Pages

Friday, September 8, 2017

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா 🎻🌴🌸


ஏவிஎம் நிறுவனம் - இசையமைப்பாளர் சந்திர போஸ் - பாடலாசிரியர் வைரமுத்து வெற்றிக் கூட்டணி கொடுத்த படம் "வசந்தி".
வெற்றிக் கூட்டணி என்று இங்கே அடைமொழி கொடுக்கக் காரணம் படத்தின் வணிக ரீதியான வெற்றியைத் தாண்டி அருமையான பாடல்களால் ரசிகர் மனதை ஆட்கொண்ட படங்களில் இதுவுமொன்று. "ரவி வர்மன் எழுதாத கலையோ" என்ற முத்திரைப் பாடல் வைரமுத்துவின் திரையிசைப் பயணத்தில் விலத்த முடியாத பாட்டு.
அந்தப் பாடல் இடம் பிடித்தது வசந்தி திரைப்படத்தில்.

"பாட்டி சொல்லைத் தட்டாதே" திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதே திரைப்படத்தின் (பழம்பெரும்) இயக்குநர் சித்ராலயா கோபு வசந்தி திரைப்படத்தை இயக்கினார். அந்தக் காலகட்டத்தில் நடிகர் மோகனின் திரையுலகப் பயணம் சரிவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. நகைச்சுவைக்குப் புகழ் பெற்ற சித்ராலயா கோபுவின் முத்திரை இந்தப் படத்தில் இல்லாத காரணத்தாலும் தோல்வியைய் தழுவிக் கொண்டது.

ஒரு பாடலை ஆண் குரல் தனித்தும் பெண் குரல் தனித்தும் பாடும் வகையில் ஏராளம் பாடல்கள் இசைஞானி இளையராஜா இசையில் வந்திருக்கின்றன. ஆனால் சந்திரபோஸ் இசையில் வெகு அரிதாகவே இது நேர்ந்திருக்கிறது. "பாட்டி சொல்லைத் தட்டாதே" படத்தின் "வெத்தல மடிச்சுக் கொடுத்த பொம்பள" பாடலைச் சந்தோஷத்திலும் சோகத்திலுமாகக் கொடுத்திருப்பார். அந்த வகையில் சந்திரபோஸ் வசந்தி படத்தில் "சந்தோஷம் காணாத" பாடலுக்கு இரண்டு வடிவம் கொடுத்திருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய "சந்தோஷம் காணாத வாழ்வுண்டா" பாடலுக்கு இன்னொரு சிறப்புண்டு. இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியதும், சித்ரா பாடியதும் தனித்தனியான வெவ்வேறு வரிக்களை சரணத்தில் கொண்டிருக்கும். ஒப்பீட்டில் சித்ரா பாடியதில் கொஞ்சம் எளிமையும் ஜேசுதாசுக்குத் தத்துவார்த்தம் சற்றே தூக்கலாகவும் இருக்கும்.

"இந்தப் பாடல் பாடுவதற்கு நான் தானே பணம் கொடுக்கணும்" என்றாராம் ஜேசுதாஸ் வைரமுத்துவிடம் பாடல் பதிவு முடிந்ததும்.

எண்பதுகளில் எழுந்த தத்துவப் பாடல்களில் இந்தப் பாடலுக்கு என்றும் இடமுண்டு.

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா - கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் கேட்க

https://youtu.be/xal-3n8f9A0

காட்சி வடிவில்
https://youtu.be/QFk5lKCwT4Q

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா - சித்ரா குரலில் கேட்க https://youtu.be/klASf89CbZU

இந்தப் பாடலின் ஆண் குரலுக்காக எழுதப்பட்ட வரிகள் இவை

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால் 
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா

தென்னையின் கீற்று விழவில்லை என்றால்
தென்னைக்கு என்றும் வளர்ச்சி இல்லை
தங்கத்தைத் தீயில் சுடவில்லை என்றால்
மங்கையர் சூட நகையும் இல்லை
பிறப்பதில் கூட துயர் இருக்கும்
பெண்மைக்குப் பாவம் சுமை இருக்கும்
வலி வந்து தானே வழி பிறக்கும்

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா

பாசங்கள் போதும் பார்வைகள் போதும்
பாலையில் நீரும் சுரந்து வரும்
புன்னகை போதும் பூமொழி போதும்
போர்களும் கூட முடிந்து விடும்
பாதையை அன்பே திறந்து விடும்
பாறையும் பழமாய்க் கனிந்து விடும்
வாழ்க்கையின் ஆழம் விளங்கி விடும்

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா

இந்தப் பாடலின் பெண் குரலுக்காக எழுதப்பட்ட வரிகள் இவை

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால் 
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா

ஊருக்குச் சிந்தும் வான்மழை தன்னில்
உனக்கென்று கொஞ்சம் துளிகளுண்டு
நம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால்
நாளைகள் இன்றே வருவதுண்டு
பகல் வந்த போது வெளிச்சம் உண்டு
இருள் வந்த போது விளக்கு உண்டு
எறும்புக்குக்கூட சுகங்கள் உண்டு

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா

கல்லினில் வாழும் தேரைகள் கூட
கண்களில் நீரை வடிக்கவில்லை
காட்டினில் வாழும் மான்களுக்கெல்லாம்
நாளையை எண்ணி நடுக்கம் இல்லை
ஐந்தறிவெல்லாம் களிப்பதென்ன
ஆறறிவெல்லாம் துடிப்பதென்ன
மதி கொண்டதாலே மயக்கம் என்ன

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால் 
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா

#தமிழ்த்திரைஅரசர்கள் #சந்திரப்போஸ் #இடைக்காலம்

No comments:

Post a Comment