Pages

Wednesday, October 8, 2025

கவிஞர் பிறைசூடன் வரிகளில் இசைஞானி இளையராஜாவின் ராமராஜன் திரையிசை முத்துகள்

“சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி

சொல்லிச் சொல்லிப் பாடும் இந்தக் கிளி"

https://www.youtube.com/watch?v=Z47FM1pdHtw&list=RDZ47FM1pdHtw&start_radio=1

அந்தக் காலத்தில் சென்னை வானொலி நிலையம் எத்தனை தடவை ஒலிபரப்பியிருக்குமோ அத்தனை தடவை யாழ்ப்பாணத்தில் இருந்து கேட்டிருப்பேன். அவ்வளவுக்கு நேசித்த பாடலது.

(கி)ராமராஜனின் “என்னப் பெத்த ராசா” படத்தின் முத்திரைப் பாடலே இதுதான்.

சந்திரசேகரன் என்ற பிறப்புப் பெயர் கொண்டவர், ஈசன் மீது அளவற்ற நேசம் கொண்டு “பிறைசூடன்” ஆனார்.

கவிஞர் பிறைசூடன் தன் ஈசனை மறவாமல் இந்தப் பாடலிலும் கொண்டு வருவார் இப்படி

“ஈசன் அருள் உனக்கே இருந்தது..

ஏந்திழையின் மனமும் இணைந்தது..

நம்மை அன்பு தானே இணைத்தது..”

காதல் பாடலிலும் தெய்வீகத்தையும் கலந்து கொடுப்பது கவிஞர் பிறைசூடன் பாணி.

“மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா” பாடலை எழுத உந்தியது மதுரை மீனாட்சியம்மன் என்பார்.

“என்ன பெத்த ராசா” படத்தின் தயாரிப்பாளர் ராஜ்கிரண் பின்னாளில் நாயகனாக்கப்பட்ட “என் ராசாவின் மனசிலே” படத்தில் ஏனோ பிறைசூடனை எழுத வைக்க விரும்பவில்லையாம். கவிஞர் வாலி போன்றோர் தேவைப்பட்ட போது, இசைஞானி இளையராஜா இசைந்து கொடுக்காததால் தான்

“சோலைப் பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே” என்ற காலத்தால் அழியாப் பாடல் பிறைசூடன் வழி நமக்குக் கிடைத்தது.

ராமராஜன் தொடர்ச்சியாக நடித்த ஒவ்வொரு படங்களிலும் பிறைசூடன் இருந்தார் இப்படி.

“ஊருக்குள்ளே வந்த ஒரு சோளக்கொல்லை பொம்மை” என்று “எங்க ஊரு மாப்பிள்ளை” படத்துக்காகவும், 

“பொங்கி வரும் காவேரி” படத்தில் இரட்டைப் பாடல்களில் ஒன்றாக “இந்த ராசாவை நம்பி வந்த யாரும்” மற்றும் பி.சுசீலாவோடு இசைஞானி பாடும் 

“மன்னவன் பாடும் தமிழ் பிறந்த தென்பாண்டி முத்தே முத்தே”

https://www.youtube.com/watch?v=-mCAbMlbHJE&list=RD-mCAbMlbHJE&start_radio=1

“ஆட்டமா தேரோட்டமா” காலத்துக்கு முன்பே “எங்க ஊரு காவக்காரன்” படத்தில் ஒரு மாறுவேஷத் துள்ளிசைப் பாடல்.

ஆனால் அதில் கையாண்ட வரிகளைப் பாருங்கள்

“சிறுவாணி தண்ணி குடிச்சு

நான் பவானியில் குளிச்சி வளந்தவ…”

https://www.youtube.com/watch?v=NTzpXGvVGaE&list=RDNTzpXGvVGaE&start_radio=1

மாமூல் வரிகளை விலத்தி தமிழகத்து நீரோட்டத்தில் வித்தியாசமான எல்லையில் களம் புகுந்திருப்பார். 

அப்படியே போய்

“தண்ணியிலே பேதமில்லை

அதுக்கு நிறம் ஏதுமில்லை

சேருகின்ற நிலத்தைப் போல

மாறும் அந்த நிறமும் இங்கே

எவ்வளவு தண்ணியத்தான்

அள்ளி அள்ளி குடிச்சு பார்த்தும்

அந்த குணம் வரவுமில்லை

ஆண்டவனும் கொடுக்கவில்லை”

என்று சமத்துவம் பகிர்வார் கவிஞர்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சங்கிலி முருகன் கூட வேறு பாடலாசிரியர் தான் தேடினாராம்.

பிறைசூடனுக்குக் கிடைத்த சூழ்நிலைப் பாடல்களில் உன்னதமானது

“ஒரு கூட்டின் கிளிகள் தான் எங்கெங்கோ”

https://www.youtube.com/watch?v=MZ2R-PVC3RI&list=RDMZ2R-PVC3RI&start_radio=1

ராமராஜனின் “அன்புக் கட்டளை” படத்துக்காக உருவானது அந்தப் பாட்டு. இசைஞானி இளையராஜாவின் தத்துவ முத்துகளில் தவிர்க்க முடியா ஒன்றாகிவிட்டது.

“பாரதத்தின் பிள்ளை கர்ணன்

தாயைக் கண்ட போதிலும் 

பேரை சொல்ல தந்தை தன்னை

அறியவில்லை அன்றுதான்” 


என்று இதிகாசத்தைத் துணைக்கழைத்து வந்து 

“அன்றும் என்ன இன்றும் என்ன

பாரதம் என்றும் உண்டு

ஏற்றால் என்ன மறுத்தால் என்ன

இன்பம் துன்பம் உண்டு

நீயேதான் வாடாதே..வாடாதே....”

என்று ஆற்றுப்படுத்துவார்

மக்கள் நாயகன் ராமராஜன் பிறந்த தினமின்று.

இன்று தன் பாடல்களால் வாழும் கவிஞர் பிறைசூடன் நம்மை விட்டு மறைந்து நான்காண்டுகள்.

எங்கே சென்றாலும் அன்பே மாறாது

நெஞ்சம் கொண்டாடும் பாசம் மாறாது....

ஒரு கூட்டின் கிளிகள் தான் எங்கெங்கோ

உறவாடும் நெஞ்சங்கள் எங்கெங்கோ


கானா பிரபா

08.10.2025

Friday, August 29, 2025

இசைஞானி இளையராஜா இசை வழங்க ♥️ ♥️ நாயகன் நாகார்ஜூனா ♥️


கீதாஞ்சலி, இயக்குனர் மணிரத்னம், இசைஞானி இளையராஜா, நாகார்ஜீனா என இந்தப் படத்தில் பணியாற்றிய முக்கிய கலைஞர்களுக்குப் பெரும் பேர் வாங்கிக் கொடுத்த படம் மட்டுமல்ல 36 வருஷங்களுக்குப் பின்னர் இன்றும் அதே புத்துணர்வைப் படம் பார்க்கும் இரண்டு மணி நேரம் கொடுக்கும் வல்லமை நிறைந்த காதல் காவியம். 

ஆரம்பத்தில் சற்றுத் தட்டு தடுமாறிப் பின்னர் மெளனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் என்று தமிழில் தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்த மணிரத்னம், மெல்ல ஆந்திராவை முற்றுகையிட்டு அப்போது வளர்ந்து வந்த வாரிசு நடிகர் நாகர்ஜீனாவை வளைத்துப் போட்டு கீதாஞ்சலி என்ற காவியத்தைக் கொடுத்தார். தந்தை நாகேஸ்வரராவ் தேவதாஸ் படத்தில் பின்னி எடுத்தவராயிற்றே, மகன் நாகார்ஜீனா விடுவாரா என்ன.

கூடவே ஜோடி கட்டிய கிரிஜா அப்போது புதுமுகம், அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். கீதாஞ்சலி படத்தைத் தொடந்து மலையாளத்தில் பிரிதர்ஷன் இயக்கி மோகன்லால் நடித்த வந்தனம் படத்திலும் தலைகாட்டினார். 

அன்றைய காலகட்டத்தில் நடிகை அமலா மோகம் எங்கும் வியாபித்திருந்ததால் சற்றேறக்குறைய அதே முகவெட்டுடன் கிரிஜாவை மணிரத்னம் காட்டியிருப்பார். கீதாஞ்சலி படத்தின் வெற்றியில் கிரிஜாவின் அடக்கமான அதே சமயம் நாசூக்காகப் பண்ணும் குறும்பு நடிப்பும் பங்கு போட்டிருக்கும். அத்தோடு அந்நிய சாயல் இல்லாது அந்நியோன்யமாக ரோகிணி அவர்களின் பின்னணிக் குரல் வேறு.

நுறு நாட்களுக்கு மேல் ஓடிய கீதாஞ்சலி வெற்றிச் சித்திரம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கதை, கலை இயக்கம் உட்பட ஆந்திர அரசின் ஏழு நந்தி விருதுகளையும், தேசிய அளவில் சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாகவும் விருதுகளை அள்ளியது. பாரதிராஜாக்கள் காலத்துக்குப் பின் தமிழ் சினிமாவில் இன்னொரு பரிமாணத்தை ஆரம்பித்த மணிரத்னத்தின் ஓவ்வொரு வெற்றிப்படமும் வித்தியாசமான களங்களை அன்று கொண்டிருந்தது. அந்த வகையில் முழுமையாக காதலை மையப்படுத்தியிருந்தது இப்படம். மணிரத்னம் என்ற கலைஞனின் உயிர் நாடியாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராமும் , இசைஞானி இளையராஜாவும் படமுழுதும் செயற்பட்டிருப்பது தெரிகின்றது.

எண்பதுகளில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த இசைஞானிக்கு கீதம், காதல், கிராமம் என்றிருந்தால் மனுஷர் அடிபின்னி விடுவார். அதைத் தான் இங்கேய்யும் காட்டியிருக்கின்றார். 

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் முன்னர் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முரளியை வைத்து ஒரு படம் தயாரித்த போது அந்தப் படத்துக்கு கீதாஞ்சலி என்று பெயர் சூட்டியவர் இளையராஜா. சில வருஷங்களுக்குப் பின் அதே தலைப்பு தெலுங்குக்குப் போய் இன்னொரு கதையோடு வரும் போது அங்கேயும் தான் இசையமைப்பேன்னு எண்ணியிருப்பாரா என்ன? இன்னொரு விஷயம் இளையராஜாவின் பக்தி இசைத் தொகுப்பு ஒன்றுக்கும் பெயர் "கீதாஞ்சலி".

இதயத்தை திருடாதே ஆகிய அந்தப் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் என்றால் தெலுங்கில் ஆண் குரலாக எஸ்பிபியும், தமிழில் மனோவுமாக அமைய, எஸ்.ஜானகி ஓம் நமஹ பாடலோடு மீதியை சித்ராவுக்குப் பகிர்ந்தார்.

இந்தப் படத்தின் பாடல்கள் குறித்துத் தனித் தனிப் பதிவுகளே எழுதுமளவுக்கு இன்றும் ஒன்றையொன்று போட்டி போட்டு ரசிக்க வைக்கும்.

ஒரே ஆண்டில், ஐந்து மாத இடைவெளியில் ஒரு முழுமையான ஆர்ப்பாட்டமில்லாத காதல் படத்தைக் கொடுத்து விட்டு இன்னொரு பரிமாணத்தில் ஒரு முழு நீள அதிரடித்திரைப்படத்தைக் கொடுத்துத் தன் சினிமா பயணத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய பெருமை நாகார்ஜூனாவுக்கு வாய்த்தது. முன் சொன்ன காதல் படம் கீதாஞ்சலி (இதயத்தைத் திருடாதே) , பின்னது முழு நீள அதிரடித் திரைப்படமாக வந்த ஷிவா என்ற தெலுங்குப்படம் தமிழில் "உதயம்" என்ற பெயரில் வெளியானது. 1989 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தப் புதுமைக்குப் பின் இளையராஜா, நாகார்ஜூனா ஆகிய அதே கூட்டணியோடு ஷிவா (உதயம்) படத்தில் இயக்குநர் ராம்கோபால் வர்மா, நாயகி அமலா, ஒளிப்பதிவாளர் கோபால் ரெட்டி இவர்களோடு பலரும் அறிந்திராத செய்தி இப்படத்தின் கதை உருவாக்கத்தில் ராம்கோபால்வர்மாவோடு இணைந்து பணியாற்றியவர் தெலுங்குப்படவுலகின் குணச்சித்ர நடிகர் தனிகலபரணி.

ராம்கோபால்வர்மா என்ற இயக்குநருக்குக் கிடைத்த அமர்க்களமான வெற்றியாக ஷிவா படத்தின் வெற்றி கணிக்கப்பட்டது, இந்த முதல்ப்பட வெற்றியே இவரைப் பின்னாளில், சில வருஷங்களுக்குப் பின் தெலுங்குத் திரையுலகில் இருந்து பெயர்த்து பாலிவூட் என்ற ஹிந்தித் திரையுலகில் வெற்றியோ தோல்வியோ ஆட்டம் காணாமல் இன்றுவரை தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கக் கூடிய தெம்பைக் கொடுத்திருக்கும். கல்லூரியில் நிலவும் தாதாயிசம், அதைச் சுற்றிப் பின்னப்பட்ட வன்முறை நோக்கிய பயணமாக "ஷிவா" படத்தின் கதையை ஒற்றை வரியில் எழுதி முடித்து விடலாம். ஆனால் 35 வருஷங்களுக்குப் பின்னர் அந்தப் படத்தை இன்றும் பார்க்கும் போதும் துரத்திக் கொண்டு பறக்கும் ஒளிப்பதிவு, ஆரம்பத்தில் இருந்து தேர்ந்தெடுத்த கறுப்பினத் தடகள வீரனைப் போல விர்ரென்று பயணிக்கும் அதிரடி இசை, அலட்டல் இல்லாத காட்சியமைப்புக்கள் என்று விறுவிறுப்பு ரகம் தான்.

ஷிவா வை மீண்டும் 2006 ஆம் ஆண்டில் ஷிவா என மீண்டும் ஹிந்தியில் புத்தம்புதுக் கலைஞர்களைப் போட்டு எடுத்திருந்தாலும் அசலுக்குப் பக்கம் நெருங்கவே முடியவில்லை என்னதான் புதிய தொழில்நுட்பம் கலந்திருந்தாலும்.

ஒரு வன்முறைப்பின்னணி சார்ந்த இந்தப் படத்தின் காட்சியமைப்புக்களில் கொலை, மற்றும் சித்திரவதைக்காட்சிகளைப் பார்த்தால் ஒரு துளிகூட மிகைப்படுத்தல் இல்லாத தணிக்கைக்கு வேலை வைக்காத உறுத்தாத காட்சிகள். ஒரு சில கொலை நடக்கும் காட்சிகள் அப்படியே பார்வையாளன் முடிவுக்கே விட்டுவைக்கும் அளவுக்கு மெளனமாய் முற்றுப்புள்ளி வைத்து அடுத்த காட்சிக்குப் பயணித்து விடும்.

நாகார்ஜூனா, அமலா நிஜ வாழ்விலும் கைப்பிடிக்கும் வகையில் கட்டியம் கூறும் குறும்பான காட்சிகள், தவிர ஒரு சில கிளுகிளுப்பாடல்கள் தான் வேகத்தடை. தவிர, சுபலேகா சுதாகர் வகையறா நண்பர் கூட்டத்தோடு யதார்த்தமாய்ப் பயணிக்கும் கல்லூரிக் காட்சியமைப்புக்கள், கல்லூரி தாதாவாக வந்து நடித்துச் செல்லும் சக்ரவர்த்தி, பவானி என்ற பெரும் வில்லனாக அதே சமயம் வெற்றுச் சவாடல் வசனங்கள் இல்லாத அடக்கமாய் இருந்து தன் "காரியத்தை" முடிக்கும் ரகுவரன் ஆகிய கலைஞர்கள் தேர்விலும் இந்தப் படத்தின் வெற்றி தங்கியிருக்கின்றன.

