Pages

Friday, December 2, 2022

யுகபாரதி


"பல்லாங்குழியின்

வட்டம் பார்த்தேன் 

ஒற்றை நாணயம் 

புல்லாங்குழலின்துளைகள் 

பார்த்தேன் 

ஒற்றை நாணயம்"

https://www.youtube.com/watch?v=ppU1JFRRbx8

எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை வண்ணத்தில் என்னவொரு அழகான ஆரம்பத்தோடு தொடங்கினார் யுகபாரதி பாருங்கள்.

“ஆனந்தம்” படத்தில் ஐவரோடு ஒருவரானவர், வித்யாசாகரின் பாண்டவர் அணியிலும் தவறாது பயணித்து இன்று 20 ஆண்டுகளைக் கடந்து 1000 க்கும் மேற்பட்ட பாடல்களில்

தன் தனித்துவத்தை நிறுவிக் கொண்டே பயணிக்கிறார்.

"ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை முழுக்க உள்ளுணர்ந்து, அதன் பிறகு அந்தக் கதாபாத்திரமாகவே மாறி, அவனுடைய உடல் மொழி என்ன, அவனுடைய அறிவு மட்டம் என்ன, அவனுடைய சிந்தனையின் எல்லை என்ன என்பதை உணர்ந்து அதன் வழி பாட்டு எழுதுவார்"

இப்படியாகப் பாடலாசிரியர் யுகபாரதி குறித்து டி.இமான் சாய் வித் சித்ராவில் குறிப்பிட்டார். இந்தக் கூற்றை நியாயப்பட்டுத்த, யுகபாரதி அவர்கள் பாட்டெழுத்திய எல்லா இசையமைப்பாளர்கள், பாடல்கள் என்று ஒரு சுற்று சுழன்று விட்டு வந்தால் கச்சிதமாக ஒட்டிக் கொள்ளும்.  

அற்றைத் திங்கள் வானிடம்

அல்லிச் செண்டோ நீரிடம்

சுற்றும் தென்றல் பூவிடம்

சொக்கும் ராகம் யாழிடம்

காணுகின்ற காதல்

என்னிடம்

நான் தேடுகின்ற யாவும்

உன்னிடம்

https://youtu.be/e8UR4e_phMM

இந்தப் பாடலில் தொடங்கி யுகபாரதியின் வரிகளைக் காதலித்துக் கொண்டே இருக்கிறேன்.

"ஜெய் பீம்" படத்தின் அந்த இறுதி நொடிகளில் நீதிமன்றக் காட்சி கடந்த ஆறுதற் பெருமூச்சுக்குப் பின் என்ன கிட்டப் போகிறது எனும் போது "மண்ணிலே ஈரமுண்டு" என்று கொடுப்பாரே ! அங்கே தான் அந்த ஒட்டு மொத்தப் படைப்புக்கும் தன்னாலான நியாயத்தையும் விதைத்து விட்டுப் போவார். இன்னும் ஆழமாக அவரின் பாடல்கள் இன்றைய தலைமுறையால் ஆய்வு செய்யப்பட வேண்டியவை.

வித்யாசாகரின் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அவர் கொண்ட சாகித்தியத்துக்கு மலையளவு கொண்டாட வேண்டிய நம் சமூகம் நண்டு சிண்டுகள் கொட்டம் அடிக்கும் இந்த நேரத்திலும் கூடக் கண்டு கொள்ளாமல் இருக்கிறதே என்ற விரக்தி மேலிடும். அதில் உச்சம்

“கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை” பாடலைக் கேட்கும் போதெல்லாம். செட்டி நாட்டுத் திருமண மரபை ஆவணப்படுத்திய “இரு விழியோ”, அந்தாதி வடிவில் “நெஞ்சத்திலே நெஞ்சத்திலே” என்று இன்னும் கொண்டாட இரண்டு உண்டு.

