Pages

Saturday, December 7, 2019

L.R.ஈஸ்வரி 💃 80



“அம்மம்மா கேளடி தோழி
 சொன்னானே ஆயிரம் சேதி
 கண்ணாலே வந்தது பாதி
 சொல்லாமல் வந்தது மீதி”

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முந்திய இரவுகளில் வானொலிக்கூடத்தில் தனிமையில், அந்த ஏகாந்தத்தை அனுபவித்துக் கொண்டே அடிக்கடி ஒலிபரப்பிய இந்தப் பாடலை நினைத்துக் கொண்டேன் இன்று. காலையில் வானொலி நிகழ்ச்சி படைக்கும் போதும் இந்தப் பாடலையே L.R.ஈஸ்வரிக்கான பிறந்த நாள் பாடலாக ஒலிபரப்பி நேயர்களின் தெரிவுகளுக்கும் வழி விட்டேன்.
லூர்து மேரி ராஜேஸ்வரி என்ற L.R.ஈஸ்வரியின் பிறந்த நாள் இன்று.

ஒரு பக்கம் P.சுசீலாத்தனமான முந்தானையை இழுத்து மூடியது போல அடக்கம் தொனிக்கும் குரல், இன்னொரு பக்கம் உஷா உதூப் போல துள்ளிசையில் தெறிக்கும் குரல் இப்படியாகப்பட்ட இரு வேறு பரிணாமங்களில் எல்.ஆர்.ஈஸ்வரியைத் தாண்டி இன்னொருவரின் உச்சத்தைக் காண முடியவில்லை. அவ்வளவு தூரம் பன்முகம் கொண்ட பாடகி இவர். அது மட்டுமா?

ஆடி மாசம் அம்மனுக்குக் கூழ் ஊத்துற நினைப்போடு குழாய் கட்டி அம்மன் பாடல்கள் முந்திக் கொள்ளும். சந்திக்குச் சந்தி “கற்பூர நாயகியே கனகவல்லி” எல்.ஆர்.ஈஸ்வரிகள் பாடிக் கொண்டிருப்பார்கள். பக்திப் பாடல் மரபில் சீர்காழி கோவிந்தராஜனைத் தொடர்ந்து எல்.ஆர்.ஈஸ்வரியையும் சேர்த்து விட்டுத் தான் மற்றவர்கள் வரிசையில் வரக் கூடிய அளவுக்கு பக்தி இலக்கியத்திலும் புகழோச்சியவர்.

கே.பாலசந்தரின் இரண்டு படங்கள்.
ஒன்று வி.குமார் இசையமைத்த “வெள்ளி விழா”, இன்னொன்று எம்.எஸ்.விஸ்வநாதன் இசை கொடுத்த “மன்மத லீலை”.

“காதோடு தான் நான் பாடுவேன்
 மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் உறவாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்”
என்று கணவனின் நெஞ்சத் தொட்டிலில் முகம் சாய்த்து ஆரும், ஊரும் கேளா வண்ணம் “வெள்ளி விழா”வில் பாடும் இந்தக் குரல் தான்
“ஹல்லோ....
பூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்
பூஜையறை பார்க்கும் ஆசை வரக்கூடும்”

என்று தொலைபேசி வழியே சல்லாபம் கொட்டக் கிசிகிசுப்பார். இந்த மாதிரிக் காட்சியின் திறன் அறிந்து தன் குரலின் தொனியை மாற்றி, பாடலைக் கேட்கும் போதே நம் மனக் கண்ணில் அந்தச் சூழலைக் கொண்டு வருவது தான் எப்பேர்ப்பட்ட வல்லமை.
அது எல்.ஆர்.ஈஸ்வரியிடம் இருக்கிறது.

“இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்குக் கவலை எதுக்கு
Love Birds.......”
அப்படியே ஒரு ஆர்ப்பாட்டமான மன நிலைக்குத் தூக்கிக் கொண்டு போய் வைத்து விடுவார். ஆரம்ப இசை கூட இல்லாமல் நேரே அந்தத் துள்ளல் உணர்வைச் சுமக்க வேண்டிய தார்ப்பரியத்தை உணர்ந்து அப்படியே வெகு இலகுவாகக் கடத்தி விடுவார் நமக்கும். கூடப் பாடிய ஆனானப்பட்ட எஸ்.பி.பியே ஆளை விடுங்கய்யா எல்.ஆர்.ஈஸ்வரி போல இவ்வளவு தூரம் பாட யாரால் முடியும் என்று சரணாகதி அடைந்து விடுவார். அந்த ஆங்கில உச்சரிப்பில் பக்கா இங்கிலீஷ்காரி இந்த எல்.ஆர்.ஈஸ்வரி.

“தேடினேன் வந்தது நாடினேன் தந்தது” ஊட்டி வரை உறவு படத்துக்காக பி.சுசீலா பாடியது எல்.ஆர்.ஈஸ்வரிக்குத் தான் போய் சேர வேண்டியது ஆனால் அந்தச் சூழலில் அவர் இல்லாததால் சுசீலாவுக்குப் போனதாக ஒரு செய்தி. அந்தப் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரிகான நளினத்தை உணரலாம். ஊட்டி வரை உறவு படத்தில் பி.சுசீலாத்தனமான பாட்டு “ராஜ ராஜஶ்ரீ” பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது புதுமை.