ஷிவா என்ற தெலுங்குப் படம் அதே ஆண்டில் தமிழில் "உதயம்" என்று மொழிமாற்றப்பட்டுத் தமிழகத்திலும் பேராதரவைச் சந்தித்தது. சைக்கிள் செயினைக் கழற்றிச் சுழற்றி அடிக்கும் ஸ்டைல் பலரைக் கவர்ந்த ஒன்று. தெலுங்கில் 155 நாட்கள் ஓடிய இந்தப் படம் தேவி என்ற தியேட்டரில் 3 காட்சிகள் ஹவுஸ்புல்லாக 62 நாட்கள் ஓடியது இன்றுவரை சாதனையாகக் கொள்ளப்படுகின்றது. (மேலதிக தகவல் உதவி: நாகார்ஜீனா ரசிகர்கள் தளம், விக்கிபீடியா).

ஒரு பரபரப்பான படத்துக்குத் தேவையான முழுமையான உழைப்பை அள்ளிக் கொட்டியிருக்கின்றார் இசைஞானி இளையராஜா. படத்தின் ஆரம்பத்தில் இருந்து படம் முடிந்து இறுதியில் ஓடும் எழுத்தோட்டம் வரை பயணிக்கும் பின்னணி இசையில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே மெல்லிசை ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதைத் தவிர மற்றைய அனைத்துக் காட்சிகளுக்கான இசையுமே அதிரடி தான்.

தெலுங்குப் பதிப்பை “உதயம்" என்ற பெயரில் தமிழாக்கியபோது வசனம் எழுதியவர் அமலாவின் மேனேஜராக இயங்கியவரும் நடிகருமான சுரேஷ் சக்ரவர்த்தி.

இதயத்தை திருடாதே போன்று உதயம் படத்தின் அனைத்துப் பாடல்களும் கவிஞர் வாலியின் கைவண்ணம்.

முன்னதற்கு எதிர்மாறாக ஐந்து பாடல்களுமே ஆர்ப்பாட்டப் பட்டாசு.

“பாட்டனி பாடமுண்டு" பாடல் முன்னாளில் வந்த இளையராஜாவின் “வெண்ணிலா ஓடுது" பாடலை நினைப்பூட்ட, பின்னாளில் தேவாவும் தன் பங்குக்குக் கை வைத்து “கொண்டையில் தாழம்பூ” ஆக்கினார்.



மணிரத்ன மோகம் ஆட்டிப்படைத்ததாலோ என்னமோ மலையாளத்தில் இருந்து இயக்குநர்கள் பாஸில் மற்றும் பிரியதர்ஷனும் நாகார்ஜீனாவுக்குத் தலா இரண்டு படங்களைக் கொடுத்தார்கள்.பதிவை எழுதியவர் கானா பிரபா.

அந்த வகையில் நாகார்ஜூனா & அமலா ஜோடியாக “நிர்ணயம்" படத்தினை பிரியதர்ஷன் இயக்கினார்.

காதல் நாயகனில் இருந்து அதிரடி நாயகனாக மாறிவிட்ட நாகார்ஜீனாவுக்கு இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் தீனி போட்டன.

“சம்பவம்" என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது,

கீதாஞ்சலி, சிவா ஆகிய படங்கள் அளவுக்குத் தமிழில் அதிக தாக்கத்தை எழுப்பாவிட்டாலும் அந்தக் காலத்து ஆல் இந்தியா ரேடியோ நேயர் விருப்பத்தில் “சம்பவம்" படத்தின் 

“மெல்ல மெல்ல மலர்ந்தது காதல்"

https://www.youtube.com/watch?v=NX2Qgp7HJzM&list=RDNX2Qgp7HJzM&start_radio=1

“இதோ ஒரு ப்ரேமை கொண்டு" 

https://www.youtube.com/watch?v=tgy0TLsxaYs

மற்றும் “ஓ பேபியோ” ஆகிய பாடல்கள் ஏக பிரபலம்.

தொடர்ந்து பாஸில் இயக்கிய Killer திரைப்படத்தில் நாகார்ஜீனாவும், நக்மாவும் ஜோடி கட்டினார்கள். தமிழில் ஈஸ்வர் என்ற பெயரில் மொழி மாற்றம் கட்டது.

ப்ரியா ப்ரியத்தின் பேர் நீதானோ

https://www.youtube.com/watch?v=evIKDi3cbh0

பாடலைக் கேட்டால் இந்தப் படம் பலரின் நினைவுக்குள் வரும்.

மேற் சொன்ன படங்கள் அளவுக்குத் தமிழில் மொழி மாற்றி அதிகம் பேசப்படாத படங்கள் இரண்டு இளையராஜா இசை வழங்க நாகார்ஜீனா நடித்தவை.

அவற்றில் ஒன்று இந்தப் படங்களுக்கெல்லாம் முற்பட்ட நாகார்ஜூனா நாயகனாக நடித்த ஆரம்ப காலப் படங்களில் ஒன்றான

சங்கீர்த்தனா, இதனை இயக்கியவர் கீத கிருஷ்ணா. ரம்யா கிருஷ்ணன் நாயகியாக இணைந்த படம். தமிழில் “என் பாடல் உனக்காக” என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வந்த சுவடே இல்லாமல் போன படம். இரு மொழிகளிலும் தோல்வியைத் தழுவிய படமாக அமைந்து விட்டது.

சுளையாக 11 பாடல்கள். 

கேட்டுப் பாருங்கள் தேனமுது தான்

https://www.youtube.com/watch?v=rIWaVjoAeZg&t=1s






நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் இயக்கத்தில் நாகார்ஜூனா நடிக்கும் வாய்ப்பு எழுந்த போது அங்கும் இசைஞானி இளையராஜாவின் தேவை எழுந்தது. பதிவை எழுதியவர் கானா பிரபா. அவ்வகையில் நாகார்ஜூனா & கெளதமி ஜோடியாக நடித்த படம் “சைதன்யா” இது தமிழில் “மெட்ராஸ் டூ கோவா” என்ற பெயரில் வந்தது. சென்னை வானொலியில் இந்தப் படப் பாடல்களையும் விட்டு வைக்காமல் ஒலிபரப்பினாலும் பெரிய அளவில் போய்ச் சேராமல் அமைந்த இன்னொரு படம்.

தெலுங்கில்

https://www.youtube.com/watch?v=UKbR_B2tFsE&start_radio=1

தமிழில் கேட்க

https://www.youtube.com/watch?v=sd8cKMZ4-TM

எஸ்.பி.பாலசுப்ரமணியமும், லதா மங்கேஷ்கரும் தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் ஜோடி கட்டிப் பாடியிருக்கிறார்கள் என்ற சிறப்பைக் கொடுத்தது Aakhari Poratam . தெல்ல சீரக்கு பாடலை ஓடிப் போய் கேட்டுவிட்டு வாருங்கள்.

https://www.youtube.com/watch?v=FFgc3Gb5kBU

இப்படத்தின் ஏனைய பாடல்கள்

https://www.youtube.com/watch?v=qeo6NGq4X6g&list=RDqeo6NGq4X6g&start_radio=1

இசைஞானி இளையராஜாவின் அறுசுவைப் பாடல்களோடு, தெலுங்கில் மெகா இயக்குநர் கே.ராகவேந்திரராவ் இயக்க, நாகார்ஜூனா, ஶ்ரீதேவி, சுஹாசினி நடித்தபடமது.

படமும் மிகப் பெரிய வெற்றி.

இவ்விதம் தமிழில் மட்டுமல்ல தெலுங்கின் எண்பதுகளின் உச்ச நட்சத்திரங்களின் முக்கிய திருப்புமுனை வெற்றிகளுக்கு இசைஞானி இளையராஜாவின் பங்கு பெரும்பங்களித்திருக்கிறது.

இன்று அமலா புருஷ் நாகார்ஜீனாவின் பிறந்த தினம்.


கானா பிரபா

29.08.2025

Wednesday, July 30, 2025

ஏவிஎம் இல் இசையமைப்பாளர் & இயக்குநராக கங்கை அமரன்

“இசை : இளையராஜா

பாடல்கள் : கங்கை அமரன்

இந்த அமைப்பில் தான் முந்தானை முடிச்சு படம் வெளிவர வேண்டியது”

இப்படியாக Zee தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் கங்கை அமரன் சொல்லி இருந்தார். ஆனல் அந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தன் “நான் பிடிக்கும் மாப்பிள்ளை தான்”, கவிஞர் முத்துலிங்கம் “சின்னஞ்சிறு கிளியே”, நா.காமராசன் “விளக்கு வச்ச நேரத்திலே” பாடல்களை ஏலவே எழுதினார்களே என்று நினைத்திக்

கொண்டிருக்கும் போது தான்,

மறுவாரமே Chat with Chithra வில் விட்டதை முடித்தார் கங்கை அமரன், 

“ புலவருக்கு ஒரு பாட்டு கொடுக்கணும் என்று பாக்யராஜ் ஆரம்பிச்சு 

 அப்படியே மற்றவர்களும் எழுதினார்கள்”

என்றார்.  இப்படி இரண்டு வெவ்வேறு நிகழ்ச்சிகளை இணைத்தால் தான் பல கேள்விகளுக்குப் பதில் வரும் 😊

ஏவிஎம்மின் “முந்தானை முடிச்சு” படத்தில் பாக்யராஜ் ஒப்பந்தமாகும் போது கங்கை அமரன் தான் இசையமைப்பாளர் ஆனால் வர்த்த ரீதியான கவனிப்புக்காக இளையராஜாவுக்கு மாறும் தீர்மானத்தை ஏவிஎம் சரவணன் எடுத்த போது பாடல்கள் முழுக்க கங்கை அமரன் என்று தீர்மானித்தார்களாம்.

ஏவிஎம்மில் கங்கை அமரன் இசையமைப்பாளராக முடியாத குறையை பின்னாளில் ஏவிஎம் குமரன் தயாரித்த “நாம் இருவர்” படம் தீர்த்துக் கொண்டது. இந்தப் படத்தில் இடம்பெற்ற திருவிழா திருவிழா 

https://youtu.be/eYcdmN2JN-Q?si=n0SrlD7jYR9TQhdI

என் அபிமான 80s இல் ஒன்று.

அந்தக் காலத்தில் Recording centre இல் ஒலிநாடாவில் பாடல் பதிவு முடிந்த மீதமுள்ள இடத்தில் இந்தப் பாடலின் வாத்திய இசையைப் பதிவார்கள்.

ஏவிஎம் குமரனுக்குப் பிடித்த இயக்குநர் கங்கை அமரன். அவரை வைத்து விஜயகாந்த் நடிப்பில்  “வெள்ளை புறா ஒன்று” படத்தையும் தன் தயாரிப்பில் இயக்க வைத்தார். ஆனால் இரண்டு படமுமே எடுபடவில்லை.

கே.பாக்யராஜ் படங்களில் மிக அரிதாகவே முழுப்பாடல்களையும் ஒருவரே எழுதுவார். அப்படியான வாய்ப்பு கவிஞர் வாலிக்கு அதிகம் வாய்த்திருக்கிறது. ஒருமுறை வாலியே வேடிக்கையாக பொது மேடை ஒன்றில்

“இந்த பாக்யராஜிடம் எவ்வளவோ தடவை சொல்லிட்டேன் அனுபவமில்லாத பாடலாசியர்களுக்குப் பாடல் கொடுக்காதீங்கன்னு ஏன்னா அதைச் செம்மைப்படுத்த என்னிடம் வருவார்” என்று சொல்லி இருப்பார்.

பலரிடம் பாடல் வாங்குவது மட்டுமல்ல ஒருவரிடமே கறாராக சரியான பல்லவி வரும் வரை விட மாட்டார் பாக்யராஜ். அதை முன்பு இளையராஜாவும், சமீபத்தில் கங்கை அமரனும் சொல்லியிருப்பார்கள். தன் ஆரம்ப கால கிழக்கே போகும் ரயில் காலத்திலேயே பாடல் வரிகளில் உள்ளீடு செய்யுமளவுக்கு ஞானஸ்தர் அவர்.

பாக்யராஜின் இந்தப் பண்பைப் பற்றி எழுதும் போதுதான் ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது.

“வீட்ல விசேஷங்க” படத்தில் மீதி அனைத்தும் வாலி ஒரு பாடல் தவிர, அந்த ஒரு பாடலை எழுதியவர் புலவர் புலமைப்பித்தன் அதுதான்,

பூங்குயில் ரெண்டு ஒண்ணுல 

ஒண்ணாக் கூடுச்சாம்

காதலைச் சொல்லி 

மெட்டுக்கள் கட்டிப் பாடிச்சாம் 

அடடா காத்துல எங்கும்

அதுதான் கேக்குது இன்னும்

கண்ணே எந்தன் கண்ணே கேளு

❤️

https://youtu.be/xarzK5v03is?si=OEArIBopOvNWL8zD

கானா பிரபா

30.07.2025


Wednesday, July 2, 2025

ஒரு பெண் புறா கன்னடத்தில் SPB பாடிய கதை


"இப்ப தான் ஒரு முழுமையா உணர்கிறேன்"

என்று மனம் விட்டுச் சொன்னார் SPB.

"அண்ணாமலை" படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது பாடல்கள் ரகளையாக ஊரெல்லாம் கலக்க, அவருக்கோ ஒரு மனக்குறை "ஒரு பெண்புறா" பாடலையும் தானே பாடியிக்கலாமே என்று.

அந்த உள்ளக் கிடக்கையை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடமும், இசையமைப்பாளர் தேவாவிடமும் சொல்லிக் கலாய்ப்பாராம் எஸ்பிபி.

"ஏன் நாம மெலடி பாட மாட்டோமா" என்று.

ரஜினி படங்களில் ஜேசுதாஸ் பாடல் என்பது ஒரு உளவியல் ரீதியாக அந்தக் கதாபாத்திரத்தின் நொந்த தன்மையைப் பிரதிபலிக்கும்.

இதே பாங்கிலேயே " நல்லவனுக்கு நல்லவன்" படத்தில் "சிட்டுக்குச் செல்லச் சிட்டு" பாடலும் ஜேசுதாஸ் குரலில் அமைந்திருந்தது.

இந்த மாதிரி எஸ்பிபி ஆசைப்பட்டதன் காரணம் பிறரின் வாய்ப்பைத் தட்டிப்பறிப்பதற்கல்ல, இந்த மாதிரியான நல்ல வாய்ப்புகள் நல் வரம் என்ற அவரின் மனோவுணர்வு தான்.

இதே போலவே சுரேஷ் கிருஷ்ணாவின் குரு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் "ருத்ர வீணா" படத்தில்

ஜேசுதாஸ் பாடிய 

"லலித ப்ரிய கமலம்"

https://www.youtube.com/watch?v=-s3cdlJFhes&list=RD-s3cdlJFhes&start_radio=1

பாடலும் கூடத் தானே பாடவேண்டும் என்று ஆசைப்பட அது "உன்னால் முடியும் தம்பி"யில் நிகழ்ந்ததாக எஸ்பிபி மகன் சரண் குறிப்பிட்டிருக்கிறார்.

அதுவே "இதழில் கதை எழுதும்" ஆனது

"அண்ணாமலை" படம் வெளியாகி 12 ஆண்டுகள் கழித்து சுரேஷ் கிருஷ்ணா கன்னடத்தில் பெரும் நடிகர் விஷ்ணுவர்த்தனை வைத்து "கடம்பா" படம் தயாராகிறது. அதற்கும் இசை தேவா தான்.

அப்போது விஷ்ணுவர்த்தன் ஆசைப்பட்ட "ஒரு பெண் பிறா" பாடலை இப்படத்தில் வைக்கத் தீர்மானிக்கும் போது கூடவே எஸ்பிபியை இருவரும் நினைக்கிறார்கள்.

எஸ்பிபியின் ஆசை காத்திருந்து நிறைவேறுகிறது.

அதுதான்

https://www.youtube.com/watch?v=vc0ma2yHXJA

ஆனது.

பெரும் திருப்தியும் மகிழ்ச்சியுமாக எஸ்பிபி சொன்னாராம்

"இப்ப தான் ஒரு முழுமையா உணர்கிறேன்"

அண்மையில் Touring Talkies தொடரிலும் சுரேஷ்  கிருஷ்ணா இத்தகவலை மீள் நினைந்தார்.

இந்தத் தகவலை SPB பாடகன் சங்கதி நூலிலும் குறிப்பிட்டுள்ளேன்.

கானா பிரபா

02.07.2025


Tuesday, July 1, 2025

நிலவும் மலரும் பாடுது ❤️


சிரித்து சிரித்து உறவு வந்தால்

நிலைத்து வாழுமா..

மனம் துடித்து துடித்து

சேர்ந்த பின்னே

தோல்வி காணுமா..

காதலர் தாம் சந்திக்கும் போது எழும் ஐயப்பாடுகளைப் பாடலில் கொண்டு வரும் உத்தியை அறுபது ஆண்டுகளுக்கு முன்பே கவியரசர் கண்ணதாசன் கொண்டு வந்திருப்பதை மெய்ப்பிக்க இன்னொரு பாட்டு.

வழக்கம் போல காதலியை ஆற்றுப்படுத்தி ஆறுதல் அளிக்கிறான் இந்தக் காதலன். 

இப்படியாகப் பாடலின் கவி நயத்தை வியக்க ஒரு தடவை, இன்னொரு தடவை இசைக்காக என்று கேட்டு வைக்கும் பாட்டு இது.

அள்ளி இறைத்தாலும் ஆயிரம் கொள்கலன் போதாத ஏரியின் மீதேறிப் படகில் மிதக்கும் போது ஒரு சொட்டு நீர்த்திவாலை அந்த் தண்ணீர்த் தொட்டியின் பெறுமானத்தைக் காட்டும். அது போலவே பாடல் தொடங்கும் போது எழும் அந்தச் சிறு ஒலி கூடக் காணாத காட்சியைக் கற்பனையிலே வரிக்க முகவரி எழுதும்.

கதகதப்பான குளிர் வாசம் அந்த ஆண் குரலோன் ராஜாவிடம். 

இசையரசி சுசீலாம்மாவைப் பற்றித் தனியாகப் பேசவும் வேண்டுமோ? எந்த ஆண் கூட்டில் சேர்ந்தாலும் இசைந்து போகும் அரசி அல்லவா?

பாடலூடே ஊடுருவும் அந்தப் புல்லாங்குழல் ஏரியைச் சுழித்து ஓடும் படகின் ஊடாடல் போல நிகழ்த்தும் ஆலாபனை.

அந்தப் பாடலின் ஆரம்பத்தில் விழும் ஒலிக்கீற்றின் ஜாலதரங்கம் அப்படியே காட்சியாகப் படகில் பயணிக்கும் காதலர்களின் சூழலுக்குப் பொருதிப் போகும். எப்படி இவர் காட்சியை உய்த்துணர்ந்து இசை கொடுத்தாரோ என்று எண்ண வைக்கும் மிக நுணுக்கமான சங்கதி அது.

“மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை

நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்”

எவ்வளவு அழகாகச் சுற்றி வந்து மூலஸ்தானத்தில் பாடலை மையம் கொள்ள வைப்பார் இந்தத் தேர்ந்த இசையமைப்பாளர் சக பாடகர் ஏ.எம்.ராஜா.

தெலுங்கு தேசம் இரண்டு பாடக இசையமைப்பாளர்களைச் சம காலத்தில் பிரசவித்துள்ளது.

ஒருவர் கண்டசாலா இன்னொருவர் ஏ.எம்.ராஜா.

இனிய பிறந்த நாள் நினைவுகளோடு “எம்.ராஜாவுக்கு”

நிலை மயங்கி மயங்கி காதலினால்

ஜாடை பேசுது....

நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது ❤️

https://www.youtube.com/watch?v=IiaquGWSJHI&list=RDIiaquGWSJHI&start_radio=1

கானா பிரபா

01.07.2025

Wednesday, June 25, 2025

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் ❤️



அழகு மிகுந்த ராஜகுமாரி

மேகமாகப் போகிறாள்


வரிகளைக் கேட்டதுமே பாரதிராஜா காலத்து வெள்ளுடைத் தேவதைப் பெண்ணாகவும் அவளின் பின்னால் நீண்டு பரவி அலையும் வெண் சரிகையாகவும் அந்த மேகக் கூட்டம் தோன்றும். 

பின்னெப்போதாவது பாடல் கேட்காத சூழலிலும் அவ்வரிகளை அனிச்சையாக வாய் முணுமுணுக்கும்.


ஜரிகை நெளியும் சேலை கொண்டு

மலையை மூட பார்க்கிறாள்...


ஆனானப்பட்ட மலையையே மூடப் பார்க்கும் முகில் கூட்டத்தையே பெரிதாகப் பார்க்கும் உவமைச் சிறப்பு.


தார் ரோடை மங்கையின் கூந்தலுக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறார்.


ஆலங்கொடி மேலே கிளி..

தேன் கனிகளை தேடுது...


வாகனம் ஓட்டும் அந்த நாயகன் சுற்றிலும் உள்ளதை உன்னிப்பாகப் பார்த்து ரசித்துத் தன்னோடு பயணிக்கும் பயணிகளுக்கும் காட்சிகளை ருசிக்கப் பரிமாறுகிறார்.


இவ்வளவு அழகான இயற்கை பரந்து விரிந்திருக்கிறதே கொட்டிக் கிடக்கிறதே அப்படியே வாழ்ந்தாலே போதுமே அப்படியிருக்க,  உறுத்தல் எழுகிறது இங்கே


பள்ளம் சிலர் உள்ளம் என

ஏன் படைத்தான் ஆண்டவன்?


ஆண்டவன் படைப்பில் உயர்ந்ததை எல்லாம் காட்டிக் கொண்டு போகும் கவிஞர் இங்கே நொந்து விட்டு அப்படியே

நல்லதை நினை மனமே என்று சொல்லுமாற்போல,

“கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” என்று கடந்து போகிறார், 


“பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்”


என்று அவனின் உயர் படைப்புக்காகவே வாழ்த்தத் தேடுகிறார்.


வெட்ட வெளி தனில் கொட்டிக் கிடக்குது என்று ஒரு கவித்துவமான தலைப்பில் இசைஞானி இளையராஜா நூலொன்றை எழுதியிருந்தார். அதற்கு முற்பட்ட காலத்தில் இயற்கையில் கொட்டிக் கிடக்கும் உன்னதங்களை அந்தக் குறுகிய ஐந்து நிமிடப் பயணத்திலேயே கவியரசர் அழகாக அடக்கி வைத்துக் கொடுத்தார்.


அந்த ஜீப் வண்டிச் சத்தம், பறவைகளின் ரீங்காரம் எல்லாவற்றையும் ராஜ இசை காட்சிப்படுத்தும், கூடவே ஜேசுதாஸ் குரல் கவிஞரின் வரிகளைக் காப்பாற்றி வைத்திருக்கும்.


இறைக்க இறைக்க ஊற்றெடுக்கும் கிணறு போலத் தன் வாழ்வின் சொற்ப வருடங்களில் கவியரசர் எழுதிப் போனதில் இதுவும் ஒன்றெண்டால் இன்னும் பத்தாண்டுகளாவது வாழ்ந்திருந்தால் அந்த கவி நதி எவ்வளவெல்லாம் கொடுத்திருக்கும்?


இளைய பருவம் மலையில் வந்தால்

ஏகம் சொர்க்க சிந்தனை...❤️


https://youtu.be/yRQvEZ7Gdws?si=t39VzBFKUXlLl196


கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் நினைவில்


கானா பிரபா

24.06.2025

Sunday, June 22, 2025

நடிகர் விஜய்க்காக தாய் மாமன் எஸ்.என்.சுரேந்தர் பாடல்கள்

 


காதலின் வயது

அடி எத்தனை கோடி

அத்தனை வருஷம் 

நாம் வாழணும் வாடி….


பூவே பூவே பெண்பூவே ❤️


விஜய் போலவே தன் தாய்மாமன் எஸ்.என்.சுரேந்தருக்கும் அதே நாசிக் குரல். அதனாலோ என்னமோ விஜய் இன் ஆரம்பக் குரலில் இருந்து பல்வேறு படங்களில் சுரேந்தர் குரல் அச்சொட்டாக பொருந்தி வந்திருக்கிறது.

இந்த மாதிரியான பொருந்தல் புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கும் அமைந்திருக்கிறது.

குறிப்பாக

தனிமையிலே ஒரு ராகம்


https://youtu.be/7JcMQuoJ2_k?si=iP2cbLFXq27rM-dm


மற்றும்


நீலகிரிப் பூவே


https://youtu.be/wr5Gq7fqp8c?si=ik_bvmx6zuV1_-PO


ஆகிய பாடல்களில் ஆக்ரோஷ நாயகன் விஜயகாந்துக்கு சுரேந்தர் பாடகக் குரல் இணைந்து சிறப்பித்திருக்கிறது.

அதே காலப்பகுதியில் விஜயகாந்துக்கு சுரேந்தர் பின்னணிக் குரலாளராகவும் இயங்கி இருக்கிறார்.

ஆனால் இதில் இன்னொரு முரண் மோகனுக்கு அச்சொட்டாகப் பின்னணிக் குரலில் பொருந்திப் போன சுரேந்தர் இருக்க பாடல் விஷயத்தில் எஸ்பிபி பொருந்தி விடுவார்.

ஆகவே விஜயகாந்த் & விஜய் இருவரின் முரண் குணாதசியங்களிலும் அழகாக அணி சேர்ந்த குரல் சுரேந்தருடையது.


அந்த வகையில் விஜய்க்காக சுரேந்தர் பாடிய பாடல்கள் வரிசையில்

அவரின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தில்

மணிமேகலை இசையில்

அம்மாடி ராணி


https://youtu.be/oQHF_R6sVnc?si=Tww7eZwOz8MlYkok


மாப்பிள்ளை நான்


https://youtu.be/AyvvZnP_noo?si=y1OREdewsJTnrZK5


மற்றும்


மனோஜ் பட்னாகர் இயக்கி இசையமைத்த என்றென்றும் காதல் படத்தின் ஜலக்கு ஜலக்கு


https://youtu.be/df2JnybxqGg?si=2lz2Z6RHawP_Ly4D


தேவா இசையில்

செந்தூர பாண்டி படத்தில்

மானே நானே


https://youtu.be/z1ZmbWmPnwg?si=RTW3DyWHfvfksNWl


ரசிகன் படத்தில் 

சில்லென சில்லென


https://youtu.be/LiJpppL3G_A?si=OVKM1Uae3TiLeede


விஷ்ணு படத்தில்

ஹம்மா ஹம்மா


https://youtu.be/m3SaGlXEXxA?si=fhY8QwmieGGajGI9


ஒன்ஸ்மோர் படத்தில் இன்னொன்றாக

மலர்களே


https://youtu.be/tqXqBN9OSP4?si=KjkuIdTvrgw2wcCW


நெஞ்சினிலே படத்தில்

ப்ரைம் மினிஸ்டர்


https://youtu.be/9w-vkHUa16s?si=3c0U6bb5QN6G5qR4


“ப்ரியமுடன்” படத்தில் ஒயிட்டு லகான் கோழி ஒண்ணு பாடலை இருவரும் பாடி நடித்திருப்பார்கள்


https://youtu.be/zrK-bjXH7jc?si=uxqRuz48r4ac8m1t


என்று தொடர்ந்து விஜய்க்காக அவரின் தாய்மாமன் எஸ்.என்.சுரேந்தர் குரலைப் பொருத்தி அழகாக்கினார். பதிவை எழுதியவர் கானா பிரபா


இதே வேளை அருண்மொழி குரலைப் பொருத்திப் பார்த்த விதத்திலும் தேவா,  இளையராஜா பங்களிப்பில்

சிங்காரக் கண்ணுக்கு மை கொண்டு வா (விஷ்ணு) , அம்மன் கோயில் எல்லாமே (ராஜாவின் பார்வையிலே) , அரும்பும் தளிரே (சந்திரலேகா) என்றும் பின்னர் உன்னிமேனன், ஹரிஹரன் என்று நீளும் பாடகர் பட்டியலில் பாட்டுத்தலைவன் எஸ்பிபியும் அணி செய்தார்.

இருப்பினும் ஈராயிரத்துக்கு முந்திய விஜய் படங்களில் சுரேந்தர் குரலின் தனித்துவம் முன் சொன்ன பாடல்களில் அடையாளம் காண்பிக்கும்.


சுரேந்தரின் இயல்பான அந்தக் குழைவு, உணர்ச்சிவசப்பட்டு வரிகளை மேய்ந்து கொடுக்கும் பாங்கு இந்தப் பாடல்களை இன்னொரு இடத்துக்கு உயர்த்தும்.


சமீப காலத்தில் வைரல் ஹிட் என்று சொல்லும் தேவா இசையில் “தேவா” படத்தில்  சித்ராவோடு சுரேந்தர் பாடும்

சின்னப் பையன் சின்னப் பொண்ணை காதலிச்சா பாட்டு வரும்


https://youtu.be/bXozbQ9hOcc?si=2Ayl_QXAp2RPHADI


இவற்றில் எல்லாம் உச்சம்.இந்தப் பாட்டுக்கு சோனி நிறுவனமே சிவப்பு கம்பளம் விரித்து வாங்கிப் போட்டிருக்கிறது.


என் மனக் கிணற்றில் கிடப்பில் இருந்து

சமீபகாலமாக ஒரு பாடல் ஞாபகத்தைக் கிளறி விட்டிருக்கிறது 

மாண்புமிகு மாணவன் தேவா இசையில்

டிசெம்பர் மாதத்துப் பனித் துளியே


இப்போதெல்லாம் இந்தப் பாடலைக் கேட்காத சூழலிலும் என் மனசு பாடி விடுகிறது. ❤️


கானா பிரபா

22.06.2025

Wednesday, June 11, 2025

இளையராஜா ஒன்றுக்கு மூன்றாகக் கொடுத்தவை ❤️❤️❤️



மறந்தால்தானே

நினைக்கணும் மாமா

நினைவே நீதானே 

நீ தானே....

 

"குடகுமலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி" வெளிவந்த காலத்தில்  முன் சொன்ன அடிகள் பல காதலர்களின் மனவோசையாக இருந்தது. சொல்லப் போனால் கரகாட்டக்காரன் படத்தின் ஒவ்வொன்றுமே அதிமதுரம் என்றாலும் இந்தப் பாடலிலேயே நாள் முழுக்கத் தங்கியவர்கள் பலர்.

 

சமீபத்து இரண்டு பேட்டிகளிலும் கங்கை அமரன் இந்தப் பாடல் பிறந்த கதை பற்றிச் சொல்லும் போது, 

"மாங்குயிலே....

  பூங்குயிலே...." 

என்று சோக ராகமாக இன்னொரு பாடலைத் தன் அண்ணனிடம் கேட்ட போது,

“ஏற்கனவே இதே பாட்டு இரண்டு வடிவில் இருக்கே எதுக்கு மூணாவது?”

 

என்று சொல்லி “குடகுமலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா” அந்த நிமிடத்தில் போட்டுக் கொடுத்ததாகச் சொன்னார்.

