Pages

Tuesday, November 16, 2010

பி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்

ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப்படித் தான் ஆரம்பித்தது இன்றைய நாளும். பியானோ இசைக்கிறது, மெல்ல மெல்ல அந்தப் பியானோ இசை தன் ஓட்டத்தை நிறுத்த முயலும் போது ஊடறுத்து வருகின்றது "உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்" இசைக்குயிலின் குரலைக் கேட்டுப் புழகாங்கிதம் அடைந்த தோரணையில் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆர்ப்பரிப்போடு பியானோ இசை சேர, இந்த முறை சாக்ஸபோனும், கூடவே மெல்லிசை மன்னரின் தனித்துவமான வாத்திய அணிகளான கொங்கோ தாள வாத்தியம் அமைக்க, மற்ற இசைக்கருவிகளும் அணி சேர்க்கின்றன.
உன்னை ஒன்று கேட்பேன் என்று சுசீலா வரிகளுக்கு இலக்கணம் அமைக்கையில் உற்றுக் கேட்டுப் பாருங்கள் கூடவே ஒரு வயலின் அதை ஆமோதிப்பதைப் போல மேலிழுத்துச் செல்லும்.
"தனிமையில் வானம்" "சபையிலே மெளனம்" என்று ஒவ்வொரு ஹைக்கூ வரிகளுக்கும் இடையில் கொங்கோ வாத்தியம் இட்டு நிரவியிருக்கும் அந்த இடைவெளியை.
இந்தப் பாடல் ஒன்றே போதும் மெல்லிசை மன்னர் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்துக் காட்டஇருள் சூழந்ததும் கொல்லையில் சிறுநீர் கழிக்கச் செல்லும் போது கூடவே அண்ணனோ, அம்மாவோ துணைக்கு வரவேண்டிய சிறு பருவம் அது. அந்த நேரத்தில் நிகழ்ந்து நினைவில் ஒட்டாத நினைவுகள் ஏராளம். ஆனால் தசாப்தங்கள் பல கழிந்தும் இன்னும் மனதில் தார் போல ஒட்டிக் கொண்டிருக்கும் நினைவுகளில் அடிக்கடி மீண்டும் மழைக்குப் பூக்கும் காளான் போலத் துளிர்த்துப் போவது " அத்தா.....ன் என்னத்தான் அவர் என்னைத் தான் எப்படி சொல்வேனடி" இலங்கை வானொலியின் இரவின் மடியில் நிகழ்ச்சியில் சுசீலா கிசுகிசுக்கிறார்.

