Pages

Sunday, October 12, 2008

இசையமைப்பாளர் சந்திரபோஸின் முத்தான பத்து மெட்டு

எண்பதுகள் என்பது தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத இளையராஜா காலம். தீபாவளிப் படங்களில் எல்லாமே ராஜாவின் இசையில் பல வருடங்களாக வந்த காலமும் இருக்கின்றது, அதே போல் அந்தக் காலகட்டத்தின் முதல் வரிசை நாயகர்களின் முதல் தேர்வே இளையராஜாவாகத் தான் இருந்தது. அந்த வேளையில் சிறு முதலீட்டில் உருவான படங்களுக்கும், பெரிய நாயகர்கள் நடித்த ஒரு சில படங்களுக்கும் ஆபத்பாந்தவர்களாக இருந்த இசையமைப்பாளர்கள் வரிசையில் சங்கர்-கணேஷ், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கங்கை அமரன் வரிசையில் மிக முக்கியமாகக் குறிப்படத்தக்கவர் இசையமைப்பாளர் சந்திரபோஸ்.

1978 இல் வெளியான "மச்சானைப் பார்த்தீங்களா" திரைப்படம் சந்திரபோஸுக்கு நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்திருந்தது. அதில் குறிப்பாக "மாம்பூவே சிறு மைனாவே" பாடல் காலத்தால் விஞ்சிய ஒரு தேன் விருந்து.ஒரு சிறு இடைவெளிக்குப் பின் சந்திரபோஸின் அலை அடிக்க ஆரம்பித்தது கே.பாலாஜியின் "விடுதலை" திரைப்படத்தின் மூலம். எண்பதுகளின் மத்தியிலே கே.பாலாஜியின் மொழிமாற்றப்படங்களிலே கங்கை அமரனுக்கு மாற்றீடாக "விடுதலை" (குர்பானியின் மொழிமாற்றம்)திரைப்படத்தில் சந்திரபோஸின் இசைதான் வந்து கலக்கியது. பொதுவாக இப்படியான மொழிமாற்றுப் படங்களிலே மூலப்படங்களின் பாடல்கள் முழுவதையுமே நகல் எடுப்பது வழக்கம். ஆனால் "விடுதலை" திரைப்படத்துக்காக விஷேஷமாக சந்திரபோஸால் மெட்டமைக்கப்பட்ட "நீலக்குயில்கள் ரெண்டு" பாடல் மீண்டும் இவர் அடுத்த இசையாட்டத்தில் ஆட சிறப்பானதொரு வாய்ப்பைக் கொடுத்தது. அடுத்த சில ஆண்டுகளில் ஏ.வி.எம் நிறுவனத்தின் செல்ல இசையமைப்பாளரானார்.

சந்திரபோஸின் இசை ஜாலங்கள் ராஜாவின் இசையைப் போல மந்திரித்து வைக்கவில்லை என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இளையராஜாவுக்கு சவால் இளையராஜாவே தான். ஆனால் அவருக்கு அடுத்த வரிசை இசையமைப்பாளர்களில் தனித்துவம் மிக்கவராக சந்திரபோஸ் இருந்ததாலேயே மற்றைய இசையமைப்பாளர்களை ஓரம் கட்டிவிட்டு அவரின் இசையில் மலர்ந்த பாடல்கள் ரசிகர்களின் காதுகளை வெகுவாக ஆக்கிரமித்தன. இளையராஜா என்னும் மகா கலைஞன் இசையாட்சி நடத்திக் கொண்டிருக்கும் வேளை அவருக்கு ஈடு கொடுத்து இன்னொரு இசையமைப்பாளரின் பாடல்களையும் ரசிகர்களைக் கேட்க வைக்க இன்னொருவருக்கும் திறமையும் வல்லமையும் வேண்டும். அந்த வல்லமை சந்திரபோஸிற்கு இருந்திருக்கின்றது. அந்தக் காலகட்டத்தில் ராஜாவைச் சீண்டவோ என்னவோ "வில்லதி வில்லனையும் ஜெயிச்சுடுவேன், நான் ராஜாதிராஜனையும் தோற்கடிப்போன்" என்று மதுரைக் காரத் தம்பி திரைப்படத்திலும், கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் வந்த "அண்ணனுக்கு ஜே" படத்தை சீண்டுமாற் போல என்று நினைக்கிறேன் "உங்கப்பனுக்கும் பே பே" என்று "ராஜா சின்ன ரோஜா"விலும் பாட்டுப் போட்டிருந்தார் சந்திரபோஸ். ராஜா-வைரமுத்து விரிசல் கடலோரக் கவிதைகளைத் தொடர்ந்து வரவும், வைரமுத்துவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது சந்திரபோஸ் இசையமைத்த படங்கள். சொந்தக்காரன் திரைப்படத்தில் வைரமுத்துவின் குரலையும் பயன்படுத்தி ஒரு பாடலும் பண்ணியிருக்கிறார். இசையமைப்பாளர் சந்திரபோஸை வானொலிப் பேட்டி ஒன்று எடுத்து அவர் காலகட்டத்து இசையனுபவங்களைத் திரட்டவேண்டும் என்பது என் வெகுநாட் கனவு.

