Pages

Friday, June 8, 2007

நீங்கள் கேட்டவை 8



வணக்கம் நண்பர்களே

நீங்கள் கேட்டவை 8 பதிவில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
இன்றைய பதிவிலே இதுவரை நீங்கள் கேட்ட பாடல்களுடன் நிகழ்ச்சி இடம்பெறுகின்றது.
அந்த வகையில் முதலில் இடம்பெறுவது என் விருப்பப் பாடல் ஒன்று.
இந்தப் பாடல் "செவ்வந்தி" திரைப்படத்தில் இருந்து அருண்மொழி, சொர்ணலதா ஆகியோர்
பாடுகின்றார்கள். பாடலிசை இசைஞானி இளையராஜா.

இளையராஜாவின் இசைக்குழுவில் புல்லாங்குழல் வாத்தியம் இசைக்கும் கலைஞரான அருண்மொழியின் குரலும் ராஜாவிடமிருந்து தப்பவில்லை. அருண்மொழியைப் பயன்படுத்தி நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கின்றார் இளையராஜா.
P.B.ஸ்ரீனிவாஸ் போல அருண்மொழியின் குரலும் அடக்கமானது அதே போல் இனிமையானது. அருண்மொழி பாடிய எல்லாப் பாடல்களையுமே நான் ரசித்துக்கேட்பேன். எனது உயர்தர வகுப்பு பரீட்சைக்காலத்தில் என்னைத் தயார்படுத்தும் காலத்தில் தான் செவ்வந்தி என்ற இந்தத் திரைப்படம் வந்தது. அதிமுக உறுப்பினரான, எம்.ஜி.ஆர் காலத்து அமைச்சர் அரங்கநாயகத்தின் மகன் சந்தான பாண்டியன் இதில் நடித்திருந்தார்.
கூட நடித்தவர் நடிகை ஸ்ரீஜா. சேரன் பாண்டியன், மெளனம் சம்மதம் போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரீஜா. செவ்வந்தி படம் எடுத்து முடிப்பதற்குள்ளாகவே சந்தானபாண்டியன், ஸ்ரீஜா ஜோடி திருமணம் செய்து கொண்டது. ஆனால் படத்தில் இருவரும் பிரிவதாக முடிவு என்று ஞாபகம். இந்தச் செய்திகளை அப்போது 90 களில் நம்மூர் வாசிகசாலைக்கு வந்த தினத்தந்தி வெள்ளி மலரில் வாசித்துத் தெரிந்துகொண்டேன். அமைச்சரின் மகன் திரைப்படத்திற்கு ராஜா மனம் வைத்து இசையமைத்திருக்கின்றார். "செம்மீனே செம்மீனே", அன்பே ஆருயிரே உட்பட இனிமையான கானங்கள் இப்படத்தில் உண்டு. அப்போதய தினத்தந்தி விளம்பரங்களில் இளையராஜாவை முன்னிறுத்தி கொட்டை எழுத்தில் ராகதேவனின் கீத மழையில் என்று இப்படத்திற்கு விளம்பரப்படுத்தியது இன்றும் நினைப்பிருக்கின்றது.

இன்று நான் தெரிவு செய்திருக்கும் "புன்னைவனப் பூங்குயிலே" என்ற இந்தப் பாடல் காதலர் இருவர் பாடும் சோக ராகமாக அமைகின்ற்து. அருண்மொழி, சொர்ணலதா ஜோடி இந்தப் பாடலுக்கு மிகப் பொருத்தமான தேர்வாக இருக்கின்றது.
"என்னோடு பேசும் இளந்தென்றல் கூட
என் கேள்விக்கென்று பதில் கூறுது"
என்று காதலன் தொடங்கும் வரிகளை இடை இசை எதுவுமின்றி
"என் கண்கள் சொல்லும் மொழி காதலே"
என்று காதலி தன் ஆற்றாமையை நிரப்புவதாக இந்தக் கானத்தின் முதற்பாதி அமையும்.

அடுத்த பாதியில்
"பகலென்னும் தீபம் அணையாமல் வீசும்,
அழகாக ஆடும். அருள் தன்னைப் பேசும்,
தூணடாத விளக்கு நாம் கொண்ட காதல்,
ஏற்றாமல் ஒளியை எந்நாளும் வீசும்"

என்று காதலி ஆரம்பிக்க,
விடாமல் தொடர்வார் காதலன் இப்படி
"அலை ஓய்ந்து போகும் கடல்மீதிலே
நிலையான காதல் ஓயாதம்மா"

சாதாரண வரிகள் என்றாலும் காதலர்க்கு இவை அசாதாரண மொழி, அதுவும் பாடலாகப் பிறக்கும் போது அத்தனை பிரிவுத்துயரையும் கொட்டித்தீர்க்கின்றது இப்பாடல். கேட்டுப் பாருங்களேன் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.
PunnaiVana-Sevvant...

இன்றைய நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் பாடல்களை விரும்பிக் கேட்டவர்கள்

வெயிலானின் விருப்பமாக மோகமுள் திரைப்படத்தில் இருந்து "சொல்லாயோ" என்ற பாடல் இசைஞானி இளையராஜாவின் இசையில் ஸ்ரீகுமாரின் குரலில் ஒலிக்கின்றது.


