Pages
▼
Sunday, August 4, 2013
இசையமைப்பாளர் வி.தட்சணாமூர்த்தி சுவாமிகள் நினைவில்
தொண்ணூறுகளின் இறுதியில் பிரபலமாக இருந்த சன் டிவி "சப்தஸ்வரங்கள்" பாடற் போட்டி நிகழ்ச்சியின் வழியாகத் தான் வி.தட்சணாமூர்த்தி என்ற இசையமைப்பாளரை அறிந்து கொண்டேன். அதற்கு முன்னர் அவரின் இசையில் வெளிவந்த ஓரிரு தமிழ்ப்படங்களில் குறிப்பாக "நந்தா என் நிலா" என்ற பாடலை இலங்கை வானொலி மூச்சு விடாமல் முன்னூறு தடவைக்கு மேல் அலுக்க அலுக்கப் போட்ட போதெல்லாம் கூட இந்த இசையமைப்பாளர் குறித்த தேடல் இருந்திருக்கவில்லை. எழுபதுகளின் இறுதியிலே வி.குமார், விஜயபாஸ்கர், ஷியாம் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் வந்த பல நல்ல பாடல்களை சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்தவையாக இருக்கும் என்று அதிகம் மெனக்கடவில்லை. அந்த வகையில் வி.தட்சணாமூர்த்தி அவர்களை சுவாமிகள் என்று விளித்து அவரின் பெருமைகளை சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரமணன் சிலாகித்தபோதுதான் அவர் மேல் வெளிச்சம் பட்டது எனக்கு. தமிழ்த்திரையுலகில் இரண்டு தட்சணாமூர்த்திகள் இருந்திருக்கிறார்கள், ஒருவர் எஸ்.தட்சணாமூர்த்தி இவர் அலிபாபாவும் 40 திருடர்களும்" போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர், பின்னவர் தான் வி.தட்சணாமூர்த்தி சுவாமிகள். கொஞ்சக்காலம் எல்லாவற்றையும் உதறவிட்டு காசிக்குப் போய் சாமியாராக இருந்ததாக செய்திகளின் வாயிலாக அறிந்தேன்.
"நந்தா என் நிலா" படத்தில் வந்த பாடலான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய "நந்தா என் நிலா பாடலை விடவும் என்னை அதிகம் கவர்ந்ததென்னவோ ஜெயச்சந்திரன், டி.கே. கலா பாடியிருந்த "ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தேன்" என்ற பாடல் தான். அன்றைய சனிக்கிழமை இரவுப்பொழுதில் அதிகாலை ஒரு மணியைத் தொடும் போது வானொலி நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும் என் தனிமையை விரட்டிப் பல தடவை சொந்தம் கொண்டாடிய பாடல் அது.
வானொலியின் பிறந்த நாள் வாழ்த்துப்பாடல்களில் எழுதப்படாத ஒப்பந்தமாக அமைந்து போன பாடல்களில் ஒன்று "நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க", ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது திரைப்படத்துக்காக வி.தட்சணாமூர்த்தி இசையில் வந்த அந்தப் பாடலோடு அதே படத்தில் வந்த "ஆண்டவன் இல்லா உலகமிது" பாடலும் அப்போதைய இலங்கை வானொலி ஒலிபரப்பால் பிரபலமான பாடல்களில் ஒன்று.
மீண்டும் தொலைக்காட்சி வாயிலாகவே இன்னொரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்திருந்தது வி.தட்சணாமூர்த்தி அவர்களின் கேரள சினிமாவுக்கான பணி. கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் ஐம்பது ஆண்டுகள் திரையுலகில் நிறைவாக்கியதை ஏஷியா நெட் தொலைக்காட்சி கொண்டாடியபோது, வி.தட்சணாமூர்த்திக்கான சிறப்பு கெளரவத்தையும் அவர் முன்னிலையிலேயே வழங்கியிருந்தார்கள். அப்போது கேட்ட "சந்த்ரிகையில் அலியுன்னு சந்த்ரகாந்தம்" என்ற பாடலை யூடியூபின் வழியாகக் கேட்டுப் பரவசம் கொண்டேன்.
தட்சணாமூர்த்தி சுவாமிகளின் பேச்சு 25 வது நிமிடத்திலிருந்து
மலையாள சினிமாவுலகில் வி.தட்சணாமூர்த்திக்கான தனித்துவத்தையும் கே.ஜே.ஜேசுதாஸின் சிலாகிப்பின் மூலம் அறிந்து கொண்டேன். உள்ளூர் இந்தியக் கடை ஒன்றில் வி.தட்சணாமூர்த்தி அவர்களின் இசையில் வந்த மலையாளப் பாடல் தொகுப்பையும் அடிக்கடி கண்டு கொள்வேன். ஆனால் அதிகம் கேட்டதில்லை. ஒருவரை அவரின் சாகித்யம் வாயிலாக அறிந்து கொள்வதில் தான் எவ்வளவு பெருமை. அந்த வகையில் வி.தட்சணாமூர்த்தி அவர்களின் இறப்பு நேற்று ஆகஸ்ட் 2 நிகழ்ந்த பின்னர் பேஸ்புக், ட்விட்டர் வழியாக அவரின் ரசிகர்கள் பகிர்ந்து கொள்ளும் திரையிசை இன்னும் இன்னும் இந்த இசை மேதை மீதான பற்றை அதிகப்படுத்துகின்றது. அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும், அவர் ஆக்கிய பாடல்கள் ஜீவனுடன் நம்முள் என்றும் உறைந்திருக்கும்.
அண்ணாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் இவரின் இசைப்பாடல்களில் இன்னும் நந்தா என் நிலா ஒருதனிச்சுகம் தான்!
ReplyDeleteநன்றி மா.அருமையான கானங்கள் காதில் விழக் கொடுத்துவைத்திருக்கணும்.
ReplyDeleteஅவரைப் பற்றி உங்கள் மூலமாகத் தெரிந்துக் கொண்டேன். அவரைப் பற்றிய ஒரு பதிவு ஹிண்டுவில் வந்த சில தினங்களில் அவர் இறந்து விட்டார் என்ற செய்தியும் வந்தது தான் சோகம்.
ReplyDeleteamas32
இசைத்துறையில் அதீத திறமை பெற்றவர்களில் ஒருவர் .
ReplyDeleteமலையாள மணிசித்ர தாழ் படத்துக்கு இசை அமைத்த மாஸ்டர் தெட்சினா மூர்த்தி இவரா அல்லது அது வேறா?
வணக்கம் நண்பரே
ReplyDeleteமணிச்சித்திரதாழ் இசை இவரல்ல, எம்.ஜி.ராதாகிருஷ்ணன்
தட்சிணாமூர்த்தி அவர்களின் அருமையான் பாடல் பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete