தமிழன்னை ஈன்றெடுத்த எங்கள் ஒப்பற்ற கவி பாரதியின் இந்த நாளில் அவர் எழுதிய "மங்கியதோர் நிலவினிலே" பாடலின் நான்கு வடிவங்கள், நான்கு வித மெட்டுகளில், நான்கு இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்டிருப்பதை இங்கே பகிர்கின்றேன்.
எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் எழுதிய "ஒரு மனிதனின் கதை" மதுப்பழக்கத்தினால் எழும் சீரழிவை மையப்படுத்திய நாவல். இது நடிகர் ரகுவரன் முக்கிய பாத்திரமேற்று நடிக்க "ஒரு மனிதனின் கதை" என்ற பெயரிலேயே தொலைக்காட்சித் தொடராக ஏவிஎம் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. பின்னர் இதை "தியாகு" என்ற பெயரிலேயே ஏவிஎம் நிறுவனம் திரைப்படமாகவும் மாற்றியது. இதிகாசம் தவிர்ந்த சமூக நாவல் தொலைக்காட்சித் தொடராகவும் பின்னர் சினிமாவாகவும் மாற்றம் கண்டது தமிழில் இதுவே முதன்முறையாகும்.
"ஒரு மனிதனின் கதை" தொலைக்காட்சித் தொடரில் மகாகவி சுப்ரமணியபாரதியாரின் பாடல்கள் பயன்பட்டிருக்கின்றன. இசை வழங்கியவர்கள் சங்கர் - கணேஷ் இரட்டையர்கள். இதில் மிகவும் அழகாகப் பயன்பட்டிருக்கிறது பாரதியார் எழுதிய "மங்கியதோர் நிலவினிலே" பாடல்.
இந்தப் பாடலைப் பத்து வருடங்களுக்கு முன்னர் என்னுடைய இசைக் களஞ்சியத்தில் திரட்டி வைத்திருந்தது இப்போது பயனை அளிக்கின்றது. இன்று இணையத்தில் காணக்கிடைக்காத இப்பாடலை என் பிரத்தியோக ஒலித்தொகுப்பில் இருந்து பகிர்கின்றேன்.
பாரதியாரின் பாடல்களைத் திரையில் பயன்படுத்தும் உரிமம் பெற்ற ஏவிஎம் நிறுவனர் மெய்யப்பச் செட்டியார் பின்னர் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவற்றை நாட்டுடமை ஆக்கினார். இதனால் பல்வேறு தயாரிப்பாளர்களும் பாரதி பாடல்களைப் பயன்படுத்த முடிந்தது. ஏழாவது மனிதன் படத்தில் எல்.வைத்தியநாதன் இசையிலும், பாரதி படத்தில் இளையராஜா இசையிலும் பாரதி பாடல்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இதுதவிர வறுமையின் நிறம் சிகப்பு, சிந்து பைரவி போன்ற படங்களிலும் பாரதியின் ஒன்றிரண்டு பாடல்கள் பயன்பட்டன. சினிமா உலகில் பாரதியின் காதலனாக கே.பாலசந்தரைச் சொல்லுமளவுக்கு அவரின் பெரும்பாலான படங்களில் பாரதியின் அடையாளம் எங்கேனும் நேரடியான பாத்திரம், பாடல், கதைக்கரு என்று ஒட்டிக் கொண்டிருக்கும்.
"மங்கியதோர் நிலவினிலே" பாடலின் மேலும் மூன்று வடிவங்கள் இதோ. இங்கே சிறப்பு என்னவென்றால் சிவசங்கரி (ஒரு மனிதனின் கதை), அகிலன் (பாவை விளக்கு) ஆகிய இரு பெரும் எழுத்தாளரது படைப்புகளில் ஒரே பாடல் பயன்பட்டிருக்கும் தன்மை தான்.
திருமணம் படத்தில்
ஜி.ராமநாதன் இசையில் T.M.செளந்தரராஜன்
பாவை விளக்கு படத்தில் சி.எஸ்.ஜெயராமன் பாடியது. இசை : கே.வி.மகாதேவன்
தேவநாராயணன் குரலில்
https://www.youtube.com/watch?v=6CZMVN9MLpo&sns=em
யார் பாரதி - நெல்லை கண்ணன் பகிர்ந்த சிறப்பு மிகு உரை
".... முகவரியைத் தொலைத்த....." .... மனசு வலித்தது. என்னை உங்கள் அம்மாவாக ஏற்றுக் கொள்ளுங்க தம்பி!
ReplyDelete