Pages

Monday, September 6, 2021

சுனில் பெரேரா நாடோடிப் பாடகன் விடை கொடுத்தார்



தாயகத்துக்குப் பயணிக்கும் கடந்த இரண்டு தசாப்தங்களில் சுனில் பெரேராவின் பெரும் பதாகை பதாகை கண்ணில் தாப்பாமல் இருக்காது, எங்காவது ஒரு வீதியிலாவது கிட்டார் வாத்தியத்தோடு தன் குழுவோடு சிரித்துக் கொண்டிருப்பார் ஏதோவொரு இசை நிகழ்வுக்காக.  

ஐம்பது ஆண்டுகள் சிங்கள இசை மேடைகளின் எல்லை தாண்டி வியாபித்த கலைஞர் அவர். அந்தக் காலத்தில் ரூபவாஹினியில் தோன்றிய இசை முகம் என்ற அளவோடு இருந்தாலும், கொழும்புப் பக்கம் வந்தால் இவரின் வீச்சை அறிந்து வியப்படைய முடிந்தது. மெல்பர்ன், சிட்னியில் இருக்கும் சிங்களவரது மளிகைக் கடைகளிலும் இவரின் இசைச் சுற்றுப் பயணங்கள் குறித்து அறிவதுண்டு. இலங்கையின் மேடையிசைக் கலைஞர்கள் பன்முகப்பட்ட இசையாளராகவும் இருப்பதுண்டு. அதே தான் சுனில் பெரேராவின் விஷயத்திலும் கூட.

ஒரு பாடகராக, பாடலாசிரியராக, வாத்தியக் கலைஞராக, இசையமைப்பாளராகப் பன்முகம் கொண்ட இசை ஆளுமை அவர்.

இங்கே சுனில் பெரேராவின் தந்தை அன்டன் பெரேரா ஒரு ஓய்வு பெற்ற இராணுவ வீரர். இலங்கை இசை மேடைகளில் பைலா பாடல்களுக்கான வீச்சு அதிகம். அன்டன் பெரேராவும் அவ்விதமே The Gypsies என்ற வாத்தியக் குழுவை நிறுவி சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடல்களை அரங்கேற்ற ஏதுவாக அமைந்தது. 

அன்டன் பெரேராவின் ஐந்து புதல்வர்களில் தலை மகன் இந்த சுனில் பெரேரா. தன்னுடைய 11 வது வயதிலேயே கிட்டார் இசைக் கருவியைக் கற்றுத் தேர்ந்தவர் படிப்பில் ஆர்வம் காட்டாமல் தன்னுடைய 15 வது வயதிலேயே தந்தையின் இசைக் குழுவில் சேர்ந்து விட்டார். 

ஜிப்ஸீஸ் இசைக் குழுவின் தலைப் பாடகராக சுனில் பெரேரா விளங்கினார். 

சுனில் பெரேரவின் அந்தப் பருத்த முகமும் சிரிப்புப் பற்களுமே ஒரு உற்சாகத்தை எழுப்ப, அதையும் தாண்டி ஒரு உற்சாகத் துள்ளலோடு மேடை இசை நிகழ்ச்சியை அவர் கொடுக்கும் பாங்கில் ரசிகர் சொக்கிப் போவதில் என்ன வியப்பு?

ஜிப்ஸீஸ் இசைக் குழுவுக்கு முதலில் உச்சம் கொடுத்த பாட்டு

“லிண்ட லங்க சங்கமய” 

https://www.youtube.com/watch?v=59zW5FHBQZM

அதனைத் தொடர்ந்து 

அம்மா அம்மா மே மட்ட

https://www.youtube.com/watch?v=-lMdrwTSKSA

இன்னொரு பிரபலம் கொடுத்த எழுபதுகளின் இறுதியில் விளைந்த பாட்டு.

கொத்தமல்லி 

https://www.youtube.com/watch?v=6X-hCN-A6EA

போன்ற பாடல்கள் இவர்களின் பிரபலம் கொடுத்த துள்ளிசைக்கு மேலும் சான்று.

எழுபதுகளின் இறுதியில் Dance With the Gypsies என்ற தொடர் இசைத் தட்டுகள் ஐந்தைத் தமது குழுவின் சார்பில் வெளியிட்டு இலங்கை ரசிகர்களின் மனதில் அவர்கள் பதியம் போட்டார்கள். பின்னாளில் அவர்கள் மேடை இசை தாண்டி, வீடு தேடி வரும் இசைத்தட்டு யுகம் வரை இந்த இசை முயற்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் இசைச் சுற்றுப் பயணங்களையும் வெளிநாடுகளில் நிகழ்த்திக் காட்டினார்கள். இலங்கையின் ஆகப் பெரிய பைலா கோஷ்டிக் குழுவாக அடையாளப்பட்டார்கள்.







சுனில் பெரேரா எந்தவொரு உலகியல் சார்ந்த விடயங்களிலும் வெளிப்படையாகத் தன் கருத்துகளைக் கொடுப்பவர் என்ற அடையாளத்தையும் கொண்டிருந்தார். 

வெறுமனே பொழுது போக்குக்கான இசை மேடைப் பாடகனாக அன்றி, சமூக நீதிக்கான குரலாகத் தன்னை அடையாளப்படுத்தி நிறுவியும் காட்டியவர்.

சம கால நடப்புகளை, அரசியல் விமர்சனமாகச் சாடி எள்ளல் பாணியில் இவர் கொடுத்த I don't know Why 

https://www.youtube.com/watch?v=1SYnoRcIW08

பாடல் அரசியல் அச்சுறுத்தலால் முடக்க நிலையில் கூடச் சில ஆண்டுகள் இருந்தது.

இலங்கை அரசியலின் நிகழ் கால “மன்னர்களின்” கடந்த ஆட்சியைக் கூடச் சாடி வந்தவர். 

ஜிப்ஸுஸ் இசைக் குழு தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடிய இதே ஆண்டில் தான் சுனில் பெரேரா தன் ரசிகரிகளிடமிருந்து நிரந்தரமாக விடை பெற வேண்டிய துர்ப்பாக்கியமும் கொரோனா வடிவில் வந்திருக்கின்றது.

கொரோனாவுக்கான சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர் நேற்று செப்டெம்பர் 5 ஆம் திகதி கொரோனாவுக்குப் பிந்திய உடல் நலக் கேட்டால் மரண தேவதையைப் பற்றிக் கொண்டார்.

இன்னும் 11 நாட்களில் அவரின் பிறந்த நாள் (14 செப்டெம்பர் 1952) வரவிருக்கும் சூழலில் தன்னுடைய 68 வயதில், 53 வருட இசை வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி கொடுத்திருக்கிறார்.

அடுத்த தடவை தாயகப் பயணம் போகும் போது அந்தத் தொப்பிக்காரப் பாடகரின் பெரும் பதாகை இருக்காது.

இந்தியச் சூழலில் எப்படி ஒரு உற்சாகப் பாட்டுக்காரன் எஸ்பிபியின் பிரிவை ஆண்டொன்று தொடும் போதும் இன்னும் ஏற்க மறுக்கும் ரசிக உலகம் இருக்கிறதோ அது போலவே சுனில் பெரேராவின் பிரிவையும் ஏற்க மறுத்து அவரை ஆண்டாண்டு காலம் கொண்டாடப் போகின்றார்கள். 

சுனில் பெரேரா குறித்த வரலாற்று உசாத்துணை நன்றி : விக்கிப்பீடியா

கானா பிரபா

No comments:

Post a Comment