 

தன் தம்பியின் ஆசையை விடுவானேன் என்று நினைத்தோ என்னமோ இந்தப் பாடலுக்கு முந்திய காட்சியில் “மாங்குயிலே” பாடலின் சோக ராகம் பின்னணி இசையாகக் கொடுத்திருப்பார் இசைஞானியார் இப்படி

 

http://www.radio.kanapraba.com/karakattakaran/k15.mp3

 

 

இன்னொரு விஷயம், தொடர்ந்து வெளிவந்த கங்கை அமரன் இயக்கி, அதே ராமராஜன் நடித்த வில்லுப்பாட்டுகாரன் படத்தில் இதே பாங்கில் ஒரு பாட்டு சந்தோஷமும், சோகமுமாக இருக்கும் இப்படி

 

கலைவாணியோ ராணியோ (சந்தோஷம்)

 

https://www.youtube.com/watch?v=0zLEj3ttcJw

 

 

கலைவாணியோ ராணியோ (சோகம்)

 

https://www.youtube.com/watch?v=No9uoFWlS0c

 

 

சரி அப்படியென்றால் ஒன்றுக்கு மூன்றாக இசைஞானியார் முன்பு கொடுக்கவில்லையா என்றால் அதுவும் உண்டே?

 

கங்கை அமரன் படமான “எங்க ஊரு பாட்டுக்காரன்"

செண்பகமே செண்பகமே (ஆஷா போன்ஸே)

 https://youtu.be/nYvTirVZX48?si=JXL_iAg1qs04wtcj


செண்பகமே செண்பகமே (மனோ)

 https://youtu.be/sUr1Mg7Q4o4?si=KObygCXn5k-5-2s5

 

செண்பகமே செண்பகமே (சுனந்தா & மனோ)

 https://youtu.be/K83mjZR9YOM?si=lQ_oJ8Luf0JiLQ53

 

“பிள்ளை நிலா” படத்தில் “ராஜா மகள்" மூன்று வடிவில்

“ராஜா மகள்" (ஜெயச்சந்திரன்)

https://www.youtube.com/watch?v=ST_1nt3QWIk

 

“ராஜா மகள்” (எஸ்.ஜானகி குமரிக் குரல்)

https://www.youtube.com/watch?v=lqWfX2irHzk

 

“ராஜா மகள்" (எஸ்.ஜானகி மழலைக் குரல்)

https://www.youtube.com/watch?v=hkfO98wdKIo


இதே போன்று மேலும் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில்

குயிலே குயிலே குயிலக்கா பாடல்

K.J.ஜேசுதாஸ், சித்ரா & பவதாரணி கூட்டணியிலும் சித்ரா & பவதாரணி மற்றும் ஜேசுதாஸ் தனித்தும் என்று மூன்று பாடல்கள். பதிவை எழுதியவர் : கானா பிரபா


புதுப் புது அர்த்தங்கள் படத்தில்

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே SPB குரலில், இளையராஜா குரலில், மலேசியா வாசுதேவன் குரலில் என்று மூன்று வேறு வடிவங்களில் இருக்கும். 


சின்னத்தாயி படத்தில் கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் பாடல் உமாரமணன் மற்றும்கல்பனா குழுவினர், SPB குரலில் மற்றும் S.ஜானகி குரலில் என்றும்,


தங்க மனசுக்காரன் படத்தில் மணிக்குயில் இசைக்குதடி பாடலை 

மின்மினி, சசிரேகா கூட்டணியிலும், மனோ தனித்து சந்தோஷம் மற்றும் சோக வடிவிலும் கொடுத்திருக்கிறார்.


கங்கை அமரனின் இயக்கத்தில் வெளிவராத பூஞ்சோலையில்

கானக் குயிலே பாடலை எஸ்பிபி & பவதாரணி மற்றும் உன்னிகிருஷ்ணன் 

& பவதாரணி இவை தவிர இளையராஜா தனித்தும் பாடியுள்ளார். பதிவை எழுதியவர் : கானா பிரபா


தர்மா படத்தில் இரு கண்கள் போதாது நான்கு பாடல்களாக இளையராஜா & எஸ்பிபி சந்தோஷ மற்றும் சோக வடிவங்கள்.


ரமணா படத்தில் வானவில்லே வானவில்லே பாடல் இளையராஜா, ஹரிஹரன், சாதனா சர்க்கம் என்று மூன்று வடிவங்கள்,


ஒரு நாள் ஒரு கனவு படத்தில் “காற்றில் வரும் கீதமே” பாடலை இளையராஜா தனித்தும், பவதாரணி & ஸ்ரேயா கோசல் கூட்டு, தவிர ஹரிஹரனோடு பவதாரணி, ஸ்ரேயா கோசல் & சாதனா சர்க்கம் என்றும் அமைந்துள்ளன.


ஊரெல்லாம் உன் பாட்டு தான் இளையராஜா, ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா குரலில் தனித்தனியாக உண்டு.


கங்கை அமரன் இயக்கிய கொக்கரக்கோ படத்தில் கீதம் சங்கீதம் பாடல் எஸ்பிபி & சைலஜா குரலிலும், எஸ்பிபி தனித்துமாக மூன்று வடிவங்களில் உள்ளன.


தாயம் ஒண்ணு படத்தில் மனதிலே ஒரு பாட்டு பாடல் SPB; சுசீலா; SPB & சுசீலா ஆகிய வடிவங்களிலும்,


கற்பூர முல்லையில் பூங்காவியம் பேசும் ஓவியம் ஜேசுதாஸ்; சுசீலா; ஜேசுதாஸ், சுசீலா & சித்ரா என்று மூன்றாகவும், 


குயில் பாட்டு ஓ வந்ததென்ன பாடல் ஸ்வர்ணலதா Happy & Sad, இளையராஜா & ஸ்வர்ணலதா என்று என் ராசாவின் மனசிலே படத்துக்காகவும், 


அம்மன் கோயில் திருவிழா படத்தில் இடம்பெற்ற நான் சொன்னால் கேளம்மா பாடல்  இளையராஜா; ஜானகி; மனோ & ஜானகி ஆகியோர் குரல்களிலும்,


சின்னதம்பி படத்தில் தூளியிலே ஆட வந்த பாடல் மனோ happy & sad, சித்ரா ஆகவும், 


எங்கிருந்தோ அழைக்கும் பாடல் இளையராஜா; லதா மங்கேஷ்கர்; மனோ & லதா மங்கேஷ்கர் எனவும் 

மேலும் உள்ளன.


இவற்றில் சில track இற்காகப் பாடி பின்னர் இசைத்தட்டிலும் வந்திருந்தாலும் தனித்துவமாகக் காட்சிச் சூழலுக்குக் கொடுத்த மூன்று பாடல்கள் கவனிக்கத் தக்கவை.


ஊரென்ன சொன்ன என்ன

ஒண்ணாக நின்னா என்ன

உன் பேரை பாடி நிப்பேன் மாமா


குடகு மலை காற்றில் வரும்

பாட்டு கேக்குதா


பதிவை எழுதியவர் : கானா பிரபா

இளையராஜா ஒன்றுக்கு மூன்றாகக்

கொடுத்தவை ❤️❤️❤️

Wednesday, June 4, 2025

நினைவாலே அணைப்பேன் 🤎🤎🤎 SPB

சிகரம்” படப் பிடிப்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருக்கிறார்.

அந்தச் சமயம் துணை நடிகர் கவிதாலயா கிருஷ்ணன் தன் மகளின் முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான அழைப்பிதழை அந்தப் படக் குழுவில் இருந்த உதவியாளர்களிடம் கொடுப்பதைப் பார்த்து விட்டார்.

கவிதாலயா கிருஷ்ணனை அழைத்து 

“எனக்கு அழைப்பில்லையா?” என்று கேட்டாராம் எஸ்பிபி.

“நீங்க ஐந்து மொழியில் பாடிட்டிருக்கிற பிசி ஆன ஆள் நம்ம வீட்டுக்கெல்லாம் வர நேரம் இருக்குமா? “

என்று கவிதாலயா கிருஷ்ணன் சமாளிக்கவும்,

“அழைப்பது உன்னோட கடமை” என்று எஸ்பிபி சொல்லி இருக்கிறார்.

தன் மனைவியோடு எஸ்பிபி வீடு போய் முறைப்படி தன் மகள் பிறந்த நாள் விழாவுக்கு அழைத்தார்.

அந்த நாளில் மும்பையில் ஒரு பாடல் பதிவு இருக்கு என்று எஸ்பிபியின் நண்பரும் உதவியாளருமான விட்டல் பக்கத்தில் நின்று ஞாபகப்படுத்தினார் எஸ்பிபிக்கு.

“கவிதாலயா” கிருஷ்ணன் மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்து இரவு எட்டரை மணி இருக்கும். 

வீட்டுக்கு வெளியே அழைப்புக் குரல்.

எஸ்பிபி தன் மனைவியோடு நிற்கிறார்.

கதவைத் திறந்து வீட்டுக்குள் போய், அப்போது தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணன் மகளை எழுப்பி வாங்கி வந்த ஜிமிக்கியை அணிவித்து விட்டுத் திரும்பிய எஸ்பிபியிடம்

“சார் நான் என்ன பெரிய தயாரிப்பாளரா இல்லை இயக்குநரா? எதுக்கு இவ்வளவு சிரமம்?”

என்று நெகிழ்ந்த கவிதாலயா கிருஷ்ணனிடம்,

"இல்லடா நீ மனுஷன்டா"

என்றாராம் எஸ்பிபி

அதைப் பார்த்துக் கொண்டிருந்த கவிதாலயா கிருஷ்ணனின் அப்பா அழுதுட்டாராம்.

இதற்காகவே மும்பையில் இருந்து வந்தவர் மீண்டும் மும்பை புறப்பட்டாராம்.

கவிதாலயா கிருஷ்ணனின் அம்மா ஏதோ தன்னுடைய மகனின் நட்பு என்ற உரிமையில், எஸ்பிபிக்கு போன் பண்ணி நான் சிங்கப்பூர் போகணும் உதவி பண்ண முடியுமா? என்று கேட்ட போது

அவரின் முழுப் பயண ஏற்பாடுகளையும் பண்ணிக் கொடுத்தாராம் அந்தப் பரபரப்பிலும்.

இன்னொரு சம்பவம்,

குணச்சித்திர நடிகரும் ஆஸி வாசியுமான சுரேஷ் சக்கரவர்த்தி மெல்பர்னில் ஒரு உணவகம் நடத்துகிறார். இங்கே எஸ்பிபி வரும் போதெல்லாம் கச்சேரி முடிச்சு, நேராக உணவகம் வந்து அங்கே சமையல்காரர்களோடு சிரிச்சுப் பேசிக் கும்மாளம் அடிச்சு, சுடச் சுடப் பரிமாறுவதைக் குழந்தை போலச் சாப்பிட்டுக் கொண்டு அவர்களோடு கூட்டத்தோடு இருந்து ஸ்பெஷலாகப் பாட்டுப் பாடி மகிழ்விப்பாராம்.

எஸ்பிபி என்ற மகா கலைஞனை விட்டு விடுங்கள். 

இப்படி மகா கனம் பொருந்தி மனிதனை எப்போது பார்க்கப் போகிறோம்?

கடந்த ஆண்டு மறைந்த என் அன்பு நண்பன் ஹரியின் அம்மா எனது “SPB பாடகன் சங்கதி”

நூலைப் படித்து விட்டு ஒரு காணொளிப் பகிர்வை அனுப்பி வைத்து மானசீகமாகப் பாராட்டினார்.

இப்படி வயது வேறுபாடின்று எல்லோரின் நேசிப்புக்குமான ஒரு மகா ஆத்மா எங்கள் எஸ்பிபி.

இளையராஜாவின் பாடல்கள் என்றால் அவர் இசையமைத்த நாலாயிரம் கடக்கும் பாடல்களில் சில நூறைத்தான் பரவலாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அது போலவே எஸ்பிபி பாடியதில் பிரபல இசையமைப்பாளர் தவிர்ந்த பாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அது என்னவெனில் புத்தம் புது இசையமைப்பாளர்களின் அடையாளத்தை நிறுவ எஸ்பிபி எவ்வளவு துணை நின்றிருக்கிறார் என்பதைக் காட்டி நிற்கும். இந்த இடத்தில் எஸ்பிபி பழமைக்கும் புதுமைக்கும் ஒரு பாலமாகவே விளங்குகிறார் என்றே நோக்கவேண்டும். இசைத்துறையில் ஐம்பது ஆண்டுகளைத் தொட்டவர் மூன்று தலைமுறைகளைக் கண்டவர். 

இம்மூன்றிலும் தன் ரசிகர் குழாத்தை வளைத்தும் போடும் குரல் 

வித்தகர். பதிவை எழுதியவர் : கானா பிரபா

அதனால் தான் ரஹ்மான் வழியாக ஒரு புத்திசை இயக்கம் எழுந்த போது “காதல் ரோஜாவே”  இல் ஆரம்பித்து இன்று வரை தவிர்க்க முடியாத 

குரலாக இருந்திருக்கிறார். அது சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்து, வினீத், 

அப்பாஸ் என்றெல்லாம் ரஹ்மானோடு பயணப்பட்டு நீண்டிருக்கிறது, 

அதையும் கடந்து போயிருக்கிறது.

ரஹ்மானுக்கு முந்திய சகாப்தம் இசைஞானி இளையராஜா காலத்திலும் கூட இசையாலும், எண்ணற்ற பாடகர்களை உள்ளிளுத்த வகையாலும் எழுந்த மாற்றம் எஸ்பிபி கணக்கில் கை வைக்கவில்லை. இளையராஜாவின் இசையில் அதிகம் பாடி வைத்தவர் எஸ்பிபி தான்.

மாற்றம் என்பது சடுதியாக விளைவது அல்லது, அது மெல்ல மெல்ல விளைவிப்பது. ராஜாவின் ஆரம்ப காலத்தின் இசையோட்டங்கள், பாடகர் ஒழுங்கு என்பது மெல்ல மெல்ல மாறிய பாங்கு ஓருதாரணம். ஆனால் 

எல்லா மாற்றங்களிலும் எஸ்பிபி தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். 

புதியதொரு இசையமைப்பாளர் இசைக்க வரும் போதும் கூட எஸ்பிபி முத்திரையோடு தன் பாடலை அடையாளப்படுத்தும் சூழல் 

இருந்திருக்கிறது. ஒரு இசையமைப்பாளர் தன்னை

நிலை நிறுத்துவதற்கும், தன் பாடலை மிகஇலகுவாகக் கடைக்கோடி 

ரசிகனிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இங்கே உறுதுணை எஸ்பிபியின் 

குரல்.

நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும், ஒவ்வொரு 

இசையமைப்பாளரின் பாணியும் ஒவ்வொரு தினுசாக இருக்கும். 

அந்தந்த இசைக் கலவைக்கு ஈடு கட்டி எப்படிப் பாம்புச்சட்டை போலத் 

தன்னை உருமாற்றுகிறார் இந்தப் பாடும் நிலா என்றஆச்சரியத்துக்கு 

விடை காண முடிவதில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த எங்கள் நேசிப்புக்குரிய ஆளுமை ஒருவரைப் பற்றி நேற்று நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன்.

அப்போது அவரிடம் நான் சொன்னது இதுதான்.

“அவர் எங்களிடம் இல்லாமல் இருக்கலாம், 

ஆனால் அவர் எங்களோடுதான் இருக்கிறார் 

என்ற உணர்வோடு இருப்பதில் என்ன பிரச்சனை?” 

என்று.

கவிஞர் வாலி இருந்திருந்தால் அதையே

“இருக்கிறானா இல்லையா

 எனும் ஐயத்தை எழுப்புவது

 மூவர்”

என்று திருத்தி எழுதியிருப்பார்.

சோகப் பாடல்களைக் கேட்காமல் தவிர்ப்பதுண்டு. ஆனால் “நிலாவே வா செல்லாதே வா” பாடலோடு நேற்று நான் கட்டுண்டு கிடந்தேன்.

பொதுவாக எஸ்பிபியின் பாடல்களைத் தன் நிலையில் வைத்து நாம் பார்ப்பதுண்டு.

உதாரணத்துக்கு “இந்தத் தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன்”

ஆனால் இங்கே சொல்லும் இன்னொரு பாடலின் வரிகள் மட்டும் அவர் எமக்காகவும், நாம் அவருக்காகவும் சொல்லுமாற் போல வாலியிடம் சங்கதி வாங்கிக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்.

