Pages

Wednesday, November 11, 2015

படிக்காதவன் படம் வந்து முப்பது வருஷம்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் படிக்காதவன் திரைப்படம் வெளிவந்து இன்றோடு 30 வருடங்கள் ஆகி விட்டதாக ட்விட்டரில் இழை ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. 11.11.1985 தீபாவளிக்கு வந்த ஒரு வெற்றிச் சித்திரம் இது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜஸ்டிஸ் கோபிநாத், நான் வாழ வைப்பேன் வரிசையில் படையப்பாவுக்கு முந்தி இணைந்த படம் இதுவாகும். இந்த நான்கு படங்களிலுமே சிவாஜி மற்றும் ரஜினி ஆகிய இரண்டு நட்சத்திரங்களின் தனித்துவம் பேணப்பட்டிருந்தாலும் படிக்காதவன் படம் ஒப்பீட்டளவில் சிவாஜி கணேசனுக்கு கெளரவ வேடத்தை அளித்த படம்.

ரஜினிகாந்த் உடன் பயணிக்கும் காருக்கு லஷ்மி என்று பெயரிட்டிருப்பார். இந்தப் படம் வந்ததில் இருந்து இன்று வரை நடைமுறை வாழ்க்கையில் நம்மவர் சிலர் லஷ்மி என்று தமது வாகனத்தை அடைமொழியிட்டு வேடிக்கையாக அழைப்பதன் நதிமூலம்/ரிஷிமூலம் இது.

எண்பதுகளின் ரஜினிகாந்த் படமென்றாலே கண்ணை மூடிக் கொண்டு எஸ்.பி.முத்துராமன் தானே இயக்கம் என்று சொல்ல முன்பு இன்னொரு பக்கம் ரஜினிகாந்த் இற்கு நட்சத்திரப் படங்களை அளித்த வகையில் இயக்குநர் ராஜசேகரும் குறிப்பிடத்தக்கவர். முழு நீள மசாலா சண்டைப் படங்கள் மட்டுமன்றி கதையம்சம் பொருந்திய குடும்பப் படங்களையும் ராஜசேகர் கொடுத்திருந்தாலும் "மலையூர் மம்பட்டியான்" இவரை நட்சத்திர இயக்குநர் அந்தஸ்த்துக்கு உயர்த்தியது. இதுவே பின்னர் ரஜினிகாந்த் படங்களுக்கான இயக்குநர் தேர்வில் இவரையும் சேர்த்துக் கொள்ள ஒரு காரணியாக இருக்கலாம்.
 படிக்காதவன், மாவீரன், மாப்பிள்ளை வரிசையில் தர்மதுரை படம் இயக்குநர்  ராஜசேகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவந்திருந்தது. தர்மதுரை படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே இயக்குநர் ராஜசேகர் இறந்ததும் மறக்க முடியாத வரலாறு.
இந்தக் கூட்டணியில் அமைந்த படங்கள் அனைத்துக்கும் இசைஞானி இளையராஜா இசை.

இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் முத்துகள் என்று சொல்லவா வேண்டும். கவிஞர் வாலி, கங்கை அமரன், வைரமுத்து வரிகளில் அமைந்தவை.
ரஜினிகாந்த் இற்கு ஆரம்ப காலத்தில் அதிக பாடல்களைப் பாடிய மலேசியா வாசுதேவன் இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் பாடிய பெருமையைய் பெறுகிறார்.
ஒரே படத்தில் நாயகனுக்கான குரலாக கே.ஜே.ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகிய மூன்று பெரும் பாடகர்களும் பாடிய வகையில் இன்னொரு சிறப்பு.

"ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி" விரக்தியுன் விளம்பில் இருந்த அந்தக் காலத்து இளைஞரின் தேசிய கீதம்.
இந்தப் பாடலின் வெற்றி பின்னர் "சம்சாரம் அது மின்சாரம்" படத்தில் "ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா" என்று சங்கர் கணேஷ் கூட்டணியும் ஆசையோடு எடுத்தாண்டது.
நாயகனுக்கான ஸ்துதிப் பாடல்கள் "ராஜாவுக்கு ராஜா", "சொல்லி அடிப்பேனடி" இரண்டும் தலா எஸ்.பி.பி, மலேசியா என்று தத்தமது பாணியில் சாரம் கெடாது கொடுத்த துள்ளிசை.
"ஒரு கூட்டுக் கிளியாக" மலேசியா வாசுதேவன் பாடும் போது டி.எம்.செளந்தரராஜனின் இளவலாகக் குரல் விளங்கும்.

"சோடிக் கிளி எங்கே சொல்லு சொல்லு" எஸ்.பி.பி & எஸ்.ஜானகி பாடும் போது அப்படியே என்னை மண் வாசனை படத்தின் "ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலை" பாட்டுக்கு இழுத்து விடும்.

"சோடிக் கிளி எங்கே சொல்லு சொல்லு 
  சொந்தக் கிளியே நீ வந்து நில்லு
  கன்னிக் கிளி தான் காத்துக் கெடக்கு கண்ணுறங்காம 
பட்டுக் கிளி இதைக் கட்டிக் கொள்ளு
தொட்டுக் கலந்தொரு மெட்டுச் சொல்லு"
என்று எஸ்.ஜானகி ஆலாபனை கொடுத்து நிறுத்துகையில் ஆர்ப்பரிப்போடு வரும் இசை தான் எண்பதுகளின் பிரமாண்டத்தின் அறை கூவல்.
இப்படியான நிஜமான வெற்றியை இனிமேல் காணுமோ இந்தத் திரையுலகு.

2 comments:

  1. இந்தபடம் இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த khuddaar என்ற படம் ஆனாலும் படிக்காதவன் சூப்பர் ஹிட் படம்தான்

    ReplyDelete
  2. ஆமாம் நண்பரே

    ReplyDelete