உண்மையில் கடந்த றேடியோஸ்புதிரைத் தொடர்ந்து இன்னொரு இசைப்படைப்பைத் தான் கொடுக்க இருந்தேன். ஆனால் என் நினைப்பை மாற்றி சந்திரபோஸின் பாடல்களையே முழுமையாகக் கொடுக்க ஏதுவாக அமைந்தது, கடந்த புதிரின் பின்னூட்டம் வாயிலாக R.லதா, இசையமைப்பாளர் சந்திரபோஸ் குறித்து வழங்கிய இந்தக் கருத்துக்களை அவருக்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டே பகிர்கின்றேன்.

From: R.Latha on Mon Feb 18 5:31:35 2008.
தமிழ் சினிமாவில் 350-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். இதில் ரஜினி நடித்த மனிதன், ராஜா சின்னரோஜா உள்ளிட்ட ஏவி.எம்.மின் தயாரிப்பில் வந்த 12 படங்களும் அடங்கும். 1977-ல் தொடங்கிய இவரது இசை சாம்ராஜ்யம் தொடர்ந்து 20 வருடங்களுக்கும்மேலாக நிலைத்தது.

ஒய்வெடுக்கிறாரோ என்ற யோசித்த நேரத்தில் இதோ வந்து விட்டேன் என்று சின்னத்திரையில் ஆஜர். இம்முறை இசையமைப்பாளராக அல்ல, நடிகராக. மெட்டிஒலி சித்திக் தயாரித்த மலர்கள் தொடரில் லிங்கம் என்ற வில்ல கேரக்டரில் தனது நடிப்பால் ரசிகர்களை பயமுறுத்தவும் செய்தார்.

இந்த லிங்கம் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு இவரை தொடர்ந்து நடிப்புக்கு முகம் காட்ட வைத்தது. இந்த கேரக்டரில் இவரது நடிப்பை பார்த்த டைரக்டர் தினேஷ் இவரை தனது கத்திக்கப்பல் படத்தில் மெயின் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் போட்டு விட்டார்.அதோடு ஏவி.எம்.மின் வைர நெஞ்சம் தொடரிலும் மாமனார் கேரக்டரில் குணசித்ர நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். மெகா சேனலில் இப்போது திகிலும் தெய்வீகமுமாய் யார் கண்ணன் இயக்கத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜனனம் தொடரில் வைத்தியராகவும் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

"இனி தொடர்ந்து நடிப்பு தானா?''

ஜனனம் தொடர் படப்பிடிப்பில் இருந்தவரிடம் கேட்டபோது...

"நடிக்கும் ஆசையில் தான் சினிமாத் துறைக்கே வந்தேன்.ஆனால் வெளிப்படுத்த முடிந்தது எனக்குள் இருந்த இசையைத்தான். 12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்கவந்து விட்டேன். கலைஞர் நடித்த மணிமகுடம் நாடகத்தில் கூட நடித்திருக்கிறேன். கலைஞரின் பராசக்தி நாடகமாக நடந்தபோது அதிலும் நடித்திருக்கிறேன்.என் நடிபபில் எனக்கே திருப்தி ஏற்பட்ட நேரத்தில் தான் சினிமாவுக்கு நடிக்க வந்தேன்.எதிர்பாராமல் இசையமைப்பாளராகி அதில் பிரபலமான நேரத்தில் நடிப்பு ஆசையை ஒத்தி வைத்தேனே தவிர, நடிப்பார்வம் உள்ளூர கனன்று கொண்டுதான் இருந்திருக்கிறது. அதுதான் இத்தனை வருடம் கழித்து மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இசையமைப்பில் சாதித்ததையும் தாண்டி நடிப்பில் சாதிக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு எனக்குள் விதவித கேரக்டர்களாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.''


இப்படி சந்திரபோஸ் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். அவரின் அரிய பாடல்கள் பலவற்றைத் தேடித் தேடிச் சேமித்தும் இருக்கின்றேன். ஆனால் இந்த வாரம் சந்திரபோஸின் இசையில் மலர்ந்த முத்தான பத்து காதல் மெட்டுக்களை மட்டும் தருகின்றேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் எஞ்சிய பாடல்களோடு அவற்றின் சிறப்பையும் தருகின்றேன்.

"மச்சானைப் பார்த்தீங்களா" திரைப்படம் வி.சி.குகநாதன் இயக்கத்தில் சிவகுமார், சுமித்ரா போன்றோர் நடித்து 1978 இல் வெளிவந்த திரைப்படம். இப்படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா பாடும் "மாம்பூவே சிறு மைனாவே" பாடல் ஆரம்ப தபேலாவும், மெலிதாக இழையோடும் கிட்டார் இசையும் கலக்க, ஒரு காலகட்டத்தில் றேடியோ சிலோனில் கலக்கிய பாடல் என்று இப்போதும் அந்த நாளைய இளைசுகள், இந்த நாளைய பெருசுகள் சொல்லும். அதே காலகட்டத்தில் இளையராஜா போட்ட பாடல்களை நினைவுபடுத்துவதே இந்த இசையின் பலவீனம். அருமையான பாடகர் கூட்டும், இசையும் கலக்க இதோ "மாம்பூவே"




தொடர்ந்து 1982 இல் வெளிவந்த வடிவங்கள் திரைப்படம் , ராம்ஜி என்ற ஒரு நடிகர் நடித்தது. ஆனால் படத்தின் பெயரை இன்றும் ஞாபகம் வைக்க உதவுவது சந்திரபோஸின் இசை. இப்படத்தில் இவரே பாடிய "நிலவென்ன பேசுமோ" என்ற அருமையான சோகப்பாடல் இன்றும் இருக்கின்றது. கூடவே எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடும் 'இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே" ரசிகர்களின் இதய வானில் பச்சென்று இடம்பிடித்த காலம் ஒன்றும் இருக்கின்றது. அதற்கும் இலங்கை வானொலியை ஆதாரம் காட்டவேண்டி இருக்கின்றது.




கே.பாலாஜியின் இன்னொரு மொழிமாற்றுத் திரைப்படம் "விடுதலை". சிவாஜி, ரஜினி, விஷ்ணுவர்த்தன் போன்ற பெருந்தலைகளைப் போட்டும் இசைக்கு மட்டும் சந்திரபோஸை மீண்டு(ம்) திரைக்கு வரவழைத்த படம். புத்துணர்ச்சியோடு சந்திரபோஸ் மெட்டமைத்திருக்கின்றார் என்பதற்கு சிறப்பானதொரு உதாரணம், இப்படத்தில் வரும் "நீலக் குயில்கள் ரெண்டு" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல். இடையிலே ஹோரஸ் குரலாய் 'ஓஹோஹோ ஓஹோஓஹோஓஒ" என்று சந்திரபோஸ் கலப்பது வெகு சிறப்பு.



எண்பதுகளில் ஏ.வி.எம் நிறுவனத்துக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்த திரைப்படம் சங்கர் குரு. அர்ஜீன, சீதாவுடன் பேபி ஷாலினி பாடிக் கொண்டே வரும் "சின்னச் சின்னப் பூவே" பாடலும் இப்பட வெற்றிக்குக் கைகொடுத்த சமாச்சாரங்கள் என்றால் வைரமுத்து வரிகளில் சந்திரபோஸ் இசையமைத்த "காக்கிச் சட்டை போட்ட மச்சான்" பாட்டு கூட இந்த வெற்றியில் பங்கு போட்டது.இதோ மலேசியா வாசுதேவன், மற்றும் அந்தக் காலகட்டத்தில் சந்திரபோஸின் இசையில் அதிகம் பாடிய சைலஜா குரல்களில் "காக்கிச் சட்டை போட்ட மச்சான்"



ஆண்பாவம் படம் கொடுத்த போதையும் பாண்டியராஜன் கன்னாபின்னாவென்று படங்களை நடித்து வைக்க, பதிலுக்கு ரசிகர்களும் அவர் படங்களுக்கு டூ விட்டுக் கொண்டிருந்த வேளை டில்லிக்கு ராஜான்னாலும் "பாட்டி சொல்லைத் தட்டாதே" என்ற மந்திரத்தோடு வெற்றிக் கனியை அவருக்குக் கொடுத்தது. இப்படத்தில் வெத்தல மடிச்சுக் கொடுத்த பொம்பளை பாடல் சோகம், சந்தோஷம் இரண்டிலும் கேட்க இதமான பாடல்கள். அத்தோடு "வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சு" பாடல் அந்தக் காலகட்டத்தில் நம்மூர் திருவிழாக்களில் நாதஸ்வரக் கலைஞர்களின் வாசிப்பில் தவறாது இடம்பிடித்த கலக்கல் பாடல். அந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோர் பாடுகின்றார்கள்.



ஏ.வி.எம் தயாரிப்பில் வசந்தி என்றொரு படம் வந்தது. மோகன், மாதுரி ஆகியோர் நடித்திருப்பார்கள். அப்படத்தில் வரும் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் "ரவிவர்மன் எழுதாத கலையோ" என்று. அப்பாடலில் நாயகன் பாடுவதாக " பூமாலையே உன்னை மணப்பேன், புதுச் சேலை கலையாமல் அணைப்பேன்" என்று வைரமுத்து எழுதியிருப்பார். அணைக்கும் போது சேலை கலையாதா என்று என்று ஒரு ரசிகர் வைரமுத்துவிடம் ஒருமுறை கேட்கவும் அதற்கு "முதலிரவில் அணைக்கும் போது சேலைக்கு என்ன வேலை என்று சொன்னாராம் அந்தக் குறும்புக்கார வைரமுத்துக் கவிஞர். இதோ அந்தப் பாடல்.



மலையாளத்தின் சிறந்த மசாலாப் படங்களையும் குடும்பப் படங்களையும் கொடுத்து வரும் சத்யன் அந்திக்காட் எடுத்து மோகன்லால், சிறினிவாசன் போன்றோர் நடித்த "காந்திநகர் 2nd Street" அதுவே பின்னர் சத்யராஜ், ராதா, பிரபு (கெளரவம்) ஜனகராஜ் நடித்த "அண்ணா நகர் முதல் தெரு" ஆனது. "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு" பாடலை அந்தக் காலகட்டத்தில் காதல் திரி வைத்தவர்களுக்கு ஒருமுறை போட்டுக் காட்டுங்கள். முகத்தில் ஒரு புன்னகை தானாகக் கிளம்பும். பலரைக் காதலிக்க வைத்ததும், காதலியை நினைத்து மனசில் பாடவைத்ததும்" இந்த எஸ்.பி.பி, சித்ரா பாடும் பாட்டு. "ராத்தூக்கம் ஏனம்மா கண்ணே உன்னாலே" என்று காதலன் பாடவும் பதிலுக்கு "ராசாவே நானும் தான் கண்கள் மூடல்லே" என்று காதலியும் பாடும்போது புதுசா புதுசா அதில் காதில் கேட்டு காதலிக்கத் தோன்றும் மீண்டும் மீண்டும். என்னவொரு அற்புதமான மெட்டும், இசையும்.



எண்பதுகளில் ஏ.வி.எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்திரபோஸுக்கு போனஸாய் கிடைத்தவை ரஜினிகாந்திற்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுத்த "மனிதன்", ராஜா சின்ன ரோஜா" திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்புக்கள். ரஜினியின் திரைப்படங்களில் இளையராஜாவுக்கு அடுத்து இன்னொரு இசையமைப்பாளரின் பாடல்கள் வெகுவாக அன்று பேசப்பட்டதென்றால் அவை இவை இரண்டும் தான். குறிப்பாக ரஜினியின் "ராஜா சின்ன ரோஜாவில்" வரும் "பூ பூ போல் மனசிருக்கு" பாடலும் "மனிதன்" திரைப்படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் "ஏதோ நடக்கிறது" பாடலும் மெல்லிசையாக மனதில் இடம்பிடித்த அருமையான பாடல்கள். இதோ ஏதோ நடக்கிறது கேளுங்கள், இதமாய் இருக்கிறதல்லவா சொல்லுங்கள்.



நடிகர், இயக்குனர் பார்த்திபனுக்கு இளையராஜாவே முதல் படத்தில் இசையமைக்காத வாய்ப்பு. ஆனாலும் சந்திரபோஸுடன் இணைந்து "புதிய பாதை" போட்டார். இப்படத்தின் பாடல் காசெட் அப்போது வெளியானபோது ஒவ்வொரு பாடலுக்கும் வைரமுத்துவின் முத்தான குரல் விளக்கமும் இருக்க வந்திருந்தது. "பச்சப்புள்ள அழுதிச்சின்னா பாட்டு பாடலாம் இந்த மீசை வச்ச கொழந்தைக்கு என் பாட்டு போதுமா?" என்று வாணி ஜெயராம் கேட்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ன சொல்கின்றார் என்பதைப் பாடலிலேயே கேளுங்கள்.



இசையமைப்பாளர் சந்திரபோஸுன் உச்சம் குறைந்து மெதுவாகக் குறைந்த காலகட்டத்தின் போது வந்தது ஏ.வி.எம்மின் "மாநகரக் காவல்".விஜய்காந்த், சுமா ஆகியோர் நடித்திருக்க, சந்திரபோஸின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் "தோடி ராகம் பாடவா" என்று கேட்க சித்ரா சொல்லும் " மெல்லப்பாடு" என்று பதில் போடும் பாட்டோடு அடுத்த கட்ட சினிமா யுகமும் ஆரம்பித்தது, புதுப்புது இசை (இளவரசர்கள்)யமைப்பாளர்கள் வந்தார்கள். குறுநில மன்னர்களும் மெல்ல மெல்ல விலகினார்கள். சந்திரபோஸும் நீண்ட பல வருசங்களாய் இசையமைப்பில் இருந்தும் விலகப் போனார்.

33 comments:

  1. அம்மாடி.. எவ்ளோ தகவல்கள்.. கலக்கல் கானா.. காக்கிசட்டை போட்ட மச்சான் எப்போவும் என் விருபப் பாடல்..

    பாடல்கள் தான் கேக்க முடியலை.. Quicktime தரவிறக்கிட்டு இருக்கேன்.. :)

    ReplyDelete
  2. வாங்க சஞ்சய்

    Quicktime தரவிறக்க வேண்டிய அவசியம் ஒரு சில நிமிடங்கள் பக்கம் லோட் ஆகியதும் உங்கள் கணினியில் இருக்கும் உங்கள் விருப்பப் பிளேயரிலேயே இப்பாடல்கள் வேலை செய்யும்.

    ReplyDelete
  3. சூப்பர் பாட்டுங்களாச்சே இவரொடது எல்லாம்.... மாம்பூவே எனக்கு பிடிச்ச பாட்டு.. லிங்க லிங்க லிங்கம் மெட்டி ஒலி ஆளுல்ல.. நல்ல தகவல்கள் நன்றி..

    ReplyDelete
  4. சந்திரபோஸ் இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு மாம்பூவே தான்.
    விஜயகுமார் நடித்த நந்தா என் நிலா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார் என்று நினைக்கிறேன்.அந்தப் படப் பாடல்கள் பிரபலமாயின.
    MSV இசையில் இவர் பாடிய ஏண்டி முத்தம்மாவை மறக்க முடியுமா?.மேலும் தமிழில் மீண்டும் ரீ எண்டரி ஆனது ”பொண்ணு பிடிச்சிருக்கு” என்ற படத்தில் என்று நினைக்கிறேன்.ரேவதி நடித்திருந்தார்.அவர் நடிக்க வந்த புதிது.பிறகு பல பாலாஜி படங்களுக்கு இசை அமைத்த பிறகு ஏவிஎம் மின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறினார்.பழைய தகவல்களுக்கு நன்றி!.நானும் எனக்குத் தெரிந்த தகவல்களை கொஞ்சம் பரிமாறினேன்!

    ReplyDelete
  5. சிறப்பான ஹோ ஒர்க்குடன் சிறந்த தொகுப்பு அண்ணே! நன்றி!

    ReplyDelete
  6. வணக்கம் நல்லதந்தி

    நந்தா என் நிலா திரைப்படத்தின் இசை வி.தட்சணாமூர்த்தி, தமிழ் திரையுலகில் இரண்டு தட்சணாமூர்த்திகள் இசையமைப்பாளராக இருந்திருக்கின்றார்கள். நந்தா என் நிலா இசையமைப்பாளர் தட்சணாமூர்த்தி இப்போது தட்சணாமூர்த்தி சுவாமிகள் என்று துறவு வாழ்க்கையில் இருக்கின்றார். இந்தப் படத்தில் தான் "நந்தா என் நிலா" மற்றும் "ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தேன்"


    நீங்கள் சொன்னது போல் "பொண்ணு புடிச்சிருக்கு" திரைப்படமும் அதுக்கு முன் வந்த "ராஜாத்தி ரோஜாக்கிளி" (ஓடையின்னா நல்லோடை பாட்டு இதில் தான்) போன்ற படங்களும் வந்திருக்கின்றன. ஆனால் விடுதலை தான் பெரும் பிரேக் கொடுத்த படம் இவருக்கு.

