Pages

Thursday, December 4, 2025

ஏவிஎம் சரவணன்

ஒரு தயாரிப்பாளருக்கும், முதலீட்டாளருக்கும் நிறைய வேற்றுமை உண்டு என்பதை அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிறுவியது AVM நிறுவனம். 

அதன் ஆரம்ப காலத்தில் திருப்தி தராத முழு நீளக் காட்சிகளையே தூக்கி விட்டு மீண்டும் படப்பிடிப்பை நடத்துவாராம் ஏவி மெய்யப்பச் செட்டியார்.

நாயகனையே மாற்றி எடுத்த வரலாறும் உண்டு. அந்த நாள் படத்தில் முதலில் ஒப்பந்தமானவர் கல்கத்தா விஸ்வநாதன்.

எடுத்தவரைக்கும் அப்படியே தூக்கிப் போட்டு விட்டு சிவாஜி கணேசனை நாயகனாக்கி மீள எடுத்தாராம் மெய்யப்பச் செட்டியார்.

அவர் வழியில் வந்ததாலே என்னவோ தந்தையின் சர்வ லட்சணங்களும் கொண்டதால் தான் ஏவிஎம் சரணவன் முரட்டுக் காளைக்குப் பின் அடித்து ஆட முடிந்தது.

ஏற்கனவே எடுக்கப்பட்டு ஓடாத “உறவுக்குக் கை கொடுப்போம்” படத்தின் கதையை விசு கொண்டு வரவும், அதில் மனோரமா பாத்திரத்தை உருவாக்க வைத்து “சம்சாரம் அது மின்சாரம்” படத்தை வெற்றிப்படமாக்கியது அவரின் ஆளுமைத் திறன்.

மதுவின் தீமையை மையப்படுத்தி சிவசங்கரி எழுதிய “ஒரு மனிதனின் கதை” நாவலை தொலைக்காட்சித் தொடராக்கி பின்னர் தியாகு என்று படமாக்கியதும் அவரின் தொழில் விற்பன்னம்.

பாராட்டுவதில் கஞ்சத்தனமே பார்க்க மாட்டார். ஏவிஎம் 60 சினிமா என்ற தனது நூலின் கடைசிப் பாகத்தில் அந்த நிறுவனத்தில் வேலை செய்தவரிடம் கற்றுக் கொண்ட அனுபவப் பாடத்தோடு முடித்திருப்பார்.

“மாநகர காவல்” படப்பிடிப்பில் இரண்டு நாட்கள் இரவு, பகலாக தொடர்ச்சியாக கேப்டன் நடித்துக் கொடுத்ததை எத்தனை முறை சொல்லி இருப்பார்.

இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தரின் ஆத்ம நண்பராக, அவர் உயர்வில் அழகு பார்த்தவர் ஏவிஎம் சரவணன்.

தன்னோடு கூடவே இருக்க வேண்டும் என்று படம் இயக்காத காலத்திலும் எஸ்.பி,முத்துராமனுக்கு ஒரு அறை ஒதுக்கினார். அவருக்குத் தனிமை வரக்கூடாது என்று ஏற்பாடு செய்தவர் இயக்குநர் வி.சி.குகநாதன்.

ஜெமினி படத்தின் பெரு வெற்றிக்கு சரவணன் போட்ட கணக்குத்தான் “ஓ போடு” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் இயக்குநர் சரண்.

சூப்பர் ஸ்டாருக்கு எந்த இசையமைப்பாளரும் போதுமென்று நிறுவியவர். சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா பாடல் சந்திரபோஸ் இசையில் அழியா அடையாளமாகி விட்டது. 

இன்று உலகம் முழுக்க சாய் வித் சித்ரா பேட்டிகளைப் பேசிக் கொண்டிருக்கிறோம்.  அதன் தொடக்க நிகழ்ச்சியில் பேட்டிக்கு வந்த ஏவிஎம் சரவணன் ராசி நல்ல ராசி. 

ஏவிஎம் குமரன் இசைஞானம் மிக்கவர். அவரின் அனுபவங்களைக் கேட்டறிந்திருக்கிறோம். ஆனால் ஏவிஎம் சரவணனும் இலேசுப்பட்டவர் இல்லை. 

ஏவிஎம் தயாரிப்பில் “அம்மா” திரைப்படம் இயக்குநர் ராஜசேகரின் இயக்கத்தில், சங்கர் - கணேஷ் இசையமைப்பில், இசையரசி சுசீலா பாட, வைரமுத்து வரிகளில் 

“பூ முகம் சிவக்க

 சோகம் என்ன நானிருக்க”

https://m.youtube.com/watch?v=GM7Z3q8N9dc

என்ற பாடல் பதிவாகிறது.

ஒலிப்பதிவை இடை நிறுத்துகிறார் சரவணன்.  எல்லோருக்கும் இனம் புரியாத ஐயம். அப்போது அவர் சொன்னாராம்

சரணத்தில் வரும்

“இந்த இரவு விடிந்து விட வேண்டும்

இல்லை பருவம் கரைந்து விட வேண்டும்”

என்ற வரிகள் எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் எனவே அதற்கு இசை கொடுக்காமல் ஒலிப்பதிவு செய்யுங்கள் என்றாராம்.

https://m.youtube.com/watch?v=yaBC_hsOLjc

ஏவிஎம் சரவணனின் இசையறிவுக்கும், தன் தயாரிப்பில் இருக்கும் ஒவ்வொரு அசைவுக்கும் இருக்க வேண்டிய நுணுக்கத்துக்கும் இதுவொரு எடுத்துக்காட்டு.

“முயற்சி திருவினையாக்கும்”

இது ஏவிஎம் இன் தாரக மந்திரம்

“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”

அது ஏவிஎம் சரவணன் தலைமேற்கொண்ட மந்திரம்

ஏவிஎம் இன் காலம் என்று உண்டு 

அதில் ஏவிஎம் 2.0 என்றால் ஏவிஎம் சரவணன் தான். 


டிசெம்பர் 3 அவரின் பிறந்த நாள்

டிசெம்பர் 4 அவரின் பிரிந்த நாள்


எழுத்தாக்கம் : கானா பிரபா

04.12.2025

No comments:

Post a Comment