“எலந்தப் பழம்....எலந்தப் பழம்” இந்தப் பாட்டு அந்த நாளில் கேட்டால் சரஸ்வதிப் பெரியம்மா நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார். தான் பள்ளிச் சிறுமியாக இருந்த காலத்தில் வந்தது என்று கொள்ளைப் பிரியத்தோடு கேட்பார்.
கே.வி.மகாதேவன் இசையில் பின்னாளில் சர்வசாதாரணமாக அங்கீகரிக்கப்பட்டாலும் வெளிவந்த காலத்தில் ஒரு ஆபாசக் கிளப்பி என்று பொங்கித் தீர்த்ததாக ஊர்ப் பெருசுகள் சொல்வார்கள். எல்.ஆர்.ஈஸ்வரிக்கு மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது இந்தப் பாட்டு. “வாராய் என் தோழி வாராயோ” கூட ஆரம்ப கால அடையாளம் இவருக்கு.

“பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” இல்லாத் பாட்டுப் போட்டி மேடைகளைக் காட்ட முடியுமா? சிவந்த மண் படம் வெளிவந்து இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் கழித்தும் இந்தப் பாட்டு நினைவில் நிறைந்திருக்க அந்தச் சாட்டையடி வாங்கிக் கொண்டே உதறும் குரலும், நளினமான பாவங்களும் கொடுத்த எல்.ஆர். ஈஸ்வரி தானே முக்கிய பங்காளி?

இதே மாதிரி “ஆடவரலாம் ஆடவரெல்லாம்”, “முத்துக் குளிக்க வாரீகளா” என்று துள்ளிசை ஒரு பக்கம்,

“ பேசாத கண்ணும்
பேசுமா......
பெண் வேண்டுமா
பார்வை போதுமா”

என்னவொரு நக்கல் தொனியைக் கொடுப்பார் ஈஸ்வரி, பாவம் T.M.செளந்தரராஜன் தன் பாட்டுக்கு வெகு கர்ம சிரத்தையாக “பார்வை ஒன்றே போதுமே” பாடிக் கொண்டிருக்கையில்.

இல்லற சுகத்தை இனிமை தரும் பாட்டாய் இன்னொன்று “இது மாலை நேரத்து மயக்கம்”.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வழியாக ஏராளம் நன் முத்துகள் வித விதமாக எல்.ஆர்.ஈஸ்வரிக்குக் கிடைத்தது.
அதே நேரம் “அம்மனோ சாமியோ” என்று
“நான்” படத்தில் பக்கா துள்ளிசை ஒன்றைக் கொடுத்துத் தனியாக இசையமைக்கச் சென்ற
T.K.ராமமூர்த்தி எல்.ஆர்.ஈஸ்வரிக்கு இன்று வரை ஒரு முகவரிப் பாடலாகவும் ஆக்கி விட்டார்.

“அடி என்ன உலகம் இதில் எத்தனை கலகம்”
ஒரு படத்தின் சாரத்தை அசரீரியாகக் கொண்டு வரும் நுட்பம் அவள் ஒரு தொடர்கதை படத்தின் வழியே ஈஸ்வரியின் குரலாய், அது போலவே மூன்று முடிச்சில் “அவள் ஒரு கதாநாயகி”. அது போல எழுபதுகளில் ஒரு அரிய முத்து “நிலவே நீ சாட்சி” படத்தில் மெல்லிசை மன்னரோடு இவர் களியாட்டம் போட்ட “நீ நினைத்தால் ஏதேதோ நடக்கும்”

 அந்தக் காலத்து மார்டன் தியேட்டர்ஸ், விஜயலலிதா எல்லாம் நினைப்புக்கு வந்தால் எல்.ஆர்.ஈஸ்வரியும் கூட வருவார். உதாரணத்துக்கு “வல்லவன் ஒருவன்” படத்தில்
“பளிங்கினால் ஒரு மாளிகை” பாட்டில் எப்பேர்ப்பட்ட கவர்ச்சிகரமான வில்லத்தனம் காட்டுகிறது இந்த ஈஸ்வரிக் குரல்.

இன்னோர் பக்கம்
“அன்னை போல என்னைக் காத்த
அன்பு தெய்வமே.....”
என்று தானும் உருகி நம்மையும் உருக்கி விடுகிறாரே?

அறுபது ஆண்டுகளைக் கடந்து பாடிக் கொண்டிருப்பவரை ஒரு கட்டுரையின் கொள்ளளவில் அடக்க முடியாதெனினும் ஆசை தீர நினைவில் நின்றவைகள அவரின் அகவை எண்பதில் நினைத்துப் பார்த்து இசையால் வாழ்த்துகிறேன்.

இதுதான் சுகமோ இன்னும் வருமோ
இளமை தருமோ மயக்கம் வருமோ...
அம்மம்மா கேளடி தோழி....

இலங்கை வானொலியின் எண்பதுகளின் இரவின் மடிகளில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவது போன்றொரு அசரீரி காதில் கேட்கிறது.

எல்.ஆர்.ஈஸ்வரி நம் எல்லார் ஈஸ்வரி.

கானா பிரபா
07.12.2019

No comments:

Post a Comment