Pages

Friday, November 5, 2021

குணா










குணா திரைப்படம் வெளிவந்து இன்றோடு 30 ஆண்டுகளை எட்டிப் பிடிக்கின்றது.

05.11.1991 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் வெளியானது இப்படம்.

கமல்ஹாசன், புதுமுகம் ரோஷிணி, ரேகா, வரலஷ்மி ஆகியோர் நடித்த இந்தத் திரைப்படம் சாப்ஜானின் கதை, திரைக்கதையிலும் சந்தான பாரதி இயக்கத்திலும் அமைந்திருந்தது. வசனத்தின் கனதியில் எழுத்தாளர் பாலகுமாரனின் ஆழம் புரியும்.

குணா படத்துக்கான லொகேஷன் தேடியபோது கமலின் கண்ணிற்பட்டது கொடைக்கானலில் இருந்த குகையடிவாரம், அது குணா படத்தின் முக்கியமான காட்சிகளுக்குப் பயன்பட்டுப் பின்னாளில் குணா கேவ்ஸ் என்ற புகழோடு இப்போது சுற்றுலாப்பயணிகளின் கண் கவரும் இடமாக இருக்கின்றது.

இந்தப் படத்தைப் பற்றி அணு அணுவாக ரசித்து எழுதவேண்டும் என்பது என் வெகு நாள் ஆசை. அதற்கு முன் இந்தப் படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைப் கொடுத்து விடுகின்றேன். அபிராமியின் மேல் தீராத பக்தி கொண்டவர் அபிராமிப் பட்டர்.
இந்த அபிராமி மீது தீராக் காதல் கொள்கின்றான் குணசேகரன் என்னும் குணா. இப்படத்தின் பின்னணி இசையில் தெய்வீகம் கலந்ததொரு இசையைக் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.



“பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க”
ஆன்மாவானது இந்த உலகியல் ஆசைகளைத் துறந்து இறைவனடி சேரும் மெய்த்தன்மையைச் சைவ சித்தாந்தம் வலியுறுத்துகின்றது. அதையே “பாசம்” என்ற உலகியல் இன்பங்களைக் கடந்து “பசு” ஆகிய மனிதப் பிறவி “பதி” எனும் இறைவனை அடையும் நெறியையே பதி, பசு, பாசம் என்ற முப்பொருளாக சைவ சித்தாந்தம் காட்டுவதை நாம் சிறு வயதில் படித்திருப்போம்.

“குணா” படத்தின் அடி நாதமும் இதுதான். வெளிப்பூச்சுக்கு அதன் கதை சித்த் சுவாதீனம் கடந்த இளைஞனின் அன்புத் தேடலாகவே இருக்கும்.
அபிராமியின் மேல் தீராத பக்தி கொண்டவர் அபிராமிப் பட்டர். இந்த அபிராமி மீது தீராக் காதல் கொள்கின்றான் குணசேகரன் என்னும் குணா. இப்படத்தின் பின்னணி இசையில் தெய்வீகம் கலந்ததொரு இசையைக் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.

தனது அண்ணன் சாருஹாசனின் தொண்ணூறாவது பிறந்த நாளின் போது கமல்ஹாசன் கூட இருக்க இன்னொரு பாடகர் பாடிய “பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க” பாடலைக் கேட்ட போது குணா தன் காதலி அபிராமியை முதன் முதலில் தரிசித்த அதே மெய்சிலிர்ப்பும், பரவசமும் எழுந்தது. பாடிய விதத்தில் கொஞ்சம் சாஸ்திரிய சங்கீதத்தின் நிரவல் பூசப்பட்டு அக்மார்க் கர்நாடக சங்கீத வித்துவானின் தொனியை அவதானிக்க முடிகிறது. இதையும் இதே தொனியில் கமலே படத்தில் பாடியிருக்கலாமோ என்ற எண்ணம் எழுமளவுக்கு அதியற்புதம்.

இந்தக் காணொளியைப் பார்த்ததில் இருந்து மனம் “பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க” பாடலோடே ஐக்கியமாகிக் கிடக்கிறது. இந்தப் பாடல் தான் குணா படத்தின் theme music என்று சொல்லக் கூடிய அடி நாதம் எனலாம்.

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச சாயகி
சாம்பவி சங்கரி சயமளை ஜாதினச்சுவாயனி
மாலினி வாரக சூலினி மாதங்கி என்று
ஆய கியாதி உடையாள் சரணம்…
சரணம்… சரணம்… சரணம்… சரணம்… சரணம்…
அபிராமி அந்தாதிப் பாடல் நிறையும் தருணம் இசை அதைத் தாங்கிப் பிடிக்கிறது.

