Pages

Tuesday, May 2, 2017

K.பாலாஜி அளிக்கும் 🎬

ஒரு நல்ல படத்தை எதிர்பார்க்க முடியும் என்ற நம்பிக்கை உத்தரவாதம் கொண்ட தயாரிப்பு முத்திரையை கே.பாலாஜி பெற்றிருந்தார். காரணம் அவர் தமிழில் எடுத்த படங்கள் ஏற்கனவே வெவ்வேறு மொழிகளில் வெற்றி வாகை சூடியவை.
அவரது தயாரிப்பில் வெளிவந்த படங்கள் தான் தமிழில் அதிகமாக மீள் தயாரிப்பு (remake) செய்த படங்களாக இருக்கக் கூடும்.
எம்.ஜி.ஆர் VS சிவாஜி காலத்தில் இவர் சிவாஜி அணியில் இருந்ததால் தன்னுடைய தயாரிப்புகளில் சிவாஜிக்கே நாயக வாய்ப்பளித்தவர்.
கே.பாலாஜி வில்லனாக, குணச்சித்திர நடிகராக வலம் வந்த காலத்திலும் கவனத்தை ஈர்த்த நடிகர். குறிப்பாக பலே பாண்டியா அவரின் முத்திரைப் படங்களில் ஒன்று.
இவர் தயாரித்த ஆரம்ப காலப் படங்களில் "நீதி" படம் எனக்குப் பிடித்தமானது.
படத்தின் ஆரம்பத்தில் எழுத்தோட்டத்துக்கு முன்னர் வந்து அழகோடு சிரிக்கும் இவரின் முத்திரை சிறப்பாக இருக்கும்.

"சுஜாதா சினி ஆட்ஸ்" என்ற தயாரிப்பு முத்திரையோடு எண்பதுகளின் இறுதி வரை மிக முக்கியமான தயாரிப்பாளராக இருந்தார்.
குறிப்பாக எண்பதுகளில் ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் பிரபலமான படங்களின் தயாரிப்பாளர். ஒரு பக்கம் முன்னணி நாயகர்களோடு மசாலா இன்னொரு பக்கம் கதையை முன்னுறுத்தும் குடும்பச் சித்திரங்கள் என்று எடுத்துத் தள்ளிவர்.
ஹிந்தியில் அமிதாப் நடித்த Don படத்தை பில்லா ஆகவும் குர்பானியை விடுதலை ஆகவும் ஆக்கியவர் இன்னொரு பக்கம் விதி,நிரபராதி என்று வித்தியாசமான கதைக்களன்களையும் மீள் தயாரித்தார்.
இலங்கையின் உச்ச வர்த்தக நிறுவனம் மகாராஜாவோடு கை கோர்த்து இலங்கை இந்தியன் கூட்டுத் தயாரிப்பாக "தீ" படத்தை எடுத்தார்.
பெரும்பாலும் இவரின் படத் தலைப்புகள் ஒற்றைச் சொல்லாகவே இருக்கும். அதை வைத்தே இது பாலாஜி படம் என்று கண்டு பிடிக்கலாம்.
தயாரிப்பாளர் ஜி.வி முதலில் திரைப்பட விநியோகத்தை ஆரம்பித்த போது "சுஜாதா" என்றே ஆரம்பித்தார். பின்னர் கண்டிப்பாக இவர்களுக்குள் பேச்சு வார்த்தை இருந்திருக்கும் அதன் பின்னரேயே "ஜி.வி.பிலிம்ஸ்" ஆனது.

கே.விஜயன் மற்றும் பில்லா கிருஷ்ணமூர்த்தியை அதிக படங்கள் இயக்க வைத்தார்.
பாலாஜி தயாரித்து மாதவி முக்கிய வேடமேற்ற "நிரபராதி" படம் மலையாளத்தின் 23 Female Kottayam படத்துக்கு முன்னோடி.

இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் அரவணைத்த பெரும் தயாரிப்பாளர் என்ற சிறப்பும் பாலாஜிக்கு உண்டு. இவர் தயாரித்த தீபம் படம் இளையராஜா ஒப்பந்தமான இரண்டாவது படம் என்று சொல்லக் கேள்வி. ஆனால் ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளர் என்ற வட்டத்தில் இருந்து விலகி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கங்கை அமரன், சங்கர் கணேஷ், சந்திரப்போஸ் என்று அரவணைத்தவர். இசையமைப்பாளராகக் கங்கை அமரனுக்கு மகுடம் சேர்த்த வாழ்வே மாயம், சட்டம், நீதிபதி போன்றவற்றோடு சந்திரபோஸ் இற்கு மறு வாழ்வு அளித்த விடுதலை படம் என்று சேர்க்க முடியும்.

