"சொல்லுக்கும் தெரியாமல்
சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்கும் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே"
"சொல்லுக்கும் அர்த்தத்துக்கும்
தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம்
சொர்க்கத்தில் சேராது"
'என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்" பாடலின் முத்தாய்ப்பாக அமைந்து, இந்தப் பாடலை நினைக்கும் போது முதலில் முணுமுணுக்க வைப்பதும், பாடலின் இந்த வரிகளைக் கடக்கும் போதெல்லாம் கற்பனையில் அந்தக் காதலர்களுக்கிடையிலான நேசத்தை மனக் கண் முன் எடுத்து வரத் தூண்டும்.
காதலர்களுக்கிடையில் பரிமாறிக் கொள்ளும் அன்பின் வெளிப்பாட்டினை இம்மாதிரி தர்க்க ரீதியாகப் பேசிக் கொள்ளுமாற் போல அமைந்த திரையிசைப் பாடல் வரிகள் ரசிக்க வைப்பவை. வைரமுத்து அவர்கள் எழுதும் போது கொஞ்சம் அதிகப்படியான இலக்கியச் சாயம் போட்டிருந்தால் இவ்வளவு தூரம் நெருங்கியிருக்குமோ தெரியாது.
இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் வாத்தியப் பயன்பாட்டில் புதுமையைப் புகுத்தினாலும் மெட்டுக் கட்டிய வகையில் அவருக்கு முந்திய காலத்து மெல்லிசை மன்னர் யுகத்தை நினைவுபடுத்துமாற் போல எனக்குத் தோன்றும். ஏ.ஆர்.ரஹ்மான் காலத்தில் இதே மாதிரியான ஒப்புவமையைக் காட்ட முனைந்தால் 'என் வீட்டுத் தோட்டத்தில்' பாடல் தான் முன்னே வரும்.
'ஜென்டில் மேன்' திரைப்படம் தான் ரஹ்மானின் முந்திய படங்களை விட
அவரின் இசையின் பரிமாணங்களை அகலத் திறந்த படம். குறிப்பாக 'என் வீட்டுத் தோட்டத்தில்' பாடல் அவர் முன்னர் கொடுத்த படங்களின் காதல் மெலடியில் இருந்து தனித்து நிற்கும்.
ஜூனியர் போஸ்ட் இதழ் விகடன் குழுமத்தில் வந்த வேளை அறிமுக இயக்குநர் ஷங்கரின் 'ஜென்டில்மேன்' படம் வருவது குறித்த பேட்டி ஒரு பக்க மூலையில் வந்திருந்தது. அந்தச் சின்னப்
பொடியரைச் சாதித்துக் காட்ட வைத்துப் பெருமையைத் தந்த படம்.
இந்தப் பாடல் இவ்வளவு சிறப்பாக வருவதற்கு பாடகர் தேர்வும் முக்கிய காரணியாக அமைகின்றது. மிகவும் பயந்த சுபாவம் கொண்ட, வெட்கத்தோடு தன் நேசத்தைப் பகிரும் காதலியாக அச்சொட்டாகப் பொருந்துகின்றது சுஜாதாவின் குரல். இடையில் வரும் ம்ம்ம் என்ற ஹம்மிங் இல் வெட்கத்தோடு தன் பெருவிரலால் கிராமத்து மண்ணைக் கிளறி அளையும் காதலி போல.
அதற்கு மாறான ஒரு மிடுக்கான காதலனாக வலம் வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரலின் ஏற்ற இறக்கங்களும் கிண்டல் சிரிப்பே இசையாகவும், அவரின் பாடல் வரிகள் முடியும் போது அமையும் "கிடையாது" "சேராது" போன்ற இடங்களில் வித்தியாசப்படுத்திக் கொடுக்கும் போதும் தான் திரையிசைப் பாடகர் பணி என்பது அவ்வளவு சுலபமில்லை என்று பதிய வைக்கிறார்.
சுஜாதா பட படவென்று தன் ஆசையைக் கொட்டித் தீர்க்கும் போது நிறுத்தி நிதானமாக எஸ்.பி.பி பாடுவது போல வரும் பகுதிகளையும் நுணுக்கமாகக் கவனித்து அனுபவிக்கலாம்.
'என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்' காலை ரயில் பயணத்திலும் மாலை சாய்ந்து வீடு திரும்பும் போதும் கேட்கிறேன், கேட்கிறேன் அலுக்கவில்லை, இந்தப் பாடல் கொணர்ந்து வரும் அந்தக் கால நினைவுகளும் கூடச் சுகமே.
http://www.youtube.com/watch?v=TsNNIm9Dab4&sns=tw
No comments:
Post a Comment