அப்படியே வெட்கம் குழைத்த குரல் அதில் தொக்கி நிற்கும் சேதிகள் ஆயிரம் சொல்லாமல் சொல்லும். இங்கேயும் இசைக்குயில் சுசீலாவுக்கு மாற்றீடைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. "கிறுக்கா", "லூசுப்பையா" என்றெல்லாம் ஏகபோக உரிமை எடுத்துப் பாடும் இந்த நாள் அதிரடிப்பாடலுக்கு முழு நேர்மறை இலக்கணங்களோடு நாணம் கலந்து குழைத்த மெட்டு. குறிப்பா முதல் அடிகளைச் சுசீலா பாடிய ஒரு நிமிடம் கழித்து வரும் இடையிசையைக் கேளுங்கள் அப்படியே குறும்பு கொப்பளிக்குமாற்போலச் சீண்டிப்பார்க்கும் இசை. "அத்தான் என்னத்தான்" மாலை நேரத்து வீட்டு முற்றத்தில் ஈரும் பேனும் எடுக்கையில் நம்மூர்ப்பெண்கள் முணுமுணுத்துப் பாடியதை அரைக்காற்சட்டை காலத்தில் கேட்ட நினைவுகள் மங்கலாக.பாடல்கள் மீது நான் கொண்ட நேசத்தை மட்டும் புரிந்து கொண்டவர்கள் தமது உறவினர்களின் வீட்டுத் திருமணங்களுக்கு அணி சேர்க்க என்னிடம் திருமணப்பாடல்களைச் சேகரித்துத் தருமாறு கேட்பார்கள். அப்போது நான் ஏதோ ஒரு இயக்குனர் இசையமைப்பாளர் ஒருவரிடம் சிச்சுவேஷன் சாங் போடுங்க என்று கேட்ட தோரணையில் அதீத ஆர்வம் மேலிடப் பாடல்கள் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்துக் கொடுப்பேன். ஆனால் "இதெல்லாம் சரிவராது, நல்ல குத்துப்பாட்டு ரெக்கார்ட் பண்ணித் தாருங்கள்" என்று என் தொகுப்பை நிராகரிக்கும் போது அங்கீகரிக்கப்படாத புது இசையமைப்பாளரின் உணர்வோடு மனதைத் தொங்கப் போடுவேன். ஆனால் சிலபாடல்கள் நான் ரசிக்க மட்டுமே என்று கேட்டுக் கேட்டு அனுபவிப்பதுண்டு. அந்த ரகமான பாடல் தான் இது.
"வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி" என்று நிதானித்து ஆரம்பிக்கும் இந்தப் பாடலைக் கேட்க ஆரம்பியுங்கள். அப்படியே பிரமாண்டமானதொரு மனம் ஒருமித்த கல்யாண வீட்டை உங்கள் மனம் மெல்ல மெல்லக் கட்டத் தொடங்கும். ஒவ்வொரு வரிகளும் அந்தக் காட்சிப்புலத்தை உணர்ந்து பாடும் வரிகளாக அழுத்தமாகப் பதித்திருப்பார் இசையரசி பி.சுசீலா.
இங்கும் வழக்கமான எம்.எஸ்.வியின் ஆவர்த்தனங்கள் தான், ஆனால் மணமேடையின் காட்சிப்புலத்துக்கு இயைவாக ஒலிக்கும் நாதஸ்வர மேள தாளங்கள் பொருந்திப் போகும் இசைக் கூட்டணி."காத்திருந்த மல்லி மல்லி பூத்திருக்கு சொல்லிச் சொல்லி " மல்லுவேட்டி மைனர் படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் என்றாலும் நீங்கள் அதிகம் கேட்டிராத பாடல் வகையறா இது என்பது எனக்குத் தெரியும், அதைப் போல நான் அடிக்கடி கேட்கும் அரிய பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இந்தப் பாடலை அதிகம் கேட்டு நான் வளரக்காரணம் சென்னை வானொலியில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஞாயிறு தோறும் நான்கு மணி வாக்கில் வந்து போன "நேயர் விருப்பம்" நிகழ்ச்சி. ஷெனாய் வாத்தியத்தை சோகத்துக்குத் தான் சங்கதி சேர்த்து திரையில் கொடுப்பார்கள். விதிவிலக்காக பாவை விளக்கு படத்தில் வரும் "காவியமா நெஞ்சின் ஓவியமா" என்ற சந்தோஷப் பாட்டுக்குப் பயன்படுத்தினார்கள். அதே வரிசையில் காதல் பூத்த யுவதியின் சந்தோஷக் கணங்களாய் வரும் "காத்திருந்த மல்லி மல்லி" என்ற பாடலில் அடியெடுத்துக் கொடுப்பதும் இந்தக் ஷெனாய் இசைதான்.
ஒரு பதினாறு வயதுப் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோரணையில் தன் குரலினிமையை இந்தப் பாடலில் காட்டிச் செல்லும் சுசீலா இந்தப் பாடலைப் பாடும் போது அவருக்கு 55 வயது என்று சொன்னால் தான் நம்புவீர்களா? (அவர் பிறந்த ஆண்டு 1935, இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1990)
இந்தப் பாட்டின் இசையில் இப்படி ஒரு வரிகள் வரும்
"ராசா நீங்க வரம் கொடுத்தா படிப்பேன் ஆராரோ" (1.35 நிமிடத்தில்) அந்தக் கணம் பின்னால் முறுக்கிக் கொண்டு தபேலா இசையைக் கேட்டுப்பாருங்கள், இசைஞானி இந்த வாத்தியத்தை ஓடிக்கொண்டிருக்கும் இசையில் பெண் குரல் ஒலிக்கும் போது மட்டும் வித்தியாசப்படுத்திப் பயன்படுத்திய இலாவகம் புரிந்து நீங்களும் ரசிப்பீர்கள் மீண்டும் மீண்டும்.இந்த நான்கு முத்தான பாடல்களுமே போதும் என்று நினைக்கிறேன் பி.சுசீலாவின் குரல் ஏன் எனக்குப் பிடிக்கும் என்று.