அதுதான் இது

நினைவாலே அணைப்பேன் 🤎🤎🤎

பதிவை எழுதியவர் : கானா பிரபா

எஸ்பிபி எனும் ஏகாந்தன் அகவை 79

Monday, June 2, 2025

இமைப்பொழுதும் எம் நெஞ்சில் நீங்காத இளையராஜா ❤️❤️❤️ பாடலாசிரியர் இளையராஜாவின் உலகியல் 💚❤️💛


இசைஞானி இளையராஜாவின் பாட்டுச் சரித்திரத்தில் அவரின் இன்னொரு முகமாக அறியப்படுவது தேர்ந்தெடுத்த பாடலாசிரியர் என்றதோர் முகம்.

இளையராஜாவின் வெண்பா கட்டும் திறனை கவிஞர் வாலி மற்றும் கவிஞர் முத்துலிங்கம் போன்றோர் உதாரண விளக்கங்களோடு காட்டிய சம்பவங்கள் உண்டு.

“என் பாவக்கணக்குக்குப் பட்டியல் போட்டால் சொல்ல நடுங்குதம்மா”

இப்படியாகச் சித்தர் பாடலை உதாரணம் காட்டி,

“அப்பன் என்றும் அம்மையென்றும்” பாடலை கவிஞர் வாலியிடம் வாங்கிய அனுபவத்தை குணா படப் பாடல் ஒலிப்பேழை சான்று பகிர்கின்றது. அவ்வளவுக்கு ஆழமாகக் கவிதைகளையும், பழதமிழ் இலக்கியங்களை நேசிக்கும் ஒரு உன்னதமான இசையமைப்பாளர் அவருக்கு முன்பும் பின்பும் உண்டா என்பது கேள்விக் குறி.

தாம் பசியோடிருந்து வாய்ப்புத் தேடிய காலத்திலும், பாட்டுக் கச்சேரிக்குப் பஞ்சமில்லை என்று மாலை வேளைகளிலே 

கால மகள் கண் திறப்பாள்

சின்னையா

நாம் கண் கலங்கி

கவலைப் பட்டு என்னையா

நாலு பக்கம் வாசலுண்டு

சின்னையா

அதில் நமக்கும் ஒரு வழியில்லையா

என்னையா...

ஆனந்த ஜோதி திரைப்படத்தில் சுசீலா பாடிய, கண்ணதாசன் வரிகள் சமைக்க விஸ்வ நாதன் ராமமூர்த்தி இரட்டையர் இசையமைத்த அந்தப் பாடலைப் பாடச் சுற்றமுள்ளவர்களின் இசைப் பசியாற்றிய தம் வாழ்வியல் அனுபவத்தை இளையராஜாவின் இளஞ்ச்சகோதரர் கங்கை அமரன் சொல்லியிருக்கிறார்.

இந்தப் பாடல் தான் பின்னாளில் ஒரு பெரும் இசையமைப்பாளராக இளையராஜா வருவதற்கு அச்சாரமாக அமைந்த தன்னம்பிக்கைப் பாட்டு என்று சொல்லியும் இருக்கிறார்.

அதனாலோ என்னமோ பாடலாசிரியர் இளையராஜா என்று வரும் போது அவர் ஆன்மிகம், காதல், இயற்கை, காட்சிப் பின்புலம், பொதுவானதொரு முகப்புப்பாட்டு என்று பல்வேறு சூழலுக்கும் இருநூறைக் கடக்கும் பாடல்களை எழுதினாலும், அவற்றில் அதிகம் விஞ்சி நிற்பது தத்துவ விசாரங்களே.

அதாவது ஒரு படத்தின் நாயக பாத்திரத்துக்கோ அல்லது குறித்த காட்சியின் கனத்தைப் பின்னணிப் பாடலாகக் கொடுக்க வேண்டிய சூழலிலோ அந்தப் படைப்புக்கு மட்டுமன்றி, கேட்கும் ரசிகனுக்கும் தன்னம்பிக்கையை அல்லது விரக்தியை ஆற்றுப்படுத்தும் கையாகவும் தோள் பற்றுகின்றது அவரின் பாடல்கள்.

வாலியார் சொல்லும் “உள்ளங்குரங்கை” ஒரு கட்டுக்குள் கொண்டு வருவன அவை.

பதிவை எழுதியவர் : கானா பிரபா 

பாடலாசிரியராகத் தன் ஆரம்ப வாழ்வியலில் அனைத்துப் பாடல்களையும் எழுதிய வகையில் “ஆளப்பிறந்தவன்” படத்தில் மக்களின் குறை தீர்க்க ஒரு மகாராஜா பாத்திரத்தில் உருவெடுக்கும் நாயக துதியாக “கொடி கட்டிப் பறக்குற ராஜா எங்க மகராஜா” பாடலில் மக்களின் பொதுவான பிரச்சனைகளை இனம் காட்டி அவற்றுக்கான தீர்வே அந்த நாயகன் என்ற வகையில் ஒரு நேரடிக் கருத்தைப் பதித்திருப்பார். 

அதே பாத்திரம் சமூக அநீதிகளைக் கண்டு வெகுண்டெழும் சூழலில் 

“என்னால் முடியாது சும்மா இருப்பது” பாடலின் வழி 

“உண்பதும் உடுப்பதும் படுப்பதும் 

அனைவரின் அன்றாடம்

கெடுப்பதைத் தடுப்பதும்

கொடுப்பதும் எந்தன் அன்றாடம்”

என்று பொதுவுடமைக் கருத்தோடு கோடிட்டிருப்பார்.

“கல்லிலே உயிரைக் கண்ட

 மனிதன் ஒரு கலைஞன் தானே

சிலையிலே உணர்வைத் தந்த

கலைஞன் அவன் இறைவன் தானே”

இப்படியாகப் பொடி வைத்தவர், 

“உயிராய் இங்கு வாழ்ந்திடும்

பெண் உணர்வைக் கல்லாய் மாற்றிடும்

இந்தப் பாவம் அதைச் செய்யச் சொன்னதாரோ...”

என்று “இரவுப் பூக்கள்” படத்துக்காக 

“இந்தப் பூவுக்கொரு கதை உண்டு” பாடலில் அந்த அபலைப் பெண்ணுக்காக அனுதாபம் கொட்டியிருப்பார்.

காயப்பட்ட இன்னொரு பெண்ணின் மனசுக்கு ஒத்தடமாக

“கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா அடி உன்னைப் போல் பெண் எல்லாம் துன்பம் தான் கொள்ளலாமா”

என்று “தென்றல் சுடும்” பாடலில் அனுதாபக் குரலாய் அமைந்திருப்பார்.

பயணம் செய்யும் வண்டியிலே

தலை மேல் ஏண்டி பாரம் பாரம்

பாரங்களை கீழாய் வைத்தால்

சுமந்தே வண்டி போகும் போகும்

எல்லோருக்கும் பாரம் உண்டு

இல்லாதவர் யார் தான் இங்கே

பொல்லாதவர் வாழும் ஊருள்

வேண்டும் துணை அன்பே அன்பே

என்று “கண்ணம்மா கண்ணம்மா” (தென்றல் சுடும்) என்று அதீதமாகத் தோள் கொடுத்துத் தாயாகி நிற்கும் ராஜ வரிகள்.

“வீதியில் இசைத்தாலும்..

வீணைக்கு இசை உண்டு...

வீணாகி போகாது,

கேட்கின்ற நெஞ்சுண்டு…”

“உன் குத்தமா” (அழகி) இன்னொரு வாழ்வு கொண்ட பெண்ணை ஆற்றுப்படுத்தும் கீதம்.

“காயமே இது பொய்யடா 

 வெறும் காற்றடைத்த பையடா”

என்ற சித்தர் பாடலை அடிநாதமாகக் கொண்டு

“தேகம், அது சந்தேகம்

இந்த காயம், அது வெங்காயம்

அட வாழ்க்கை என்பதும்

தேகம் என்பதும்

பாசம் என்பதும் ஒன்னும் இல்ல..”

என்ற வரிகளைக் கட்டிக் கொடுத்தார் “காலிப் பெருங்காய டப்பா” (மந்திரப் புன்னகை) பாடலில்.

இளையராஜா பாடலாசிரியராக அதிக பாடல்களை எழுதிக் குவித்தது 1986 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான். பதிவை எழுதியவர் கானா பிரபா 

“அப்பாவுக்கு பையன் வந்து பொண்ணு தேடும் காலமடியோ” என்று சின்னக் குயில் பாடுது திரைப்படத்துக்காக எழுதிப் பாடியிருப்பார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் தனிமையில் இருந்த தாய்க்காக, பிள்ளைகளே திருமணம் நடத்தி வந்தது இப்போது உங்கள் கண்முன்னே வந்திருக்க வேண்டுமே?

கலைவாணர் போல காலத்துக்கு முந்திய சிந்தனையெழுச்சியின் வெளிப்பாடு இது.

“வசந்தமும் இங்கே வந்ததென்று

வாசனை மலர்கள் சொன்னாலும்

தென்றலும் இங்கே வந்து நின்று

இன்பத்தின் கீதம் தந்தாலும்

நீ இன்றி ஏது வசந்தம் இங்கே” 

“எங்கிருந்தோ அழைக்கும் என் கீதம்” பாடல் காதல் பாடலாக இருந்தாலும் தனிமை விரும்பிகளின் தோழனாக அரவணைக்கும் ராஜாவின் வரிகள்.

என்னை விட்டுப் போகாதே படம் இளையராஜா முழுமையாகப் பாடல்களை எழுதி இசையமைத்தது.

அங்கேயும் சித்தர் வாய்மொழிகளுக்கு இசைவாக

“எலும்பாலே கூடு கட்டி

 தோலாலே மூடிப்புட்டு

 உசுரக் குடுத்து ஆட்டிப் படைக்கிறான்”

என்ற தத்துவப் பாடலைக் குழுவோடு சேர்ந்து பாடினார். அங்கேயும் சாதி மத, கட்சி பேதத்தைத் தன் வரிகளின் துணையோடு சாட்டை போடுவார்.

“வெள்ளை நிறத்தொரு பச்சைக் கிளிப்பிள்ள்

“திட்டி திட்டி பேசினாலும்

வட்டியில சோறு வைப்பா

ஒட்டிபோன ஒடம்புன்னாலும்

உசுர விட்டு பாசம் வைப்பா...,

பொன்னப் போல ஆத்தா 

என்னைப் பெத்துப் போட்டா”

என்று அதே படத்துக்காகத் தன் அம்மா வாழும் காலத்திலேயே எல்லா அம்மாக்களுக்குமாக எழுதியளித்தார்.

பின்னாளில் அதே தொனியில் “பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா” (படம்: என்னைப் பெத்த ராசா), “அம்மான்னா சும்மா இல்லேடா” (படம் : திருப்புமுனை), “சொந்தம் என்று வந்தவளே ஆத்தா” (படம் : தாலாட்டு பாடவா) கொடுத்திருக்கிறார்.

“கொஞ்சம் பசிச்சா ..

நெஞ்சு கொதிக்கும்

தாயி போலத்தான்…

நண்பன் அவனே

சாமி கிட்டத்தான்

ஒன்ன நெனச்சு…

வேண்டி இருக்கும்

அன்பன் அவனே

அன்னையப் போல் நண்பனும் உண்டு..”

என்று தாயை நண்பனுக்கு ஒப்பிடுவார் “அம்மான்னா சும்மா இல்லேடா” பாடலில்.

“மாடிழுத்த வண்டியெல்லாம் 

இழுத்துப் பார்த்தேன்

 நான் மனுஷனா மிருகமா

உழைச்சுப் பார்த்தேன்...

கஷ்டப்பட்ட போதிலும் 

காசு வந்து சேரல...”

பாட்டாளி வர்க்கத்தின் குரலாய் ஒலிப்பார் கிருஷ்ணன் வந்தான் படத்துக்காக. தேங்காய் சீனிவாசனின் தயாரிப்பில் அவரின் நடிப்பிலேயே அந்தப் பாடல் இடம்பிடித்திருக்கும். இந்தப் பாடல் போலவே அவரும் கடன் சுமையில் அல்லற்பட்டது வலிக்கும் நிஜம்.

“பிள்ளையரே...பிள்ளையாரே நாட்டைக் காக்கப் போகும் பிள்ளை யாரு...” என்று கடவுளாரிடம் தன் தேசம் குறித்த ஆதங்கத்தை வெளிப்படுத்திய முகப்புப் பாடல் “ராசாவே உன்னெ நம்பி” திரைப்படத்தில்.

தன் தம்பி கங்கை அமரனுக்கு மட்டுமா ஏராளம் கூடப் பிறக்காத தம்பியருக்காக ஒரு தன்னம்பிக்கைப் பாட்டு “வெளுத்துக் கட்டிக்கடா” (படம்: செண்பகமே செண்பகமே).

“பூமிக்குள் ஊறிடும் நீரதுதான்

ஆறாக ஊரெங்கும் ஓடுவது

ஆறோடும் பாதையை யாரு இங்கே

நேராக சீராக ஆக்கியது

என்னதென்றும் உன்னதென்றும்

பேதங்கள்தான் ஏனோ

என்ன இது என்ன இது கேவலங்கள் தானோ?”

என்றும்,

“மண்ணில் கிடக்கின்ற கல்லு ஒன்று

வைரக்கல் என்றதை யார் சொன்னது

கண்ணில் கிடைப்பதை சொந்தம் கொள்ளும்

சின்ன புத்தி அதை யார் தந்தது”

என்றும் ஒரு இயற்கையை நேசிக்கும் “கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே” (படம் : தீர்த்தக் கரையினிலே) பாடலில் கூட சமூக விழிப்புணர்வைக் கொண்டு வந்து காட்டுவார்.

இளையராஜா ஒரே படத்தில் அதிக பாடல் எழுதிய கணக்கில் வரும் வாழ்க வளர்க்க படம்.

“சிட்டுக்குருவி பாரு கட்டுகளும் ஏது” மற்றும்

“ஈசுவரனே ஈசுவரனே 

பொம்பளைய என்னத்துக்கு 

தலையில் வச்சான்

பொம்பளை இல்லாட்டி 

உலகம் இல்லடா”

ஆகிய பாடல்களிலும் சுதந்திர வேட்கையும், பெண்ணியமும் பேசப்பட்டிருக்கும்.

“கண்ணே நவமணியே உன்னைக் காணாமல் கண்ணுறங்குமோ” (படம் : என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு) பாட்டு பின்னாளில் தன் செல்வமகள் பவதாரிணி பிரிவின் பாடலாக அமையும் என்று நினைத்திருப்பாரா?

“பணத்தைத் தேடும் பிணங்களே 

 மனத்தைத் தேடிப் பாருங்கள்”

என்ற அடிநாதத்தோடு “கொலைகள் செய்தல் குற்றம் என்று சட்டம் இருக்குது (படம் : நான் சொன்னதே சட்டம்) என்று நீதி தேவன் சாட்சியமாக வருபவர்,

“உலக வாழ்க்கையே இங்கே ஜெயிலு வாழ்க்கை தான்” என்று சிறைத்துறையை ஒப்புவமை காட்டுவார் ராஜாதி ராஜாவில்.

சிறைக்குள் சிந்தனையைத் தட்டி எழுப்ப இன்னொன்றாக

“நீ உள்ள பொறந்து வெளியே போன கண்ண பிரானே” என்று “எதிர்க்காற்று” படத்திலும் தந்திருப்பார். அதே படத்தில்

“சாமியாரப் போனவனுக்கு சம்சார நினைப்பெதுக்கு” என்ற எள்ளலும் கொடுத்தார்.

“பாட்டாலே புத்தி சொன்னார்” தன் வாய்மொழிப் பாடலாகக் கரகாட்டக்காரனில்  கொடுத்தாலும், அங்கே ஒரு இசைக்கலைஞனின் உள்ளார்ந்த கிடக்கை வெளிப்பட்டிருக்கும். 

