Pages

Monday, June 23, 2008

அபூர்வ சகோதரர்கள் பின்னணி இசைத் தொகுப்பு


றேடியோஸ்புதிர் 10 இல் ஒரு பின்னணி இசை கொடுத்து அப்படத்தைக் கேட்டிருந்தேன். அபூர்வ சகோதரர்கள் என்று சரியான விடையை ஒரு சில நேயர்கள் தவிரப் பலர் அளித்திருந்தீர்கள். அப்படத்தின் வசனகர்த்தா கிரேசி மோகன். அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் (கெளரவ தோற்றம்) , சதி லீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், தசாவதாரம் ஆகிய கமல் படங்களுக்கு கிரேசி மோகன் வசனம் எழுதியிருக்கிறார்.

நான் கொடுத்த இன்னொரு க்ளூவில் இருந்து பலர் விடைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அது இப்படத்தில் இன்ஸ்பெக்டர் ஜனகராஜிடம் கான்ஸ்டபிள் சிவாஜி பேசும் " எங்கேயோ போயிட்டீங்க" என்ற பிரபல வசனம்.
கதை பஞ்சு அருணாசலம். இயக்கம் சிங்கிதம் சீனிவாசராவ்.
ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம் (கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள் அவரின் ஒளிப்பதிவின் ஒரு சாம்பிள்)


முன்னர் இதே பெயரில் ஜெமினி நிறுவனம் தயாரித்த தமிழ்ப்படத்தில் எம்.கே.ராதா மற்றும் இதே கதை ஹிந்தியில் படமான போது ரஞ்சன் ஆகியோர் நடித்திருப்பார்கள்.

சரி இனி கலைஞானி கமல்ஹாசனின் "அபூர்வ சகோதரர்கள்" படத்திலிருந்து இசைஞானி இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவான பின்னணி இசையைத் தொகுத்து இங்கே தருகின்றேன்.

எழுத்தோட்டத்தின் பின்னணியில் கமல், ஸ்ரீவித்யா வில்லன்களிடமிருந்து தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (ட்ரம்ஸ் மற்றும் பல வாத்தியக் கலவை)



எழுத்தோட்டத்தில் வரும் பின்னணியில் கமல் கொல்லப்பட, ஸ்ரீவித்யா மட்டும் தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (புல்லாங்குழல், பல வயலின்கள், தனி வயலின் என்று மாறும்)



குழந்தைகள் ஆளுக்கொரு பக்கம் பிரிதல் (வயலின்)



அப்பு சர்க்கஸில் தோன்றும் முதற்காட்சி (வயலின்)



ரூபணியின் அறிமுகக் காட்சிக்கு சர்க்கஸ் குழு வாசிக்கும் பாண்ட் வாத்தியம்



அப்பு கமலின் கல்யாண சந்தோஷம் (பாண்ட் இசை)



அப்பு கமலின் காதல் தோல்வி (முகப்பு இசையின் வயலின் மீண்டும் ஒன்றிலிருந்து பல வயலின்களாக)



அப்பு தற்கொலை முயற்சி ( பல வயலின்களின் கூட்டு ஆவர்த்தனம்)



அப்புவின் பழிவாங்கும் காட்சி ஒன்று (பல வாத்தியக் கூட்டு)



அப்புவின் பழிவாங்கும் காட்சி இரண்டு



இறுதிக்காட்சியில் மீண்டும் வயலின் மற்றும் புல்லாங்குழல் இசை கலக்கின்றது







Sunday, June 22, 2008

றேடியோஸ்புதிர் 10 - இந்தப் பின்னணி இசை வரும் படம் எது?


றேடியோஸ்புதிரின் 10 வது போட்டியில் உங்களை நான் சந்திக்கின்றேன், இப்போட்டி ஒரு பின்னணி இசையுடன் மலர்கின்றது. இந்தப் பின்னணி இசை படத்தின் எழுத்தோட்டத்தோடு வரும் இசையின் ஒரு பாதி. ஆனால் பின்னர் படத்தின் பல காட்சிகளில் மெல்ல இழையோடுகின்றது. இசையமைத்தவர் இசைஞானியே தான். இப்படத்தின் முழுமையான பின்னணி இசையை போட்டி முடிவில் தருகின்றேன்.

