skip to main |
skip to sidebar
பாடல் தந்த சுகம் : "நினைத்தது யாரோ நீ தானே தினம் உனைப்பாட நான் தானே"
விஜய்காந்தின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் அவரின் நண்பர் இப்ராகிம்
ராவுத்தர் கூடவே இருந்து விஜய்காந்துக்கேற்ற படங்களை நடிக்க வைத்ததில்
உறுதுணையாக இருந்ததோடு தேவைப்பட்டால் நல்ல படங்களைத் தயாரித்தும் இவரின்
சினிமா வாழ்க்கையில் முக்கியமானவராகச் செயற்பட்டார். ராவுதர் பிலிம்ஸ்
விஜய்காந்தின் நிழல் தயாரிப்பு நிறுவனம் என்ற கருத்தும் நிலவியது. அதுபோலவே
தீபாவளிக்கு தீபாவளி சத்யராஜின் ஒரு படத்தையாவது தயாரித்துக் கொடுப்பார்
அவரின் மானேஜர் ராமநாதன்.
அந்தக்காலத்தில் ராவுத்தர் பிலிம்ஸ்,
தமிழ்ப்பொன்னி ஆட்ஸ் ( தயாரிப்பு தமிழ்ப்பாத்திமா) என்றெல்லாம்
விஜய்காந்துக்கேயான தயாரிப்பு நிறுவனங்களாகப் படங்களைத் தயாரித்தளித்தன.
அப்படி வந்த படம் தான் டி.சிவா தயாரிப்பில் "பாட்டுக்கு ஒரு தலைவன்" .
பாடல்களை அண்ணனும் தம்பியுமாகப் பங்கு போட்டு இளையராஜா, கங்கை அமரன்
எழுதினார்கள்.
விஜய்காந்துக்கு நண்பர் இப்ராகிம் ராவுத்தர் ஒரு கை
என்றால், இன்னொரு கையாக லியாகத் அலிகானைப் பொருத்தலாம். புரட்சிகரமான அனல்
பறக்கும் வசனங்களை உழைத்து வாழ வேண்டும் காலத்திலிருந்து எழுதிக்
கொடுத்தவர். விஜய்காந்துக்கு புரட்சிக்கலைஞர் என்ற பட்டம் பின்னாளில்
வலுவாக ஊன்ற இவரது வசனங்களே சான்று.
லியாகத் அலிகான் திரைக்கதை வசனம் எழுதி விஜய்காந்தை வைத்து இயக்கிய முதற்படமே இந்த "பாட்டுக்கு ஒரு தலைவன்"
சித்தியின் மகன் துளசி அண்ணாவுக்கு திருமணம் 8.8.1988 இல் நடக்கிறது
ஜேர்மனியில். அவர்து திருமண வீடியோ காசெட்டைப் பார்க்க உறவினர்கள்
எல்லாருக்கும் அழைப்பு விடுத்து சித்தி வீட்டில் திரள்கிறார்கள். துளசி
அண்ணாவின் ஜேர்மனியில் கல்யாணத்தை ஏதோ கண்ணுக்கு முன்னால் நடப்பது போல
எல்லாரும் உன்னிப்பாகப் பார்க்கிறார்கள். இடைக்கிடை அந்த வீடியோவில்
தலைகாட்டும் சொந்தங்களை அடையாளம் கண்டு "இஞ்சை பார் உவன் நிக்கிறான், அவன்
நிக்கிறான்" என்ற நேரடி வர்ணனை வேறு, எனக்கோ அந்தப் பதின்ம வயசிலும்
புதுப்பாட்டுக் கேட்கும் தொற்று வியாதி. தொற்றுவியாதி என நான் சொல்லக்
காரணம், இரண்டு இளந்தாரிப்பிள்ளைகளைப் பெற்றெடுத்து விட்டாலும் இன்னமும்
கிட்டாரும் கையும் இளையராஜா பாட்டும் என்றிருக்கும் துளசி அண்ணரிடமிருந்து
தான் இளையராஜா பாடல்களை வெறியோடு நேசிக்கும் பண்பு வந்தது எனக்கு, அவரைப்
பற்றி இன்னொரு முறை விலாவாரியாகப் பேசவேண்டும்
அந்த வீடியோ காசெட்டில் ஒவ்வொரு புதுபுதுப் பாடல்களாகக் கடக்கின்றன ஆனால்
அப்போதே மனதை ஆக்கிரமித்துக் கொண்டது " நினைத்தது யாரோ நீதானே" பாட்டு.
