Pages

Wednesday, August 27, 2014

பாடல் தந்த சுகம் : நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே

"ஒரு பாட்டுக்கு மெட்டமைத்து விட்டு, வார்த்தைகளால் அந்த டியூன் மேல நடந்து பார்த்து சரி பார்ப்பது இசைஞானி இளையராஜாவின் வழக்கம்" இந்தப் பாடலை எழுதிய கவிஞர் மு.மேத்தா இப்படிச் சொல்லியிருந்தார். கூடவே "இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளான "நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே" ஐயும் கொடுத்தது இளையராஜா தான். அவரின் இசையில் வெளிவந்த பல பாடல்களின் ஆரம்ப வரிகளின் சொந்தக்காரரும் அவர் தான் என்று சொல்லி வைத்தார் மேத்தா.

"நிக்கட்டுமா போகட்டுமா" பாடல் சென்னை வானொலி எனக்கு அறிமுகப்படுத்திய இன்னொரு பாடல். விமானக் குண்டு வீச்சுகள் உச்சம் பெற்ற போர்க்காலங்களில் சைக்கிளின் டைனமோவைச் சுழற்றி மின் பிறப்பாக்கி, அதை வானொலிப்பெட்டிக்குள் செருகிப் பாட்டுக் கேட்ட சிரம காலத்தில் கிட்டிய சிகரப் பாட்டுகளில் ஒன்று என்பதாலோ என்னமோ இன்றும் என் பிரிய நாய்க்குட்டி போல எனக்கு நெருக்கமான பாடல்களில் இதுவுமொன்று.

நாடக நடிகராக வேஷம் கட்டிய காலத்தில் இருந்தே ராஜாவுடன் ஒட்டுறவாக இருந்த சங்கிலி முருகன் தயாரித்த மீனாட்சி ஆட்ஸ் நிறுவனத்தின் படங்களின் பாடல்களுக்கு ஒரு தனிக்கவனம் இருக்குமாற் போல இருக்கும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று தான் "பெரிய வீட்டுப் பண்ணக்காரன்".
கார்த்திக், கனகா  நடித்த இந்தப் படத்தில் " மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ" பட்சமுள்ள பாட்டை மறக்க முடியுமா?

மு.மேத்தா "நிக்கட்டுமா போகட்டுமா  நீலக்கருங்குயிலே" என்று தொடங்கும் இந்தப் பாடலின் வரிகளை அவ்வளவு உன்னிப்பாகக் கவனித்ததில்லை அப்போதெல்லாம். ஆனால் பாடலை நேசிக்க ஆரம்பிக்கக் காரணமான இசையில் மூழ்கித் திளைத்த பிறகு அடுத்தது என்ன என்று வரும் போது வரிகளையும் அரவணைக்க வைத்து விடும். அப்படி ஒன்றுதான் இது.


ஓடையில் நான் அமர்ந்தேன் 
அதில் என் முகம் பார்த்திருந்தேன்
ஓடையில் பார்த்த முகம் 
அது உன் முகம் ஆனதென்ன
வாடையில் வாடிடும் பூவினைப் போல்
என் நெஞ்சமும் ஆனதென்ன

என்று காதலி கேட்க

தேரடி வீதியிலே ஒரு தோரணம் நான் தொடுத்தேன்
தோரண வாசலிலே ஒரு தோழியைக் கைப்பிடித்தேன்
பிடித்த கரம் இணைந்திடுமா இணைந்திடும் நாள் வருமா

என்று காதலன் தொடர்வான். பாடலின் முதல் சரணம் காதலர்களுக்கிடையிலான கேள்விக்கணைகளில் அவர்களின் நேசம் தான் தொக்கு நிற்கும்.
இப்படியான எளிமையான வரிகளால் நடை பழகிய மு.மேத்தாவைத் தன் பிரிய வட்டத்தில் ராஜா வைத்திருப்பதில் சந்தேகமே எழாது. அந்தச் சூழலுக்கேற்பத் தன்னை இறக்கிக் காட்சிக் களத்தில் எளிமையை வரிகளாக்கி, மெட்டுப் பாதையில் நிதான நடை போட்டால் அந்தப் பாதை போட்டவருக்கு வேறென்ன திருப்தி வேண்டும்.

இந்தப் பாடலுக்கும் சரி, மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ என்ற சக பாடலிலும் சரி நுரை தள்ளும் பிரவாகத்தோடு கோரஸ் குரல்களின் ஆர்ப்பரிப்பைக் கேட்கும் சுகானுபவம் சொல்லில் அடங்காது.

"நிக்கட்டுமா போகட்டுமா" என்ற இந்தப் பாடலை நான் இசைஞானியின் கோரஸ் குரல்கள் போட்டியில் http://radiospathy.wordpress.com/2014/04/12/rajachorusquiz47_48/ கொடுத்த போது போட்டியாளராக வந்து சிறப்பித்த உமா கிருஷ் இந்தப் பாடல் குறித்த சிலாகிப்பை

இந்தப் பாட்டும் மதுரை,தேனி பக்கம் எடுக்கப்பட்ட ஒன்றுதான்.மலை பின்னணியில்தங்கக் கோபுரம் தெரிய ஆடுவது இயற்கை எழில் கொஞ்சும் அழகர் கோவில். இந்தப் படத்தில் வரும் பல்லாக்குக் குதிரையில பாடல் தான் இன்றளவும் மீனாட்சி பவனி வரும் பொழுது சும்மா அதிரும் ஸ்பீகர்ல :)அந்தப் பாடலில் கார்த்திக் அணிந்திருக்கும் கெட் அப் கள்ளழகர் வேடத்தை முன் மாதிரியாகக் கொண்டது .அதுல பெட்டி சுமந்து வருவது போல இன்றளவும் பெட்டியில் அம்மனை வைத்துக் கும்பிடும் கிராமத்திற்கு வருடா வருடம் சிவராத்திரிக்கு நான் செல்வதுண்டு .அப்படியே மண் மணத்தை படம் பிடித்த படங்களும் பாடல்களும் இவை எல்லாம்.அதனால் எனக்கு மிகப் பிடித்தவை.

இப்படிப் பகிர்ந்திருந்தார். இப்படியான இசை ரசனைகளைக் கேட்டு ரசிப்பதற்காகவே எத்தனை ஆயிரம் போட்டியும் வைக்கலாம் போல.

நான் அடிக்கடி நினைப்பதுண்டு,  தமிழகம் இன்னொரு வகையில் புண்ணியம் பெற்றிருக்கின்றது. எத்தனை எத்தனை ஆயிரம் பாடல்கள் உருப்பெற்ற போது அந்தப் பாடல்களின் காட்சி வடிவத்தில் தமிழகத்து நிலமெல்லாம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பாக்கியம் பெற்றிருக்கின்றது. அதிலும் குறிப்பாகக் கிராமிய மணம் கமழும் இம்மாதிரியான பாடல்களை எத்தனை ஆண்டுகள் கடந்தும் அந்த மண் மணத்தோடு சேமித்து வைத்திருக்கின்றது பாருங்கள்.


துல்லிய இசைவடிவத்தோடு நான் இட்ட யூடியூப் பகிர்வு

https://www.youtube.com/watch?v=R_53xz-z34Y&feature=youtu.be

காட்சிப்பகிர்வோடு இந்தப் பாடல்

https://www.youtube.com/watch?v=kCeOlgAokjw



4 comments:

தனிமரம் said...

ஒரு காலத்தில் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் அதிகம் ஒலித்த பாடல்! நன்றி மீளவும் ஞாபகப்படுத்தியதுக்கு.

Yarlpavanan said...

சிறந்த எண்ணப்பதிவு

தொடருங்கள்

கானா பிரபா said...

நன்றி சகோ

கானா பிரபா said...

நன்றி