இந்தப் புதிரை அவிழ்ப்பதற்கான சில உபகுறிப்புக்களை இங்கே தருகின்றேன். இப்படத் தலைப்பு மிகவும் பழைய படமொன்றின் தலைப்பை ஒத்தது. பழைய படத்தில் அன்றைய இரண்டு பிரபல நடிகர்கள் நடித்திருப்பார்கள். இங்கே நான் தந்த படத்தில் நாயகன் மூன்று வேடங்களில் நடித்திருப்பார். ஆனால் இரண்டு வேடங்கள் தான் படம் முழுதும் அதிகம் ஆக்கிரமிக்கும். இந்தப் படத்தின் வசனகர்த்தாவாக இணைந்தவர் தொடந்து பல படங்களில் இந்த நாயகனுக்காக எழுதியிருக்கிறார். விடையை மட்டும் சரியாகச் சொன்னீர்கள் என்றால் "நீங்க எங்கேயோ போயிட்டீங்க" அப்படி நான் சொல்வேன்.
க்ளூ கொடுத்தும் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்காக இந்த இசை வரும் காட்சியைப் படமாக இட்டிருக்கின்றேன்.

பின்னணி இசையை கேட்க

Puthir10 - Kana Praba

அல்லது

Tuesday, June 17, 2008

மண்ணில் இந்தக் காதல் இன்றி....!


கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது தங்கை எஸ்.பி.சைலஜா, எஸ்.பி.சரண் மற்றும் மல்லிகார்ஜினன், கோபிகா பூர்ணிமா ஆகியோர் சிட்னி வந்து இசை நிகழ்ச்சியொன்றைப் படைத்திருந்தனர். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வேலையையும் எஸ்.பி.பி அவர்களே செய்யவேண்டும் என்பதால் சுவாரஸ்யமான பல விடயங்களைச் சொல்லி அந்த நிகழ்ச்சியைக் கொடுத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் சொன்ன ஒரு சம்பவத்தை வைத்து, மேலதிக தகவல்களைச் சேர்த்து இன்றைய றேடியோஸ்புதிரைக் கொடுத்திருந்தேன். இன்றைய றேடியோஸ்புதிர் 9 மிக சுலபமாக இருந்த காரணத்தால் பலர் சரியான விடையைச் சொல்லியிருக்கீங்க. அந்தப் புதிர் விடை இதுதான்

இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின் கேளடி கண்மணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வஸந்த். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் வரும் "எல்லோரும் மாவாட்டக் கத்துக்கணும்" பாடலில் ஓட்டல் சிப்பந்தியாகக் கூட நடித்திருப்பார். இந்த கேளடி கண்மணி படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியமே நாயகனாக நடித்திருப்பார். இவருக்கு ஒரு பாடல் வைக்கும் போது புதுமை ஏதாவது செய்யலாமே என்று நினைத்து மூச்சு விடாமல் பாடும் பாட்டு என்று விளம்பரப்படுத்தினால் நன்றாக இருக்குமே என்று வஸந்த் தன் குருநாதர் கே.பாலசந்தரிடம் சொல்லவும், அதுக்கு அவர்
"என்னது பாலுவா இதைப் பாடப்போறான்? அவனால இந்த ஒடம்பை வச்சு ஒரு எட்டு நடக்கவே முடியாது, மூச்சு வாங்கிடும், மூச்சு விடாம எப்படி அவன் பாடுவான்" என்றாராம்.

