Pages

Tuesday, June 30, 2026

குருவிக்கரம்பை சண்முகம் உடன் கே.பாக்யராஜ்

 அமெரிக்காவுக்குப் போய் விட்டுத் திரும்பிய தன் முதலாளியின் மகள் ராதா, தன் சிறு வயதுத் தோழி தன்னோடு பழகிய அதே நேசத்தோடே இருப்பாள் என்ற கனவோடே இருக்கிறான் ராஜா.


காரணம் அந்தப் பால்யகாலத்து நட்பு அப்படிப்பட்டது. அதைக் கூட அழகாக விபரித்திருக்கும்.  ஒன்றாக அந்தப் பள்ளி வாழ்க்கையின் ஆரம்பப் பருவத்தைப் பங்கு போட்ட சிநேகிதம். அது


ஆனால் ராதாவின் தோழிகளால்

ராஜா தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறான்.

ஊட்டிக் குளிர் காய்ந்து கொண்டு அந்தத் தோழியர் கூட்டத்தோடு இருக்கும் ராதா ராஜாவைப் பாட வேண்டுகிறாள். 

பழைய காதலியை நினைத்தாவது பாடுங்கள் என்று அவளின் கூட்டாளிகள் கிண்டலடிக்கிறார்கள்.


ஓ நெஞ்சே நீதான்

பாடும் கீதங்கள்

ஏனின்று நீர் மேல்

ஆடும் தீபங்கள்


https://youtu.be/IvdlxFfe_gM?si=AUi6DjKzAsxStdHy


ராஜா பாட ஆரம்பிக்கிறான்.


இந்த இடத்தில் 

“ராகங்கள் சொல்லாதோ

காதல் சந்தத்தை…”


இந்த வரிகள் தான் மிக முக்கியமானது.

காரணம் அவன் பாடும் இந்தப் பாடலின் சந்தம்


“Oh my lord my god 

let us sing for you…


ஊட்டிப் பள்ளியில் தானும், ராதாவும் சேர்ந்து காலைப் பிரார்த்தனையில் பாடிய அதே தோத்திரப் பாடலின் சந்தம் தான்.


திரைக்கதை மன்னன் பாக்யராஜின் பாடல் வாங்கு திறன் எப்படியிருக்கிறது பாருங்கள்.

இந்தப் படத்தில் சங்கர் - கணேஷ் இரட்டையர் இசை பிரமாதமாக இருக்கும்.


இங்கே குருவிக்கரம்பை சண்முகம் பாக்யராஜின் வாய் மொழி ஆகியிருக்கிறார்.


பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராக இருந்தவர் குருவிக்கரம்பை சண்முகம்.

பாக்யராஜ் படங்களில் இம்மாதிரித் தமிழ் அறிஞர்களை உள்வாங்கியிருப்பார்.


டார்லிங் டார்லிங் டார்லிங் 

கே.பாக்யராஜ் & பூர்ணிமா ஜெயராம் ஜோடியை முதலில் நிழலில் காட்டிய படம்.

ராதிகா, சுஹாசினி, ரேவதி என்று நாயகிகள் கடந்து பூர்ணிமாவில் சேர்ந்த ஜோடிக் கணக்கு பின்னாளில் காலம் சேர்த்த நிரந்தரத் தீர்ப்பு.


டார்லிங் டார்லிங் டார்லிங் படம் பார்த்து விட்டு எம்ஜிஆர் பாக்யராஜிடம் சொன்னாராம்

“நீ அந்த சுமனுக்கும் நாலு போடு போட்டிருக்கணும்” என்று 😁


பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகமும், கே.பாக்யராஜும் இணைந்த படங்களில் இன்னொரு உச்சம் “அந்த 7 நாட்கள்” படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் “கவிதை அரங்கேறும் நேரம்”


https://youtu.be/2LSt3E7LVeI?si=U0sBDzFEPWCw_U3H


இன்னொரு ரத்தினப் பாடல் என்றால்

“தாவணிக் கனவுகள்” படத்தில் வரும் “செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது” பதிவு கானா பிரபா


https://youtu.be/mIb0TdQHo7I?si=sqkcxtJHniKdrjR9


“சின்ன வீடு” படத்தில் “ஜாமம் ஆகிப் போச்சு” இன்னொரு பாடல் கணக்கில் வரும்.


டார்லிங் டார்லிங் டார்லிங் வந்த காலத்தில் சற்று முந்திக் கொண்டு வந்த எம்.பாஸ்கர் இயக்கிய “தீர்ப்புகள் திருத்தப்படலாம்” படத்தில் குருவிக்கரம்பை சண்முகம் எழுதிய ராகம் தாளம் பல்லவி 


https://youtu.be/Zb4eR8toDIE?si=xPR1DRtNeFI_qA_B


பாடலும் அற்புதமாக இருக்கும்.


டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் உதவி இயக்குநராக இருந்த பாண்டியராஜன் இயக்கிய கன்னி ராசி படத்தில் இளையராஜா இசையில் வாணி ஜெயராமோடு, சி.எஸ்.ஜெயராமன் குரலில் மலேசியா வாசுதேவன் பாடும் 

“சுக ராகமே என் சுக போகமே”


https://youtu.be/VcJIchB96R8?si=yfFWjiep96FvRve-


பாடலை மறந்து விடத்தான் முடியுமா?

அதுவும் குருவிக்கரம்பையார் தான்.


அப்படியே கொஞ்சம் தள்ளிப் போனால் எம்ஜிஆரின் அமைச்சராக இருந்த திருநாவுக்கரசு கதா நாயகனாக நடித்த “அக்னிப் பார்வை” படத்தில் இளையராஜா இசையில் 

“இதழ் இனிக்க இனிக்க” பாடலை எழுதியிருக்கிறார்.


இளையராஜா & குருவிக்கரம்பை சண்முகம் சேர்ந்த இன்னொரு அரிய பாடல் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் வரும் “தாத்தா தாத்தா தா” கேட்காதவர்கள் ஓடிப் போய்க் கேட்டு விட்டு வாருங்கள் 


கன்னி ராசியில் பாட்டெழுத்த வைத்த பாண்டியராஜனை வைத்துப் பின்னாளில் படம் எடுப்பேன் என்று 

குருவிக்கரம்பை சண்முகம் எண்ணியிருப்பாரா என்ன?

“மாப்பிள்ளை மனசு பூப்போல” படத்தைத் தானே இயக்கி, தேவா இசையில் அனைத்துப் பாடல்களையும் எழுதி பாண்டியராஜனை வைத்து இயக்கிய குருவிக்கரம்பை சண்முகம் நிரந்தக் கடனாளி ஆனார்.


சில வருடங்களுக்கு முன்னர் “சார் ஐ லவ் யூ” படத்தில் வரும் குருவிக்கரம்பை சண்முகம் எழுதிய

“இங்கே இறைவன் இன்னும் கலைஞன்” பாடலைப் பற்றி நான் சிலாகித்து எழுதிய போது அவர் ஊர்க்காரர் வந்து கொடுத்த பின்னூட்டம் அதிர்ச்சி தந்தது.

குருவிக்கரம்பை சண்முகம் சித்த சுவாதீனம் இழந்து தன் வீட்டுத் திண்ணையில் இருந்ததாக…


என்னுடைய பிள்ளைகள் பல்லவி & சரண் ஐ முதன்முதலில் பாட வைத்தது பாக்யராஜ் தான் என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் சொல்லிப் போற்றியிருப்பார்.

அந்தப் பாடல் வேறொன்றுமில்லை

டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் வரும் ஓ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள் பாடலில் வரும் அந்தத் தோத்திரப் பாடல் தான்.


அந்தப் பாடலை எழுதிய குருவிக்கரம்பை சண்முகம் பின்னர் தன் மாப்பிளை மனசு பூப்போல படத்தில் “மதுரையிலே” பாடலை எஸ்பிபியோடு பாடுவது வேறு யாருமல்ல அவருடைய மகள் பல்லவி தான்.


கே.பாக்யராஜ் இன் “எங்க சின்ன ராசா” படத்தில் சங்கர் - கணேஷ் இரட்டையர் இசையில் வந்த பாடல்கள் அனைத்தையும் வாலியின் கணக்கில் விக்கிப்பீடியா போட்டிருக்கிறது. 


ஆனால் அந்தப் படத்தில் குருவிக்கரம்பை சண்முகம் அற்புதமானதொரு பாடலை எழுதியிருக்கிறார். 

அந்தப் பாடலுக்கும் எனக்கும் ஆத்ம பந்தம் ஒன்று இருக்கிறது.


இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது போல் எனக்குத் தமிழக உறவுகளின் நட்பு அதிகம் இல்லாத காலம்.


முதல் தடவை தமிழகப் பயணம் போகிறேன். முன்பே ஒப்பந்தம் செய்த வாடகைக் காரில் ஊர் சுற்றிக் கொண்டு மாயவரத்தைக் கடந்து ஒரு சிறு கிராமம் வழியே கார் போய்க் கொண்டிருக்கும் சமயம் ஒரு வீட்டிலிருந்து பண்பலை வழியே ஒரு பாடல் ஒலித்தது. அந்த நேரத்தில் அந்தப் பாடலை ஒரு அந்நியச் சூழலில் நான் கேட்டபோது நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை, குருவிக்கரம்பை சண்முகம் எழுதிய அந்தப் பாடல் இதுதான்


மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்

அந்தி மாலைக் காத்து வழியா

வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு


கே.பாக்யராஜ் இன் பாடலாசிரியர்கள் இன்னும் வருவார்கள்.


ராகங்கள் சொல்லாதோ

காதல் சந்தத்தை

ஓ நெஞ்சே…❤️


கானா பிரபா

30.06.2026

No comments:

Post a Comment