Pages

Thursday, September 25, 2014

பாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ

"இளையராஜாங்கிற ராட்சஷன் இந்தக் கல்யாணி ராகத்தை எவ்வளவு அற்புதமா, வித விதமாப் பயன்படுத்தியிருக்கார்" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் முன்பொரு சூப்பர் சிங்கர் மேடையில் "விழிகள் மீனோ மொழிகள் தேனோ" பாடலை ஒரு போட்டியாளர் பாடி முடித்ததும் சொல்லியிருந்தார்.

ஒரு வருடம் கழித்து மீண்டும் சூப்பர் சிங்கர் மேடை, இது சின்னஞ் சிறாருக்கானது அங்கேயும் இதே பாடல் வந்திருக்கிறது நேற்று. சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் பிரபலமான குழந்தை ஸ்பூர்த்தி பாடிய விதம் மீண்டும் சிறப்பு விருந்தினராக வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களைப் பனிக்கச் செய்திருக்கின்றது. ஸ்பூர்த்தி இந்தப் பாடலை ஆரம்பத்தில் எடுத்த விதம் மாறுதலாக இருந்தாலும் பின்னர் பாடலின் ஜீவனோடு பயணித்து முக்கியமாக அந்த ஆலாபனைகளில் சிறப்பாகப் பாடியிருந்தார்.

"விழிகள் மீனோ மொழிகள் தேனோ" ராகங்கள் மாறுவதில்லை என்ற திரைப்படத்திற்காக பாடலாசிரியர் வைரமுத்து வரிகளில், இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியிருந்தார். எண்பதுகளின் முற்பகுதியில் வெளிவந்த இந்தப் படத்தின் பாடலை அப்போது என் அண்ணன் இயக்கிக் கேட்ட எல்.பி ரெக்கார்ட்  வழியாக என் காதுகளுக்குக் கடத்தியது.  அப்போதெல்லாம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை இனம் காணும் அளவுக்கு அறிவிருந்தாலும் இந்தப் பாடலை ஏனோ  பாடகர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் குரலோடு பொருத்தியே மனம் ஒப்புவித்தது.
எப்படி "உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் குரலுக்குப் பதிலாக ஜெயச்சந்திரன் குரலாகப் பலரால் நினைக்க முடிகின்றதோ அது போல
"ஒரு நாள் போதுமான நான் பாட" என்ற திருவிளையாடல் படப் பாடலை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடும் போது மனம் எஸ்.பி.பியாகவே நினைத்து வைத்திருக்கும். அதற்கு எதிர்மாறாக அமைந்திருக்கிறது இந்த "விழிகள் மீனோ மொழிகள் தேனோ" பாடல்.  ஆனால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பாடினார் என்பதற்கு முத்திரையாக ஒரு சங்கதி வந்து விழும் "அடடா கால்கள் அழகிய வாழை" என்று பாடுமிடத்தில் ஒரு வெட்கப் புன்னகை அதுதான் அக்மார்க் எஸ்.பி.பொ

இந்தப் பாடலின் ஆரம்பமே எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஆலாபனையோடு தான் வாத்தியக் கருவிகளுக்குக் கடத்தும். ஒரு சாஸ்திரீய சங்கீதத்துக்குண்டான வாத்தியக் கோஷ்டியாக புல்லாங்குழல், மிருதங்கம் எல்லாம் அணி செய்தாலும் மிக முக்கியமாக வயலின் வாத்தியப் பயன்பாடு வெகு உச்சமானது இந்தப் பாடலில். குறிப்பாக 1.14 நிமிடத்தில் வயலின் தனித்து நின்று சிறப்புச் சேர்க்க விட்டேனா பார் என்பது போல புல்லாங்குழலும், மிருதங்கமும் சங்கமிக்கும் போது ஒரு மினி இசை வேள்வியே நடந்து முடிந்திருக்கும்.

இம்மாதியான  எண்பதுகளின் ஆரம்பத்தில் கொஞ்சம் சாஸ்திரீய சங்கீதப் பின்னணி கொண்ட பாடல்கள் பலவற்றுக்கு வார்த்தைகளால் அணி செய்திருக்கிறார் புலவர் புலமைப்பித்தன்.
இந்தப் பாடல் கவிஞர் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து இந்த அழகிய பாடலை தன்னுடைய மற்றைய பாடல்கள் போல அதிகம் சிலாகித்துப் பேசவில்லை ஆனால் இந்தப் பாடலின் மகத்துவம் இன்னும் சிறப்பானது. "சலங்கை ஒலி"க்கு நிகரானது.
 பாடல் வரிகளுக்குப் பின்னான ஜதிகளை மேலதிகமாகச் சேர்த்த கைங்கர்யம் ராஜாவுடையதாக இருக்கலாம்.
இந்த மாதிரியான பாடல்கள் தலைமுறைகளைத் தாண்டி வாழும் என்பதற்கு 31 வருடங்கள் கழித்து ஸ்பூர்த்தி மெய்ப்பித்திருக்கிறாள்.

விழிகள் மீனோ மொழிகள் தேனோ மூலப்பாடல்

சூப்பர் சிங்கரில்  ஸ்பூர்த்தி பாடியது



முகப்புப் படம் நன்றி: http://www.tamilnow.com

0 comments: