நீண்ட நாட்களாக மீசை முருகேசைக் காணவில்லை இறந்திருப்பாரோ என்று நினைத்திருந்த வேளை மூன்று மாதங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சகோதர ஒளிபரப்பான புதுயுகம் தொலைக்காட்சியின் விசேட பேட்டி ஒன்றில் கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.
ஆஜானுபாகுவான உருவமும், எங்களூர் கந்தசுவாமி கோயிலின் கடா வாகனத்தின் கொம்பு போன்ற வளைந்து நீண்ட முறுக்கு மீசை தான் மீசை முருகேஷ் இன் அடையாளம். படங்களில் இவர் தோன்றி நடிக்கும் காட்சிகளில் சிரிக்கும் போது உடம்புதான் இன்னும் வேகமாக ஆடும்.
கண்கள் குவித்து இவர் சிரிக்கும் அழகைப் பார்க்கும் போது சொந்தக்காரத் தாத்தாவாகச் சொந்தம் கொண்டாடுவார்.
"உயிரே உனக்காக" படம் தான் இவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது.
இடையில் நிறையப் படங்கள் குறிப்பாக எண்பதுகளின் தமிழ் சினிமாவில் மீசை முருகேஷ் தவிர்க்கமுடியாத குணச்சித்திரம்.
ஆண்பாவம் படத்தில் சீதாவின் தந்தையாக வந்து இன்னும் அழுத்தமாக மனதில் பதிந்தார். http://youtu.be/PKYE8GryHfo
"பூவே உனக்காக" படத்தில் விஜய், சார்லி வீடு தேடி வரும்போது "பாட்டும் நானே பாவமும் நானே" பாடி வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தவர். அந்தக் காட்சியின் ஆரம்பம் வைதேகி காத்திருந்தாள் படத்தில் இரவானதும் வெள்ளைச்சாமி விஜய்காந்த் பாட ஆரம்பித்ததும் ஊரே அமைதியாகக் கேட்கும் காட்சிக்கு நேரெதிராக அமைக்கப்பட்டிருக்கும்.
மீசை முருகேஷ் அவர்கள் தேர்ந்த வாத்தியக்காரர். அவருக்கு எண்ணற்ற வாத்தியக்கருவிகளை வாசிக்கும் ஆளுமை உண்டு. சொல்லப்போனால் ஜலதரங்கம் என்ற வாசிப்பை நான் முதன்முதலில் பார்த்ததே இவர் எண்பதுகளில் பங்கேற்ற ஏதோவொரு மேடை நிகழ்ச்சியின் வீடியோ வழியாகத்தான்.
கே.பாலசந்தருக்கு இம்மாதிரி ஆளுமைகளைக் கண்டால் குஷி பிறந்து தன்னுடைய படங்களில் ஏதாவதொன்றில் ஒரு கதாபாத்திரம் ஆக்கிவிடுவார். அது போலவே. உன்னால் முடியும் தம்பி படத்திலும் மீசை முருகேஷ் அவர்களின் தந்தை கொண்டிருந்த தொழிலான தவில் வாத்தியக்காரராக வந்து சிறப்பித்திருப்பார்.
புதுயுகம் தொலைக்காட்சிப் பேட்டிக்கு வந்திருந்தார். காலமாற்றத்தில் உடம்பு இலேசாக உருக்குலைந்திருந்தாலும் ஆள் மாறவில்லை.
ஐரோப்பாவில் தன்னுடைய இசைக்கச்சேரியை முடித்துவிட்டுத் திரும்பும் போது திடீர் ஏற்பாடாகத் தென்னாபிரிக்காவில் கச்சேரி செய்ய இவரை வற்புறுத்தி அழைத்துப் போனார்களாம். தென்னாபிரிக்காவில் இறங்கி விமான நிலையத்தில் இருந்து காரில் போகும் போது விபத்துக்குள்ளாகிப் பலத்த காயங்கள் ஏற்பட்டு வருடக்கணக்கில் முடங்கிப் போனாராம்.
அந்தப் பேட்டியின் ஆரம்பத்தில் அவர் தொலைந்த ரகசியத்தைச் சொல்லிவிட்டு கலகலப்பாகப் பேட்டியைத் தொடர்ந்தார்.
மீசை முருகேஷ் அவர்கள் 85 வயதைத் தொட்டாலும் அவரின் இருப்பு மனதில் சந்தோஷத்தை வருவித்தது அப்போது.
கடந்த சனிக்கிழமை மீசை முருகேஷ் காலமாகிவிட்டார் என்ற செய்தியைக் கேட்டபோது முன் கொண்ட சந்தோஷத்தைக் குழப்பியது செய்தது அவரின் பிரிவு தந்த துயர். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
மீசை முருகேஷ் குறித்து @tkadaibench தயாரித்த சிறு காணொளி
சிறந்த இரங்கற் கட்டுரை.
ReplyDeleteamas32
உள்ளத்தைத் தொட்ட உருக்கமான கண்ணீர் அஞ்சலி! மீசை முருகேசன் அவர்களின் ஆன்மா இனி உறங்கட்டும்.
ReplyDelete