இயக்குநர் கரு.பழனியப்பன் - வித்யாசாகர் ஜோடி அந்தக் காலத்து ஆர்.சுந்தரராஜன் - இளையராஜா கூட்டணி போன்று வெகு சிறப்பாகப் பயணித்தவர்கள். குறிப்பாக "பார்த்திபன் கனவு" தொட்டு "சதுரங்கம்", "சிவப்பதிகாரம்", "பிரிவோம் சந்திப்போம்", "மந்திரப் புன்னகை" என்று இந்தப் படங்களில் வந்த ஒவ்வொரு பாடல்களுமே இருந்து இருந்து பொறுமையாக நேர்த்தியாக இழைத்த அற்புதங்கள் போல மிளிரும். சொல்லப் போனால் வித்யாசாகரைத் தொடர்ச்சியாகவும், சிறப்பாகவும் பயன்படுத்தியவர்களில் மெல்லிசைக் களத்தில் கரு.பழனியப்பனுக்குத் தான் முதலிடம்.

இவர்களோடு கூட்டணி சேர்ந்த பாடலாசிரியர்கள் பலர் இருந்தாலும் பாடலாசிரியர் யுகபாரதி மட்டும் தனித்துத் துலங்குவார். இந்தப் பாடல் கூட அவரின் கை வண்ணமே.

இரு மனம் ஒப்புவிக்க திருமணம் நிச்சயக்கபட்ட அடுத்த கணமே சம்பந்தப்பட்ட ஆணும் சரி பெண்ணும் சரி உணர்வு ரீதியாக ஒரே நிறத்தில் தான் இருப்பார்கள். அவர்களின் கனவுலகம் திருமண பந்தத்தால் கைகூடும் இன்பத்தை மட்டுமே கோட்டையெழுப்பும்.

இந்தப் பாடல் எவ்வளவுக்கெவ்வளவு சுவை மிகுந்ததாக இருக்கிறதோ அதில் ஒரு சொட்டும் வீணாகாத காட்சிப்படுத்தல் இருக்கும்.

உதாரணமாக, முதலாவது சரணத்துக்கு முந்திய இடை இசையில் 1.09 நிமிடத்தில் இலிருந்து 1.11 நிமிடம் வரையான காட்சியமைப்பைப் பாருங்கள். நிச்சயிக்கப்பட்டவன் நினைவில் தோய்ந்த நாயகி ஸ்நேகா குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் தண்ணீர்ப் போத்தலை எடுத்துக் குடித்துக் கொண்டே தன்னிலை மறந்து நகருவதைத் தன் பார்வையால் வெட்டிவிட்டு ஒரு மின்னல் சிரிப்புச் சிரிக்கும் தந்தையாக மகாதேவன், அந்த இடம் ஒரு ஹைக்கூ.

அதே போல் மறுபக்கத்தில் 1.30 நிமிடத்தில் இழைத்த காட்சியில் வெறும் இலையில் சோறுன்ணும் தோரணையில் சேரன்.

"பட்டின் சுகம் வெல்லும் விரல்

 மெட்டின் சுகம் சொல்லும் குரல்

 எட்டித் தொட நிற்கும் அவள்

 எதிரே எதிரே"

இந்தப் பாடலில் மகத்துவம் உணர்ந்து உயிரோட்டமுள்ள காட்சி வடிவம் கொடுத்த்த இயக்குநர் கரு.பழனியப்பனையும் எவ்வளவு பராட்டினாலும் தகும்.

 http://www.youtube.com/watch?v=hQmpVS1qsVk&sns=tw

இம்மூவர் கூட்டணியைப் பாருங்கள் 

“கனா கண்டேனடி தோழி” (பார்த்திபன் கனவு) 

“கண்டேன் கண்டேன்” ( பிரிவோம் சந்திப்போம்)

“சொல் சொல்” ( பிரிவோம் சந்திப்போம்)

“கண்டும் காணாமல்” ( பிரிவோம் சந்திப்போம்)

“நெஞ்சத்திலே நெஞ்சத்திலே” ( பிரிவோம் சந்திப்போம்)

அன்பில்லாமக் கரைஞ்சது போதும் (மந்திரப் புன்னகை)

https://www.youtube.com/watch?v=g93O0VXjcgA

அம்புலிமாமா ( சதுரங்கம்)

எங்கே எங்கே (சதுரங்கம்)

அற்றைத் திங்கள் (சிவப்பதிகாரம்)

சித்திரையில் என்ன வரும் (சிவப்பதிகாரம்)

அடி சந்திர சூரிய (சிவப்பதிகாரம்)

https://www.youtube.com/watch?v=amGzQrGY10g

🌼கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை 🌴

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தப் பாடல் பற்றி எங்காவது கண்டாலோ ஏதாவது வானொலியில் ஒலிக்க ஆரம்பித்தாலோ அதைக் கடந்து போயிருக்கிறேன். அவ்வளவுக்கு அலுப்புத்தட்டுகிறாரே இந்த டி.இமான் என்று மனசுக்குள் நினைத்துக் கொள்வேன்.