ராஜா ஒரு வழியாக டெக்னிக்கல் ஒட்டுவேலைகளால் மூச்சு விடாமல் பாடும் பாடலான "மண்ணில் இந்தக் காதலின்றி" பாடலை எஸ்.பி.பாலா பாட இசையமைத்து விட்டார். அந்தப் பாடல் இதோ:
Mannil intha - SPB

கேளடி கண்மணி திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்ட போது அந்தத் தெலுங்குப் படத்தின் தலைப்பு கூட ஒரு பாடலின் முதலாவது அடிதான். அந்தப் படத்தலைப்பு "ஓ பாப்பா லாலி" , இந்த அடியில் தெலுங்கில் கீதாஞ்சலி (தமிழில்: இதயத்தைத் திருடாதே)படப்பாடல் இருக்கின்றது. இதோ ஒ பாப்பா லாலி படத்தில் இருந்து மண்ணில் இந்தக் காதலின்றி பாடலின் தெலுங்கு வடிவம்:
Materani Chinnadani - SPB


இந்தப் பாடல் இளையராஜாவின் அண்ணாவின் பாவலர் வரதராசன் என்றே பாடல் இசைத்தட்டுக்களிலும் குறிப்பிட்டுப் பிரபலப்படுத்தியிருந்தார்கள். ஆனால் இதை எழுதியவர் கங்கை அமரன் அவர்கள். அதை அவரே பரத்வாஜின் இசை நிகழ்ச்சி ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.


மூலப்பாட்டைப் பார்க்க


றேடியோஸ்புதிர் 9 - கிண்டலடித்த அந்தப் பாட்டு எது?


கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது தங்கை எஸ்.பி.சைலஜா, எஸ்.பி.சரண் மற்றும் மல்லிகார்ஜினன், கோபிகா பூர்ணிமா ஆகியோர் சிட்னி வந்து இசை நிகழ்ச்சியொன்றைப் படைத்திருந்தனர். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வேலையையும் எஸ்.பி.பி அவர்களே செய்யவேண்டும் என்பதால் சுவாரஸ்யமான பல விடயங்களைச் சொல்லி அந்த நிகழ்ச்சியைக் கொடுத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் சொன்ன ஒரு சம்பவத்தை வைத்து, மேலதிக தகவல்களைச் சேர்த்து இன்றைய றேடியோஸ்புதிரைக் கொடுக்கின்றேன்.

அவர் ஒரு பத்திரிகையாளராக இருந்து பின்னர் ஒரு பிரபல இயக்குனராக இணைந்து சினிமா உலகிற்கு வந்தவர். இவர் இயக்கப் போகும் முதற் படத்தின் தலைப்பே தன் குருநாதரின் படத்தில் வரும் ஒரு பாடலின் முதல் அடியாகும்.

இந்த புது இயக்குனர் படத்தின் நாயகனுக்கு டுயட் பாடலை வைக்க முடியாது, ஆனால் ஒரு பாடலில் புதுமை செய்யவேண்டும் என்று நினைத்துத் தன் ஆசையை குருநாதர் இயக்குனருக்குச் சொல்கின்றார். அதற்கு அவரோ
"பாலுவா இதைப் பாடப்போறான்?, அவனால இந்த ஒடம்பை வச்சு ஒரு எட்டு நடக்கவே முடியாது, மூச்சு வாங்கிடும், இந்தப் பாட்டை எப்படிப் பாடப் போறான்?"
என்று கிண்டலாகச் சொன்னாராம். இதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் சொல்லி அந்தப் பாடலைப் பாடினார். அந்தப் பாடல் எது என்பதே இன்றைய புதிர்.

Saturday, June 14, 2008

பாஷையூர் புனித அந்தோனியார் பெருவிழா - ஒலி அஞ்சல்

நேற்று ஈழத்தின் யாழ்மண்ணில் உறையும் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் பெருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றிருந்தது. அதன் நேர்முக வர்ணனையை யாழ்மண்ணில் இருந்து தொலைபேசி வாயிலாக எடுத்து சிறப்பான ஒரு ஒலி அஞ்சலைக் கொடுத்திருந்தார்கள் எமது 24 மணி நேர சமூக வானொலி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் திரு பிறின்ஸ் இமானுவேல் மற்றும் அவர் துணைவி திருமதி சோனா பிறின்ஸ் ஆகியோர்.

