Pages

Tuesday, November 27, 2007

றேடியோஸ்புதிர் 4 - சொக்கனுக்கு வாய்ச்ச சுந்தரியோ...?


இங்கே வழக்கம் போல் பாட்டுப் புதிர்ப் போட்டிபோடு வந்திருக்கின்றேன். இந்தப் புதிரில் எஸ்.ஜானகி ஸ்வரம் பாடி, ஆரம்ப இசை மட்டும் ஒலிக்கின்றது. பாட்டு என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள்.
பாடலைக் கண்டு பிடிக்க சில உப குறிப்புக்கள். எஸ்.ஜானகியோடு இன்னொரு பாடகரும் பாடியிருக்கின்றார். இசைய வைத்தவர் இளையராஜா. இந்தப் படத்தின் நாயகன் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நடிக்க வந்த காலத்துப் படங்களில் ஒன்று. நல்ல மசாலா இயக்குனரின் திரைப்படமாக இது இருந்தாலும் இந்த நாயகனுக்கு இந்தப்படமோ அல்லது அந்தக் காலகட்டத்தில் வந்த வேறு படங்களோ எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. ஆனால் பல வருஷங்கள் கழித்து ஒரு அறிமுக இயக்குனரின் முதல் படமே இந்த நாயகனுக்கு ஒரு திருப்புமுனையாக வந்து, இன்று முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர்.

தொண்ணூறுகளில் சென்னை வானொலியின் ஞாயிறு தோறும் வரும் நீங்கள் கேட்டவையின் ரசிகராக இருந்தால் இந்தப் பாட்டை இன்னும் சுலபமாகக் கண்டுபிடிக்கலாம். சரி இனிப்பாட்டைக் கண்டு பிடியுங்களேன்.



மேற்கண்ட பாடல் புதிருக்கான சரியான விடை:
படம்: காவல் கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இயக்கம்: எஸ்.பி.முத்துராமன்
அந்த நாயகன்: விக்ரம், ஆனால் பாடலில் வேறு இருவர் தோன்றி நடித்திருக்கின்றார்கள்
போட்டியில் சரியான விடையளித்த மணி, வவ்வால், சொக்கன் உங்களுக்கு பாராட்டுக்கள்.
இதோ முழுமையான பாடல்

Monday, November 26, 2007

80 களில் வந்த அரிய பாடல்கள் - பாகம் 2

கடந்த பதிவின் தொடர்ச்சியாக 80 களில் மலர்ந்த மேலும் சில அரிய பாடல்கள் இந்தப் பதிவிலும் இடம்பிடிக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் இசையமைத்து இந்தப் பாடற் தொகுப்பு மலர்கின்றது.
அந்த வகையில், முதலில் வரும் பாடலை இசையமைத்திருக்கின்றார் டி.ராஜேந்தர். இவர் தன்னுடைய படங்கள் அன்றி வெளியார் படங்கள் சிலவற்றிலும் சிறப்பாக இசையமைத்திருக்கின்றார் என்பதற்கு உதாரணமாக மலரும் இந்த இனிய பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குரல்களில், "பூக்களைப் பறிக்காதீர்கள்" திரையில் இடம்பெறும் "காதல் ஊர்வலம் இங்கே" என்ற பாடலாகும்.

தொடர்ந்து தேவேந்திரன் இசையில் "பொங்கியதே காதல் வெள்ளம்" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாட மண்ணுக்குள் வைரம் திரைக்காக இடம்பெறுகின்றது.

அடுத்து, நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் நாயகனாக நடித்த "பாய்மரக்கப்பல்" திரையில், கே.வி.மகாதேவன் இசையில் வரும் "ஈரத்தாமரைப் பூவே" என்ற இனிய பாடல் எஸ்.பி.சைலஜா பின்னணிக்குரலிசைக்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகின்றார்.

எண்பதுகளில் இளையராஜாவுக்கு மாற்றீடாக விளங்கிய சந்திரபோஸ் இசையமைத்த படமான "விடுதலை" திரையில் இருந்து "நீலக்குயில்கள் ரெண்டு" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகின்றார்.

நிறைவாக மனோஜ் கியான் இரட்டையர்கள் இசையமைப்பில் வரும் "ஒரு இனிய உதயம்" திரைப்பாடலான "ஆகாயம் ஏனடி அழுகின்றது" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுகின்றார்கள்.

பாடல்களைக் கேட்டுக் கொண்டே 2007 இன் சிறந்த இசையமைப்பாளருக்கான வோட்டையும் வைத்து விடுங்கள் ;-)

Sunday, November 18, 2007

80 களில் வந்த அரிய பாடல்கள் - பாகம் 1


இந்த ஒலித்தொகுப்பில் 80 களில் வெளிவந்த அரியபாடல்கள் சில இடம்பெறுகின்றன. அந்தவகையில்,

"அம்மா பிள்ளை" திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "இனிய தென்றலே இரு கைகள் வீசி வா" என்ற பாடல் முதலில் இடம்பெறுகின்றது. பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து.