27 comments:

கோபிநாத் said...

கலக்கல் தொகுப்பு தல ;)

marimuthu said...

எத்தனை முறையோ கேட்டிருக்கிறேன் ..ரசித்திருக்கிறேன்! .ஆனால் நீங்கள் விரிவாய் விவரித்த பிறகுஅப்பாடல்களை கேட்க ,புதியதாய் தோன்றுகிறது ! நல்ல பதிவு .நம் மனங்களும் ஒரே அலைவரிசை!

raja said...

மிக அற்புதமாக ரசித்து எழுதி இசையை கோர்த்துவிட்டதற்கு மிக்க நன்றி. பி.சுசிலா மேதைக்கு என் மானசீகமான வந்தனங்கள்.வணக்கங்கள்.

S Maharajan said...

Super Thala

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சுசீலாம்மாவின் குரலை ஏன் பிடிக்கும் என்று சொல்வதா?

ஏன் பிடிக்கும், அக்குரலில் தேன் பிடிக்கும், அதில் மருளும் மான் பிடிக்கும், தான் பாடும் குரலுக்கே தான் பிடிக்கும், துருப் பிடிக்காத தங்க உருப் பிடிக்கும்! குரலில் உள்ள கருப் பிடிக்கும்! கருவில் திருப் பிடிக்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நான்கு பாடல்களும் நான்கு மணிகள் போல! ஆனால் அவற்றுள் உன்னை ஒன்று கேட்பேன் தான் மாணிக்க மணி! :) சுசீலாம்மாவா? பியானோவா? - இவங்களுக்கு இடையே தான் போட்டி! :)

ஆனால் சுசீலாம்மா, உன்னை ஒன்று கேட்பேன்-ன்னு இழுக்க, வயலினும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணும்! உன்னை ஒன்று கேட்பேன்-ன்னு பாட, உம்ம்ம்-ன்னு வயலின் உம் கொட்டுவது போல் லேசா இழுக்கும்!

அதுனால சுசீலாம்மா-வயலின் கூட்டணிக்குத் தான் வெற்றி! :)
சிறப்பான பியானோ தான் என்றாலும் அது சுசீலாம்மாவிடம் தோற்று விடும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தனிமையில் கானம், சபையிலே மெளனம்..
உறவு தான் ராகம் உயிரெல்லாம் சுவாசம்-ன்னும் போது,
லேசா ஒரு சுவாசம் இழுப்பாங்க....வாவ்! காதலில் கனிந்து உருகினவங்களுக்குத் தான் அந்தச் சுவாசம் கேட்கும்! என் உயிரெல்லாம் சுவாசம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

உன்னை ஒன்று கேட்பேன் பாட்டே, மொத்தம் மூன்று இருக்கே!
1. சுகமான மெட்டு
2. சோகமான மெட்டு
3. காம-சுகமான மெட்டு, படத்தில் சரோஜா தேவி-சிவாஜி நெருக்கமான நேரத்தில்...

ஒன்னை மட்டும் கொடுத்தா எப்படி
மூனும் கொடுங்க கா.பி.
அதுவும் மூனாவது கண்டிப்பா வேணும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அத்தான் என்னத்தான் = என்னோடு Private Song! So, Sorry, No Comments! :)

//. "கிறுக்கா", "லூசுப்பையா" என்றெல்லாம் ஏகபோக உரிமை எடுத்துப் பாடும் இந்த நாள் அதிரடிப்பாடலுக்கு முழு நேர்மறை இலக்கணங்களோடு நாணம் கலந்து குழைத்த மெட்டு//

இந்தப் பாட்டுல, மருளும் மான் போல குரல் இருக்கும்! கண்ணை மூடிக்கிட்டு இப்பவும் Ipod-ல கேட்கும் போது, New York Subway பொது இடத்தில் கூட, எனக்கு வெட்கம் வரும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மொட்டுத் தான்
கன்னிச் சிட்டுத் தான்
முத்துத் தான்
என்ற வரைக்கும் Slowஆகப் போய்

உடல் பட்டுத் தான்
உடல் பட்டுத் தான்
என்று இரண்டு முறை அதிர்வு காட்டி

என்று தொட்டுத் தான்
என்பதில் வேகம் கூட்டி

கையில் இணைத்தான் வளைத்தான் சிரித்தான் அணைத்தான்....ன்னு கட கட-ன்னு அந்த இன்பம் முடிஞ்சிரும்....ஹைய்யோ, எப்படிச் சொல்வேனடி!!!

yarl said...

காலத்தால் அழியாத முத்தான பாடல்கள். உங்களுக்கு மாத்திரம் அல்ல எங்களுக்கும் பிடிக்கும்
அன்புடன் மங்கை

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வசந்தத்தில் ஓர் நாள்
மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ

இந்தக் காட்சி அமைப்பே, ரொம்ப நெகிழ்ச்சி! எங்கே காதல் திருமணத்தில் கைகூடுமோ என்ற பயம் கலந்த ஆர்வத்தில், பெண் பார்க்கும் நிகழ்ச்சியிலேயே, அந்த மூன்று பேரையும் மும்மூர்த்திகளாக வந்திருந்து, இராகவனுக்கும் தனக்குமான கல்யாணத்தை நடத்தித் தருவதாகக் கற்பனை....

பொன் வண்ண மாலையை சீராமன் கையில்
மூவரும் கொண்டு தந்தாரோ
சீருடன் வந்து...சீத‌ன‌ம் த‌ந்து
சீதையை வாழ‌ வைத்தாரோ?-ன்னு அப்படியே பாட்டில் சுசீலாம்மா ஏங்குவாங்க!

இதே படத்தில் தான் சீர்காழியின் இன்னொரு ஹிட் - திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா! உன் வருத்தம் தீருமடா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

காத்திருந்த மல்லி மல்லி
பூத்திருக்கு சொல்லிச் சொல்லி

//ஒரு பதினாறு வயதுப் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோரணையில் தன் குரலினிமையை இந்தப் பாடலில் காட்டிச் செல்லும் சுசீலா இந்தப் பாடலைப் பாடும் போது அவருக்கு 55 வயது என்று சொன்னால் தான் நம்புவீர்களா?//

:)

பொதுவா, இந்த மாதிரி பாடல்களுக்கு ஜானகி-யின் "கிக்" வாய்ஸ் தான் சரி வரும் என்பது பலரும் சொல்வது!
ஆனா ஜானகியை அதிகம் முன்னிறுத்திய இளையராஜாவே என்ன நினைச்சாரோ தெரியலை...சுசீலாம்மா இதைப் பாட...வாவ்...She can be peppy & sexy too, at times! :)

கானா பிரபா said...

தல கோபி

வருகைக்கு நன்றி ;)

வணக்கம் மாரிமுத்து

பாடல்களைப் பகிரும் அதே சந்தோஷ உணர்வில் அதே அலைவரிசையில் இருக்கும் உங்களைக் காண்பதிலும் மகிழ்கிறேன்

வணக்கம் ராஜா

பாடல்களைக் கேட்டால் தானாகவே எழுதத் தூண்டிவிடுமே

Ganapathy Ram said...