நேற்று காலையில் யாழ்.பாஷையூர் அந்தோனியார் ஆலயத்தின் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் நிகழ்வினையும், நேற்றிரவு அவ்வாலயத்தின் திருச்சொரூப பவனி நிகழ்வையும் ஒலி அஞ்சல் செய்ததோடு, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் பெருவிழா நிகழ்வினையும் வானலைக்கு எடுத்து வந்திருந்தோம். அத்தோடு சிட்னியில் இருந்து அருட்தந்தை வின்சன்ட் சவரிமுத்து அவர்களின் நற்செய்தியும், நேயர்களின் கலந்துரையாடல் நிகழ்வுமாக சிறப்பானதொரு நாளாக அமைந்திருந்தது.

நேற்றுக் காலை நடைபெற்ற யாழ்.பாஷையூர் அந்தோனியார் ஆலயத்தின் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் நிகழ்வின் பகிர்வு இதோ:

திருப்பலி நிகழ்வு ஒலித்தொகுப்பு




தரவிறக்கிக் கேட்க
(To Download (Right-click, Save Target As/Save Link As)

யாழ்.பாஷையூர் அந்தோனியார் ஆலயத்தின் திருச்சொரூப பவனி


Monday, June 9, 2008

சிறப்பு நேயர் "ஆ.கோகுலன்"

றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் வாரம் கடந்த 19 வாரங்களாக வலம் வந்து கொண்டிருந்து இந்த இருபதாவது வாரத்துடன் ஒரு நிறைவை நாடவிருக்கிறது என்று தான் முதலில் போட்டிருந்தேன். ஆனால் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதால் ;-) தொடந்து இந்தத் தொடர் இன்னும் சில காலம் நீடிக்கப்படுகின்றது. முதலில் ஜீவ்ஸ் அவர்களை எதேச்சையாக தொடரின் முதல் நேயராக இணைத்துக் கொண்டு தொடர்ந்த நேயர்களின் ஒத்துழைப்பினால் இந்த இருபது வாரங்களைத் தொட்டிருக்கின்றது. இதுவரை தமது படைப்புக்களை அனுப்பாதோர் முத்தான ஐந்து பாடல்களைத் தெரிவு செய்து அவற்றின் விளக்கங்களோடு kanapraba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். பாடல்களின் audio file களை அனுப்ப்பவேண்டிய அவசியம் இல்லை.

இந்த இருபதாவது வாரத்தின் சிறப்பு நேயராக வரும் சிறப்பு நேயராக ஆ.கோகுலன் அமைகின்றார். தற்போது வேலை நிமித்தம் கொரியாவில் வாழ்ந்துவரும் கோகுலன், ஈழத்தைச் சேர்ந்தவர். ஈழத்தில் இருந்த காலத்து நினைவுகள், இசை, உலகம் என்று தன் பதிவுகளை விசாலமாக்கிக் கொண்டவர். புதுசு புதுசாக வித்தியாசமான பாடல்களைக் கேட்கவேண்டும், அவற்றைப் பகிரவேண்டும் என்ற ஆவல் கொண்டவர் இவர். அதற்கு உதாரணம் இவரது தனித்தளமான சும்மா கொஞ்ச நேரம்......

ஆ.கோகுலனின் ரசனைச் சிறப்பிற்கு உதாரணமாக அமைகின்றன இந்த வாரம் அவர் அளித்திருக்கும் முத்தான ஐந்து பாடல்களும் அவை குறித்த விளக்கங்களும்.

அன்புள்ள கானா பிரபா, தங்கள் றேடியோஸ்பதியின் வாராந்திரநேயர் பகுதி பார்வையிட்டேன். சிறப்பான முயற்சி. பங்குபற்றுபவர்களும் சிறப்பாக சோபிக்கின்றார்கள்.
நன்றி.
அன்புடன்,
ஆ.கோகுலன்.

