Pages

Thursday, July 19, 2012

இசைஞானியின் மலர்ந்தும் மலராத "கண்ணுக்கொரு வண்ணக்கிளி"


இசைஞானி இளையராஜா இசையமைத்து பல்வேறு காரணங்களால் திரைப்படத்தில் வெளிவராத பாடல்கள் அல்லது திரைப்படமே வெளிவராது தொலைந்த பாடல்கள் என்று "மணிப்பூர் மாமியார்" காலத்தில் இருந்து அண்மைய "நந்தலாலா" வரை சில நூறு தேறும். படம் வெளிவருவதற்கு முன்பே பாடல்கள் வெளியாகிப் பிரபலமாகுவது ஒருபக்கம் இருக்க, படம் வந்ததா வராததா என்று கூடத் தேடிப்பார்க்காமல் ராஜாவின் பாடல்களைத் தேடி ரசிக்கும் ரசிகர் கூட்டத்தில் நானும் ஒருவன். அதுவும் கிடைத்தற்கரிய பாடல்களை இயன்றவரை தரமான இசைத்தட்டாக வாங்கிச் சேமிக்கும் வழக்கமுண்டு.
அப்படியானதொரு படம் தான் "கண்ணுக்கொரு வண்ணக்கிளி". இன்று நண்பர் கிருஷ் இந்த "கண்ணுக்கொரு வண்ணக்கிளி" படத்தின் பாடல்களைப் பற்றி விசாரித்தபோது உள்ளூரச் சந்தோஷம். ஏனென்றால் இப்படியான அரிய பாடல்களைக் கேட்டு ரசிக்கும் சக நண்பர்களையும் அவ்வப்போது இனங்காண முடிவதில். இசைஞானி இளையராஜா இப்படி மணி மணியாகக் கோர்த்த இசையை ஏண்டா எடுப்பாகப் படம் பிடிக்கும், மொக்கைக் கதையில் இடையில் செருகும், அல்லது பாடலையே சேர்க்காத இயக்குனர் பட்டியல் மேல் எனக்குத் தார்மீகக் கோபம் வருவதுண்டு. ஆனால் நண்பர் கோ.அரவிந்தன் (@tpkd)சொன்னது போல, "நல்ல தண்ணிக் கிணற்றில் என்ன போட்டாலும் நல்ல தண்ணி தானே வரும்" என்று மனசை ஆற்றிக் கொள்வது தான் சரி.

இன்றுவரை இந்தப் படத்தை இயக்கியவர் யார், நடித்தவர்கள் யார் யாரென்று எந்தத் தகவலும் கிட்டவில்லை. ஆனால் மணி மணியாக மொத்தம் ஒன்பது பாடல்கள். அதில் இரண்டு பாடல்கள் ஒரே மெட்டில் ஆனால் இருவேறு பாடகர்கள் பாடும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் பாடகர்கள் பட்டியலைப் பற்றிப் பார்த்தபோது லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே சகோதரிகளின் இரண்டு பாடல்கள் உண்டு. என் சிற்றறிவுக்கு எட்டியது வரை தமிழில் லதா மற்றும் ஆஷா போன்ஸ்லே சகோதரிகள் ஒரே படத்தில் பாடியது என்றால் இந்தப் படமாகத் தான் இருக்கும்.
கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், P.சுசிலா, மனோ ஆகியோரோடு இசைஞானி இளையராஜாவும் பாடியிருக்கிறார். கூடவே எஸ்.ஜானகி, சித்ராவையும் சேர்த்திருந்தால் எண்பதுகளின் உச்ச நட்சத்திரப்பாடகர்கள் சேர்ந்த படமாக இது இருந்திருக்கும். ஒரேயொரு பாடலை அனுராதா என்ற பாடகி பாடியிருக்கலாம், அனுராதா பட்வால் ஆக இருக்கலாம். வேறு யாரும் அப்போது அந்தப் பெயரில் பாடியதாக நினைவில் இல்லை.
சரி இனிப் பாடல் தொகுப்பிற்குப் போவோம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆஷா போன்ஸ்லே பாடிய 'உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்"



கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்" முன்னர் கொடுத்த ஜோடிப்பாடலின் மெட்டு ஆனால் இசை வேறு, இந்தப் பாடல் இணையத்தில் பரவலாக இல்லை மூல இசைத்தட்டில் மட்டுமே கிடைக்கின்றது.



கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "யார் அழுது யார் துயரம் மாறும்"



இளையராஜா பாடும் "யார் அழுது யார் துயரம் மாறும்" முன்னர் கொடுத்த அதே பாடலின் மெட்டும், இசையும் ஆனால் பாடகர் வேறு. இதுவும் இணையத்தில் பரவலாக இல்லை மூல இசைத்தட்டில் மட்டுமே கிடைக்கின்றது.




லதா மங்கேஷ்கர் பாடிய "இங்கே பொன்வீணை"




அனுராதா பாடிய "வாலிபம்" இந்தப் பாடல் இணையத்தில் பரவலாக இல்லை, மூல இசைத்தட்டில் மட்டுமே கிடைக்கின்றது



இளையரஜா பாடிய "கானம் தென்காற்றோடு"



P.சுசீலா,மனோ பாடும் "துளித் துளி மழையாய்"



மனோ குழு பாடிய "பதினாறு பதினேழு வயதோடு"