Pages

Wednesday, July 13, 2016

பாடலாசிரியர் வைரமுத்துவும் எண்பதுகளின் இசையமைப்பாளர்களும்


இன்று கவிஞர் வைரமுத்து அவர்களின் பிறந்த நாளுக்குச் சிறப்புத் தீனியாக எதைக் கொடுக்கலாம் என்று நினைத்த போது, அவர் பாடலாசிரியராகப் பரிணமித்த தலைப்புகள் பல்வேறு அம்சங்களாக மனதில் உதித்தன. அவற்றில் ஒன்றைத் தான் இன்றைய காலை ரயில் பயணத்தில் எழுத ஆரம்பிக்கிறேன். 

கவிஞர் வைரமுத்து "நிழல்கள்" திரைப்படத்தின் வழியாகப் பாடலாசிரியராக அறிமுகமானதைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவோடு அவர் கூட்டுச் சேர்ந்த திரைப்படங்களைத் தான் பரவலான இசை ரசிகர்கள் தம் ரசனைக் கூட்டில் சிலாகித்துப் பேசுவர். அதைத் தொடர்ந்து தொண்ணூறுகளில் இசைப்புயல் ரஹ்மான் காலத்திலும் வைரமுத்து - ரஹ்மான் கூட்டணி முத்திரை பதித்தது. என்னளவில் ரஹ்மான் பாடல்களுக்குச் சரியான கூட்டு வைரமுத்து ஒருவரே. சரி அதைப் பற்றிப் பேசி இங்கே பேச வந்ததை மறந்து போகாமல் மீண்டும் தலைப்புக்கு வருவோம் 😀
எண்பதுகளிலே வைரமுத்து கூட்டணி கட்டிய இசையமைப்பாளர்கள் இன்னும் நிறையப் பேர். இந்தப் பதிவை நீட்டினால் ஒரு புத்தகமே போடலாம். ஆனால் இங்கே நான் வெறும் கோடு தான் போடுகிறேன்.

பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு நட்சத்திர இயக்குநர்களின் கூட்டணி அமைந்தது மிகப் பெரும் பலம். பாரதிராஜாவின் அறிமுகத்தைத் தொடர்ந்து கே.பாலசந்தரோடு வைரமுத்து கூட்டுச் சேர்ந்த படங்களின் பாடல்களும் தனித்துவமானவை. அதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனில் இருந்து பல்வேறு இசையமைப்பாளர்களோடு இந்த இருவரும் ஒரு சேரப் பணியாற்றியிருக்கிறார்கள்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் "தண்ணீர் தண்ணீர்" திரைப்படம் தான் வைரமுத்து அவர் இசையில் முதலில் பாட்டெழுதிய படம். அதில் பி.சுசீலா பாடும் "கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே" https://youtu.be/XqLqdUMAPmA பாடல் இவரின் கவித்திறனை மெல்லிசை மன்னர் இசைத் தாலாட்டில் கொடுத்தது. 
கே.பாக்யராஜ் இயக்கத்தில் அந்த ஏழு நாட்கள் திரைப்படத்தில் வரும் "எண்ணி இருந்தது ஈடேற" https://youtu.be/0B4baN0uycE என்ற மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் ஜோடிப் பாட்டும் மெல்லிசை மன்னர், வைரமுத்து கூட்டணியில் அக்காலத்தில் பிரபலமாக விளங்கிய பாட்டு.

வி.எஸ்.நரசிம்மன் அட்டகாசமான இசைக் கலைஞர். இவரை இசையமைப்பாளராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்ற இளையராஜாவின் வேண்டுகோளை ஏற்று இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் "அச்சமில்லை அச்சமில்லை" படத்தில் இருந்து தொடர் வாய்ப்புகளைத் தான் இயக்கிய படங்களில் கொடுக்கிறார். "ஆவாரம் பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் பூத்திருக்கு" https://youtu.be/gvkrsRyr9oM பி.சுசீலா, எஸ்.பி.பி குரல்களிலும், "ஓடுகிற தண்ணீரில்" https://youtu.be/G6_EG-Vdes8 பி.சுசீலா குரலிலுமாக மறக்க முடியுமா இதையெல்லாம்?
கே.பாலசந்தர் வைரமுத்து கூட்டணி குறித்துத் தனியான பதிவைக் கொடுக்கும் போது இந்தப் பந்தியை நீட்டிக் கொள்கிறேன்
கே.பாலசந்தரின் உதவியாளர் அமீர்ஜான் இயக்கிய படமான "புதியவன்" படத்தில் வி.எஸ்.நரசிம்மன் மேற்கத்தேய இசையில் அத களம் பண்ணியிருப்பார். அதில் வரும் "தேன் மழையிலே" (எஸ்.பி.பி) "https://youtu.be/ROcjqJFZjGQ நானோ கண் பார்த்தேன்" (கே.ஜே.ஜேசுதாஸ்) https://youtu.be/YNIRvIRSnYI பாடல்களின் இசைக்கு இனிமை சேர்த்தன வைரமுத்துவின் வரிகள்.
வி.எஸ்.நரசிம்மனோடு நான் கண்ட பேட்டியில் மேலும் சில பாடல்கள் http://www.radiospathy.com/2012/02/blog-post_16.html

சின்னப்பூவே மெல்லப் பேசு படத்தில் ஆரம்பித்து புது வசந்தம் படத்தில் உச்சம் தொட்டது வரை தொடர்ந்து தன் படங்களுக்குத் தானே பாடல் வரிகளையும் எழுதினார் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். எண்பதுகளில் எஸ்.ஏ.ராஜ்குமாரோடு கவிஞர் வைரமுத்து சேர்ந்த படம் என்று எனது சிற்றறிவுக்கு எட்டியவரை ஒரு படமுமில்லை.

ஆபாவாணனின் அறிமுகத்தில் தமிழுக்கு வந்த   மனோஜ் கியான் இரட்டையர்கள் வேறு இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்த போது வைரமுத்துவின் பங்களிப்பும் இருந்தது.
"அழகான புள்ளி மானே" https://youtu.be/cO_FGYXXKPs என்ற "மேகம் கருத்திருக்கு" பாடலை மறக்க முடியுமா?
அது போல் "துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே" https://youtu.be/GyJlJXiS8u4 "வெளிச்சம்" படப் பாடலும் வைரமுத்து - மனோஜ் & கியான் கூட்டணியின் சொல்லத் தகு பாடல்கள்.
துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே பாடல் குறித்த என் ரசனைப் பகிர்வு
http://www.radiospathy.com/2014/09/blog-post_28.html

"பருவம் கனிந்து வந்த பாவை வருக" https://youtu.be/6jU7EKqpd7k என்ற அழகான பாடல் எண்பதுகளின் திரையிசைப் பிரியர்களுக்கு இனிப்பானது. அந்தப் பாடல் "யாரோ எழுதிய கவிதை" திரைப்படத்தில் இடம்பெற்றது. இயக்குநர் ஶ்ரீதர் இயக்கிய இந்தப் படத்தில் ஆனந்த் சங்கர் என்ற வட இந்திய இசை மேதையை இசையமைப்பாளர் ஆக்கினார். வைரமுத்துவுக்கும் இந்தப் பாடல் சிறப்பாக வாய்த்தது.

ஹிந்தித் திரையுலகின் உச்ச இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் தமிழில் கொடுத்த படங்களில் ஏவிஎம் இன் "உலகம் பிறந்தது எனக்காக" திரைப்படமும் ஒன்று. அந்தப் படத்தின் இணை இசை எஸ்.பி.பாலசுப்ரமணியம். அந்தக் காலத்து ஆல் இந்தியா ரேடியோவில் ஒலித்த "அடி மாங்காட்டு மயிலே நில் நில் நில்" https://youtu.be/d7Bmd57-rz4 எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள் கை உயர்த்துங்கள் பார்க்கலாம் 😀

பாரதிராஜாவுக்கும் இளையராஜாவுக்கும் இடையில் கருத்து முறிவு ஏற்பட்ட காலங்களில் அவர் வைரமுத்துவை மட்டும் தவிர்க்காமல் வேறு இசையமைப்பாளர்களோடு கூட்டுச் சேர்வார். அப்படியொருவர் இசையமைப்பாளர் ஹம்சலேகா. 
கொடி பறக்குது பாடல்கள் வைரமுத்துவின் கை வண்ணமே. ஆனால் கன்னட நடிகர் ரவிச்சந்திரனின் சூப்பர் டூப்பர் படமான "பருவ ராகம்" என்ற தமிழ் மொழி மாற்றுப் படத்தில் ஹம்சலேகா இசையில் வைரமுத்து கொடுத்த "காதல் இல்லை என்று சொன்னால்" https://youtu.be/B01V0Gr2_2s பாடல் தான் எனக்கு முதல் தேர்வு.

பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் முதலில் இயக்கிய மண்ணுக்குள் வைரம் படத்தின் முகப்புப் பாடலும் வைரமுத்துவின் கை வண்ணமே. அந்தப் படத்தின் இசை தேவேந்திரன். ஆனால் தேவேந்திரனை உலகறியச் செய்தது பாரதிராஜா இயக்கிய வேதம் புதிது. இதில் வைரமுத்துவின் முத்தான பாடல்களில் எதை விடுவது? ஆனால் என் நெஞ்சுக்கு நெருக்கமானது புத்தம் புது ஓலை வரும் 

"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது" https://youtu.be/AHF0x7H5TaU நெஞ்சமெல்லாம் நீயே படத்தில் இடம் பிடித்தது. பாலைவனச் சோலை படத்தில் எல்லாப் பாடல்களும், குறிப்பாக "மேகமே மேகமே"  https://youtu.be/U2_24GPjhAc என்று மீண்டும் வாணி ஜெயராமுக்குக் கதையாழம், கருத்தாழம் மிக்க பாட்டு ஒன்று. வைரமுத்து எழுத சங்கர் - கணேஷ் இரட்டையர்களின் கூட்டணி இன்னொரு பக்கம் வெற்றி நடை போட்டது.  மேகமே மேகமே பாடல் தான் வாணி ஜெயராமுக்கு முதலில் வைரமுத்து எழுதியது. குறிப்பாக ஏவிஎம் இன் தயாரிப்பில் விசு இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் தொடர்ந்து வந்த திருமதி ஒரு வெகுமதி ஆகிய படங்களோடு "இதயத் தாமரை" படத்தில் வந்த "ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்" https://youtu.be/q7pOFn8s4zc
"யாரோடு யாரென்ற கேள்வி  https://youtu.be/L_xksM-sVhM ஆகிய பாடல்கள் முத்திரைப் பாடல்களாக அமைந்தன.

"பூப் பூத்ததை யார் பார்த்தது"  https://youtu.be/X_4Lf7oPObk கதாநாயகன் திரைப்படப் பாடல் வைரமுத்து வரிகளில் சந்திரபோஸ் இசையில் மலர்ந்தாலும் அதன் மூல வடிவம் ஷியாம் இசையில் நாடோடிக் காத்து மலையாளத் திரைப்படத்தில் இடம் பிடித்தது.
எண்பதுகளில் இசைஞானி இளையராஜாவுடன் இசையில் இணைந்திருக்காத காலங்களில் வைரமுத்துவின் பாடல்களைத் தாங்கிப் பிடித்ததில் ஏவிஎம் நிறுவனம், சங்கர் - கணேஷ் வரிசையில் இசையமைப்பாளர் சந்திரபோஸ் கூட முக்கியமானவர். முன்னர் நான் சந்திரபோஸ் குறித்துத் தந்த இடுகையில் வைரமுத்துவின் பாடல்கள் குறிப்பாக மனிதன், ராஜா சின்ன ரோஜா உள்ளிட்டவையைக் குறிப்பிட்டேன்.
"சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்" https://youtu.be/MykxW4k9shw என்று வைரமுத்து வரிகளுக்கு அவரே குரல் கொடுக்க எஸ்பிபி பாடிய பாடல் இன்று வரை வைரமுத்துவுக்கு ஒரு புது அனுபவமாகக் கொள்ளக் கூடியது.
தாய் மேல் ஆணை படத்த்தில் வரும் "ஹேய் மல்லிகைப்பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு" https://youtu.be/idY0WOgkeRM என்ற வைரமுத்து வரிகளில் சந்திரபோஸ் கொடுத்த பாடல் தான் இந்தப் பதிவை எழுத எனக்கு முக்கிய உந்துதலாக இருந்தது.
அவ்வளவுக்குப் பிடிக்கும் எனக்கு இந்தப் பாடல்.
பாடலாசிரியர் எண்பதுகளில் இணைந்து பங்கேற்ற இசையமைப்பாளர் இன்னுமுண்டு. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர்களோடு விரிவாக இந்தப் பதிவு நீளும்.

6 comments:

உசிலை விஜ‌ய‌ன் said...

அழகாக தொகுத்து இருக்கின்றீர்கள். பகிர்வுக்கு நன்றி

காத்தவராயன் said...

ஏவிஎம் சந்திரபோஸ் வைரமுத்து கூட்டணியில் "சங்கர்குரு" முக்கியமான படம்.

Unknown said...

Yorathu en nenjalli povathu is by vaali

கானா பிரபா said...

இல்லை அது வைரமுத்துவே தான்
http://karky.in/paadal/varikal?source=nenjjamellaamnheeyae%2000985

கானா பிரபா said...

மிக்க நன்றி

கானா பிரபா said...

ஆமாம்