இசையமைப்பாளர் டி.இமானின் ஆரம்ப காலப் பாடல்களில் நிறையத் தேடல் இருந்தது. ஆனால் எப்படி எஸ்.ஏ.ராஜ்குமார் புது வசந்தம் படத்துக்கு முன்னர் விதவிதமான அழகான பாடல்களைக் கொடுத்து வந்தாரோ அதே போல. ஆனால் எஸ்.ஏ.ராஜ்குமாருக்குப் புது வசந்தம் கொடுத்த பெரிய திருப்புமுனை போலவே டி.இமானுக்கு மைனா  படமும். அதற்குப் பின் அள்ளுப்பட்டு வந்த பாடல்கள் எல்லாமே மைனாத் தனமாகவும் கும்கித் தனமாகவும் அமைந்து விட்டது. ஒரே இசைப் பரிணாமத்தில் கிட்டத்தட்ட எல்லா இளம் நாயகர்களும் இமானின் இசையில் நடிக்கும் அளவுக்கு. "கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை" பாடலின் ஆரம்பமே அப்படியானதொரு எடுகோளை எடுக்க வைத்தது. ஆனால் வார இறுதியில் பொழுது போகாத பொம்முக்குட்டியாக "றெக்க" படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அன்று தொட்டதுதான் இந்த நிமிஷம் வரை முணுமுணுத்து ரசிக்க வைக்கிறது இந்தப் பாட்டு.

"கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை" பாடலைத் தூக்கி நிறுத்துவதே இந்தப் பாடலை வெகு அற்புதமாக, படத்தின் மிக முக்கியமான காட்சியமைப்புக்குப் பயன்படுத்திய வண்ணமே.

அதற்குப் பின்னர் தான் இந்தப் பாடலைக் காதலிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

யுகபாரதி இந்தப் பாடலை எழுதும் போதே பாரதியராக முண்டாசு கட்டியிருப்பார் போல, வரிகளில் அச்சொட்டான சுப்ரமணிய பாரதித்தனம் அழகோ அழகு. 

அந்தப் பாடல் படம் திரைக்கு வரும் வரை ரசிகர்களை ஆட்டிப் படைத்தது. ஆனால் விழலுக்கு இறைத்த நீராகப் பொருந்தாத படைப்புக்குப் போனதால் இன்று பாடலையே மறந்து போகும் நிலை. ஆகவே தான் இம்மாதிரியான பாடல்கள் படமாக்கும் அடுத்த நிலையில் தான் அதன் ஜீவிதமும் இன்றைய காலத்தில் இருக்கிறது.

"புதிய உலகைத் தேடிப் போகிறேன்" பாட்டைப் பாடிய வைக்கம் விஜயலட்சுமி தானே இந்தப் பாட்டையும் பாடியது என்று ஊர்மிளா கேட்டார். எனக்கு முன்பே றெக்க படம் பார்த்து விட்ட அவரும் இந்தப் பாடலைக் கேட்டு உருகிப் போனார்.

இல்லை இந்தப் பாட்டைப் பாடியது நந்தினி ஶ்ரீகர்.

“சக்க சக்களத்தி” 

https://www.youtube.com/watch?v=ioH20FxEZgM

வழியாக ரஹ்மான் மெட்டுக்கும் வரிகள் பதியம் போட்டார்.

இசைஞானியிடம் இன்னும் நிறைய எழுதியிருக்க வேண்டும் என்று ஒரு சோறு பதமாகச் சுவைக்க வைக்கும் 

“பூவைக் கேளு காத்தைக் கேளு” (அழகர்சாமியின் குதிரை)

https://www.youtube.com/watch?v=kTAm3TltwrE

மெட்டில் இசைஞானி

என்றும் அழகாக செய்கின்ற

மாயம் போல

உன்னில் பல நூறு இன்பம் தர

நீயும் வந்தாயே கூடி வாழ 

https://www.youtube.com/watch?v=q_XoN95NvnI

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 

இனிக்க இனிக்க எழுதும் கவிஞர் யுகபாரதிக்கு ❤️ 🎻💐 

கானா பிரபா

02.12.2022

No comments:

Post a Comment