Pages

Friday, June 19, 2015

சஹானா சாரல் தூவுதோ - மழைப்பூக்களின் பாட்டு


"சஹானா சாரல் தூவுதோ" மழைப்பூக்களின் பாட்டு

கண்ணாடிச் சன்னலின் உருண்டைப் புள்ளியாகப் பட்டுத் தெறிந்து அப்படியே இழுபட்டுக் கீழிறங்குகின்றன மழைத் துளியின் கோடுகள், சிட்னி ரயிலில் கூட்டமில்லாத காலை ஏழுமணிப் பயணத்தில். மழைப்புள்ளிகள் ஜன்னலில் திட்டுத் திட்டாகப் பரவி மறு முனையில் இருந்து சினேக விசாரிப்பாய்.

"சஹானா சாரல் தூவுதோ" காதுக்குள் கண்கூடாகத் தொனித்த அந்த மழைத் துளியின் தெறிப்புகளுக்கு இசை வடிவம் கொடுக்குமாற் போல மலருகின்றது இன்றைய காலை.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன் A380 என்ற காண்டாமிருகப் பயணி வண்டி சிங்கையில் இருந்து சிட்னி நோக்கிப் பயணிக்கிறது. நெருக்கம் காட்டாத அகன்ற இருக்கை, ஹெட்ஃபோனால் காதுகள் நத்தை தன் கூட்டுக்குள் சுருக்கிக் கொண்டது போல இசைக்குள் அடைக்கலம். 

சாக்ஸ் ஆலாபனை எழுப்ப 
2.27 நிமிடத்தில் வந்து சறுக்கிக் கொண்டே மெல்ல எழும்புமே ஒரு இசை அந்தக் கணம் விமானப் பயணத்திலும் சன்னலின் முத்தம் பதித்தன மழைத் துளிகள்.
"தீம் தரனன தீம் தரனன திரனன திரனன" என்று அந்த இசையை வாரியணைக்கும் ரஹ்மானுடன் சேர்ந்த கூட்டுக் குரல்களைக் கேட்கும் போது மழையின் நர்த்தனம் தான் அதைக் காட்சிப்படுத்த முடியும்.
எட்டு வருடங்களுக்கு முன்னான அந்த விமானப் பயணம் அது. விமானத்தின் பிரத்தியோக இசைப்பெட்டியில் சேமித்து வைத்திருந்த பாடலில் ஒன்றாக இதுவும் இருந்தது.
அன்று வானத்தில் மிதக்கும் போது தந்த மழைச் சுகம் இன்று தண்டவாளத்தில் வழுக்கிப் பயணிக்கும் வண்டியில்.

உதித் நாராயணனின் தேங்காய் உரிக்கும் தமிழோடு சின்மயி மெல்லிசைக் குரல் ஜோடி போடும். பாடலில் தனக்கான ஒவ்வொரு சொல்லையும் நோகாமல் வளைத்தும் நெளித்தும் கொடுத்த வகையில் சின்மயி வெகு சிறப்பாக உழைத்திருக்கிறார்.

"தலை முதல் கால் வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்து விடு" என்று கிசுகிசுக்கும் போது பின்னால் தாள வாத்தியம் டுடுடுடும்ம்ம்மென்று  ஆரவாரமின்றி இழுபட்டு அப்படியே மிருதங்கத்திடம் போகும் போது இன்னும் கொஞ்சம் அதிகமாகவே அந்தத் தாளத்தைப் பின்னணியில் கொடுத்துக் கொண்டே போகுமே, ஹெட்போனில் மிக நெருக்கமாக இந்தப் பாடலோடு உட்கார்ந்து கொள்ளும் போது அந்த நொடிகள் தரும் பரவசமே தனி.

ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் இதுவரை வந்த பாடல்களில் ஆகச் சிறந்த பாடலாக இதையே என் பட்டியலில் முதலில் சேர்ப்பேன்.

பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை (மழைப்) பூக்களில் நிரப்பட்டுமா 

பிஞ்சுக் கால்களைத் தொப்பென்று பதித்துக் குதித்து விளையாடும் குழந்தை போல
சன்னல் கண்ணாடியில் குதிக்கும் மழைத் துளிகள்

 http://www.youtube.com/watch?v=MSCBx07ENGQ&sns=tw 

No comments:

Post a Comment