ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா…..
அந்த நண்பிகள் தப்பி ஓடி நகரத்துக்கு வந்ததின் பின்னால் இருவருக்கும் தனித்தனி நியாயம் உண்டு.
ஆனால் நட்பு என்ற இலக்கணம் வழி, அவர்கள் இந்த உலகமே அவர்களைப் பிரிக்க நினைத்தாலும் ஒன்றுபட்ட நியாயத்தோடு வாழத் தலைப்படுபவர்கள்.
படிக்காத தோழி அனு (லதா), தன் தோழி மாலதி (சுமித்ரா) படித்து ஆளாக வேண்டும் என்ற ஒரே கொள்கைக்காக,
எந்த உலகம் அவள் கொள்ளாத செயலுக்காகப் பழித்ததோ அதன் வழி
வாழ்வைச் சுமக்கிறாள்.
“என் மனசில்
கோயில் கட்ட இருந்தேன்
ஆனா ஹோட்டல் கட்டி இருக்கேன்”
என்ற அனுவின் வாக்குமூலம்
வாழ்வை முடிக்கும் வரை தன் தோழிக்காகவே அர்ப்பணிக்கிறாள்.
பஞ்சு அருணாசலம் அவர்களின் திரைக்கதை, வசனம், பாடல்களோடு
எழுத்தாளர் மகரிஷியின் மூலக் கதையோடு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் இந்தப் படம் அமைகின்றது.
எழுத்தாளர் மகரிஷியின் நாவல் “பத்ரகாளி” என்று A.C.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்து பெரு வெற்றி பெறுகிறது.
தொடர்ந்து “புவனா ஒரு கேள்விக்குறி” வெற்றிப் படத்தை மகரிஷி கதை கொண்டு பஞ்சு அருணாசலமும், எஸ்.பி.முத்துராமனும் கொடுத்த கையோடு அவர்கள் அடுத்து எடுத்தது தான் “வட்டத்துக்குள் சதுரம்”.
இந்தப் படமும், தொடர்ந்து தேவராஜ் - மோகன் இரட்டையர்கள் எடுத்த “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” கதையும் மகரிஷி தான். ஆனால் இவ்விரண்டும் எதிர்பார்த்த வெற்றி கொள்ளவில்லை.
“வட்டத்துக்குள் சதுரம்” படத்தைத் திரையிட முன்னர் எம்.ஜி.ஆர் சில திருத்தங்களைச் சொன்ன போது, அடுத்து “ப்ரியா” படப்பிடிப்புக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தத்தால் அதைத் தவிர்த்ததாகவும் ஒருவேளை அதைக் கேட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்குமோ என்று SPM ஐயம் எழுப்பியிருந்தார் தன் தொடரில்.
ஆனால் தன்னுடைய கதைகளிலேயே மிகவும் உயிரோட்டமாக எடுக்கப்பட்டது “வட்டத்துக்குள் சதுரம்” என்றார் எழுத்தாளர் மகரிஷி.
“இதோ இதோ என் நெஞ்சிலே” இசையோட்டத்தைக் கதைப் போக்கோடு கொடுத்திருப்பார் ராஜா.
தோழிகளின் கதை என்பதால் ஜிக்கி, எஸ்.ஜானகி, B.S.சசிரேகா மற்றும் ஜென்ஸி , உமாதேவி என்று பாடகிகள் அணி செய்த பாடல்கள்.
நடிகை சாவித்திரியின் அந்திம காலத்துப் படங்களில் ஒன்று. இரண்டு காட்சிகளில் துணை நடிகை போன்று வருவது கூட ஒரு துன்பியல் தான்.
பேபி இந்திரா, பேபி சுமதி என்று இளவயது சுமித்ரா, லதா.
அடுத்த ஆண்டே (1979) சுமதி நாயகியாக “சுவர் இல்லாத சித்திரங்கள்” இல் வந்து விட்டார்.
நடிகை லதாவின் வாழ்க்கையில் இது போல் ஒரு பாத்திரப்படைப்பு கிட்டியிருக்காது. மொத்தப் படைப்பையும் அவரே சுமக்கிறார்.
எழுபதுகளில் காய்ச்சி எடுக்கும் வரட்டு நகைசுவை இல்லாத முழு நீளக் கதைச் சித்திரம் “வட்டத்துக்குள் சதுரம்”
காற்றினில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிக்கொரு கிளைபோல்
துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான்
என் சொந்தமே
இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே
ஓரே ராகம்
https://www.youtube.com/watch?v=RRbKqfVqtec
கானா பிரபா
04.08.2024
No comments:
Post a Comment