01. பூங்கதவே தாழ் திறவாய்

கவிஞர் வைரமுத்துவை அறிமுகப்படுத்தி பெயர்பெற்றது 'நிழல்கள்' எனும் படம். இப்படத்தில் இடம்பெற்ற இன்னுமொரு அருமையான பாடல் இது.

"பூங்கதவே தாழ்திறவாய்.." என்பதை ஆரம்பமாகத்தருவது பொருத்தமானது என்று
நினைக்கிறேன். ஒரு சில பாடல்கள் பாடினாலும் காலத்தால் அழியாப்புகழ் பெற்றவர்களுள் தீபன்சக்கரவர்த்தியும் ஒருவர். இளையராஜாவின் இசையைப்பற்றிச் சொல்வது அதிகப்பிரசங்கித்தனமானது. ஏனெனில் அது உணரப்படவேண்டியது. இதோ..

படம் : நிழல்கள்
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் உமாரமணன்
இசை : இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்





02. ஓ சாத்தி ரே

இசைக்கு மொழியில்லை என்பதற்கு இப்பாடல் சிறந்த உதாரணம். மிகமிக மென்மையான இசை.

இடையில் ஓரிடத்தில் மென்டலின் அருமையாக இழைகிறது.இசையமைப்பாளர் மிகவும் அனுபவித்து இசையமைத்திருக்கிறார்.
படத்தில் பாடல் காட்சி கூட பாடலிற்கு ஏற்ற Slow motion இல் அருமையாக வந்துள்ளது. பாடலில் ஒரு காட்சியில் மேல்மாடியிலிருந்து இருவரும் கீழே ஓடிவந்து வெளிவாசலினூடாக செல்லும் காட்சி ஒரே Crane Shot இல் படமாக்கியுள்ளது அபாரம். துப்பாக்கி முனையில் காதல்..!. இசையமைப்பாளர், பாடகர்கள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் அனைவரிற்கும் இடையிலான புரிந்துணர்வு இரசாயனம் கொண்ட அருமையான ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு Team work. பாடல் வரிகளும் அபாரமானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஹிந்தி தெரிந்தவர்கள் மொழிபெயர்க்கலாம். ஷ்ரேயா கோஷலின் இன்னுமொரு இனிமையான அனுபவம்.

படம் : ஓம்காரா
பாடகர்கள் : ஷ்ரேயா கோஷல், மற்றும் விஷால் பரத்வாஜ்
இசை : விஷால் பரத்வாஜ்





03. நிலாவிலே...நிலாவிலே

தமிழ் உச்சரிப்பு விமர்சிக்கப்பட்டாலும் தனது பாடல்கள் மூலம் தமிழ்மக்களை வசீகரித்துக்கொண்டவர் உதித்நாராயணன். எம்மவர்கள் சிலர் கூட தமிழை கொஞ்சம் செயற்கையாக உச்சரிப்பது ஸ்ரைல் என்று நினைத்து இன்பம் காண்பவர்கள். இந்தப்பாடலில் உதித்தின் செல்லமான தமிழ் இன்னும் மெருகு சேர்க்கிறது. ஆரம்பத்தில் பாடல் அவிழ்வதே அலாதியானது. சுஸாதா பட்டாச்சார்யாவின் அபாரமான ஹம்மிங்குடன் ஒரு விமானத்தின் மேலெழுகை போல (Take off) சட்சட்டென்று கியர்களை மாற்றி ரொப் கியருக்கு வந்து பின்
நிதானமான வேகம். பாடல் வரிகள் என்னவோ வழமையான பொய்கள் தான். ஆனால் மிக
வசீகரமான பொய்கள். இசையும் உதித் இடையிடையே தளர்ந்து போய் சொல்லும்
ஹோய்..யும் சுஜாதா பட்டாச்சார்யாவின் க.னா..விலே.. என்பதில் வரும்
சங்கதியும் ஆகா எத்தனை அழகு!!. சுனாமிக்கு முன்பு திருகோணமலை கடற்கரையில் அடிக்கடி இப்பாடல் ஒலிபரப்பாகும்.