அப்போது படமே வரவில்லை ஆனால ஆறேழு மாதங்களுக்கு முன்பே எல்பி
ரெக்கார்ட்டில் வந்துவிடும். இப்போது கிட்டும் பரவலான வெகுஜனத்தொடர்பு
இல்லாததால் அந்த எல்பி ரெக்கார்ட்ஸ் ஐ வைத்து உள்ளூர் ரெக்கார்டிங் பார்
எல்லாம் உச்ச ஒலியில் கடைவிரித்துக் கல்லா கட்டிவிடும். படம் வரும்போதும்
நல்ல பப்ளிசிட்டி கிட்டிவிடும். அப்படித்தான் இந்தப் பாட்டை நான் கேட்ட
அந்த கல்யாண காசெட் ஒளிபரப்பின் பின் சில நாட்களிலேயே உள்ளூர்
இசைக்கூடங்களின் இதய நாதமாக மாறிவிட்டது இந்தப் பாட்டு. தாவடிச் சந்தியில்
இருந்த ரெக்கோர்டிங் பார் காரர் நான் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது சொல்லி
வைத்தாற்போல இந்தப் பாட்டைப் போடுவார். வேடிக்கை பார்ப்பது போல சீன்
போட்டு ஐந்து நிமிடத்தைக் கடத்துவேன். அப்போதெல்லாம் கைக்காசைப் போட்டுப்
பாட்டுக் கேட்டால் செவிப்பறையில் வந்து விழும் அடி என்பதும் நான் அறிந்ததே.
பின்னர் மெல்ல மெல்ல உள்ளூர் நாதஸ்வரக்காரரின் பெருவிருப்பத்துக்குரிய
பாடல்களில் ஒன்றாகி, சுவாமி வீதி வலம் வடக்கு வீதியில் வரும் போது மனோ,
ஜிக்கியாக நாதஸ்வரத்தின் குரல் மாறி விடும். எனக்கு இந்தப் பாட்டை அடிக்கடி
தீனி போட்ட பெருமை சென்னை வானொலியைச் சாரும். யாழ்ப்பாணத்தில் இருந்து
றேடியோவை மயக்கி சென்னை அலைவரிசை தொட்டால் நாலு மணிக்கு நேயர் விருப்பம்.
அதில் லல்லு , சத்யா, ரேவதி என்று யார் யாரோவெல்லாம் பாட்டுக் கேட்பார்கள்,
யாராவது ஒருவர் இந்தப் பாட்டைக் கேட்பார். பதின்ம வயது கடந்து ஆதலினால்
காதல் செய்த பருவத்திலும் கொண்டாடிய பாட்டு. இப்போது கேட்டாலும் எனக்கான
பாட்டு.
2 comments:
ஆகா...அப்படியே என்னோட பதின்ம வயது காலத்த அசைப்போட்ட மாதிரி இருந்ததுங்க கா.பி சார்...எல்லாம் சரி இந்த “ஆதலினால் காதல் செய்தத” பத்தி ஒன்னும் சொல்லலயே ;-)
அருமையான பாடல்.
வழக்கம் போல் உங்கள் முன்னுரை அந்த பாடலுக்கு மேலும் பொருள் இனிமை சேர்க்கிறது. அற்புதம்.. :)
Post a Comment