வி.ஜே சந்திரன் , "என் ஜீவன் பாடுது" என்ற பாடலை நீதானா அந்தக் குயில் திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜாவின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கேட்கின்றார்.

மழை ஷ்ரேயாவின் விருப்பமாக இரண்டு தெரிவுகள், ஒன்று கேளடி கண்மணி திரைக்காக இளையராஜா இசையில் "கற்பூர பொம்மை ஒன்று" என்ற பாடலை பி.சுசீலா பாடுகின்றார். அதனைத் தொடர்ந்து அன்னை திரைப்படத்தில் ஜே.பி.சந்திரபாபு பாடும் "புத்தியுள்ள மனிதரெல்லாம் " என்ற பாடல். இசை ஆர்.சுதர்சனம்

நண்பர்களே பாடல்களைக் கேளுங்கள் கேட்பதோடு உங்கள் விருப்பப் பாடல்களையும் அறியத் தாருங்கள்.



Powered by eSnips.com

9 comments:

Anonymous said...

hi
this is my list
sevanthi pooveduthu..
egakantha vellai..(paadum paravaikal- Actors Karthick, Banu priya dubbed from telugu film)
kiravaani...(paadum paravaikal)
thendral kattre thendral kattre (kumbakarai thangaiya)
Poove ithu kattrin keetham (muthal padal. KJ Yesudos, failure film)
ippothaikku ithu mattum.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

பாட்டுப் போட்டதுக்கு நன்றி bro. வீட்ட போய்க் கேட்டுப் பார்க்கிறன்.

ஒரு சின்ன விசயம்..நான் கேட்டது:"கற்பூர முல்லை ஒன்று..காட்டாற்று வெள்ளமென்று.." உங்கட அழகிகளில ஒராள் நடிச்ச கற்பூரமுல்லை என்ட படத்திலயிருந்து.
(கனநேரம் ஜிம்மில நிண்டிட்டு வெளிக்கிட்டா கண் 'கலர்' தெரப்பி இல்லாம பார்க்கிறதுக்கு திரும்ப இசைவாக்கமடையக் கொஞ்ச நேரமெடுக்குமாம் என்டுறவை.. உண்மையோ அண்ணை? அதோ இங்க நடந்தது? ;O))

கானா பிரபா said...

வாங்கோ சோதரி

மன்னிக்கோணும், கேளடி கண்மணி படத்தில இருந்து ஒருத்தர் வாரணம் ஆயிரம் பாட்டை கல்யாண வீடு ஒன்றுக்கு கேட்டார் அந்த ஞாபகத்தில கற்பூர பொம்மை பாட்டைத் தந்திட்டன்.
கற்பூர முல்லை படத்தில் இருந்து அத்தனை பாடல்களும் என்னிடம் இருக்கு. குறிப்பாக "பூங்காவியம் பேசும் ஓவியம்" பாட்டைக் கேட்டால் சிந்து Take away தேவையேயில்லை.

நீங்கள் கேட்ட பாட்டும் மிச்சம் இருக்குற பாட்டும் கட்டாயம் வரும்.

இப்ப என்னத்துக்கு ஜிம்மை இதுக்குள்ளை இழுக்கிறியள்.

(பிரபா மனசுக்குள், கொஞ்சம் இளமையை மெயின்ரெயின் பண்ண ஜிம்முக்குப் போவமெண்டால் அதையும் நாவுறு படுத்துகினம்)

☼ வெயிலான் said...

என் விருப்பத்தையும் பூர்த்தி செய்தமைக்கு மிக்க நன்றி பிரபா! என் விருப்பப்பாடல் பெரும்பான்மையோருக்கு பிடிக்குமென நம்புகிறேன்.

கானா பிரபா said...

//Nakkeeran said...
hi
this is my list
sevanthi pooveduthu..//

வணக்கம் நக்கீரன்

வெகு விரைவில் உங்கள் விருப்பப் பாடல்கள் அரங்கேறும்

வி. ஜெ. சந்திரன் said...

//கல்யாண வீடு ஒன்றுக்கு கேட்டார் அந்த ஞாபகத்தில கற்பூர பொம்மை பாட்டைத் தந்திட்டன். //

;-)

நான் கேட்ட பாடலை இணைத்ததற்கு நன்றி.....

G.Ragavan said...

எல்லா பாடல்களுமே நல்ல பாடல்கள். செம்மீனே பாடலும் மிக அருமை.

சரி. imeem...esnipes ரெண்டுமே பயன்படுத்தியிருக்கீங்களே. ஏன்?

கானா பிரபா said...

//வெயிலான் said...
என் விருப்பத்தையும் பூர்த்தி செய்தமைக்கு மிக்க நன்றி பிரபா! என் விருப்பப்பாடல் பெரும்பான்மையோருக்கு பிடிக்குமென நம்புகிறேன். //

தொடர்ந்தும் இப்படியான அருமையான பாடல்களைக் கேளுங்கள் வெயிலான்

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி ராகவன்

இரண்டு பிளேயர்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்த விசேட காரணம் எதுவுமில்லை, அவர்கள் தந்த கொள்ளளவுக்குள் பாவித்து முடிக்கவேண்டும் என்பதாலேயே.