Pages

Friday, January 17, 2025

பாடகர் ஜெயச்சந்திரன் பாடலுக்குக் காத்திருந்த விருது ❤️


1978 ஆம் வருஷம் பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் வெளிவருகிறது.

அந்தப் படத்தில் பாடகர் ஜெயச்சந்திரன் பாடிய மாஞ்சோலைக் கிளிதானோ பாடல் அவருக்கு புகழ் மாலை கொடுத்தது அனைவரும் அறிந்ததே.

அந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். தன்னுடைய பாடல் பிறந்த கதையில் இதுதான் இளையராஜாவுக்கு அதிகார பூர்வமாக எழுதிய பாடல் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு முன் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் உதவியாளராக இளையராஜா இருந்த சமயம் இளையராஜாவின் மெட்டுக்கு தஞ்சாவூரு சீமையிலே பாடல் எழுதியதையும் முத்துலிங்கம் குறிப்பிட்டது அறிந்ததே.

இங்கேயும் மெட்டுக்குப் பாட்டு என்று அவருக்கு சூழல் கொடுக்கப்பட்டு பல்லவி எழுதுகிறார். ஆனால் அது அதீத கவித்துவமாக இருக்கிறது என்று கங்கை அமரன் சொல்லவும் இரண்டாவதாக எழுதிக் கொடுத்தது அனைவருக்கும் பிடித்துப் போகிறது.  

அந்தப் பாடலில் கரும்பு வயலே குறும்பு மொழியே என்ற வரிகளைப் பிரேரித்தது அப்போது உதவி இயக்கு நராக இருந்த பாக்யராஜ்.

அதென்ன மாஞ்சோலை? மாந்தோப்பு என்று தானே சொல்ல வேண்டும் என்று இந்தப் பாடலுக்கு அப்போது இலக்கியச் சர்ச்சையும் கிளம்பியதாம்.

கிழக்கே போகும் ரயில் நூறாவது நாள் விழாவில் மாஞ்சோலைக் கிளிதானோ பாடலை நடிகர் திலகம் சிவாஜிகணேசன்  பாடிக்காட்டி இதே போல் எங்கள் படங்களுக்கும் பாடல் போடக்கூடாதா என்று இளையராஜாவிடம் கேட்டாராம்.

அந்த ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் விருது தமிழக அரசிடமிருந்து கவிஞர் முத்துலிங்கத்துக்குக் கிடைக்கிறது.

ஆனால் ஜெயச்சந்திரனுக்கோ தேசிய விருதே கொடுத்திருக்கலாம் அவ்வளவுக்கு அற்புதமான பாட்டு அது.


ஆனால் காலம் ஒரு கணக்கு வைத்திருக்கிறது இல்லையா?

15 வருடங்களுக்குப் பிறகு கிழக்குச் சீமையிலே படம் உருவாகிறது.

இம்முறை பாரதிராஜா இசைப்புயல் ரஹ்மான் கூட்டணி, இங்கே வைரமுத்து பாடலாசிரியர்.

ரஹ்மானின் இசையில் ஜெயச்சந்திரன் ஜோடி சேர்கிறார்.

எஸ்.ஜானகியோடு ஜெயச்சந்திரன் பாடிய 

“கத்தாழம் காட்டு வழி” பாடலை இன்னொரு முறை உன்னிப்பாக அவதானித்துப் பாருங்கள் வழக்கமான ஜெயச்சந்திரன் தொனியில் இருந்து மாறுபட்டு வேலை வாங்கியிருப்பார் ரஹ்மான்.

தமிழ் நாடு அரசின் சிறந்த பாடகர் விருது அறிவிக்கப்படுகிறது. 

இதோ சிறந்த பாடகராக அறிவிக்கப்படுகிறார் பாடகர் பி.ஜெயச்சந்திரன்.

ஒலி வடிவில்

https://www.youtube.com/watch?v=tpsmP4KKq_0


கானா பிரபா

17.01.2025