"விதி" படம் வந்த போது அந்தப் படத்தின் பாடல்களை விட படத்தில் இடம்பெற்ற நீதிமன்ற விவாதக் காட்சிகளை அப்போது Recording Bar களில் ஒலி நாடாக்களில் பிரதியெடுத்துக் கேட்டுக் கேட்டு அனுபவித்த தலைமுறை உண்டு. அவ்வளவுகு அட்டகாசமான வசனங்களை ஆரூர்தாஸ் எழுதிக் கொடுத்திருப்பார். இந்தப் படத்தின் ஒலிப்பதிவுத் தரம் எண்பதுகளில் வெளிவந்த மற்றைய படங்களோடு ஒப்பிடும் போது வெகு சிறப்பாக இருக்கும்.

கே.பாக்யராஜ் :
யாராவது ஒரு பத்தினி பேர் சொல்லுங்க?

ஊர்ப் பெருசுகள் : சீதை, நளாயினி, சாவித்திரி

கே.பாக்யராஜ் : பத்தினின்னு கேட்டப்ப உங்கம்மா பேரு உங்க சம்சாரம் பேரு சொன்னீங்களா?

மேற் சொன்ன உரையாடல் "விதி" படத்தில் வரும். இந்தக் காட்சியை விசிலடித்துப் பார்த்தார்கள் அப்போது. கே.பாலாஜியின் விதி படத்தில் கெளரவ வேடத்தில் நடித்த கே.பாக்யராஜ் இன் நட்பு அப்போது இன்னொரு விதியை எழுதியது சற்றே பலமாக.

தொடர்ந்து கே.பாலாஜி தயாரிக்க கே.விஜயன் மற்றும் அவரின் புதல்வர் சுந்தர் கே.விஜயன் இயக்க கே.பாக்யராஜ் நடித்த படம் "என் ரத்தத்தின் ரத்தமே" இந்தப் படம் ஹிந்தியில் அனில்கபூர் மற்றும் ஶ்ரீதேவி நடித்த வசூலில் சாதனை படைத்த Mr India படத்தின் தமிழாக்கம். கே.பாக்யராஜ் மற்றும் மீனாட்சி சேஷாத்ரி அறிமுகமாக நடித்த படம். சங்கர் கணேஷ் இசைமைத்தார்கள். படத் தயாரிப்பு நடக்கும் போது கே.பாலாஜிக்கும் கே.பாக்யராஜ்ஜுக்கும் முட்டிக் கொண்டது. தயாரிப்புச் செலவை எகிற வைக்கிறார், தலையீடு அதிகம் என்று கே.பாக்யராஜ் மீது விசனம் கொண்டு அப்போது பத்திரிகைகளில் மனம் திறந்து பேட்டி கொடுத்தார் கே.பாலாஜி. என் ரத்தத்தின் ரத்தமே என்று எம்.ஜி.ஆரின் தாரக வாக்கியத்தைப் பாக்யராஜ் வைக்கும் போதே சுதாகரித்திருக்க வேண்டும். படத்திலும் ஏகப்பட்ட எம்.ஜி.ஆர் குறியீடுகள்.
"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" பாடலைப் போலவே "இந்த ராகமும்" https://youtu.be/_WPWqF9zhL் என்ற பாட்டெல்லாம் உண்டு. "ஓராயிரம் பெளர்ணமி நிலவு போல்" https://youtu.be/D4aM8rU2D5c அப்போது வானொலிகளில் கொடி கட்டிப் பறந்த பாட்டு.
அதுவரை நல்ல நண்பர்களாக இருந்தவர்களைப் பிரித்த பாவம் இந்தப் படத்துக்குக் கிட்டியது. தொடர்ந்து

சத்தியராஜ் ஐ வைத்து திராவிடன் (மலையாளத்தில் பாலாஜியின் மருமகன் மோகன்லால் நடித்த ஆர்யன் படத்தின் தமிழாக்கம்) என்று எடுத்த கே.பாலாஜிக்கு அந்தப் படம் கை கொடுக்காமல் ஓய வைத்தது.

இன்று கே.பாலாஜி மறைந்து எட்டு வருடங்கள்.

1 comment:

  1. வசந்த மாளிகை, எங்கிருந்தோ வந்தாள், போலீஸ்காரன் மகள், படித்தால் மட்டும் போதுமா, பந்தம், விடுதலை படங்களும்...

    ReplyDelete