பின்னாளில் வந்த “என்னை ஒருவன் பாடச் சொன்னான்” பாடலும் அதே தொனியில்.

“சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன”

“ஏலே இளங்குயிலே என்னாசைப் பைங்க்கிளியே”

இரண்டையும் தனக்காகவும், சுசீலாவுக்காகவும் எழுதி நினைவுச் சின்னத்துக்காகக் கொடுத்தாலும் அங்கே வயது கடந்து எல்லோருக்குமான தாலாட்டு பொதிந்திருக்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இரண்டு தத்துவப் பாடல்கள்,

ஒன்று “உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி” இன்னொன்று “மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்”. அந்த இரண்டாவதை இளையராஜாவிடமிருந்து பிரிந்த காலகட்டத்தில் கவிஞர் வைரமுத்து கேட்டு மெய் சிலிர்த்ததை நடிகர் மாரிமுத்து சாட்சியம் பறைந்தார்.

பின்னாளில் “நிலவே முகம் காட்டு” படத்துக்காக எழுதிய “தன்னந்தனியாக ஒரு தீவுண்டு தீவுண்டு அதில் நானுண்டு” பாடலுக்கு “உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி முன்னோடி.

“வேல வேல எல்லோர்க்கும் உண்டு (படம்: பிக் பாக்கெட்) பாடல் ஒரு ஜாலியாக அமைந்திருந்தாலும் அங்கேயும் நாம் செய்யும் எல்லாமே வேலை தான் என்ற மெய்த்தன்மையைக் காட்டி உற்சாகப்படுத்துவார்.

“தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனி மரம் தான்”

என்ற உலகியல் யதார்த்தம் “பொன்மனச் செல்வன்” படத்தின் காட்சிச் சூழலோடு ஒட்டி வெளிப்பட்டிருக்கும்.

இதே அலைவரிசையில் இன்னொன்று 

“எங்கே நிம்மதி நிம்மது என்று தேடிப்பார்த்தேன்” (படம்: நடிகன்).

கட்சிக்காக ஓடாய் உழைத்த தொண்டனைத் தட்டி எழுப்பி

“தம்பி! நீ திரும்பிப் பாரடா” என்று அரசியல் அழுக்குகளைக் காட்டி நிற்பார் “என் உயிர்த் தோழன்” இல்.

அதிகம் கவனிக்கப்படாத ஒரு அதிமதுரம், பாடகர் மலேசியா வாசுதேவன் இயக்கிய “நீ சிரித்தால் தீபாவளி” படத்தில் இடம்பெற்ற

“பாசம் என்னும் நூலில் ஆடும் பொம்மை எல்லோரும்”

“பெண் மனசு ஆழமுன்னு ஆம்பளைக்குத் தெரியும்”

படத்தின் காட்சியோட்டத்தில் ஈர்க்கப்பட்ட இளையராஜா கொடுத்த “என் ராசாவின் மனசிலே” முரண்பட்ட தாம்பத்ய பந்தத்தினைக் காட்டி நிற்கும்.

“இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு” ஜாலியாகக் இளைஞர்களுக்காகக் குரல் கொடுத்த “வா வா வசந்தமே” பாட்டு, அது இனித்த அளவுக்குப் பரவலாகப் போய்ச் சேராதது.

“சாதி என்னும் கொடுமை இந்த நாட்டை என்று விடுமோ” என்று “திருநெல்வேலி”க்காக அமைந்த விழிப்புணர்ச்சிப் பாடல்.

“பணம் மட்டும் வாழ்க்கையா” (படம் : சொல்ல மறந்த கதை), 

“காட்டு வழி கால் நடையா போற தம்பி) அது ஒரு கனாக்காலம் பாடல் இவரின் தம்பியார் கங்கை அமரன் எழுதிய “ஆலோலம் பாடி” (படம் : ஆவாரம் பூ) பாடலைப் போன்று தனிமையின் தோழனாகத் தோள் கொடுக்கும்.

ராஜாவின் ரமண மாலையில் இருந்து மீண்டும் திரைக்காக எடுத்தாண்ட “பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்) நான் கடவுள் படப் பாடல் சம நேரத்தில் ஆன்மிகமும், தத்துவமும் பறையும்.

அதே பாங்கில் சம அர்த்தத்தில் 

“காட்டுவழி துன்பம் இல்லை” என்று தொடங்கும் பாட்டு சுமைகளெல்லாம் சுமையே இல்லை (படம் : தாண்டவக் கோனே)  என்ற தத்துவார்த்தத்தோடு அமையும்.

இப்படி நீளும் தத்துவப் பாடல்களை எழுதியதோடு பெரும்பாலானவற்றைத் தானே பாடியும் கொடுத்திருப்பார். அங்கே தான் பாடலின் ஆன்மா வெளிப்பட்டிருக்கும்.

“தன் திரையிசையில் ஒரு ஒழுக்கத்தைக் கற்றுத்தந்தவர் இசைஞானி இளையராஜா” என்று இன்றைய தலைமுறை இசையமைப்பாளர் ஜோகன் சிவனேஷ் போற்றுமளவுக்குத் தலைமுறை கடந்து நேர்மையான இசை கொடுக்கும் வள்ளல்.

“நெல்லுக்குள்ளே மணியை

நெருப்பினிலே ஒளியை

உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்

உனக்கு இல்லையா தம்பி

நமக்கு இல்லையா...

கால மகள் கண் திறப்பாள்

சின்னையா...”

என்று தன் இசைப்பயணத்தின் ஆரம்ப காலத்தில் வேட்கையோடு கேட்ட அந்தப் பாடலின் தாக்கம் பின்னாளில்

மரத்த வச்சவன்

தண்ணி ஊத்துவான்

மனச பாத்துதான்

வாழ்வ மாத்துவான்

ஏ மனமே கலங்காதே

வீணாக வருந்தாதே

பாரங்கள் எல்லாமே

படைத்தவன் 

எவனோ அவனே சுமப்பான்

என்று தன் கோடிக்கணக்கான ரசிகர்களை ஆற்றுப்படுத்தும் ஆறுதல் வரிகளாகக் கொடுத்து “மன வாழ்வு” தந்த இசை வள்ளல்.

தன் அடுத்த சாதனை பற்றித் துடிப்போடு சிந்தித்துக் கொண்டிருக்கும்

“இளவல்”

இமைப் பொழுதும் எம் நெஞ்சில் வாழும் 

இசைஞானி இளையராஜாவுக்கு (ஜூன் 3) பிறந்த தின வாழ்த்து.

கானா பிரபா

02.06.2025

Sunday, May 25, 2025

அஞ்சு வண்ணப் பூவே ❤️🩷💛💚🧡

ஒரு பாடலுக்கு அதன் ஆரம்ப அடி எவ்வளவு எளிமையாகவும் அழகாகவும் ஈர்க்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக அமைந்ததாலோ என்னமோ பாடலைக் கேட்கும் முன்பே இன்னென்ன மாதிரி இருக்கும் என்று மனசு மெட்டுக் கட்ட ஆரம்பித்து விட்டது.

பாடலின் தொனியும், பின்னணியில் ஒரு சூனிய வெளியே ஊடுருவும் இசையும் அக்மார்க் 90களின் ரஹ்மானிய பின்னணி இசை . அதனால் நினைப்புக்கும் மேல் தீனி போட்டு விட்டார் ரஹ்மான் ❤️

சாருலதாமணியின் வழக்கமான துள்ளிசை அடையாளத்தில் இருந்து மாறுபட்டதும் அவரது சாஸ்திரியத்தனம் தூக்கலான கண்ணுக்குள் பொத்தி வைப்பேனில் இருந்து விலகியதுமாக ஈர்க்கிறார். கார்த்திக் நேஹா வரிகள், இன்னும் இவரோடு ரஹ்மான் பயணப்படலாம் அல்லது இந்தப் படப் பாடல்கள் அனைத்தையும் தூக்கிக் கொடுத்திருந்தால் பொன்னியின் செல்வன் காலத்துக்கு முந்திய மணிரத்னம் - ரஹ்மான் நிறம் வாய்த்திருக்கும்

Thug Life பாடல்களை ஒழுங்கு முறையில் தான் கேட்டேன். ல் ஜிங்குச்சா, Sugar Baby ஆகிய மாமூல்களைக் கடந்து முத்த மழை தொடங்கும் போதே இதோ ரஹ்மான் வந்துட்டார் என மனசு கூவியது. ஆனால் அது தபேலா உருளலில் கொஞ்சம் நெருடல் கொஞ்சம் “குரு” தனமாக எட்டிப் பார்த்து உறுத்தியது. ஆனால் கண்டிப்பாக இந்தப் பாடல் மெல்ல மெல்லக் கவரும் என்றே தோன்றுகிறது.

விண்வெளி நாயகா தொடங்கிய பின் லோகேஷ் கனராஜ் படம் போல எங்கெல்லாம் சுழன்றடிப்பதால் கடந்து விட்டேன். ஸ்ருதி ஹாசனும் உன்னைப் போல் ஒருவன் ஸ்ருதியை மாற்றுகிறார் இல்லை.

மணிரத்னத்தோடு இணையும் போது பால் டப்பா, பவுடர் டப்பாவோடு சேராமல் அஞ்சு வண்ணப் பூவே போல நுகர்ந்திருக்கலாமே எனத் தோன்றியது. ஆனால் தற்போது பால் டப்பாவோடு இருக்கும் இந்த Gen Z குழவிகளை நோக்கிய தாக்குதலாக இருக்கை கூடும்.

அஞ்சு வண்ணப் பூவே மேல் அடங்காத ஆசை கொண்டு ரஹ்மான் அதை மீளப் பாடியது போல நானும் அதிலேயே தங்கி விட்டேன்.

கானா பிரபா


#thuglife  #arrahmanmusic

பரமசிவன் கழுத்தில் இருந்து

 



இன்று தமிழ்த் திரை அரசர் T.M.செளந்தரராஜன் நினைவு தினம் என்பதை நினைப்பூட்டியது மனசு.

காலை வேளை காரைக் கிளப்பும் போது கணக்காக சிங்கப்பூர் ஒலி கொண்டு வந்தது


“பரம சிவன் கழுத்தில் இருந்து

 பாம்பு கேட்டது,

கருடா செளக்யமா!”


இன்பம், துன்பம், வெறுப்புணர்வு, விரக்தி நிலை இல்லாத ஒரு நேர்கோட்டிலே டியெம்எஸ் பாடிக் கொண்டிருந்தார்.


பாடல் வெளிவந்து 52 ஆண்டுகளாகிறது,

இன்றைக்கும் நிலை தாழ்ந்து பேசுவோரைக் கண்டால்


“பரமசிவன் கழுத்தில் இருந்து

  பாம்பு கேட்டது கருடா செளக்யமா?”


என்று கேட்போர் அப்படியே இருக்கிறார்கள் இல்லையில்லை தொகை வளர்ந்து விட்டது.

அவ்வளவுக்குக் காலத்தால் அழிக்க முடியாத பாட்டு அது.


கணவன், மனைவிக்கு இடையிலான ஊடாடலின் முன்னே பிறக்கும் பாட்டு.

தானும் திரையில் தோன்றி விட வேண்டும் என்ற சிற்றின்பம் கவியரசு கண்ணதாசனுக்கு இருந்ததுண்டு.

“ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்று சுயவிலாசம் எழுதிய பாடலுக்கு நிழலாய்த் தோன்றியவர் இங்கே “பரமசிவன் கழுத்தில் இருந்து” பாட்டுக்கு இன்னொருவர் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும் முகம்.

விபத்திலே கண்ணதாசன் கை அடிபடவும், சூரியகாந்தி படக் கதாசிரியர்

கதாசிரியர் ஏ.எஸ்.பிரகாசத்தை அரிதாரம் பூசச் சொல்லி படமாக்க முடிவெடுத்தாராம் இயக்குநர் முக்தா சீனிவாசன்.

கையில் அடிபட்ட சூழலில் ஒரு சால்வையைப் போர்த்துக் கொண்டே படக் காட்சியில் ஒத்துழைத்தாராம்.

கண்ணதாசனுக்கு ஒரு பெரிய கட் அவுட் வைக்கப்பட்டதாம்.


தன்மானம் என்று படத் தலைப்பு வைத்தாராம் கதாசிரியர் ஏ.எஸ்.பிரகாசம்.

சூரியகாந்தி என்று மாற்றி வைத்து அதை நியாயப்படுத்தினாராம் இயக்கு நரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன்.


சூரியகாந்தி படத்தில் 

“பரமசிவன் கழுத்தில் இருந்து”

பாடல் மட்டும் தான் கண்ணதாசன்.

மீதி மூன்றும் வாலியார். அதில் இரண்டு நடிகைகளே பாடும் பாட்டு ஒன்று மனோரமா (தெரியாதோ நோக்கு)


இரண்டு ஜெயலலிதா.

இரண்டென்றால் இரண்டு பாட்டும் தான்.

“நான் என்றால் அது அவளும் நானும்”


https://youtu.be/3HWVnShMYRY?si=hcPMn6DQW9VFqvz-


எஸ்பிபியோடு ஜோடி கட்டும் குரல்,

“ஓ மேரே தில்ரூபா”


https://youtu.be/fsHYqbO5UWM?feature=shared


பாடலில் T.MS உடன் பாட்டுக் கட்டும்.


“பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது”

பாட்டுக்கு உருவான மெட்டு.

இந்தப் பாடலின் வரிகள் எவ்வளவு மெய்யுணர்வு மிக்கதாக இருக்குமோ அவ்வளவுக்கு, வரிகளை முக்கியத்துவப்படுத்தி இசை பின்னால் இயைந்து போகும், கூடவே அந்தத் தமிழை உரப்பாகக் கொடுக்கும் TMS எனும் மகத்துவம்.


இன்னொருவர் குரலாக இருந்த வகையில் தமிழ்த் திரையுலகில் இரு சகாப்தங்கள். ஒருவர் T.M.S இன்னொருவர் S.P.B

இருவருமே காதல், வீரம், தத்துவம், விரக்தி, நகைச்சுவை என்று எல்லாவித பரிமாணங்களிலும் எல்லாருக்குமான பொதுச் சொத்துகள். இவர்களுக்குப் பின்னால் பெரு வெற்றிடம்.


https://youtu.be/ph7c86OjTO8?si=TnlMIrD1Un3YA3nH


கானா பிரபா

25.05.2025

Sunday, April 27, 2025

சிரித்துக் கொண்டே பாட்டுப் போட்ட இளையராஜா அதிர்ச்சியில் கே.பாலசந்தர்

சிரித்துக் கொண்டே பாட்டுப் போட்ட இளையராஜா

அதிர்ச்சியில் கே.பாலசந்தர்

இப்படித்தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். அப்படியொரு அசகாயச் செயலை விபரிக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

புன்னகை மன்னன் பாடல் பதிவுக்காக இயக்குநர் கே.பாலசந்தர் குழுவினர், இசைஞானி இளையராஜாவோடு ஐந்து நாட் பயணத் திட்டத்தில் மதுரைக்குப் போய் ஒரு ஓட்டலில் தங்குகிறார்கள். 

அன்று காலை வாக்கில் கே.பாலசந்தர் படத்தின் கதையைச் சொல்லி ஐந்து பாடல்களுக்கான காட்சியைச் சொல்லி விட்டு, இளையராஜாவிடமிருந்து விடைபெற்று காலை 9 மணிக்கு விடை பெறுகிறார்கள்.

காலை 11 மணி அளவில் இளையராஜாவிடமிருந்து அழைப்பு.

ஐந்து பாட்டுகளுக்கும் மெட்டுப் போட்டுக் காட்டி விடுகிறார்.

அன்று மதியமே வைரமுத்துவும் பாடல்களை முடித்து விடுகிறார்.

