நமது மனதின் வேட்கைகளை, உள்ளத்து ஆர்ப்பரிப்புகளை எவ்வளவு தூரம் உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்த முடியும்?
அங்கே தான் இசை துணை போகின்றது.
மனித உணர்ச்சிகளையெல்லாம் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத சூழலில் அதை அப்படியே வெளிக்காட்டும் வல்லமை அல்லது பேராற்றல் இந்த இசைக்கு உண்டு.
இங்கே இவளின் மனதில் கருக்கொண்டிருக்கும் காதலின் பூரிப்பை
ஆர்ப்பரிப்பாக மனம் கொண்டாடுகிறது. அதையே துள்ளிக் குதித்தாடும் இசை காட்டி நிற்கின்றது. பொங்கி வரும் புதுப் புனலாகக் கொட்டும் அந்த இசை அருவியில் அவளின் மனதின் அசரிரீயாகப் பாடலும் பிறக்கிறது.
அந்தக் குரலில் நிதானமும், பெண்மையின் தயக்க பாவமும் தொனித்தாலும் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்தக் குரலிசை கூட வேகக் கட்டுப்பாட்டை மீறி
“சித்தாடை கட்டாத செவ்வந்தியே
சிங்காரப் பார்வை சொல்லும் சேதியென்னவோ
அடி பெண்ணே.....“
என்று ஆர்ப்பரிக்கிறது.
மலையருவின் உச்சியில் இருந்து துள்ளிக் குதித்து வரும் அந்தப் புல்லாங்குழலோடு ஒத்து இசைவாக்கம் நடக்கிறது.
இந்தப் பாடலின் மாறு பட்ட இசைத் தொனிப்புகளை, அவளின் உள்ளத்தில் கலவையாக எழுந்திருக்கும் காதலுணர்வை எப்படி மனதால் மட்டுமே உய்த்துணர முடியும் என்பது போல, சலனமில்லாத நகர்வாகவே முரண்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
இந்த மாதிரியான ஒரு பாடலை நாலு தோழியரை வைத்து ஒரு துள்ளல் பாடலாகவும் கூட ஆக்கியொருக்க முடியும். ஆனால் அங்கே இந்தப் பாடலின் ஆன்மா சிதைந்திருக்கும்.
அடி பெண்ணே பாடலைப் பற்றிச் சிலாகிப்போர் ஒரு படி தாண்டி அதன் நதி மூலமான ஆதார ராகத்தைத் தேடிப் போவர்.
“மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்
மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட
மலர்கூட்டம் எதிர்பார்க்கும் இளவேனிற் காலம்
பூவையும் ஒரு பூவினம் அதை நான் சொல்லவோ...”
என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்...
என்று முணுமுணுத்துக் கொண்டே மத்யமாவதியைத் தேடினால்
அள்ளும் அழகே
துள்ளும் ராகமே
என்று “சோலைக் குயிலே....காலைக் கதிரே”
பாடலில் மிதப்பர். மத்யமாவதி ராகத்துக்கு உருவம் கிடைத்தால் இப்படித்தான் நிறை காதல் கொண்டு பூரிக்கும் பெண்ணாக இருப்பாளோ?
ஜென்ஸியின் குரலும் இன்னொரு வாத்தியமே என்று சொல்ல வைக்க இன்னொரு பாட்டு.
பஞ்சு அருணாசலத்தின் வரிகளைப் பஞ்சில் நனைத்த குரலாய் “மேஹம்”, “தாஹம்” “ராஹம்” என்று பாடும் அந்தத் தனித்துவம் தான் ஜென்ஸி.
ஒரே சீராக அன்றி வேகத்தைக் கூட்டியும், குறைத்தும் முரண்பட்டுப் பயணிக்கும் அசுர சாதகம் இதைப் பாடுவதென்பது என்னவோ அவ்வளவு எளிதாகப்பட்ட விடயமல்ல.
இந்த மாதிரிப் பாடல்களுக்காகவே பிறப்பெடுத்தவர் போலக் கொடுத்து விட்டுக் கடந்து விட்டார்.
பஞ்சு அருணாசலத்தார் பாடலில் ஒரு விடுகதைப் பாணி போல
“வானத்தில் சில மேகம்
பூமிக்கோ ஒரு தாகம்”
என்று விட்டு
“பாவை ஆசை என்ன”
என்றும்,
“நீரோடும் ஒரு ஓடை
மேலாடும் திருமேடை”
என்று விட்டு
“தேடும் தேவையென்ன”
என்று அந்த விடுகதையை அவிழ்க்கும் அழகிருக்கிறதே, ஆஹா ஆஹா.
இசைஞானி இளையராஜா தான் பிறப்பெடுத்த எழுபதுகளிலேயே தன்னோடு அக்காலத்தில் இயங்கிய ஒவ்வொரு பாடகருக்கும் உச்ச பட்சமாகக் கொடுத்திருப்பார். பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், சைலஜா, சுஜாதா என்று பெண் பாடகிகளை மாட்டும் வரிசைப்படுத்திப் பாருங்களேன் புரியும். அப்படியாகக் கிட்டியது தான் ஜென்ஸிக்கு இந்த “ஜெம்”சி.
அந்தப் பெண்ணின் மனக் கிளர்ச்சியை அவளை அசையாது நடக்க விட்டு, இயற்கை வழியே அலைதலும் திரிதலுமாக இயற்கையின் துள்ளலை காட்டும் காட்சிப்படுத்தல், அதனோடு பயணிக்கும் இசைப் பிரவாகம்.
இங்கே இயக்குநர் மகேந்திரனின் மனச்சாட்சியை இரண்டாகப் பிளந்து பாலுமகேந்திராவின் ஒளி ஓவியமும், இளையராஜாவின் இசையுமாக.
ஒரு வெள்ளிச் சதத்தைச் செலவு செய்யாத பகட்டை நான் தருகிறேன் பார் என்கிறது இயற்கை. அதில் இருந்து ஒரு காத்தாடிப் பூவை ஊதிப் பார்க்கும் ஷோபா எனும் அழகியல்.
பாடலின் ஆரம்பத்தில் எழும் அந்த வாத்திய ஆர்ப்பரிப்பு, பாடல் முடிக்கும் போது மீண்டும் வந்து விடுகிறேனே என்று விட்ட இடத்தில் இருந்து தொடங்குமாற்போல.
இந்த முகப்பு இசை அந்தக் கால இலங்கை வானொலியின் பொற்காலத்தின் வானொலி நிகழ்ச்சிக்கான முகப்பு இசையாகவும் அலங்கரித்த சிறப்பு.
நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து ஒரு தபேலாவை உருட்டி விட்டாற் போலத் தாளக் குதியல்.
தன் அண்ணன் என்றாலும், தன்னைக் காதலிப்பவன் என்றாலும் பாரபட்சமற்ற, விட்டுக்கொடுக்காத அன்பைப் பறை சாற்றவோ அந்த இரண்டாம் இடையிசையில் “மானினமே” என்ற தங்கைப் பாசத்துக்கான முகப்புப்பாடலின் இசையை நினைவுபடுத்தியிருகிறார் ராஜா?
நேற்றிரவு ராகமாலிகா QFR இல் இந்தப் பாடலைக் கண்ணுற்றது தான் தாமதம்
ஒரு முக்கால் மணி நேரமாவது எல்லா வேலைகளையும் உறைய விட்டுக் கேட்டுக் கேட்டுக் கேட்டுக் கொண்டே இருந்தேன். இன்று காலை உடற் பயிற்சியிலும் கூடக் கூடவே ஓடி .
சவிதா சாய் Savitha Sai எப்பேர்ப்பட்ட அசுர சாதகம், பாடலைத் தன் நாசிக்குள் அடைத்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு சங்கதியையும் அற்புதம் அற்புதம் என்று மனம் சொல்லிக் கொண்டே ரசித்தது. கூடவே மீள் இசையிலும் புத்துணர்வான இசை ஜீவன்.
ஷோபாவுக்கென்றே வாழ்க்கைப்பட்டு ஷோபாவின் ஜீவ நாதமாய் உறைந்தது காட்சியில் பிரதிபலிக்க, ஒவ்வொரு அசைவையும் அணு அணுவாகப் படம் பிடித்துப் போகிறது மனசு.
“அடி பெண்ணே” “அடி பெண்ணே” என்று புலம்ப வைக்கிறது நேற்று முதல்.
பூங்காற்றில் ஒரு ராகம்
பொன் வண்டின் ரீங்காரம்
பாடும் பாடல் என்ன.......
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
No comments:
Post a Comment