Pages

Monday, November 7, 2022

கமல்ஹாசன் என்ற பாட்டுக்காரர் தனக்காகப் பாடாத பாடல்கள் ❤️🎸

“பொன் மானை தேடுதே

என் வீணை பாடுதே

உன் பார்வை தொடுத்தது

எனக்கொரு பூ மாலை

சுகம் தர நடந்தது”

https://www.youtube.com/watch?v=Qr3PEIoio8s

எதுவித முன்னேற்பாடும் இல்லாமல் அப்படியே ராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்துக்குள் வந்த கமல், இளையராஜா வேண்டிக் கேட்க அப்படியே “சுகம் தர நடந்தது" போலப் பாடி விட்டுப் போனார் மு.மேத்தா வரிகளில் நடிகர் மோகனுக்காக, அந்தச் சம்பவம் “ஓ மானே மானே” படத்துக்காக அமைந்தது.   

இதற்கு முன்பும் இன்னொரு சந்தர்ப்பம் கமல்ஹாசனுக்கு அமைந்திருக்கிறது. 

“பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் 

ஐயனை நீ காணலாம்” என்ற ஜேசுதாஸ் பாடல் சரணம் ஐயப்ப்பா படத்தை நினைப்பூட்டி விடும். இந்தப் படத்தின் இசைமைப்பாளர் சந்திரபோஸ் இசையில் “சரணம் ஐயப்பா” படத்தில் “அண்ணா வாடா தம்பி வாடா” https://www.youtube.com/watch?v=MmXkDbGJo2E  என்ற பாடலை கமல்ஹாசன் பாடியிருந்தாலும் அது வேறொருவருக்கானதாக அமைந்தது. இதே படத்தில் கமல் கெளரவ வேடத்திலும் தோன்றியிருக்கின்றார்.

கங்கை அமரன் இசையில் தெரு விளக்கு படத்தில் இளையராஜா பாடியது போல, கமல்ஹாசனும் & சைலஜாவோடு இணைந்து

"மதுரைப் பக்கம் என் மச்சான் ஊரு"

https://www.youtube.com/watch?v=bJaRXU_eC5A

பாடியுள்ளார்கள்.

கமல்ஹாசன் என்னும் கலைஞன் தன் நடிப்புத் திறனோடு, ஆடல், பாடல் திறனையும் ஒருங்கே வளர்த்துக் கொண்டவர். முன்னர் ஒருமுறை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பாலமுரளிகிருஷ்ணா கூட, கமல் தன்னிடம் சங்கீதம் கற்க வந்ததாகவும், ஒரு சில நாட்களிலேயே அவரின் திறமையைக் கண்டு தான் வியந்ததாகவும் முறையாக இன்னும் பயிற்சி எடுத்திருந்தால் அவரின் பாடும் திறன் இன்னும் உயர்ந்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

குணா பாடல் ஒலிப்பதிவில் கூட இளையராஜா கமலோடு பேசும் போது கமலுக்கு ஹைபிட்சில் பாடும் திறன் இருப்பதைச் சிலாகித்து, சிங்கார வேலனில் "போட்டு வைத்த காதல் திட்டம்" பாடலைப் பாட வாய்ப்புக் கொடுத்ததைக் குறிப்பிட்டிருந்தார்.

“ஞாயிறு ஒளிமழையில்” (அந்தரங்கம்) https://www.youtube.com/watch?v=rLSmBy55ot0  படத்தில் ஜி.தேவராஜன் இசையில் தொடங்கி சங்கர் கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளடங்கலாக ஏராளம் இசையமைப்பாளர் இசையில் கமல்ஹாசன் பாடியிருக்கிறார். அவற்றில் 99 வீதமானவை தனக்கான படங்களுக்காகவே பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னாளில் “காதலா காதலா” படத்தில் கார்த்திக் ராஜா இசையில் பாடி நடித்த கமல்ஹாசனை, தன் பெரியப்பா மகன் பார்த்தி பாஸ்கர் பாடல் வரிகளில் பவதாரணி, ஸ்வர்ணலதாவுடன் கூட்டுச் சேர்த்துக் கொடுத்த “முத்தே முத்தம்மா” https://www.youtube.com/watch?v=ippxU28VPMM 

அட்டகாஷ் ரகம். தனிப்பட்ட ரீதியில் கமல் பாடிய பாடல்களில் உச்சமாக ரசித்துக் கேட்பேன்.

அது போல இதுவரை யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் கமல்ஹாசன் நடித்திருக்காவிட்டாலும், யுவனின் ஆரம்பகால ஆல்பமான “The Blast” இல் 

“பூக்கள் எல்லாம்” (பார்த்தி பாஸ்கர் & சுஜாதா வரிகள்) 

https://www.youtube.com/watch?v=jj1j2bN0Aws

“வா நந்தனே” (அமரர் வாசன் வரிகள்)

https://www.youtube.com/watch?v=kcbq05ZeNxg

அவள் தேவதை (கவி ரவி வரிகள்)

https://www.youtube.com/watch?v=1OXeyLqqx2Q

போன்ற பாடல்களில் தன் குரலைக் காட்டியிருக்கிறார் கமல்ஹாசன்.

பின்னாளில் புதுப்பேட்டையில் நா.முத்துக்குமார் வரிகளில்

“நெருப்பு வாயில்”

https://www.youtube.com/watch?v=nj2_XlOc5N4

பாடலில் யுவன் இசையில் ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார் கமல்.

தனிப்பட்ட ஆல்பம் என்று சொல்லும் போது கொரோனா காலத்தில் ஜிப்ரான் இசையில் கமல்ஹாசன் பகிர்ந்த “அறிவும் அன்பும்” பாடல் தொகுதியும் குறிப்பிட வேண்டியது. கானா பிரபா

கமலின் தயாரிப்பு என்று வரும் போது நளதமயந்தி படத்தில் வித்தியாசமான இரண்டு பாடல்கள் 

Sudupattadha

https://www.youtube.com/watch?v=ydrEqU1y-pE

Stranded On the Streets

https://www.youtube.com/watch?v=LyBGscQMRW4

ரமேஷ் விநாயகம் இசையில் கமல் பாடியளித்திருந்தார்.

முத்துராமலிங்கம் படத்திற்காக நீண்ட இடைவெளிக்குப் பின் தன் இசையில் கமல்ஹாசனைப் பாட வைத்தார் “தெற்கத்தி சிங்கமடா” இளையராஜா. பெரிதும் திருப்தி தராத படைப்பு அது. இளையராஜாவுக்காக பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதிக் கொடுத்த இறுதிப் பாடல் அது.

ஆனால் Happi படத்துக்காக ராஜா மீண்டும் கமலை அழைத்துக் கொடுத்த Zindagi dish  https://www.youtube.com/watch?v=EYYn9rZvSdk பொக்கிஷம் எனலாம்.

“வானம் முழுதும் பௌர்ணமி

உன் அழகில் தான் வந்ததோ

தேசம் முழுதும் மின்மினி

உன் வரவை தான் தேடுதோ.....”

பன்முகத் திறமையாளர் நம்மவர் கமல்ஹாசனுக்கு இனிய 68 வது பிறந்த நாள் வாழ்த்துகள்.

கானா பிரபா

07.11.2022


No comments:

Post a Comment