ஆறாவதாக மாமாவுக்குக் குடும்மா குடும்மா பாடலை மாலை நேரம் தயாராக்கி விடுகிறார் இசைஞானி.

ஐந்து நாள் வேலை ஒரு மணி நேரத்தில் ராஜா கணக்கில் முடித்து வைக்கப்படுகிறது. இவரைத்தான் காசுக்காக அலைபவர் என்று ஒரு கூட்டம் இன்னமும் சொல்லிக் கொண்டு திரிகிறது பாருங்கள்.

இன்று வரை இந்தப் பாடல்கள் கூட இந்த நிமிடம் போட்டது போல அத்துணை புத்துணர்ச்சி வேறு.

"என்ன சத்தம் இந்த நேரம்" பாடல் ஒலிப்பதிவில் எஸ்பிபி பாடத் தயாராகும் போது

"இதைத் தணிந்த குரலில் பாடுங்கள்" என்று வேண்டுகோள் வைக்கிறார் ராஜா.

இந்தப் பின்புலத்தை சுரேஷ் கிருஷ்ணா சொல்லி முடித்ததும்

இப்போது இந்தப் பாடலைக் கேட்கும் போது, அந்தக் காதலர்களுக்கே தன் ஓசை படாமல் அந்தப் பாடல் அவர்களைப் பற்றிப் பாடுவது போலவொரு மனவெழுச்சி எழுகிறது.

Touring Talkies இல் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் அனுபவத் தொடரைத் தவற விடாதீர்கள்.


https://www.youtube.com/watch?v=ZJB_sO_pjWA

Thursday, April 24, 2025

இளையராஜா இசையமைக்க ஜெயகாந்தன் பாட்டு எழுதினார் ✍️

புகழ் சேர்க்கும் புது வாழ்வு

புலர்கின்ற நேரமிது

நிகழ்காலக் கருவறையில் 

நம் எதிர்காலம் துயில்கின்றது

கருவழிக்கும் கலியிருளை

செங்கதிர் வந்து கிழிக்கிறது

கரு விழியே

கண் மலரே

கரு விழியே

கண் மலரே

கண் திறந்து 

காணாயோ…..

https://youtu.be/zT4KPjJfy8M?si=c7nUIs2lK5sCS35s

இப்படியாக ஒரு குறும்பாடலையும்

எத்தனை கோணம் எத்தனை பார்வை

https://youtu.be/sqKKG6Mojio?si=28akaPKFn-vorJnn

என்ற பொதுவுடமை பொருள் பொதிந்த பாடலையும் மலேசியா வாசுதேவன் பாடவும், இசைஞானி இளையராஜா இசையில் எழுதியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

“எத்தனை கோணம் எத்தனை பார்வை” படம் கூட முழுமையாக எடுக்கப்பட்டு இன்னும் வெளிவராமல் முடங்கியிருக்கிறது. அதன் பிரதி எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை என்றார் படத்தின் இயக்குநர்  B.லெனின்.

ஒரு சாஸ்திரிய இசைப் பின்னணி கொண்ட கதை என்பதைப் பாடல்களைக் கேட்டமாத்திரம் அனுமானிக்க முடிந்தது. அதை உறுதிப்படுத்துமாற்போல இந்தப் படக் கதை பின்னாளில் வந்த “சிந்து பைரவி” ஐ ஒத்தது என்றார் லெனினின் சகோதரர் ஹிருதயநாத்.

விக்கிப்பீடியாவிலும் ஜெயகாந்தனின் “எத்தனை கோணம் எத்தனை பார்வை” என்ற நாவலில் இருந்து படமானது என்று குறிப்பிட்டார்கள்.

ஆனால் அந்த இரு தகவல்களுமே முற்றிலும் தவறானவை. லெனின் கொடுத்த ஒரு பேட்டியில் ஜெயகாந்தனின் “கரு” மற்றும் “காத்திருக்க ஒருத்தி” ஆகிய நாவல்களை இணைத்து எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்காகவே இந்த இரண்டு நாவல்களையும் படித்தேன். பின்னர் படத்தின் ஒளிப்படங்களோடு பொருத்திப் பார்த்த போது சரியாக ஊகிக்க முடிந்தது.

“கரு” கதையில் முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு பெண், திருமணம் முடித்ததுமே குழந்தைப் பேறு என்ற சம்பிரதாயத்தில் உழல விரும்பாதவள். அவளின் இணையாக வருபவன் ஆதரவின்றி அலைக்கழிந்து, மல்யுத்தம் கற்ற வீரன். அவனின் பின்னணி மற்றும் போட்டிக் குழுப் பெயர் எல்லாம் அச்சொட்டாக “சார்பாட்டா பரம்பரை” படத்திலும் வருகிறது. அந்தக் கதையின் நாயகர்களாக ஶ்ரீப்ரியா மற்றும் தியாகராஜனைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

இரண்டாவது கதை “காத்திருக்க ஒருத்தி”. திருமணமானதுமே இசைக் கலைஞனான தன் கணவனின் குடி, மாதுப் பழக்கத்தால் வெறுத்துப் போய் அவனை ஒதுக்கும் ஒரு பெண் பின்னர் தன் மகனின் திருமணத்தின் போது தன் கணவனை எதிர்கொள்ளும் கதை.

இந்தக் கதையில் இசைக் கலைஞனாக சாருஹாசனும், மகனாக சுரேஷ் மற்றும் சுரேஷின் காதலியாக நளினி ஆகத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

இந்த ஊகங்களைப் படத்தின் எல்பி ரெக்கார்ட்ஸ் காட்சிகள் நிரூபிக்கின்றன.

இயக்குநர் B.லெனினுடன் இதற்காகவே ஒரு பேட்டி செய்ய ஆவல். அவரின் தொடர்பிலக்கம் தேடுகிறேன். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

இன்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த தினம்.

கானா பிரபா

24.04.2025






Wednesday, April 23, 2025

இந்திரலோகத்துச் சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ ❤️❤️❤️

திரையிசைப் பாடல் போட்டிகளில் Retro round என்று வரும் போது மிகப் பெரிய ஏமாற்றம் எழுவதுண்டு. காரணம் T.ராஜேந்தர் என்ற மிக உன்னதமான ஆளுமையைக் கணக்கில் எடுக்காமல் பழகிப் போனதை வைத்தே ஆண்டாண்டு காலமாக ஜல்லி அடிக்கிறார்களே என்று.

இந்திரலோகத்துச் சுந்தரி பாடலைப் பொறுத்தவரை திரையிசையின்  எல்லாக் கூறுகளையும் கலந்து அடித்த அற்புதமான படையல்.

அதில் மேற்கத்தேயமும் இருக்கும் அப்படியே கொண்டு போய் சாஸ்திரிய சங்கீதத்திலும் கலந்து விட்டு மீளவும் மேற்கத்தேயத்தில் முக்குளிக்கும்.

டி.ஆர் முத்திரையாக அந்த ட்ரம்ஸ் தாள லயத்தில் பாடல் தொடங்கும் ஆனால் திருப்பமாக பி.எஸ்.சசிரேகா வந்து

ஏலேலம்பர ஏலேலம்பர 

ஏலேலம்பர ஹோய்…

என்று ஒரு தெம்மாங்கு நிரவலைக் கொடுத்து விட்டு எஸ்பிபிக்கு வழிவிடுவார்.

வருபவர் ஆர்ப்பாட்டமாக வருகிறாரா பாருங்கள்?

மிகவும் தணிந்த குரலில் 

இந்திரலோகத்துச் சுந்தரி 

ராத்திரிக் கனவில் வந்தாளோ?...

என்று காதல் ரசம் சொட்டுவார் அந்த ராட்சசன். எந்த இடத்தில் எது தேவை என்றுணர்ந்தவர் அல்லவா?

அவர் குரல் கொடுக்கும் போது பின்னணியில் மின்மினி போல மினி மறையும் இசைக் கீற்றைக் கொடுப்பார் டி.ஆர்.

இங்கே பாருங்கள்

தென்றல் அதன் விலாசத்தை

தம் தோற்றமதில் பெற்று வந்தவள்

மின்னலதன் உற்பத்தியை

அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள்

முகத்தைத் தாமரையாய்

நினைத்து மொய்த்த வண்டு

ஏமாந்த கதைதான் கண்கள்

சிந்து பைரவியியை சிந்தும் பைங்கிளியின்

குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்..

பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்

அதில் பரதமும் படிக்குது அபிநயம்

அப்படியே இன்னொரு திசையில் பரத  நாட்டியத்துக்குள் கொண்டு போய் விடும் இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் துணைக்கழைப்பது மிக அற்புதமாகக் கவி வல்லமை காட்டவல்ல பாடலாசிரியர் டி.ராஜேந்தரை. அடுத்த சரணத்திலும் இன்னொரு குட்டி பரதநாட்டிய அரங்குக்கு வழி சமைப்பார்.

இந்த மாதிரி fusion அலங்காரத்துக்கு வீணை, புல்லாங்குழல், தபேலா எவ்வளவு அழகாக நயம் செய்கிறது பாருங்கள்.

டி.ராஜேந்தரின் உவமைச் சிறப்பு என்றொரு ஆராய்ச்சி நூல் எழுதினால் இந்தப் பாடல் சிகரமாக நிற்கும்.

லாலால லா லாலால லா

இந்திரலோகத்துச் சுந்தரி ராத்திரிக் கனவினில் வந்தேனோ

கொஞ்சமே வந்தாலும் கொஞ்சும் குரலில் அள்ளிச் செல்வார் சசிரேகா. அங்கேயும் ம்ம்ம் ம்ம் கொட்டி அரவணைப்பார் எஸ்பிபி.

உயிருள்ள வரை உஷா படத்தில் இருந்து தான் ஒரு கச்சிதமான அரங்க அமைப்பை உருவாக்கிப் பாடலைப் பதிவாக்க வேண்டும் என்ற முறைமையை டி.ராஜேந்தர் கொண்டு வந்தார். அதற்கு மிக முக்கிய காரணம் படத்தைத் தயாரித்த பிலிம்கோ நிறுவனத்தில் அப்போது இயங்கிய தயாரிப்பு நிர்வாகி எம்.கபார் இந்த வேண்டுகோளை அவரிடம் வைத்ததாக சாய் வித் சித்ராவில் குறிப்பிட்டிருப்பார். 

ஆனால் அதை வைத்துக் கொண்டு பின்னாளில் அரங்க அமைப்பிலும் ராஜேந்தர் புதுமை காட்டியது அவரின் பன்முகத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அலையிலோ அல்லது இசைஞானி இளையராஜாவின் அலையிலோ சிக்காது தனக்கென ஒரு இசை அலையை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ராஜேந்தர். 45 வருடங்களுக்கு முன்னர் எழுந்த அந்த அலை இன்றும் கூலி வரை தேவையாக இருக்கிறது. அதுதான் T.ராஜேந்தர் மகத்துவம்.

ரதி என்பேன் மதி என்பேன்

கிளி என்பேன் நீ வா

உடல் என்பேன் உயிர் என்பேன்

உறவென்பேன் நீ வா

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி

கனவினில் வந்தாளோ

https://www.youtube.com/watch?v=IKwv5pL0oo4

கானா பிரபா

22.04.2025


Friday, April 11, 2025

என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே….


என்ன என்ன வார்த்தைகளோ

சின்ன விழிப் பார்வையிலே….

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி கூட்டணியில் “வெண்ணிற ஆடை” படத்தில் உருவான அந்தப் பாடலை பியானோவில் வாசித்துக் காட்டுகிறார் ராஜா.

அடேயப்பா பியானோ வாசிப்புக்குண்டான அத்தனை இலக்கணங்களையும் இந்தப் பாடல் சொல்லிக் காட்டுகிறதே என்று ஆச்சரியப்பட்டுப் போனாராம் தன்ராஜ் மாஸ்டர்.

அதுவரை தன்ராஜ் மாஸ்டரின் இசைப் பட்டறையில் சினிமாப் பாடலை எடுத்துப் பயிற்சி எடுப்பது வழக்கம் இல்லை என்பதால் சக இசை மாணவர்களும் ஆச்சரியப்பட்டுப் போனார்களாம்.

மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் போலவே, நாடகச் சூழல் அனுபவத்தால் இசையை வளர்த்துக் கொண்டவர் ராஜா. தன் முன்னோர்கள் தன்னுடைய இசை வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் கட்டை விரல் கேட்காத துரோணாச்சாரியார்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவோர் உதாரணம்.

ஓய்வு இடைவேளைகளில் தன்னோடு சினிமாவில் வாசித்த சக கலைஞர்களிடம் Trinity College தேர்வுக்காக ஒவ்வொரு notes ஐயிம் வாசிக்கக் கேட்டுப் பயிற்சி எடுத்துக் கொண்ட தேடல் எல்லாம் தான் பின்னாளில் அசுர விளைச்சலாகி இருக்கிறது.

என் பால்ய வயதில் யாழோசை கண்ணன் என்ற இசை விற்பன்னர் கீபோர்ட் வாசிப்புப் பயிற்சிக்கு இசைஞானியின் நிலவு தூங்கும் நேரம் பாடலையே பால பாடமாக வைத்ததைச் சொல்லி இருந்தேன். இதெல்லாம் தொட்டுத் தொடரும் பந்தம்.

“நீங்க கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டது அறுபதுகளுக்குப் பின்னால் தானே?”

என்று புதிய தலைமுறை வழி சமஸ் கேட்ட கேள்விக்கு,

“இன்னும் கத்துக்கிட்டுத்தான் இருக்கேன்”

என்கிறார் இந்த 82 வயதுப் பையன் 😊😍❤️

கானா பிரபா

மலையோரம் வீசும் காத்து

மலையோரம் வீசும் காத்து

மனசோடு படும் பாட்டு 

கேக்குதா….கேக்குதா….❤️

சோகப் பாடல் என்றாலும் தலைமுறை தாண்டி சாகாவரம் பெற்ற பாட்டு. அதனால் தான் ஈராயிர யுக இசை மேடைகளிலும் தவிர்க்க முடியாமல் வீற்றிருக்கின்றது.

இந்தப் பாடல் படமானதே சுவாரஸ்யமான விடயம் தான். அடுத்த நாள் பாடல் காட்சியைப் படமாக்க வேண்டும். ஆனால் இன்னும் கைவசம் பாடல் இல்லையே என்று “பாடு நிலாவே” இயக்குநர் கே.ரங்கராஜ் வேண்டியழைக்க, பாடல் காட்சி படமாக்கும் இடத்துக்கே இரவோடிரவாக இந்தப் பாடல் வந்து சேர்ந்ததாம். 

இசைஞானியின் அசுர வேகம் சொல்லத் தேவை இல்லை. கூடவே சூழலை உணர்ந்து ஒரே டேக்கில் பாடிக் கொடுத்து விடும் சூப்பர் சொனிக் வேகம் பாடும் நிலாவிடம்.

கூடவே வாலியும் இருக்கிறாரே. இப்படியாக ஆச்சரியப் பட எதுவும் இல்லாத அசுரர்களின் விளைச்சல் இது என்றாலும் ஆச்சரியப்பட்டுப் போனது தான் கதை.

அதாவது பாடல் வந்து சேர்ந்து ஐந்து மணி நேரத்திலேயே ஒரே மூச்சில் படமாக்கி விட்டாராம் இயக்குநர். 

இப்போது போய் பாடல் காட்சியைப் பாருங்கள். ஏதோ வருஷக் கணக்காகப் புழங்கிய பாடல் போல மோகனின் வாயசைப்பு அச்சொட்டாக அந்த எஸ்பிபியே தான்.

https://youtu.be/BgbafEuP8RE?si=nBh7N_G0EuByzCwL

தொழில் நுட்பம் இன்று போல் வளராத காலத்தில் இப்பேர்ப்பட்ட ஆச்சரியங்கள் எல்லாம் விளைந்து விட்டது.

இந்தப் பாடலை முதலில் மனோ பாட இருந்தாராம்.