    ReplyDelete
  7. //நந்தா என் நிலா திரைப்படத்தின் இசை வி.தட்சணாமூர்த்தி, தமிழ் திரையுலகில் இரண்டு தட்சணாமூர்த்திகள் இசையமைப்பாளராக இருந்திருக்கின்றார்கள்.//
    நன்றி கானா சார்!.புதுத்தகவல்கள்.சந்திரபோஸுடைய முதல் படம் என்னவென்று விசாரித்துத் தகவல் தர முடியுமா?.ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன்!.:)

    ReplyDelete
  8. அடடா..தேடியது கிடைத்தது!

    நாளைக்கு
    இந்தப்பாடல்கள்தான்
    இங்க திருச்சி FM ல்
    ஒலிபரப்புறேன்
    ரொம்ப ரொம்ப நன்றிங்கண்ணா!

    ReplyDelete
  9. பாடல்களை கேட்க முடியவில்லை...(இந்த கணினியில இருந்து ஒரு பாட்டும் கேட்க முடியாது...!)

    ReplyDelete
  10. 'வண்ணத்துப்புச்சி வயசென்ன ஆச்சு' அட அட...
    நீங்கள் சொல்றது சரிதான் அண்ணே...
    எனக்கும் ஞாபகமிருக்கு...

    ReplyDelete
  11. அட இத்தனையும் இவர் பாடல்களா எனக்கு இப்பதான் தெளிவு வந்திருக்கு நான் இளையராஜா எண்டுதான் நினைச்சுக்கொண்டிருந்தனான்...

    ReplyDelete
  12. சந்திரபோஸ் ஒரு நல்ல இசையமைப்பளர் என்பதில் ஐயமில்லை. இளையராஜவோடு ஒப்பீடு என்பது கடினம் தான். ஆனால் சந்திரபோஸ் தனக்கென்று ஒரு இடத்தை வைத்திருந்தார் என்பதும் உண்மை.

    ReplyDelete
  13. யம்ம்மாடியேவ்வ்வ்வ்வ்வ்வ் இம்புட்டு தகவல்கள் திரட்டத்தான் நேத்து அம்புட்டு நேரம் ஐடில இருந்தீங்களா?


    நன்றி தல :))

    ReplyDelete
  14. //இளையராஜா என்னும் மகா கலைஞன் இசையாட்சி நடத்திக் கொண்டிருக்கும் வேளை அவருக்கு ஈடு கொடுத்து இன்னொரு இசையமைப்பாளரின் பாடல்களையும் ரசிகர்களைக் கேட்க வைக்க இன்னொருவருக்கும் திறமையும் வல்லமையும் வேண்டும். அந்த வல்லமை சந்திரபோஸிற்கு இருந்திருக்கின்றது//

    உண்மை

    இது நிரூபிக்கும் அளவுக்கு இங்கேயே இருக்கும் பாடல்கள் சாட்சி! :)

    ReplyDelete
  15. // "மாம்பூவே சிறு மைனாவே" பாடல் ஆரம்ப தபேலாவும், மெலிதாக இழையோடும் கிட்டார் இசையும் கலக்க, ஒரு காலகட்டத்தில் றேடியோ சிலோனில் கலக்கிய பாடல் என்று இப்போதும் அந்த நாளைய இளைசுகள், இந்த நாளைய பெருசுகள் சொல்லும்.///


    அருமையான பாடல்!

    நிறைய முறை இலங்கை வானொலியின் மூலமே கேட்ட அனுபவம்!

    அந்த நாளைய பெருசு சொல்ல அதை இந்த நாளைய இளசு நான் ஆமோதிக்கிறேன் :))))))))))))))

    ReplyDelete
  16. // "மாம்பூவே சிறு மைனாவே" பாடல் ஆரம்ப தபேலாவும், மெலிதாக இழையோடும் கிட்டார் இசையும் கலக்க, ஒரு காலகட்டத்தில் றேடியோ சிலோனில் கலக்கிய பாடல் என்று இப்போதும் அந்த நாளைய இளைசுகள், இந்த நாளைய பெருசுகள் சொல்லும்.//


    இந்த பாட்டும் அப்புறம் நாட்டுப்புற ஸ்டைலில் வந்த ”நாட்டுக்குள்ள இவரைப்பத்தி கேட்டுப்பாருங்க” பாட்டும் மீ த நொம்ப ரசிப்பேனாக்கும்

    ReplyDelete
  17. / பேபி ஷாலினி பாடிக் கொண்டே வரும் "சின்னச் சின்னப் பூவே" பாடலும் இப்பட வெற்றிக்குக் கைகொடுத்த சமாச்சாரங்கள் என்றால் வைரமுத்து வரிகளில் சந்திரபோஸ் //


    ஒரு காலத்தில் நான் முணுமுணுத்த பாடல் காக்கி சட்டை போட்ட மச்சான் :)))

    ReplyDelete
  18. //ராஜா சின்ன ரோஜாவில்" வரும் "பூ பூ போல் மனசிருக்கு" பாடலும் //

    நல்லா இருக்கும்
    (கடைசி லலாலா கூட நல்லா இருக்கும்!)