வி.குமார் இசையில் "மங்கள நாயகி" திரைப்படத்தில் இருந்து "கண்களால் நான் வரைந்தேன், அன்பெனும் ஓர் கவிதை " என்ற இனிய பாடல் கே.ஜே.ஜேசுதாஸ், பி சுசீலா குரல்களில் ஒலிக்கின்றது.
இந்தப் பாடலைக் கேட்கும் போது "உன்னிடம் மயங்குகிறேன்" பாடல் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாயது.

ராம் லக்ஷ்மன் இசையமைக்க "காதல் ஒரு கவிதை" திரைப்படத்தில் இருந்து "காதல் பித்து பிடித்தது இன்று" என்ற பாடல் நிறைவாக ஒலிக்கின்றது. இத்திரைப்படம் ஹிந்தியில் Maine Pyar Kiya என்று வெளிவந்திருந்தது. ராம் லக்ஷ்மன் என்ற இசையமைப்பாளரின் பெயர் வந்த காரணமும் இவ்வொலித் தொகுப்பில் இடம்பெறுகின்றது.

பாடல்களைக் கேட்டுக் கொண்டே 2007 இன் சிறந்த இசையமைப்பாளருக்கான வோட்டையும் வைத்து விடுங்கள் ;-)

Monday, November 12, 2007

உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?


இந்த ஆண்டு முதல் றேடியோஸ்பதி மூலம் என் இசைப்பதிவுகளை ஆரம்பித்திருக்கும் அதே வேளை ஆண்டு முடிவதற்குள் ஒரு இசைத் தேர்வுப் போட்டியை நடத்த நினைத்தேன்.
2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் இசையமைப்பாளர்களில் இருந்து முதல் மூன்று இசையமைப்பாளர்களை வலைப்பதிவர்கள் மற்றும் வலைப்பதிவு வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் முறையில் இந்தப் போட்டி அமைகின்றது. காரணம் இசை ரசிகர்கள் தான் விருதுகளைத் தேர்தெடுக்கும் உண்மையான நடுவர்கள்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் இசையமைப்பாளருக்காக நீங்கள் பின்னூட்டம் மூலம் பிரச்சாரம் கூட வழங்கலாம். அதாவது, குறித்த அந்த இசையமைப்பாளர் எந்த வகையில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு முதலிடத்தில் இருக்கின்றார் என்று.

இங்கே நான் ஒவ்வொரு இசையமைப்பாளர்களுக்குப் புகழ் கொடுத்த திரையிசைப் பாடலில் ஒன்றையும் தரவிருக்கின்றேன். அதற்குக் காரணம் இப்போதுள்ள ஏராளமான இசையமைப்பாளர்களில் குறித்த பாடலை இசையமைத்தவர் யார் என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம். இதோ இந்தப் போட்டியில் வரும் இசையமைப்பாளர்களின் பாடல்களைக் கேளுங்கள், கேட்டுக் கொண்டே உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.

யுவன் சங்கர் ராஜா

பருத்தி வீரன் படத்தில் கிராமிய இசையாகட்டும், சத்தம் போடாதே, சென்னை 28 போன்ற படங்களில் நகரத்தின் நவீனத்தைக் காட்டும் இசையாகட்டும், கற்றது தமிழ் போன்ற உருக்கமான கதைக்களமாகட்டும் யுவனுக்கு இந்த ஆண்டு நிறைய வாய்ப்பைக் கொடுத்து உயர வைத்தது.


வித்யாசாகர்

இடைக்கிடை தமிழில் வந்து தலை காட்டுவார், பின்னர் தெலுங்கோ மலையாளத்திலோ இசையமைத்துக் கொண்டிருப்பார். பின்னர் அர்ஜீனோ, தரணியோ இவரை தமிழுக்கு இழுத்து வருவார்கள். இம்முறை பிரகாஷ்ராஜ் புண்ணியத்தில் மொழி திரைப்படம் மூலம் "காற்றிற்கும் மொழி" கொடுத்தவர்.


ஏ.ஆர்.ரஹ்மான்

வித்யாசாகருக்கு பிற மாநிலம் போல ரஹ்மானுக்கு பிற நாடுகள். அடிக்கடி வெளிநாடுகளுக்குத் தாவி மேடை நாடகங்களுக்கோ சீனப் படங்களுக்கோ இசையமைத்துக் கொண்டிருந்த இவரை, இயக்குனர் ஷங்கர் விடமாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்று "சிவாஜி" படத்துக்கு மெட்டுப் போட வைத்தார்.
விஜய்யின் அழகிய தமிழ்மகனைப் பற்றிப் இப்போதைக்குப் பேசுவதாக இல்லை. ஏனென்றால் கொஞ்சம் காலம் கழித்து தான் ரஹ்மானின் டியூன் சூடு பிடிக்கும்.


