Pages

Thursday, August 20, 2015

செவ்வந்தி திரைப்படப் பாடல்கள் வந்த போது


அப்போதெல்லாம் அயற் கிராமமான சுன்னாகம் பொது நூலகத்திற்கு ஓடுவேன். தமிழகத்தில் இருந்து வரும் வித விதமான பத்திரிகைகள் படிக்க. அதுவும் குறிப்பாக தினத்தந்தி வெள்ளிமலர்.  

தினத்தந்தி வெள்ளிமலரில் கலர் கலரான அழகான வடிவமைப்புடன் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு ஈடான  பட விளம்பரமொன்று வந்தபோது இசைஞானி இளையராஜாவைத் தவிர மிச்சது எல்லாமே அறிமுகமற்றதாக அமைந்திருந்தது. வழக்கம் போல இளையராஜா என்ற அமுதசுரபியில் நம்பிக்கை வைத்துக் கொண்டு அப்போதைய பொருளாதார நெருக்கடியில் ( ஹிஹி நமக்கெல்லாம் பாக்கெட் மணியும் இல்லை உசிலைமணியும் இல்லை) கையில் இருந்த காசை முதலிட்டு றெக்கோர்டிங் பார் இல் பதிவு பண்ணி ஆசையாகக் கொண்டு வந்து கேட்டால் அமுதசுரபி கை விடுமா என்ன?
அதுதான் செவ்வந்தி படப் பாடல்கள்.

"அன்பே ஆருயிரே" என்றொரு காதல் சோகப் பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியது.  http://www.youtube.com/watch?v=q70UdcTpeKc&sns=tw கடந்த வருடம் சூப்பர் சிங்கரில் சிறப்பு விருந்தினராக எஸ்.பி.பி வந்திருந்த போது ஒரு பையன் பாட, இந்தப் பாடலைத் தான் பாடியதையே மறந்து விட்டதாகச் சொன்னபோது நமக்குத் தான் ஆச்சரியம் கிளம்பியது. ஆனால் ரெக்கார்டு படைத்தவருக்கு இதுபோல் இன்னும் பல மறந்தே போயிருக்கும்.

ஜெயச்சந்திரன் & சுனந்தா  ஒரு அட்டகாஷ் பாட்டு ஜோடி. சுனந்தாவின் அறிமுகமும் ஜெயச்சந்திரனோடு ஜோடி கட்டிய "காதல் மயக்கம்" பாடலால் நிகழ்ந்ததால் செவ்வந்தி படத்துக்காகக் கூடு கட்டிய "செம்மீனே செம்மீனே" 
பாட்டிலும் அதே ரசதந்திரம்.
செம்மீனே செம்மீனே பாடலைக் கல்யாணக் கொண்டாட்டப் பாடலோடு சேர்த்து விடுவோம்.
 http://www.youtube.com/watch?v=BBeOajpOadA&sns=tw 
வாத்தியக் கூட்டிசையோடு கூடிக் குலாவும் சேர்ந்திசை குரல்கள் (கோரஸ்) ஐத் தவிர்க்காமல் கேட்டுக் கேட்டுச் சுவைக்க வேண்டும்.

இதே போல் இன்னொரு மெல்லிசை குரல் கூட்டணி அருண்மொழி & ஸ்வர்ணலதா. இருவரும் சேர்ந்து பாடிய "புன்னைவனப் 
பூங்குயிலே பூமகளே வா" 
 http://www.youtube.com/watch?v=upXge9OLt2E&sns=tw 
செம்மீனுடன் போட்டி போட்ட ஹிட். என் தனிப்பட்ட விருப்புப் பாடல் ஒப்பீட்டளவில் "புன்னைவனப் பூங்குயிலே" தான் அதுவும்
"என் கண்கள் சொல்லும் மொழி காதலே" என்று ஸ்வர்ணலதா உருகும் தருணம் கரைந்து விடுவேன்.
அது போல் "அலை ஓய்ந்து போகும் " என்று அருண்மொழி தொடங்கும் வகையறாவும்.

ஸ்வர்ணலதாவுக்கு இரட்டைப் பரிசு இந்தப்  படத்தில். "பொன்னாட்டம் பூவாட்டம் சின்னப் பொண்ணு"  http://www.youtube.com/watch?v=nZEJ4xHWQ58&sns=tw என்று கோரஸ் குரல்கள் பாடி ஆரம்பிக்க மனோ, ஸ்வர்ணலதா கொடுக்கும் இந்தச் சரக்கு பிரபு போன்றோர் படங்களுக்கு அப்போது சென்று சேர்ந்திக்க வேண்டியது.

படத்தில் பெண் தனிக்குரல் பாடலாக உமா ரமணன் பாடும் "வாசமல்லிப் பூவு பூவு" http://stream.shakthi.fm/ta/Sevanthi_www.shakthi.fm/shakthi.FM-Vasamally.mp3 இந்தப் பாடல் எல்லாம் எவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டாடியிருக்க வேண்டிய பாடல் ஹும்.

பாடல்களை கவிஞர் வாலி, முத்துலிங்கம், பொன்னடியான், பிறைசூடன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

ஒளிப்பதிவாளர் நிவாஸ் எழுபதுகளிலே கல்லுக்குள் ஈரம், எனக்காகக் காத்திரு போன்ற படங்களை இயக்கி மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் இயக்கிய படம் இந்த செவ்வந்தி.
அப்போது எம்.ஜி.ஆர் அதிமுகவில் அமைச்சராக விளங்கிய அரங்கநாயகத்தின் மகன் சந்தனபாண்டியன் தான் நாயகனாக அறிமுகமாகிறார் என்றும் கண்டுபிடிச்சாச்சு. மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்த ஶ்ரீஜா அப்போது தமிழில் மெளனம் சம்மதம், சேரன் பாண்டியன் படங்களில் நடித்தார். செவ்வந்தி அவருக்கு தனி நாயகி அந்தஸ்த்தையும் கொடுத்தது.