அபிராமியைக் காணும் கணத்தில் துள்ளிக் குதித்து தன் தலையை மணி மேல் அடிப்பதை அப்படியே இந்தப் பாடலின் இசையோடு வரும் மணிச் சத்தத்தோடு பொருத்திய நுட்பம் தான் கலைஞானியும் இசைஞானியும் இரு வேறு ஆட்கள் அல்லர் என்பதைக் காட்டும். இங்கேயும் இவ்விருவருக்கும் இடையில் பதி, பசு, பாசம் நிறைந்த கூட்டு. இங்கே பாட்டெழுதிய வாலியாரையும் சேர்த்தணைக்க வேண்டும்.

படத்தின் நிறைவின் தன் அபிராமியின் ஆவி பிரியும் தருணத்தில்
புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.
என்று குணா பாடி அரற்றுவான். அதனால் தான் சொன்னேன் குணாவின் ஆதியும் அந்தமும் இந்த அபிராமி அந்தாதி என்று.

குணா படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைச் செய்த வேளை அந்த இறுதிக் காட்சியில் கமல் இயலாமையோடும், பெருந்துயரத்தோடும் அழும் கணத்த்தை மிக நெருக்கமாக உணர்ந்து அப்படியே உறைந்து அழுது விட்டேன்.

“குணா!
நான் பேசணும்
போலீஸ் கிட்டப் பேசணும்
உன் மேல எந்தத் தப்பும் இல்லேன்னு...

என்று காயம்பட்ட மரணப் படுக்கையில் அபிராமி சொல்ல, குணாவோ தன்னை இவள் காப்பாற்றுகிறாளே என்ற எந்த வித கரிசனையும் இல்லாமல் அழுது கொண்டே தன் அபிராமி பட்ட காயங்களைப் பார்த்துத் துடித்துக் கொண்டே இருப்பான். இதை விட மெய்யான காதல் வேறு எங்கே உண்டு சொல்லுங்கள்?
பந்த பாசங்கள் துரத்த, பிறவிப் பெருங்கடலில் இருந்து நீங்கி பதி எனும் அபிராமியோடு சேர்கிறான் பசு எனும் ஆன்மாவாகிய குணா.‬
அந்த நாளில் இருந்து பின்னாளில் எல்லாம் இந்த கமல் “இல்ல இல்ல இல்ல” என்று அபிராமியின் பிரிவை ஏற்க மறுக்கும் காட்சியைப் பார்க்கவோ அன்றிப் பின்னணி இசையைக் கேட்கவோ நேர்ந்தால் கண்கள் அருவி மாதிரிக் கொட்டும் எனக்கு. இதனால் இலக்கியா அம்மா இந்த ஒலியைக் கேட்க விடாமலும் செய்திருக்கிறார். அவ்வளவுக்கு எனது வாழ்க்கையில் மிக நெருக்கமானது.

உயர் வகுப்புப் படித்த காலத்தில் எனக்கு உள ரீதியாகப் பெரும் அழுத்தம் வந்த போது ஊரில் இருந்த ஒரு சைவப் பாரம்பரியம் கொண்ட பெண் இந்த “அபிராமி அந்தாதி” பாடச் சொல்லி நான் பாடிய காலமும் அதன் வழி நிகழ்ந்த மனமாற்றமும் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு என் வாழ்க்கையில் புரையோடிப் போனது இந்த அபிராமி அந்தாதி.

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
வழி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே




படத்தின் முகப்பு எழுத்தோட்ட இசை


முதன் முதலில் ஆலயத்தில் அபிராமியைக் காணல்


அபிராமியை கவர வரும் வில்லனிடம் இருந்து தப்பித்தல்


மலையுச்சி சமாதிப் புகலிடத்தைத் தேடிப் போதல்


அபிராமி, குணாவை காரால் இடிக்கும் காட்சி


அவளை அபிராமியாக நினைத்து குணா உருகும் காட்சி


ஏகாந்த இரவில்


குணாவிடம் இருந்து மீண்டும் அபிராமி தப்பிக்கும் காட்சி


அபிராமியின் மனதில், தான் இருக்கிறேன் என்ற காதலோடு மெய்யுருகும் குணா. கலக்கல் இசை பரவ


காட்டுக்குள் காணும் நீரோடை, இசையால் குளிர்விக்க


எழுதி வைக்கப்பட்ட விதி "எனக்கு நீ உனக்கு நான்"


அபிராமி குணா மேல் கொள்ளும் காதல்



அபிராமியை குகைக்குள் வைத்து மணம் முடித்தல்


வைத்தியரைத் தேடிப் போகும் குணா


வில்லனால் தாக்கப்பட்ட குணா, அபிராமியிடம் ஆறுதல் தேடுதல்


அபிராமியும், குணாவும் இந்த உலகத்தை விட்டு நீங்கல். பிறவிப்பிணி என்னும் தளையால் கட்டுண்ட ஆன்மா இறைபதம் நாடி இறைமேல் பற்று வைத்து முத்தி நிலையை அடைதல் என்னும் உட்பொருளோடு அமைகின்றது இப்படத்தின் உட்பொருள்


படங்கள் நன்றி IMDB தளம்

No comments:

Post a Comment