ஜி.வி.பிரகாஷ்குமார்

சிக்கு புக்கு ரயிலே பாடிய பையனா இவன்? என்று கேட்கும் அளவுக்கு வெயில் படமூலம் தன் தடம் பதித்தவர். இந்த ஆண்டு கிரீடம் படத்தில் சாதனா சர்க்கம் மூலம் அக்கம் பக்கம் பாடவைத்து ரசிகர்களையும் முணுமுணுக்க வைத்தவர்.


மணிசர்மா

சென்னைக்கார இசையமைப்பாளர், ஆந்திராக்காரம் தான் இவருக்கு பிடிக்கும் போல. ஆனாலும் போக்கிரி மூலம் ஒரு சில தெலுங்கு டியூனை குழைத்து ஒப்பேத்தி விட்டார். இருந்தாலும் போக்கிரி கேட்கப் பிடிக்கும்.


விஜய் ஆண்டனி

நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய் பாட்டில் அடையாளப்படுத்தப்பட்ட இவர், நான் அவனில்லை மூலம்
ஏன் எனக்கு மயக்கம் என்ற பாட்டில் கிறங்க வைத்தவர் இந்த ரீமிக்ஸ் புலி.


தினா

"மன்மத ராசா கன்னி மனச கொல்லாதே" மறக்க முடியுமா? தொலைக்காட்சி நாடகங்களின் இசைராஜா தீனா இப்போதெல்லாம் தான் இசையமைக்கும் நாடகங்களுக்கு போடும் பாட்டுக்கு தன் மகன் பெயரை போட்டு விட்டு திரையுலகத்தில் நிரந்தர இடம் பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் உப்பு கல்லு பாட்டு இந்த ஆண்டு இவர் பெயரைச் சொல்ல வைத்திருக்கிறது.


இளையராஜா

இப்போதெல்லாம் ராஜா சார் பாட்டுக் கேட்க ஹிந்தியோ, மலையாளமோ தான் போகவேண்டியிருக்கு. ஆனாலும் சேரனின் மாயக் கண்ணாடி மூலம் மாயம் காட்டிப் போனார். ராஜா ஆடிய ஆட்டம் என்ன, இந்த ஆட்டத்துக்கெல்லாம் அவரை இழுக்கலாமா? இரு தசாப்தங்களாக அவர் தானே முதலில் இருந்தார் என்ற ராஜா வெறியர்கள் சலித்துக் கொள்ளலாம். இருந்தாலும் இந்த ஆண்டு வந்த இசைப் பட்டியல் அடிப்படையில் இளையராஜாவையும் சேர்த்துக் கொள்கின்றேன்.


பரத்வாஜ்

பழைய நினைவுகளை வைத்துப் படம் பண்ண வேண்டுமென்றால் கூப்பிடுங்கள் பரத்வாஜை என்று சொல்லலாம் போலிருக்கிறது. பள்ளிக்கூடம் பாட்டுக்கள் படத்தோடு பேசப்படுகின்றன.


டி.இமான்

நடிகர் அர்ஜீனின் தற்போதய ஆஸ்தான இசையமைப்பாளர், சுந்தர் சி இன் படங்களுக்கும் தொடர்ந்து கைவண்ணம் காட்டுகிறார். வீராப்பு பாடல்கள் மனசில் நிற்கின்றன.


சபேஷ் முரளி

சபேஷுக்கு குத்துப் பாட்டு பாடத் தெரியும், ஆனால் மெலடியாக இசையமைக்க வரும் என்பதை தன் சகோதரர் முரளியோடு இணைந்து நிரூபித்து வருகின்றார். இந்த ஆண்டு அதற்கு உதாரணமாக வந்தது "அம்முவாகிய நான்".


ஸ்ரீகாந்த் தேவா

"நாளைய பொழுதும் உன்னோடு" திரைப்படத்தில் பேசப் பேராசை என்ற பாடலை இவர் இசையமைப்பில் கேட்டிருந்தீர்களானால் இந்தப் போட்டியில் ஸ்ரீகாந்த் தேவாவை விலக்கி வைக்கமாட்டீர்கள். அருமையான மெலடி கொடுத்திருக்கின்றார்.


ஹாரிஸ் ஜெயராஜ்

ரஹ்மானின் ஜெராக்ஸ் என்று வந்த வேகத்திலேயே இவர் மீது புகார் கொடுத்தார்கள். ஆனாலும் என்ன இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிற்கின்றார். ஒரே மாதிரிப் பாடல்கள் கொடுக்கின்றார் என்பது இவர் மீது கொடுக்கப்படும் சமீபத்திய புகார். "உன்னாலே உன்னாலே", "பச்சைக்கிளி முத்துச்சரம்" மூலம் பரவசப்படுத்தியவர்.


சரி, இசையமைப்பாளர்களையும், அவர் தம் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள், இனி உங்கள் வாக்கை வழங்குங்கள். முடிவுகள் இரு வாரத்தின் பின் வெளியாகும்.