    இந்த பாட்டு வர்றப்பா நானும் அழுதுபுட்டேன் !
    (அட சோக பாட்டு டைம்ல!)

    ReplyDelete
  19. //சந்திரபோஸும் நீண்ட பல வருசங்களாய் இசையமைப்பில் இருந்தும் விலகப் போனார்.//


    முழுதும் விலகவில்லை! ஒரு முறை பாப் ஆல்பம் ஒன்றினை கூட நான் காண நேரிட்டது! (பட் பாடல்கள் அளவுக்கு அது கேட்க ஆர்வமில்லை!)

    ReplyDelete
  20. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    லிங்க லிங்க லிங்கம் மெட்டி ஒலி ஆளுல்ல.. நல்ல தகவல்கள் நன்றி..//

    வாங்க கயல்விழி

    இவருக்காகவே மெட்டி ஒலியில் இவர் நடிச்ச சீன்ஸை பார்க்க இருக்கேன்.

    //தமிழ் பிரியன் said...
    சிறப்பான ஹோ ஒர்க்குடன் சிறந்த தொகுப்பு அண்ணே! நன்றி!//

    வருகைக்கு நன்றி தமிழ்ஸ்

    ReplyDelete
  21. // நல்லதந்தி said...
    சந்திரபோஸுடைய முதல் படம் என்னவென்று விசாரித்துத் தகவல் தர முடியுமா?.//

    சந்திரபோஸை ஒரு முழுமையான ஒலிப்பேட்டி செய்யவேண்டும் என்று முயன்று கொண்டிருக்கின்றேன், அது சாத்தியப்படும் போது நிச்சயம் உங்கள் கேள்வியையும் கேட்டுப் பெற்றுத் தருகின்றேன்.

    //சுரேகா.. said...
    அடடா..தேடியது கிடைத்தது!

    நாளைக்கு
    இந்தப்பாடல்கள்தான்
    இங்க திருச்சி FM ல்
    ஒலிபரப்புறேன்
    ரொம்ப ரொம்ப நன்றிங்கண்ணா!//

    வாங்க சுரேகா

    முடிஞ்சா அந்த ஒலிப்பதிவையும் அனுப்பி விடுங்களேன், ஒரு ஆர்வம் தான் ;-0

    ReplyDelete
  22. //G.Ragavan said...
    சந்திரபோஸ் ஒரு நல்ல இசையமைப்பளர் என்பதில் ஐயமில்லை.//

    வாங்க ராகவன்

    சந்திரபோஸ் குறித்த உங்கள் விரிவான பார்வையையும் அறிய ஆவல்.

    ReplyDelete
  23. பிரபா,

    Check this Chandra Bose Pop album,..

    http://www.youtube.com/watch?v=YuD6rPlw2ds

    You Tube Search "Tamil movie song remix - indian music video by Chandrabose"

    Krithika.

    ReplyDelete
  24. விரிவான அலசல்... அருமை கானாபிரபா.
    'ரவிவர்மன் எழுதாத சிலையோ' எனக்கு மிகவும் பிடித்தபாடல்.
    'மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு'‍இனிமை ராஜா பாடல் போல...
    'காக்கிச்சட்டை போட்ட மச்சான்','சின்னச்சின்னப்பூவே'‍ பாடல்கள் எனது பள்ளி நாட்களின் ஃபேவரைட்.
    ஒரு சந்தேகம்...'அதர்மம்' படத்தில் 'தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா' பாடல் சந்திரபோஸ் பாடியது என எங்கேயோ கேள்விப்பட்ட ஞாபகம்.தெளிவு படுத்துவீர்களா...? சந்திரபோஸா...மனோவா என...
    இவரின் மகன் பாபி என்ற பெயரிலிருக்கும் இசை அமைப்பாளர்தானே...?
    'சொல்லாமலே' படத்துக்கு இசை அமைத்திருப்பார்...
    'சம்சாரம் அது மின்சாரம்' இசை சந்திரபோஸ்தானே...?