மலையோரம் வீசும் காத்து என்று விட்டு கடலோரம் ஏன் படமாக்கி இருக்கிறார்கள் என்று படம் வந்த போது யாரும் கேட்கவில்லை. ஆனால் அப்படியொரு உரையாடல் பாடல் காட்சியைப் பார்த்த போது எழுந்ததாம்.

மலையோரம் வீசும் காத்து

மனசோடு பாடும் பாட்டு

கேக்குதா... கேக்குதா...❤️

✍️ கானா பிரபா


Friday, April 4, 2025

இளையராஜாவின் அம்மா


"போட்டோ எடுத்த அந்த நொடியில் இருந்தது அந்தம்மா தானே?

அப்ப அந்த நொடி உண்மைன்னா 

அந்த போட்டோ உண்மை தானே? 

போட்டோ அம்மா தானே?"

தந்தி தொலைக்காட்சிப் பேட்டியில் இசைஞானி இளையராஜா இந்தக் கருத்தைப் பகிர்ந்த போது நெக்குருகி விட்டேன்.

 நாம் எத்தனை வயசு கடந்தாலும் அம்மாவுக்குச் செல்லப் பிள்ளை தான். அந்தப் பிரியமும், செல்லமும் என்றென்றைக்கும் மாறாதாது.

தன் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் போது தங்களுக்கு டாட்டா காட்டி விட்டுப் போவதைப் பார்த்த இளையராஜா அம்மா தனக்கு டாட்டா இல்லையா என்று கேட்டாராம்.

"அம்மா நான் உங்களுக்குச் சொல்றேன்" என்றுவிட்டு அன்று முதல் தான் ஒலிப்பதிவு கூடம் கிளம்பும் போது தன் தாயாருக்கு டாட்டா காட்டி விட்டுத்தான் போவாராம் ராஜா.

1989 இல் தன் தாயார் இவ்வுலகை விட்டு நீங்கிய போதும் இன்று வரை தன் அம்மா படத்துக்கு டாட்டா காட்டி விட்டுத்தான் போவாராம் ராஜா.

ராஜாவின் குழந்தை உள்ளத்துக்கு ஒரு வாழ்வியல் எடுத்துக்காட்டு.

எங்கள் அப்பா எங்களை விட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் நெருங்கினாலும் இன்னமும் அவர் ஊரில் இருப்பதாகவே நினைத்துக் கொள்வேன்.

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் 

நற்றவ வானிலும் நனி சிறந்தனவே" 

என்று அப்பா தொலைபேசும் போது அடிக்கடி சொல்வது இன்னமும் என் காதிலும், நெஞ்சிலும் பத்திரமாக இருக்கிறது.

தாய் போல யார் வந்தாலுமே

உன் தாயைப் போலே அது ஆகாது ❤️


Sunday, March 2, 2025

மெல்லிசை இளவரசன் வித்யாசாகர்

இசையமைப்பாளர் வித்யாசாகரைப் பொறுத்தவரை ஒரு திரையிசை வாத்தியக்காரராக அவரின் பயணத்தை ஆரம்பித்து இது ஐம்பதாவது ஆண்டு.

ஆம், 1975 ஆம் வருஷம் தன்னுடைய 12 வது வயதிலேயே வாத்தியக்காரராகத் திரையிசைப்பாடல் உலகுக்கு வந்தவர்.

அந்தக் காலத்தைச் சொல்லும் போது, பள்ளிச் சீருடையோடு பாடல் ஒலிப்பதிவுக் கூடத்துக்குப் போவேன் என்று பூரிப்பார்.

தேவராஜன் மாஸ்டர் தொடங்கி, சலீல் செளத்ரி, ராகவன் மாஸ்டர், இளையராஜா உள்ளிட்ட திரையிசை ஆளுமைகளுக்காக இயங்கிய பாக்கியம் பெற்றவர். 15 வயதுப் பையனாக கிழக்கே போகும் ரயில் படத்துக்கு வாசித்திருக்கிறார்.

பாலைவனச் சோலை படத்தின் பாடல் பதிவில் அந்தச் சிறுவன் வித்யாசாகர் மேல் ஈர்ப்புக் கொண்ட ராபர்ட் – ராஜசேகரன் இரட்டை இயக்குநர்கள் தம் “சின்னப்பூவே மெல்லப் பேசு” படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்கள் சக இசைக்கு ஒரு கட்டுக்கோப்பான இசை நடத்துநராகப் பணித்ததோடு, அந்தப் படம் தொட்டுத் தம் படங்களின் பின்னணி இசையையும் வித்யாசாகரிடமே ஒப்படைக்கின்றார்கள். அந்தக் காலகட்டத்தில் வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் சேர்ந்து இசை படைத்த படைப்புகள் அவை.

ராபர்ட் – ராஜசேகரன் இரட்டையர்கள் பிரிந்த வேளை ராஜசேகரன் இயக்கி, நாயகனாக நடித்த “பூமனம்” வித்யாசாகரை ஒரு முழுமையான இசையமைப்பாளர் நாற்காலியில் இருத்தி அழகு பார்க்கின்றது.

இங்கே தான் ஒரு முக்கியமான விடயத்துக்கு வர வேண்டும். வித்யாசாகரின் ஆரம்பம் தொட்டு இன்றைய இயக்கம் வரை அவர் பெரும் பாடகர்களை மட்டும் முன்னுறுத்திய இசையோட்டத்தில் இருந்திருக்கவில்லை. “பூமனம்” படத்தில் எண்பதுகளில் வெற்றிக் கோலோச்சிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் இல்லாத அறிமுகம் என்பது அதிசயம். அதே படத்தில் பழம்பெரும் பாடகர் P.B.ஶ்ரீனிவாஸ், மலேசியா வாசுதேவன் பாடியிருந்தாலும் கூட.

இந்தச் சூழலில் தமிழில் வித்யாசாகருக்கான அடையாளம் நிறுவப்படாத சூழலில் தெலுங்கு தேசம் போனவர் அங்கே கொடுத்த ஹிட் படங்களில் எஸ்பிபி தவிர்க்க முடியாத அங்கம் ஆனார்.

தெலுங்கில் தன் ஆரம்பத்தில் கொடுத்த “தர்ம தேஜா” படத்தில் எஸ்பிபிக்கு மட்டும் ஐந்து பாட்டுகள், ஏன் அனைத்துமே எஸ்பிபி தான் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும்.

இங்கே தர்ம தேஜா படத்தை இன்னொரு ஒப்புவமைக்குக் கொண்டு வர வேண்டும்.

எப்படித் தன் 15 வயதில் இசைஞானி இளையராஜாவிடம் வாத்தியக்காரராக இயங்கினாரோ அதே வித்யாசாகர் தமிழில் பெரு வெற்றியடைந்த இளையராஜாவின் படங்கள் தெலுங்குக்கு வந்த போது அவற்றின் இசையமைப்பாளராக அமைந்தது தன் காலம் போட்ட அழகான கோலம். அவ்விதம் “பூந்தோட்டக் காவல்காரன்” படம் “தர்மதேஜா” ஆன போதும், “கிழக்கு வாசல்” தெலுங்கில் “சிலகபச்ச கப்பூரம்” ஆகியதும், “மல்லு வேட்டி மைனர்” தெலுங்கில் “மைனர் ராஜா” ஆன போதும், “மாமா பாகுன்னவா” தெலுங்கான “வனஜா கிரிஜா” ஆகிய போதும் வித்யாசாகரே இசை.

அங்கே தன் அடையாளத்தை நிறுவிய வித்யாசாகருக்கு வருடங்கள் கடந்து நந்தி விருதோடு, இந்தியத் தேசிய விருது கொடுத்து அழகு பார்த்தது கே.விஸ்வநாத்தின்  “ஸ்வராபிஷேகம்”. இசையை மையப்படுத்திய படத்தின் நாயகக் குரலாய் அப்படத்தில் விளங்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்.

கே.விஸ்வநாத் இயக்கிய படங்களின் வழியாக திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து வித்யாசாகருக்கும் தேசிய விருது என்ற அங்கீகாரம் கிடைத்தது எவ்வளவு பெருமை.

“ஜெய் ஹிந்த்” படம் வழியாக அர்ஜீன் மீண்டும் அழைத்து வருகிறார் வித்யாசாகரை. இம்முறை அவரை விட்டுவிடத் தயாரில்லை. மாபெரும் ஹிட் படம் என்ற அங்கீகாரத்தோடு தமிழ்த் திரையுலகம் வித்யாசாகருக்குத் தொண்ணூறுகளில் சாமரம் வீசுகின்றது.

அது மட்டுமல்ல கீரவாணி (மரகதமணி) போன்றே வித்யாசாகருக்கும் தன் படங்களில் தொடர்ச்சியான வாய்ப்புக் கொடுத்துத் தமிழில் ஒரு பிடிப்பை இறுக்கியவர் அர்ஜீன். அதில் தன்னுடைய நேரடி இயக்கம் மட்டுமல்ல ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட இன்னொருவர் இயக்கிய படங்களிலும் வித்யாசாகர் இருப்பதை உறுதிச் செய்து கொள்ளுமாற்போல அந்தச் சூழல் அமைந்தது.பதிவு கானாபிரபா

வித்யாசாகருக்குத் தெலுங்குத் திரையுலகம் தீனி போட்டது அதிசயமல்ல, திரையிசையிலும் சீர் ஒழுக்கம் பார்க்கும் கேரளத்து ரசிகர்களை அவர் ஈர்த்தது தான் அதிசயம். இம்மட்டுக்கும் நான் ஒன்றும் நூற்றுக்கணக்கில் அங்கே இசையமைக்கவில்லை, கொடுத்ததில் ஏராளம் ஹிட் அடித்து விட்டது என்கிறார் தன்னடக்கமாக வித்யாசாகர்.

மலையாளத்தில் அவரின் “அழகிய ராவணன்” அறிமுகமே முதன் முதலாக வித்யாசாகருக்குக் கிட்டிய மாநில விருது என்ற அங்கீகாரம்.

புதையல் படத்தில் மம்மூட்டி நடித்த போது அந்தப் படத்தின் பாடல்களில் மயங்கி அழகிய ராவணன் படத்தின் இசையமைப்பாளராக அழைத்து வந்த பின்னணியே பின்னாளில் கேரளத்தின் முடிசூடா மன்னனாக வித்யாசாகரை இருத்தி வைத்தது.

இங்கே மலையாளத்தை இழுத்து வரக் காரணம் செங்கோட்டை படத்தில் எஸ்பிபி & எஸ்.ஜானகி பாடிய “பூமியே பூமியே” பாடல் பின்னாளில் மலையாள ரசிகர்கள் வித்யாசாகரைக் கோயில் கட்டிக் கும்பிடாத குறையாகக் கொண்டாடிய “சம்மர் இன் பெதலஹம்” படத்தில் “எத்ரையோ ஜென்மமாய்” (ஶ்ரீனிவாஸ் & சுஜாதா) என்று மறுபிறப்பெடுத்தது. புத்தம் புதுசு போல அப்போதிருந்து இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள் கடவுள் தேசத்தவர்.

“அழகூரில் பூத்தவளே....

 என்னை அடியோடு சாய்த்தவளே....”

அந்தப் பெருமூச்சு எஸ்பிபி குரல் அறிவுமதி அவர்களின் வரிகளுக்கு உயிர் மூச்சாய் வெளிப்பட்ட போது, வித்யாசாகர் என்ற இசையமைப்பாளர் கால மாறுதல்களுக்கு ஏற்பப் புதுப்புதுக் குரல்களைக் கொண்டு வந்தாலும் எஸ்பிபி அதற்கெல்லாம் விதிவிலக்கு என்று நிறுவியது.

“ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்” கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்துக்காக இந்தப் பாடலை வடிவமைத்தபோது வித்யாசாகரோ, விஜய்யோ நினைத்துப் பார்த்திருப்பார்களா மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைத்த “கில்லி” வழியாகச் சொல்லி அடிப்போம் என்று. வித்யாசாகர் – விஜய் ஒரு தனிக்கூட்டணி.

"மலரே மெளனமா" பாடல் எத்திசையில் ஒலித்தாலும் அந்தப் பாட்டுக்குள் போய் அங்கேயே தங்கி விட்டுத் தான் திரும்பும் மனது.

இன்றைக்கு இசைப் போட்டிகளில் அடுத்த தலைமுறைப் பாடகராக வருபவர்களுக்கு அரசு அங்கீகரிக்காத பாடம் இந்தப் பாட்டு. இந்தப் பாட்டின் நுட்பம் தெரிந்து அதைப் பாதிக் கிணறு கடப்பவரே கரை சேர்ந்து விடுவார்கள்.

"மெளனமா" என்ற சொல்லை மட்டும் வைத்துப் கேட்டாலே பாடலில் இது ஒலிக்கும் போதெல்லாம் வேறுபடும் சாதாக வெளிப்பாடே ஒரு உதாரணம்.

பாடலின் வரிகளை நோகாமல் கொண்டு சேர்க்கும் திறன் எல்லாம் படைப்பின் உன்னதத்தை மிகாமல் காப்பாற்றுகின்றன.பதிவு கானாபிரபா

இந்தப் பாடலில் இருக்கும் உணர்வோட்டமே பாட்டு முடிந்த பின்னும் நாதம் போல உள்ளுக்குள் அடித்துக் கொண்டிருக்கும்.

அளவு கடந்த நேசத்தை எப்படி நோகாமல் வெளிப்படுத்த முடியும் இவர்களின் குரல்கள் அனுபவித்து அதைக் கடத்துகின்றது?

தெலுங்கில் முன்பே இசைத்த பாட்டு ஆனால் அங்கே அதைச் சரிவரப் பயன்படுத்தாததால் “ஜெய் ஹிந்த்” படத்தின் பாடல் பதிவு செய்யும் போது அர்ஜீனிடம் இந்தப் பாட்டின் மெட்டைப் பரிந்துரைத்தாராம் வித்யாசாகர். இந்தப் படத்தில் வேண்டாம் அடுத்த படத்தில் வைத்துக் கொள்வோம் என்றாராம் அர்ஜீன். அது போலவே மறக்காமல் கர்ணா படத்தின் பாடல் பதிவில் இந்தப் பாடலை வேண்டிப் பெற்றுக் கொண்டாராம். கர்ணா கொடுத்த புகழால் இதே பாட்டு தெலுங்கில் மீளவும் போனது இம்முறை வெகு பிரபலம் என்ற அடையாளத்தோடு, (தெலுங்கில் மனோ)

பின்னாளில் கன்னடத்தில் இதே எஸ்பிபி & எஸ்.ஜானகி கன்னடத்தின் முன்னணி நாயகன் சிவராஜ்குமாரின் “கங்கா ஜமுனாவிலும்” பாடினார்கள் அச்சொட்டாக.

“காற்றின் மொழி ஒலியா இசையா” கேட்டாலே நெகிழ்ந்து உருக வைத்துக் கரைத்து விடும் பண்பு கொண்டது. ராதாமோகன் போன்றவர்கள் வித்யாசாகரின் மெல்லிசைக் கதவுகளை அகலத் திறந்தவர்களில் ஒருவர் என்றால் தரணி தன் ஆக்ரோஷமான படங்களில் அந்த மெலடிக்கு ஒரு சரியாசனம் கொடுப்பார்.

“புல்வெளி ஆகிறேன் இப்பொழுது....” என்று ஆசை ஆசை பாடல் நினைவில் மிதந்து வரும் இதை நினைக்கும் போது.

வித்யாசாகர் ஒரு ஃபீனிக்ஸ் பறவை போல, தமிழில் திடீரென்று வந்து போவார். அல்லாதவிடத்து மலையாளத்திலோ தெலுங்கிலோ இந்த ஃபீனிக்ஸ் பறவை மையம் கொண்டிருக்கும்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இன்னிசை இளவரசன் வித்யாசாகர்

கானா பிரபா

02.03.2025