Pages

Tuesday, November 7, 2023

மாடப்புறாவே வா..... ஒரு கூடு கொள்வோம் வா......💛❤️💚💛


பால்ய காலத்தில் மனதில் ஊன்றிப் பதியம் போட்ட இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் இதை அள்ளி வழங்கிய இலங்கை வானொலிக் காலத்தின் பொற்”காலை” நினைவுகள் தானாக எழுந்து பெருமூச்சைக் கொடுக்கும்.

25 வருட வானொலி வாழ்வுக்கு உரம் போட்டவை இந்தப் பாடல்களை வழங்கியவர்கள் அன்றைய வானொலிக்காரத் துரோணாச்சாரியர்கள். அவர்களால் தான் இசையமைப்பாளர் பேதமின்றி எல்லோரையும் ரசிக்க முடிந்தது

“மாடப் புறாவே வா” இதன் இனிமையைக் கரைத்து விடும் அவலம் நிரம்பிய கதையோட்டம் கொண்டது “மதனோற்சவம்" மலையாளச் சித்திரம். அப்படியே “பருவ மழை” என்று தமிழில் வந்து அந்தக் காலத்து யாழ்ப்பாணத் திரையரங்கையும் தட்டிய ஞாபகம்.

கமலைத் தங்கள் தேசத்தவர் என்று இன்றும் உரிமையெடுக்கும் கேரளத்தவர் மண்ணில் அவர் புடமிடப்பட்ட காலத்தில் வந்த படங்களில் ஒன்று.

மலையாளிகளின் இரசனையே விநோதமானது என்பதற்கு இதுவுமொரு சான்று. இல்லையா பின்னே?

இந்தியாவின் ஒரு அந்தத்தில் இருக்கும் மேற்கு வங்கம் தந்த சலீல் சவுத்ரியை இன்னொரு அந்தத்தில் இருக்கும் தம் மண்ணில் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்று இன்று வரை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது சூப்பர் சிங்கர்களில் சலீல் சவுத்ரி இல்லாத வருஷங்கள் இல்லை எனலாம். அவ்வளவுக்கு உச்சத்தில் வைத்திருக்கிறார்கள்.

“மாடப் புறாவே வா ஒரு கூடு கூட்டான் வா”

https://www.youtube.com/watch?v=S3xNcBXDiQE

மலையாள அசலைக் கேட்டாலேயே ஏதோ தமிழ்ப்பாட்டுக் கேட்குமாற்போல இருக்கும். ஓ.என்.வி குரூப்பின் பாடலை கூகுளில் மொழி பெயர்த்தாற் போல அன்றி, ஒரு நிலைக்கண்ணாடியை வைத்துத் தமிழாக்கியது போல கவியரசு கண்ணதாசன் கண்ணதாசன் தமிழாக்கியிருப்பார்.

இந்தப் படம் ஹிந்திக்குப் போன போதும் அங்கேயும் கான கந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸ் தான் குரலாகியிருப்பார்.

அங்கு சென்றும் https://www.youtube.com/watch?v=MMFAKOUFQV8

அதே ஜீவனைக் கொடுப்பார்.

இசையமைப்பாளர் சலீல் செளத்ரியின் இசைக் கோப்பில் சிக்கல் இராது. சலசலப்பில்லாத தெளிந்த நீரோடை போல இருக்கும்.

மத்திமமான ஸ்தாயியில் பயணிக்கும் அதற்குள் ஏராளம் உணர்வலைகளைப் புதைத்து வைத்திருக்கும்.

“மாடப் புறாவே வா” பாடலைக் கேட்கும் போதெல்லாம் குடும்பமாக இருந்து வானொலி கேட்டு மகிழ்ந்த, அந்த அழகிய காலம் மிதந்து வந்து மனதில் இலேசானதொரு வலியைக் கிளப்பி விட்டுப் போகும்.

நீர் வயல் பூக்கள் போல் நாம் பிரிந்தாலும்

நேர் வழியில் கண்ணே நீ கூட அரும்பு...

பாட விரும்பு...

மடியும் வரை எனது புறாவே..

தேன் வசந்த காலம்

கை நீட்டி, கை நீட்டி

வரவேற்பதால் நீ வா...

மாடப்புறாவே வா...

ஒரு கூடு கொள்வோம் வா..❤️

https://www.youtube.com/watch?v=JNGD8ibrXWw

கானா பிரபா


No comments:

Post a Comment