கும். இவற்றுக்கு இளையராஜா இசை, சங்கிலி முருகன் தயாரிப்பு என்பதால் கங்கை அமரன் இயக்கம் என்ற எடுகோள் தோன்றியிருக்கும்.

கதை,இன்ன பிற அம்சங்கள் ஏற்பாடு செய்யாமலேயே நடிகர் விஜய்காந்துக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்து சங்கிலி முருகன் ஒப்பந்தம் செய்த படம் "பெரிய மருது". அந்த 1994 ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபா என்பது இன்றைக்குப் பல கோடி பெறும். அப்போது அது பரபரப்பான செய்தி.
அந்தப் படத்தின் இயக்கமும் என்.கே.விஸ்வநாதன் தான். சங்கிலி முருகன் தயாரித்த முதல் படம் "கரிமேடு கருவாயன்" பட நாயகன் விஜய்காந்த் அப்போது பணம் வாங்காமல் நடித்ததற்காக நன்றிக் கடனாக இருக்கக் கூடும்.

என்.கே.விஸ்வநாதன் எண்பதுகள், தொண்ணூறுகளில் ஏராளம் படங்களுக்கு ஒளிப்பதிவாளர், இன்னும் பல படங்களுக்கு இயக்குநராக இருந்துள்ளார். அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

0 comments: