இணையம் தந்த புண்ணியத்தில் உலக வானொலிகளைக் கேட்க ஆரம்பித்த போது தொடர்ந்து பதினைந்து வருடங்களாக நேசத்தோடு நான் நேயராக இணைந்திருக்கும் வானொலி சிங்கப்பூர் ஒலி.
இத்தனை ஆண்டுகளில் பல்வேறுபட்ட குரல்களை சிங்கப்பூர் ஒலி அலை வழியாகக் கேட்டிருந்தாலும் ஒரு சில குரல்களை இத்தனை ஆண்டுகளாகக் கேட்டு ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்ததிருக்கிறது. அதில் முதன்மையாமையானவர் நிகழ்ச்சிப் படைப்பாளர் பாமா பாலகிருஷ்ணன் அவர்கள்.
வானொலியில் தான் படைக்கும் நிகழ்ச்சிகளில் பொருந்தமான கோர்வையில் பாடல்களைக் கொடுக்கும் போதும், விளம்பரக் குரல்களின் போதும், நேயர்களுடனான கலந்துரையாடலின் போதும் தனித்துவமாக மிளிர்ந்தவர் இவர்.
நேயர் கலந்துரையாடலின் போது மென்மையாகவும், கருத்தைச் சிதறவிடாம அணைத்துக் கொண்டு போவதில் சமர்த்தர். நேயர்களின் கருத்தை உள்வாங்கிய பின் அதிகாரத்தனம் இல்லாது தன் கருத்தை இசைவாகக் கொடுப்பார். இதனால் மாறுபட்ட கருத்தோடு வருபவர் கூட இவரின் கருத்தை உள்வாங்கும் பக்குவத்தை ஏற்படுத்துவார்.
சிங்கப்பூர் ஒலி நாடகங்கள் பலவற்றில் பாமா குறித்த பாத்திரமாகவே மாறி நடித்திருந்ததை எல்லாம் ரசித்திருக்கிறேன். ஒருமுறை வசந்தம் தொலைக்காட்சியின் சிறப்பு நாடகத்திலும் இவரைப் பார்த்ததாக ஞாபகம்.
கடந்த தீபாவளி ஒலி சிறப்பு நாடகத்தில் "வழக்கமா பண்றதை விட நான் பயங்கரமான வேஷம் ஒண்ணு போடப் போறேன்" என்று முன்னோட்டம் சொன்ன போது மனதுக்குள் சிரித்தேன்.
சிங்கப்பூர் வானொலியின் போக்குவரத்துத் தகவலில் பாமாவின் குரல் அடிக்கடி ஒலிக்கும் போது அம்மாவின் கனிவான ஆலோசனை போன்றிருக்கும்.
சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூரின் புகழ் பூத்த மருத்துவர் ஒருவரின் இறப்பு அஞ்சலி செய்யும் போது அந்த மருத்துவர் பாமா தான் நிகழ்ச்சின் செய்பவர் என்று அறியாது அவரின் நிகழ்ச்சியைச் சிலாகித்துப் பேசியதை நெகிழ்வோடு சொன்னார்.
ஒலிப்படைப்பாளர்களுடன் சம்பாஷிக்கும் போது ஐய்யய்யோ என்று வெட்கப்பட்டு ஒலிக்கும் பாமாவின் குரலில் அப்பட்டமான குழந்தைத்தனம் ஒட்டியிருக்கும்.
சிங்கப்பூர் ஒலி படைப்பாளி, நேசத்துக்குரிய பாமா அவர்களின் இறப்புச் செய்தியை அறிந்து அதிர்ச்சியடைகிறேன்.
நேயர்களுடன் பண்பாகவும், மென்மையாகவும் பழகிய பாமா அவர்களின் குரல் மனதை விட்டு நீங்காது நிறைந்திருக்கிறது எனது ஆழ்ந்த அஞ்சலிகளை நேயர்களில் ஒருவனாகப் பகிர்கிறேன்.
2 comments:
ஒலி நானும் கேட்பதுண்டு. ஆனால் RJக்களை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இன்னும் என் நினைவில் இருப்பவர்கள் திருச்சி பண்பலைக்காரர்கள்தான்.
அம்மையாருக்கு அஞ்சலி.
ஆழ்ந்த அனுதாபங்கள்!
Post a Comment