செவ்வந்தி படத்தால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு தூரம் நன்மை கிட்டியிருக்குமோ தெரியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் சந்தனபாண்டியன் & ஶ்ரீஜா ஜோடி திரையைத் தாண்டி நிஜத்திலும் மணம் முடித்தனர். சந்தனபாண்டியன், ஶ்ரீஜாவின் மகள் பேட்டி கூட சமீபத்தில் வந்தது. வயசாகிப் போச்சேடா கலியபெருமாள்.

சரி சந்தனபாண்டியன் & ஶ்ரீஜாவை விட்டு இசை ரசிகர் நமக்கு இந்தப் படத்தால்  21 ஆண்டுகள் தாண்டியும் தெவிட்டாத தேன் கிட்டியது இன்னொரு பேறு.


இந்தப் படத்தின் உதவி இயக்குநர் ரதன் சந்திரசேகர் இப்பதிவைக் கண்டு பகிர்ந்தது.
நன்றி KANA PRABA... உங்கள் பதிவில் இணையிலாப் பெருமகிழ்ச்சி எனக்கு....நான் முதன்முதலில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய படம். படம் பல்வேறு சிக்கல்களால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்தபோதும் - முதல்நாள்தொட்டு கடைசிநாள் வரை பணியாற்றிய ஒரே உதவி இயக்குனர் நான்தான்.  அப்பா....என்னவோர் அனுபவம்...என் இயக்கத்தில் வெளிவரப்போகும் 'என் பெயர் குமாரசாமி' படத்தை இயக்கும்போது எனக்கு பல இடங்களில் கை கொடுத்தது இந்தப் படத்தின் 'அசிஸ்டென்ட் ' அனுபவங்கள்தாம்.  என் பெயர் குமாரசாமியின் டைட்டிலிலும்  'முதல் வணக்கம் - ஒளிப்பதிவாளர் இயக்குனர் பி.எஸ்.நிவாஸ்.' என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். 

செவ்வந்தி பாடல்களை  சுளைசுளையாக சுவைத்திருக்கிறீர்கள்...நன்றி. பாடல்கள் குறித்து நீங்கள்  பதிவிட்டிருப்பதனால்...'பொன்னாட்டம் பூவாட்டம்' பாடல் குறித்த ஒரு சுவையான தகவலை கீழே பகிர்ந்திருக்கிறேன்....உங்களுக்கு பயன்படக் கூடும்......

நான் முதன்முதலில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய படம் 'செவ்வந்தி'. 

அந்தப்  படத்தின் படப்பிடிப்புக்காக கிளம்பிய நேரத்தில்...இளையராஜா படு பிசி. அவரது பாடல்களுக்காக க்யூவில் நின்றுகொண்டிருந்தார்கள் .  படப்பிடிப்பு தளத்தில் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான நிவாஸ் அவர்களுக்கு ஒரு டைட்டில் பாடல் இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. நாங்கள் இருப்பதோ ஊட்டியில் உள்ளத்தி என்கிற ஒரு மலை கிராமத்தில். இளையராஜாவிடம் வந்து ட்யூன் கேட்டு வாங்கி வர நேரமில்லை. நிவாஸ் அவர்கள் என்ன செய்தார் தெரியுமா?

'ஜானி' படத்தின் ஒரு பாடல் காசெட்டை வாங்கி வரச் செய்து...அதில் வரும் 'ஆசையக் காத்துல தூதுவிட்டு.....'பாடலை டேப் ரெக்கார்டரில் ஒளிபரப்பி அதற்கு நடனத்தை கம்போஸ் செய்யும்படி டான்ஸ் மாஸ்டர் சின்னாவிடம் கூறினார். 'ஜானி' படப் பாடலுக்கு நடன அசைவுகள் படமாக்கப்பட்டன. சினிமா தெரியாத நாங்கள் சிலபேர்  (வடிவேலு வார்த்தையில் சொல்வதானால் 'அப்ரசண்டிசுகள்'....)   முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

படப்பிடிப்பு முடித்து அந்தப் பாடலுக்கான புட்டேஜுகளை  எடிட் செய்து 'ஜானி' பாடலை உருவிவிட்டு  இளையராஜாவிடம் கொண்டு போய்  'பப்பரப்பே' எனக் காட்டினோம். அதற்கு ஓரிரு மணிநேரத்தில் ட்யூனையும் பின்னணி இசையையும் கம்போஸ் செய்து அடுத்த நாள் வாலியை வரச் சொல்லி பாடல் எழுதி வாங்கி , பதிவு செய்தும் கொடுத்துவிட்டார் இசைஞானி. நாங்கள் மலைத்து நின்றோம். எங்களைப் பார்த்து நிவாஸ் அவர்கள் சிரித்த நமுட்டுச் சிரிப்பில் இளையராஜாவின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கை தெறித்து விழுந்தது. 

 'பொன்னாட்டம் பூவாட்டம்' வீடியோவில் 'ஜானி' பாடலைப் பொருத்திப் பார்க்கவேண்டும் என்கிற ஆசை என் நெஞ்சில் நெடுநாளாய்க் கிடக்கிறது....


3 comments:

  1. Thanks for the details.Sathi

    ReplyDelete
  2. இந்தப் படப்பாடல்கள் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும். புன்னைவனப் பூங்குயிலே பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கக் காரணம் சுவர்ணலதாவின் கிறங்கடிக்கும் குரல்.

    ReplyDelete