துரதிஷ்டத்தை அதிஷ்டமாக மாற்றும் வல்லமை கொண்ட இசை என்று இந்தப் பாடலை முன்னுதாரணப்படுத்தலாம். இல்லையா பின்னே, நிழல்கள் திரைப்படத்துக்காக எஸ்.ஜானகி பாட இசைஞானி இளையராஜா இசையில் இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இசைத்தட்டிலும் வெளிவந்த நிலையிலும் படமாக்காமல் கைவிடப்பட்ட பாடல்.
பின்னர் எப்படி அதிஷ்டத்தை வரவழைத்தது?
எண்பதுகளில் தெலுங்கில் முன்னணி இயக்குனராகக் கலக்கிக் கொண்டிருந்த வம்சி தன்னுடைய "சித்தாரா" திரைப்படத்துக்காக இந்தப் பாடலின் அதே மெட்டுடன் இசைக் கோர்வையைப் பயன்படுத்திக் கொண்டார். தெலுங்கிலும் அதே எஸ்.ஜானகி தான் பாடகி. இந்தப் பாடலைப் பாடியதற்காக எஸ்.ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது அதை வாங்கிக் கொடுத்தது பாடல் மீளப் பயன்படுத்தப்பட்ட சித்தாரா திரைப்படம். இதோ அந்த மீளப் பயன்பட்ட பாடல் https://m.youtube.com/watch?v=5yiYUP7t-uw
இயக்குனர் வம்சி எண்பதுகளில் தீவிர இளையராஜா விசிறி. தமிழில் நாம் கேட்ட பல பாடல்கள் தெலுங்கிலும் இவரின் புண்ணியத்தால் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன. வம்சி இயக்கிய படங்களில் மீளவும் பயன்பட்ட தமிழ் மெட்டுகள் சிலதை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன் (இரண்டாவது பாடல் தவிர) http://www.radiospathy.com/2013/04/68.html
எஸ்.ஜானகியைப் பொறுத்தவரை அவருக்கு நெருக்கமான பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று என்று சொல்லியிருக்கிறார். முதலில் இந்தப் பாடல் தமிழில் படமாக்கப்படாத வருத்தமும் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். எத்தனை ஆயிரம் பாடல்களைப் பாடிய பெரும் பாடகிக்கு இந்தப் பாடலின் மீதான ஈர்ப்பு இருப்பதில் இருந்தே இதன் மகத்துவம் புரியும்.
ஒரு பாடல் இசையமைக்கப்பட்டுப் பின்னர் படமாக்கப்படாது போவது திரையுலகின் நிரந்தர சாபக்கேடு. அதிலும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு இதில் என்ன அப்படி ராசியோ தெரியவில்லை. "மலர்களே நாதஸ்வரங்கள்" (கிழக்கே போகும் ரயில்), "புத்தம் புதுக் காலை" (அலைகள் ஓய்வதில்லை), "சந்திக்கத் துடித்தேன் பெண்மானே" (வேதம் புதிது) என்ற வரிசையில் "தூரத்தில் நான் கண்ட உன் முகம்" (நிழல்கள்) பாடலும் சேர்ந்து விட்டது. இந்தப் பாடல் மட்டும் படமாக்கப்பட்டு ஒருக்கால் தேசிய விருதை மூலப்பாடலான தமிழ் பாடலே சுவீகரித்துக் கொண்டிருந்தால் பாரதிராஜா படத்தில் பாடி இரண்டாவது தடவை தேசிய விருது பெற்ற் பாடகி எஸ்.ஜானகி என்ற பெருமை கிட்டியிருக்கும். ஏனென்றால் எஸ்.ஜானகிக்கு முதல் தேசிய விருதைக் கொடுத்தது பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தின் "செந்தூரப் பூவே" என்ற கங்கை அமரன் எழுதிய பாடல்.
"தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம். இந்தப் பாடல் படத்தில் இன்னொரு நாயகி பின்னாளில் பாலசந்தரின் ரயில் சினேகம் படத்தில் அமுதா என்ற பெயரில் நடித்தவருக்காக எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்த நாயகி வரும் காட்சிப் பின்னணியில் மீராவின் சிலை ஒன்று இருக்கும்.
இந்தப் பாடலை எல்லாம் ஒரு காலத்தில் நள்ளிரவு கடந்து வானொலி ஒலிபரப்புச் செய்யும் போது தனியே நான் மட்டும் வானொலிக்கூடத்தில் இருக்கும் சூழலில் கொடுத்த பாட்டு. அந்த ஏகாந்த இரவில் இதைக் கேட்கும் போது கிட்டும் சுகமே தனி. சோகப்பாடல்களைக் கேட்கும் போது பாடுபவர் வழியே நம் மனக்கவலைகளுக்கு வடிகால் கிடைக்கிறது. கூட ஒருத்தர் இருக்கிறாரே என்பதை அரூபமாக வெளிப்படுத்தி நிற்கும் பாங்கில்.
எஸ்.ஜானகியிடம் இம்மாதிரிப் பாடல்களைக் கொடுக்கும் போது பங்கமில்லாது கொடுத்துவிடுவார் இதைச் சொல்லும் போது "பழச மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது" (ராசாவே உன்னை நம்பி) பாடலை நினைப்பூட்டுகிறார் இவர். எஸ்.ஜானகியிடம் பிடிக்காத விஷயமே இதுதான். அவரின் ஏதாவது ஒரு பாடலைச் சிலாகித்துப் பேச ஆரம்பித்தால் இன்னொரு மகத்தான பாடலில் கொண்டு போய் நிறுத்திவிடுவார்.
"தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலைக் கேட்டவுடன் அப்படியே இழுத்துப் போய் "கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்" (மனதில் உறுதி வேண்டும்) பாடலில் நிறுத்திவிடும். அவ்வளவு தூரம் நெருங்கிய சொந்தங்களாக இந்த இரு பாடல்களும் எனக்குத் தோன்றும். ஒரே ரகம் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். ஒரே ராகமா என்பதை இசை வல்லுநர்கள் தான் சொல்ல வேண்டும்.
நிழல்கள் படத்தில் மொத்தம் நான்கு பாடலாசிரியர்கள். மடை திறந்து பாடலை வாலி எழுத, பூங்கதவே பாடல் கங்கை அமரன் கொடுக்க, பொன்மாலை பொழுது பாடலோடு வைரமுத்து அறிமுகமாக, பஞ்சு அருணாசலம் எழுதியது இந்த "தூரத்தில் நான் கண்ட உன் முகம்". பாரதிராஜா படங்களில் அதிகளவு பாடலாசிரியர் பணியாற்றிய படங்களில் ஒன்று.
பாடலின் ஆரம்பத்தில் மெலிதான இசையோடு ஜானகி கொடுக்கும் ஆலாபனையைத் தொடர்ந்து
"தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்"
என்று பாடும் வரிகளை மிகவும் சன்னமாகக் கொடுத்துவிட்டு அதை வரிகளை மீண்டும் பாடும் போது கவனியுங்கள் இன்னும் கொஞ்சம் ஏற்றிப் பாடியிருப்பார். தொலைவின் நீளத்தைத் தன் குரல் வழியே தொனிக்கும் சிறப்பு அது.
பாடலின் மைய இசையில் ஒற்றை வயலின் இயலாமையின் பிரதிபலிப்பாகவும், ஒரு சேர ஒலிக்கும் வயலின்களின் கூட்டு மனதின் ஆர்ப்பரிப்பைப் பகிர்வது போல இருக்கும்.
தன் மனக்கிடக்கைக் கொட்டிக் கொண்டே போய் ஈற்றில்
"ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா"
என்று தன் மனதை ஓய்வெடுக்கச் சொல்லுமாற் போலக் களைத்து விழுகிறது ஜானகியின் குரல்.
34 வருடங்களுக்கு முன்னர் வந்த நிழல்கள் என்றதொரு ஒரு தோல்விப் படம், அந்தப் படத்திலே வராத பாடல் போன்ற துரதிஷ்டமெல்லாம் களைந்து தன்னைக் கம்பீரமாக இசை ரசிகர் மனதில் வைத்திருக்கிறது இந்தப் பாடல்.
எனக்கு ஒரு மன நிறைவு என்னவெனில் எத்தனையோ பாடல்களைப் பற்றி ரசனைக் குறிப்புகள் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்தப் பாடலைக் குறிப்பிட்டு இதைப் பற்றி எழுத வேண்டும் என்று ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் அன்புக் கட்டளையிட்ட நண்பர் Karthik Natarajan இன் வேண்டுகோளை இன்று என் மனது நிறைவேற்றியிருக்கிறது.
தூரத்தில் நான் கண்ட உன் முகம் பாடலைப் படத்தில் வந்த காட்சிகளோடு மீளப் பொருத்திய காணொளி இது. இந்தக் காட்சியில் வரும் நாயகிக்காக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிராது. நான் மேலே குறிப்பிட்ட மற்ற நாயகிக்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.
http://www.youtube.com/watch?v=QvtwHqc1ArU&sns=em
One more.. "Oru Kanam Oru Yougamaga" song exists only in the Audio Cassettes, but not in the movie version.
ReplyDeletePrabha. I got one more..
ReplyDelete"Rasave Unna Nambi" from Mudhal Mariyaathai is also there.. I think B.Raja could have maintained that as a 'so called' sentiment. ;-)
//தொலைவின் நீளத்தைத் தன் குரல் வழியே தொனிக்கும் சிறப்பு அது.//
ReplyDeleteமிகச் சரியான கவனிப்பு இது..
இது போல வேறு சில பாடல்களிலும் உணர்ந்திருக்கிறேன்..
கண்ணா ...என ஜானகி உருகி அழைத்ததும் வரும் வயலின் உணர்த்தும் அந்தத் தொலைவை...இது போல உணர்வுப்பூர்வமாக இசைப்பதால் தான் கொண்டாடுகிறோம் ராஜாவை
umakrish
நீங்க கொடுத்த லிங்கில் உள்ள பாடல்களை எல்லாம் ஒவ்வொன்றாக கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன். தூரத்தில் நான் கண்ட உன் முகம் பாடலை பலமுறை கேட்டாயிற்று. ரொம்ப அருமை :-)
ReplyDeleteamas32
பிரசன்னா கண்ணன் //
ReplyDeleteஆமாம் ;-) அவரின் செண்டிமெண்ட் இரைக்கு நல்ல பாடல்கள் பலிகடா போல
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமா
ReplyDeleteamas அம்மா நன்றி ;)
ReplyDeleteAwesome description
ReplyDelete