ஆனால் சிலபாடல்கள் நான் ரசிக்க மட்டுமே என்று கேட்டுக் கேட்டு அனுபவிப்பதுண்டு. அந்த ரகமான பாடல் தான் இது.///

நானும் இந்த பாட்ட ரொம்ப ரசிச்சு இருக்கேன் .

விடுங்க , எனக்கு கல்யாணம் வரபோ , உங்ககிட்ட பாடு கோல்லேச்டின் கேட்குறேன் , நல்ல பாட்ட கொடுங்க ரசிப்பேன் :)

நான் ஒரு ராஜா வெறியன் , எம் ஸ் வி சார் ரசிகன்
சுசீலா அம்மா வோட இந்த பாடல் எல்லாமே பிடிக்கும்.ராஜா சார் வெறியன் ஆ இருந்தும் , இந்த பாட்ட இப்போ தான் கேட்குறேன் .

ரொம்ப நன்றி

Ganapathy Ram said...

இந்த பாடல்கள் தவிர என்னக்கு ரொம்ப புடிச்ச மற்ற சில சுசீலா அம்மா பாடல்கள்

நாளை இந்த வேளை - உயர்ந்த உள்ளம் (முதல் தேசிய விருது பாடல் )(எம் ஸ் வி )
ஒரு நாள் யாரோ - மேஜர் சந்திரகாந்த் (வி குமார் )
கற்பூர பொம்மை - ராஜா
கண்ணனுக்கு மை -ரஹ்மான்

யோ வொய்ஸ் (யோகா) said...

//// இசைக்குயில் சுசீலாவுக்கு மாற்றீடைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ////
100 சதவீத உண்மை, அந்த குரலுக்கு எம்மை தாலாட்ட கூடிய சக்தியிருக்கிறது அண்ணா

கானா பிரபா said...

மகராஜன்,

வருகைக்கு நன்றி தல

Eeva

நன்றி

ஆகா கண்ணபிரானே

உங்கள் பின்னூட்டமே ஒரு அழகிய பதிவாகக் கலக்குகிறது, அருமை அருமை ;)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உங்கள் பின்னூட்டமே ஒரு அழகிய பதிவாகக் கலக்குகிறது, அருமை அருமை ;)//

இதெல்லாம் ஒன்னும் வேணாம்! ஒழுங்கா, "உன்னை ஒன்று கேட்பேன்"-பாட்டின் மூனு மெட்டையும் இங்கிட்டு கொடுங்க காபி!

கானா பிரபா said...

கே.ஆர்.எஸ்

ஒரே மெட்டு மூன்று பாட்டு தொகுப்பில் கண்டிப்பா வரும்

வருகைக்கு நன்றி மங்கை அக்கா

கணபதிராம்

நீங்க சொன்ன பாடல்களும் கலக்கல்ஸ் ;) கல்யாணத்துக்கு நேரே வந்து பாட்டு போட்டுடுவோம் ;)

யோகா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

கைப்புள்ள said...

பதிவுக்கும் சரி...

//இருள் சூழந்ததும் கொல்லையில் சிறுநீர் கழிக்கச் செல்லும் போது கூடவே அண்ணனோ, அம்மாவோ துணைக்கு வரவேண்டிய சிறு பருவம் அது.//

மேல சொன்னதுக்கும் சரி...

ஒரே கமெண்ட் தான்...

"நண்பேன் டா" :)

Anonymous said...

பதிவுக்கு நன்றி பிரபா..எனக்கும் ரொம்ப பிடிச்ச குரல் அவருடையது..

சஞ்சயன் said...

சாரே! உங்கவீட்டு அம்மா ரொம்ப நல்லவங்க போல... அவங்க குரல விட இன்னொரு குரல் உங்களுக்கு பிடிக்கிறது என்று சொன்ன பிறகும் உங்களுக்கு சோறு போடுறாங்களே.