படம் : ஆகா எத்தனை அழகு
பாடியவர்கள் : உதித் நாராயணன் மற்றும் சுஜாதா பட்டாச்சாரியார்
இசை : வித்தியாசாகர்
வரிகள் :




04. "தீண்டாய் மெய் தீண்டாய்"

துக்கம், மகிழ்ச்சி, கோபம் போல காமமும் ஒரு உணர்வே. இதை இன்னும் நாகரிகமாக 'சிருங்காரம்' என்று சொல்வார்கள். இதுவும் அருமையான ஒரு சிருங்காரரசம் நிறைந்த பாடல். துணைக்கு சங்ககால இலக்கியங்கள் வேறு வருகின்றன. இன்னோரன்ன வாத்தியங்கள் பயன்பட்டாலும் சின்னச் சின்னதாக வரும் வயலின் மோகிக்க வைக்கிறது. ரஹ்மானின் இன்னொரு உத்தியான முரணான Beat உடன் Slow ஆன இசை. பாடலை உச்சஸ்தாயிக்கு கவனமாகக்கொண்டு போவதில் பாடகரை அவசியம் பாராட்டவேண்டும். 'தீண்டாய்' ன்பதற்கு 'தீண்டு'(தீண்டாயோ) மற்றும் 'தீண்டாதே' என எதிர்எதிர் கருத்து கொள்ளமுடியும் என்பதும் சிறப்பு. பாடல் முடிவில் ஆண்குரல் பாடிக்கொண்டிருக்கும் போதேசிலவிநாடி இடைவெளியில் பெண்குரலும் இழைவது பாடலின் தேவை கருதிய.!! அருமையான உத்தி..!

படம் : என் சுவாசக் காற்றே
பாடியவர்கள் : எஸ்.பி.பி. சித்ரா
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து




05. கேட்டேனா

பின்னணி வாத்தியங்களை பெரிதாக நம்பாமல் பாடல்வரிகளை மட்டுமே பிரதானமாகக்கொண்ட பாட்டு. ஆனாலும் சின்னச்சின்னதான பின்னணி பிரமாதம்.
இசை ஏற்கனவே பாபா படத்தில் கேட்ட இசை தான். ஆனாலும் இதில் வரிகளால் இன்னும் மெருகேறுகிறது. பிரமாதமான கற்பனை. பொதுவாக சணடை பிடித்துக்கொண்டு தான் காதல் ஆரம்பிக்கிறது. இதற்கு இருபாலாரினதும் எச்சரிக்கையுணர்வும் மற்றவரின் எண்ணங்களை உளவறிய நினைப்பதுமே காரணம். இது ஆதாம் ஏவாளிலிருந்தான தொடரும் இயற்கை. இப்பாடலிலும் இது விதிவிலக்கல்ல.
''நான் கற்ற அறிவியலில்
உன்னைப்போல் அதிசயமில்லை
திக்கற்று நிற்குது கண்ணே
விஞ்ஞானம் தான்..''
- என்று கன்னாபின்னாவென்று அநியாயத்திற்கு வியந்து..
''உன்பேரை சொல்லி சொல்லி
உமிழ்நீரும் தமிழ் நீர் ஆச்சு..''
- என்று சொல்வதும்.. அதற்கு..
''பிறகென்ன என்னைப்பற்றி
கவிதை பாடு...''
- என்று ஆப்பு வைப்பதும்..
''கவிதைக்குள் சிக்காதம்மா..
கண்ணே உன் செளந்தரியம்தான்..''
என்று சமரசம் செய்வதும்.. சந்தேகமேயில்லை.. இது காதல் தாங்க..!
புத்திசாலிகள் இருவர் காதலிப்பது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். பாடல் ஆசிரியர் வாலி கூட மில்லிமீற்றர் மில்லிமீற்றராய் லவ்பண்ணித்தான் எழுதியிருப்பார் போல.. அவ்வளவு சிலாகிப்பான வரிகள் பாடலில். நெசமாலுமே ஒக்காந்து யோசிக்காம இப்டி எல்லாம் எளுத முடியாதுங்க..!!! :)

படம் : தேசம்
பாடியவர்கள் : அஸ்லாம் மற்றும் சாதனா சர்க்கம்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள் : வாலி




மீண்டும்
நன்றிகளுடன்
ஆ.கோகுலன்.

