Pages

Thursday, December 15, 2022

❤️ இசைச் சிற்பியின் தெம்மாங்குத் தாலாட்டு 🎸🪘

சீராக சம்பா நெல்லு குத்தி 

நான் சோறு சமைச்சிருக்கேன்

மாமா 

சோறு சமைச்சிருக்கேன்

சேலத்து மாம்பழ சாறெடுத்து

நல்ல ரசமும் வச்சிருக்கேன்

மாமா 

ரசமும் வச்சிருக்கேன்

ஹே ஊத்து தோண்டி

தண்ணி எடுத்து 

வெந்நீர் வச்சிருக்கேன்

மாமா

வெந்நீர் வச்சிருக்கேன்

உன்ன வாயைக் கொப்பளிக்க

பன்னீர் வச்சிருக்கேன்

மாமா

பன்னீர் வச்சிருக்கேன்

மாமா சாப்பிட வாரிகளா….

இல்ல தோப்புக்கு போறீகளா?

https://youtu.be/x4Cn9oGG5Kk

இப்படியொரு மிக நீண்டதொரு பல்லவி போலே இசையமைப்பாளர் சிற்பி அவர்களின் தெம்மாங்கு இசைப் பாடல்களை நீட்டலாம். கூடவே இது போல கிராமிய மணம் சமைத்த பழநி பாரதி அவர்களின் வரிகளும் பதமான சீரகச் சம்பா சோறு ஆகக் குழையாமல் குவிந்து கொள்ளும் மல்லிப் பூ போலே.

மல்லிகை பூவழகில்

பாடும் இளம் பறவைகளில் 

நானும் உன்னை தேடி வந்தேன்

பூங்குயிலே பூங்குயிலே

https://youtu.be/fKRb2hyrx5E

“அன்னை வயல்”  காலத்து சிற்பியை இன்னும் வயற் காட்டு மனிதர்கள் மறக்கவில்லை.

எப்படி எண்பதுகளில் சந்திரபோஸ், தேவேந்திரன் போன்ற இசை ஆளுமைகளை அவர்கள் இன்னார் தான் என்று அடையாளப்படாமல் கிராமங்களின் ரேடியோப் பெட்டிகள் சுமந்து திரிந்தனவோ அது போலவே தொண்ணூறுகளின் இசையமைப்பாளர்களில் சிற்பி அவர்களையும் நம்மவராக வைத்துக் கொண்டார்கள். 

சிற்பியின் “உள்ளத்தை அள்ளித்தா” போன்ற நாகரிகத் துள்ளிசை முகத்தை விடவும் வலிமை கொண்டது தெம்மாங்குப் பாடல்கள். 

அதற்கு வெத போட்டதே அவரின் அறிமுகமான “செண்பகத் தோட்டம்” தான். 

இசைஞானி இளையராஜாவுக்கு ஒரு அன்னக்கிளி, தேனிசைத் தென்றல் தேவாவுக்கு ஒரு மனசுக்கேத்த மகராசா, தேவேந்திரனுக்கு ஒரு மண்ணுக்குள் வைரம் போன்று எடுத்த எடுப்பிலேயே ஒரு கிராமிய மணம் கமிழும் படத்துக்கு இசையமைப்பாளர் சிற்பியின் வருகை அமைந்திருக்கிறது. இயக்குநர் மனோபாலாவின் “செண்பகத் தோட்டம்” திரைப்படம் சிற்பி அவர்களின் திரையுலக அரிச்சுவடியில் முதல் படம்.

“முத்து முத்துப் பூமாலை” https://youtu.be/AnPPw0wSbv8 மனோ & ஸ்வர்ணலதா கூட்டாகச் சந்தோஷ மெட்டிலும் அதே பாடலை எஸ்.ஜானகி மனோவோடு இணைந்து https://youtu.be/pCoCraCnrU8 சோக ராகத்திலும் பாடிய பாடல்களும், கே.ஜே.ஜேசுதாஸ் இன் “ஓ வெண்ணிலா” http://youtu.be/gbQBHcQeimY பாடலும் அன்றைய கால கட்டத்தில் விரும்பி ரசிக்கப்பட்ட பாடல்கள். இன்னும் ஸ்வர்ணலதா பாடிய “ஒத்த நெலா விளக்கு முத்தம்மா பூ விளக்கு” https://youtu.be/HrdXUrcVxeE பாடலும் தாமதமாக ரசிப்புப் பட்டியலில் சேர்ந்த பாடல். செண்பகத் தோட்டம் படத்தில் மேற்கூறிய பாடல்கள் ஜனரஞ்சக அந்தஸ்த்தை அடைந்திருந்தாலும் சிற்பி அவர்களைப் பரவலாக அறிமுகப்படுத்தத் தவறி விட்ட படமாக அமைந்து விட்டது.

கொட்டைப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் ஊரையே கலக்கி சிற்பியின் அடையாளத்தை நிறுவியது.

தானானன்னா தனத் தானா தானானன்னா

தா நா தா நானன்னா…

ஏலேலங்கிளியே 

என்னைத் தாலாட்டும் இசையே 

உன்னைப் பாடாத நாள் இல்லையே

அடி கண்ணம்மா 

பாடாத நாள் இல்லையே……

https://youtu.be/tT_-d1DDANY

தொண்ணூறுகளின் போர்க்காலப் பொழுதுகளில் சைக்கிள் டைனமோ மின்னேற்றிப் பாட்டுக் கேட்ட இருண்ட பொழுதுகளில் நாங்கள் சிற்பியையும் விட்டு விடவில்லை. சொல்லப் போனால் நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம் பாடல்களை எல்லாம் நாள் முழுக்க கை வலித்து சைக்கிள் சக்கரம் சுற்றிக் காதில் தேனிசை வாற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தோம். அந்தக் கஷ்ட காலங்களில் நமக்குக் கிட்டிய இசை ஒத்தடங்கள் அவை.

குமுதம் போல் வந்தக் குமரியே

முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ

மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்ணனோ

https://youtu.be/5BCPfEYQA_0

பண்பலை வானொலி யுகத்தின் திறப்பு விழாக்களில் சிறப்பு விருந்தினராக வந்தார் சிற்பி காற்றலை வழியே.



சிற்பி அவர்களின் இசையில் “மணி - ரத்னம்” படத்துக்காக வந்த “காதல் இல்லாதது வாழ்க்கை ஆகுமா” இலங்கை வானொலியின் புகழ் பூத்த பாடலாய் உலாவியதாக முன்னர் எழுதியிருந்தேன். அதே படத்தில் ஒளிந்திருக்கும் பொக்கிஷம் 

“நீரோடை தாளம் போட்டு ஓடுதே நதியாகத் தான்” 

https://youtu.be/7miJzxK40wk

“பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா

பனியில் நனையும் பெண்ணிலா

https://youtu.be/e2YRS0Uyslc

மக்கள் நாயகன் ராமராஜனுக்கு சிறப்பான பாடல் தந்தார் என்று காட்டியது அம்மன் கோயில் வாசலிலே.

“விவசாயி மகன்” , “பூமனமே வா”, “சீறி வரும் காளை” ஆக மீண்டும் சேர்ந்தார்கள்.

கரிசக் காட்டுக் குயிலே…..

மனம் கரிசாக் கிடக்குது மயிலே

https://youtu.be/R564v3N9-1g

அப்படியே கிராமத்து மண்ணில் இருத்தி விடும் இன்னுமொன்று.

இசையமைப்பாளர் தேவேந்திரனை பாரதிராஜாவின் சீடர் மனோஜ்குமாரும், ஏகலைவர் ஆர்.சுந்தரராஜனும் இசை இயக்குநராக்கிய அழகு பார்த்த பின் தானும் இணைந்தது போலவே இன்னொரு சீடர் மனோபாலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட சிற்பியைக் காலம் கடந்தும் “ஈர நிலம்” ஆக உள்வாங்கிக் கொண்டார். ஒரு பக்கம் சிற்பி என்ற தெம்மாங்குப் பாடகக் குரலும் அவ்வப்போது பொருத்தமாக வந்து சேரும். காத்திருந்த காதல் படத்தில் காதலரே காதலரே எஸ்பிபி வடிவத்தோடு சிற்பி பாடிய வடிவத்தோடு காட்சியிலும் தோன்றிச் சிறப்பித்திருப்பார்.

https://youtu.be/b9Ss-y68aIA

SPB - பாடகன் சங்கதி நூலின் ஒரு பாகமாக அமைந்த “அறிமுக இசையமைப்பாளர்களின் அடையாளம்” என்ற பகுதியில் இசையமைப்பாளர் சிற்பியையும் இணைத்து எழுதியிருந்தேன். திடீரென்று பொறி தட்டவே எஸ்பிபியோடு அவரின் அனுபவங்களையும் கேட்டால் என்ன என்று நினைத்து தொலைபேசி அழைப்பெடுத்தேன்.

நான் எதைப் பற்றிக் கேட்க விழைந்தேனோ அதையே மடை திறந்தாற் போலக் கொட்டினார். எஸ்பிபி என்ற உன்னதப் பாடகர் குறித்து சிற்பி அவர்களது ஒரு வரி நச் என்ற அந்த முத்திரைக் குறிப்பும் அவர் பகிர்ந்த சுவாரஸ்யமான அனுபவங்களையும் கேட்டுச் சிலிர்த்துப் போனேன். அவற்றை அப்படியே இந்த நூலில் ஒரு சொட்டு விடாமல் சேர்த்துக் கொண்டேன்.

சிற்பி அவர்கள் அந்த உரையாடலில் பகிர்ந்து கொண்ட பாட்டு ஜானகி ராமன் படத்தில் வரும்

பொட்டு மேல பொட்டு வைச்சு பொட்டலிலே போற புள்ள

நீ தொட்டு வச்ச குங்குமம்மா

நான் மண்ணில் வந்து பொறக்கலையே

https://youtu.be/1_36prliutA

மொச்ச கொட்ட பல்லழகி

முத்து முத்து சொல்லழகி

சீமையிலே பேரழகி 

https://youtu.be/DaERvm86gck

ரஞ்சிதமே காலத்தில் தோண்டி எடுத்துக் கேட்ட 28 வருடங்களுக்கு முன் வெளிவந்த சிற்பியின் உளவாளி பாடல் நினைப்பூட்டுவதே அவரை இன்னும் ரசிகர்கள் அடிமனதில் வைத்திருப்பதற்குச் சான்று.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 

இசைச் சிற்பி அவர்களுக்கு ❤️

கானா பிரபா

15.12.2022

No comments:

Post a Comment