அருமையான பதிவு பிரபா.

அன்புடன்
சஞ்சயன்

பாலாஜி சங்கர் said...

மாலைப் பொழுதின் மயக்கத்திலே

பாக்யலஷ்மி

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி
என் வாழ்நாள் விருப்பம்

G.Ragavan said...

இசையரசி பி.சுசீலாவின் குரலை ஏன் பிடிக்கும் என்று பெரிய இசையமைப்பாளர்களும் பாடகர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் வியந்த் சொன்ன பிறகு... நாம் என்ன சொல்வது? அவர் பாடல்களைக் கேட்டால் பிடித்திருக்கிறது என்று எளிமையாகச் சொல்லிவிடலாம். அதற்கு எடுத்துக்காட்டச் சொல்லும் போதுதான் பிரச்சனை வரும். எந்தப் பாட்டைச் சொல்வது? பொங்கி வரும் புதுப்புனலில் எந்தத் துளியை நீர் என்று சொல்வது!

நாலு பாட்டுகளும் அதியற்புதம். காத்திருந்த மல்லி மல்லியைத் திரும்பத் திரும்பக் கேட்க வைத்து விட்டீர்கள். நன்றி. :)

Aishwarya Govindarajan said...

இனிமையான பதிவு சுசீலாம்மாவின் குரல் போலவே.சுசீலாம்மா ஒரு முறை எங்கள் ஊரில் மெல்லிசைக் கச்சேரி ஒன்றிற்கு வந்திருந்தார்.நானும் என் தாத்தாவும் கேட்கச் சென்றோம் மூன்றாம் வரிசையில் அமர்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்தோம்.நான் அப்போது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.சுசீலாம்மாவின் குரல் எனக்கு அதற்கு இரு வருடங்களுக்கு முன்தான் அறிமுகம் "நாளை இந்த வேளை" என்று அப்போதைய பொதிகையில் கேட்ட பாடல் வழியாக.ஏனோ மனதில் ஒரு புரியாத சோகத்தை தோற்றுவித்தது.அந்த குரலுக்குச் சொந்தக்காரி யாரென்று பார்ப்பதற்காகவே அந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றேன் என் தாத்தாவுடன்.அதே பாடலை அன்றும் பாடினார்.மாலைப் பொழுதின் மயக்கத்திலே,மாதமோ ஆவணி,அத்தான் என் அத்தான் பாடல்களும்.. அன்றைய நிகழ்ச்சியில் அவருடன் சேர்ந்து பாடியவர் ஏ.எல்.ராகவன்.மூன்றாவது வரிசையில் முதல் இருக்கையில் அமர்ந்திருந்தேன் தாத்தா என் அருகில்.அவரது பாடல்களைப் பற்றி புகழ்ந்துரைக்க அப்போது நான் அவ்வளவு வளர்ந்திருக்கவில்லை(இப்போதும்),அவ்வளவு உணரும் திறனும் இல்லை.அதனால் அவர் நிகழ்ச்சி முடிந்து கடந்து செல்லுகையில் அவரைப் பார்த்து புன்னகை மட்டும் செய்தேன்.தன் கரங்களால் என் தலையை தடவிக் கொடுத்தபடி கடந்து சென்றுவிட்டார்.வாழ்வின் மறக்கமுடியாத நிகழ்வுகளில் அதுவும் ஒன்று.Love U susheelamma,for all u have given to us thru Music :)

Umesh Srinivasan said...

என் பால்ய நாட்களில் கேட்டு மகிழ்ந்த பாடல்கள் சுசிலா அம்மாவினுடயவை. ஒரு அன்னையின் தாலாட்டு போன்ற குரல்வளம் என்றும் குதூகலப்படுத்தும். பாடல்களுக்கு நன்றி. பணி தொடரட்டும்.