Monday, June 2, 2008

ராகதேவன் இளையராஜா - வருஷம் 65

யூன் 2 , 1943 இல் பண்ணைப்புரத்தில் தோன்றியது இந்த இசைக்குயில். பின்னர் தமிழ்த் திரையிசையை மட்டுமல்ல தென்னிந்திய திரையிசையும் கவர்ந்து கொண்டார் இந்த ராஜா. வட நாட்டில் வர்த்தக ரீதியான கவனத்தைப் பெறாவிட்டாலும் அந்தப் பிராந்திய மேதைகளாலும் போற்றப்பட்டவர் இந்த இசைஞானி. ஒருகாலத்தில் தமிழ் காதுகளுக்குள் ஹிந்தி ஓசை தான் ஆக்கிரமித்தபோது இந்தத் தலையெழுத்தையே மாற்றியவர் நம்ம "தல". திரையுலகிற்கு வந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் தென்னிந்தியாவின் பிராந்திய மொழிகளில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த சாதனையாளர் இவர்.

ரஹ்மான் என்ற புயல் தொண்ணூறுகளில் அடித்தபோது, இற்றைக்கு பதினைந்து வருடங்களுக்கு முந்திய விகடனில் ஹாய் மதன் பகுதியில் வாசகர் ஒருவர் கேள்வி கேட்கிறார் இப்படி.
"இளையராஜாவின் இடத்தை ரஹ்மான் பிடித்து விட்டாரா?"
அதற்கு மதன் சொல்கிறார் இப்படி
"ராஜாவின் சிம்மாசனத்தில் ராஜா ஒருவரே தனிக்காட்டு ராஜாவாக இருந்தவர், இனி ராஜா கூட இந்த சிம்மாசனத்துக்கு மீண்டும் வரமுடியாது".
அதைத் தானே இன்றைய திரையுலக இசை உலகம் காட்டுகின்றது. ஆளாளுக்கு ஒவ்வொரு ஹிட் பட்ங்கள் கொடுத்து அவ்வப்போது தன்னை நிலை நிறுத்தும் கூட்டாட்சி தானே இன்றைய காலத்தில் இருக்கின்றது. (புகைப்படங்கள் உதவி: ராசா ரசிகன் "தல" கோபி)

"ராஜா ராஜா தான்,
நேற்று இல்லே நாளை இல்லே
நீ எப்பவுமே ராஜா"

"உன் புகழ் இன்னும் பல யுகங்கள் நிலைக்கவேண்டும்
ராகதேவனே உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"


இசைஞானி இளையராஜாவின் குரலில் முத்தான மூன்று தனிப்பாடல்கள்


"பாட்டாலே பக்தி சொன்னான், பாட்டாலே புத்தி சொன்னான்" (படம்: கரகாட்டக்காரன்)



"என்னை ஒருவன் பாடச் சொன்னான், அவன் சொன்னது போல் நான் பாடுகின்றேன் (படம்: கும்பக்கரை தங்கய்யா)



"ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா, நேற்று இல்லே நாளை இல்லே எப்பவுமே ராஜா" (படம்: அக்னி நட்சத்திரம்"


இசைஞானி இளையராஜாவின் குரலில் முத்தான மூன்று ஜோடிப்பாடல்கள்


"தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல" (படம்: அவதாரம்)



"நான் தேடும் செவ்வந்திப் பூவிது, ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது" (படம்: தர்மபத்தினி)



"ஒரு ஜீவன் அழைத்தது, ஒரு ஜீவன் துடித்தது" (படம்: கீதாஞ்சலி)