    ReplyDelete
  25. வருகைக்கு நன்றி தமிழன்

    நாதஸ்வரத்தில் வண்ணாத்திப்பூச்சி வாசிச்சது உங்களுக்கும் ஞாபகம் இருக்கா ;-)

    ஆயில்ஸ் வருகைக்கு நன்றி
    உங்களைப் போல பெருசுங்களுக்காகத் தான் இந்தப் பதிவே.

    //இந்த பாட்டு வர்றப்பா நானும் அழுதுபுட்டேன் !
    (அட சோக பாட்டு டைம்ல!)//

    பாசக்காரப் புள்ளையா இருக்கீரே ;-)

    ReplyDelete
  26. சந்திரபோஸ் திரைப்படத்திற்கு வந்ததே ஒரு பாடகராகத்தான். ஒரு கல்லூரி மேடையில் பாடிய மாணவரை..உடனே அழைத்துத் தனது இசையில் பாட வைத்தார் மெல்லிசை மன்னர். ஆறுபுஷ்பங்கள் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஏண்டி முத்தம்மா என்ற பாடலைத்தான் முதலில் பாடினார் சந்திரபோஸ். பிறகுதான் இசையமைப்பாளராக ஆனார். 80களில் நிச்சயமாக இவரும் ஒரு பிரபலமான இசையமைப்பாளராக இருந்தார் என்பதும் உண்மை. பாடகராக இருந்து இசையமைப்பாளரான இவரது இசையில் பல நல்ல பாடல்களும் வந்துள்ளன.

    ReplyDelete
  27. ஆரம்பத்தில் சந்திரபோஸ் இசையமைத்த சுவாமி ஐயப்பன் படத்திலிருந்து "சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது..பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது" என்ற பாடலும் "பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம்" என்ற பாடலும் மிகவும் இனிமையானவை.

    கலியுகம் என்ற திரைப்படத்தில் வரும் "இளங்குயில் பாடுதோ..யார் வரக்கூடுமோ...அழகிய மாலையில்" என்ற பாடலும் மிக இனியது.

    "ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே" - வாய்க்கொழுப்பு
    டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே - பாட்டி சொல்லைத் தட்டாதே
    வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை - மாநகரக் காவல்

    இன்னும் நிறைய பாடல்களை எடுத்துச் சொல்லலாம். கண்டிப்பாக 80களில் பிரபல இசையமைப்பாளராக சந்திரபோஸ் இருந்தார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இளையராஜா மிகச்சிறந்த நிலையில் இருந்த அந்த வேளையிலும் தன்னுடைய தனிப்பட்ட பாணியில் நல்ல பாடல்களைக் கொடுத்த சிறந்த இசையமைப்பாளர் என்பதும் உண்மை. அவருடைய பல இனிய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  28. ப்ரீதம்

    தொடுப்புக்களுக்கு மிக்க நன்றி சென்று பார்க்கின்றேன்

    க்ருத்திகா

    மிக்க நன்றி அந்த வீடியோ இணைப்புக்கு

    ReplyDelete
  29. தமிழ்பறவை

    தென்றல் காற்றே பாட்டு பாடியது மனோவே தான், ஒரிஜினல் சீடியிலும் கூட இருக்கின்றது, தவிர பாடலைக் கேட்கும் போதே உணரலாம்.

    ReplyDelete
  30. வாங்க ராகவன்

    சந்திரபோஸின் இன்னும் பல பாடல்கள் நீங்கள் குறிப்பிட்ட சில உட்பட இருக்கின்றன. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவற்றைத் தருவேன். மெல்லிசை மன்னரால் அடையாளம் காணப்பட்ட திறமைசாலிகளை பெரிய பட்டியலிலேயே போடலாம் போலிருக்கே

    ReplyDelete
  31. HI PRABA,

    THANKS FOR YOUR WORK.

    IN THIS COLLECTION '

    "ORU THOTTIL SABATHAM - POON CHITTU
    KURUVIGALA" SONG MISSING.

    TRY THIS

    THANKS

    SRIKANTH

    ReplyDelete
  32. வாங்க சிறீகாந்த்

    நீண்ட நாளைக்கு பின் உங்கள் வரவு குறித்து மகிழ்ந்தேன். பூஞ்சிட்டு குருவிகளா அருமையான பாடல். சந்திரபோஸின் இன்னும் பல பொக்கிஷங்களைப் போட இருக்கிறேன், அதில் இப்பாடல் நிச்சயம் வரும் நன்றி.

    ReplyDelete