Pages

Friday, October 24, 2014

ஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமார் நினைவில்


ஒரு இயக்குநரின் தோளின் இருபுறமும் பயணிக்க வேண்டியவர்களில் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியமானது. கட்புலனை கைவரப்பெறாதோர் எவ்வளவு தூரம் காட்சியோட்டத்தில் இழைந்திருக்கும் வசனத்தையும் அத்தோடு நயமாகப் பொருந்தியிருக்கும் இசையமைப்பையும் உள்வாங்கி அந்தக் கலைப்படைப்பைக் கச்சிதமாக உணர முடியும் வல்லமை கிட்டும் பாங்கிலேயே ஒலியைக் கேட்டு நுகரமுடியாதோருக்கு ஒரு ஒளிப்பதிவாளரின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்படுகின்றது.

இவற்றுக்கும் மேலாக ஒரு இயக்குநரின் மனக்கண்ணில் ஓடுவதை உள்ளது உள்ளவாறோ அல்லது அதற்கும் மேலாகவோ கச்சிதமாகத் தன் கேமராக் கண்ணுக்குள் அடக்கும் ஒளிப்பதிவாளரே இயக்குநரின் ஜீவனாக நின்று தொழிற்படுகின்றார்.

"அழகிய கண்ணே உறவுகள் நீயே" பாடல் ஒன்றே போதும் உதிரிப்பூக்கள் படத்தில் பொதிந்திருக்கும் வலியை இயக்குநரின் சார்பில் ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் பங்கு போட்டுக்கொண்டு செய்த கைங்கர்யத்தை. http://www.youtube.com/watch?v=VhZrCanB9L0 

அந்தப் பாடலில் அந்தப் பாடலில் விளையாடும் குழந்தை, சோப்பு போட்ட எரிச்சலோடு துள்ளிக் கொண்டே குளிக்கும் அண்ணன்காரன், துன்பச்சுமையை அப்படியே தன் முகம் வழியே வாக்குமூலம் பகிரும் இவர்களின் தாய் என்று அந்தப் பாடலின் காட்சியோட்டத்தின் சில துளிகளே ஒரு நாவலின் பல்வேறு பக்கங்களைத் திரட்டித் தந்தது போல.
35 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த இந்த "உதிரிப்பூக்கள்" படத்தின் வாயிலாகத் தம் நேர்மையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர் மகேந்திரன், இசையமைப்பாளர் இளையராஜா இவர்களோடு சில நாட்களுக்கு முன்னர் மறைந்த ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.

இயக்குநர் மகேந்திரனைப் பொறுத்தவரையில் அசோக்குமார் கிடைத்திராவிட்டாலும் இன்னொரு ஒளிப்பதிவாளரைத் தன்னுடைய படைப்பாற்றலின் நிலைக்கண்ணாடியாகத் தான் வரித்திருப்பார். அவரின் முதற்படமான முள்ளும் மலரும் படமே இதற்குச் சாட்சி. முள்ளும் மலரும் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா படம் எடுக்கும் போதே சில பல தயாரிப்புச் சிக்கல்கள் மற்றும் இவரும் சொந்தமாகப் படம் இயக்கும் முனைப்போடு கிளம்பியது அடுத்த படமான உதிரிப்பூக்கள் படத்தில் அசோக்குமாருடன் மகேந்திரன் இணைய அச்சாரம் வைத்தது.

தொடர்ந்து பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு என்று தொடர்ந்தது மகேந்திரன் - அசோக்குமார் கூட்டணி. இதில் நெஞ்சத்தைக் கிள்ளாதே அசோக்குமாருக்குத் தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படம். நண்டு படம் இயக்குநர் மகேந்திரனை மீறித் தயாரிப்பாளர் கைமா பண்ணிச் சிதைத்திருந்தாலும் அந்தப் படத்தில் வரும் அள்ளித்தந்த பூமி, மஞ்சள் வெய்யில் பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் ஏமாற்றாமல் இன்னும் அந்தப் படத்தின் பேர் சொல்ல வைக்கும். அதே போல் ஜானி படத்தின் தொழில்நுட்பச் சிறப்பில் அசோக்குமாரும் பங்கெடுத்துக் கொண்டார். அசோக்குமாரின் ஒளிப்பதிவுத்திறனை மகேந்திரனே கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார். இளையராஜாவின் பாடல்கள் தரம் குன்றாது இந்தக் கூட்டணியால் மிளிர்ந்தன.

முதல் 3D திரைப்படமான மை டியர் குட்டிச்சாத்தான் படத்துக்கு அசோக்குமார் ஒளிப்பதிவு செய்தது இவருக்குக் கிட்டிய இன்னொரு மகுடம் எனலாம்.

பி.வாசு இயக்கிய படங்கள் பலவற்றில் ரவீந்திரன் முக்கிய ஒளிப்பதிவாளர். ஆனால் நடிகன், கட்டுமரக்காரன், மன்னன் போன்ற படங்களில் அசோக்குமாரும் பங்கு போட்டார். பவித்திரனின் சூரியன் படமும் ஷங்கரின் ஜீன்ஸ் படமும் அசோக்குமாரின் காமெராவின் பிரம்மாண்டத்தை உணர்த்தி நிற்கின்றன. குறிப்பாக சூரியன் படத்தை தியேட்டரில் அந்தக்காலத்தில் பார்த்தபோது கிட்டிய காட்சி அனுபவம் இன்னும் மனசுக்குள் ஒட்டியிருக்கு.

ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராவது திரையுலகம் காணும் நிகழ்வு. அசோக்குமார் இயக்குநராக "காமாக்னி" என்ற படத்தை ஹிந்தியில் இயக்கியபோது இசைத் தோள் கொடுத்தவர் இளையராஜா.

தொடர்ந்து  "அன்று பெய்த மழையில்" படத்தை இயக்கினார். அந்தப்படம் அப்போது பரபரப்பான சில்க் இன் கவர்ச்சி அலையால் வெகுவாகக் கவனிக்கப்பட்டது. அந்தப் படத்துக்கு இசை தாயன்பன். இவரின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனோ ஒரு சில படங்கள் தான் தாயன்பனுக்குக் கிட்டியது.

தெலுங்குத் திரை ரசிக உலகம்  மறக்காத காதல் படங்களில் அசோக்குமார் இயக்கிய "அபிநந்தனா" படம் முக்கியமானது. இது வழக்கமான அசோக்குமாரின் கவர்ச்சி, பாலியல் ஈர்ப்பு சார்ந்த படங்களில் இருந்து மாறுபட்ட அழகான காதல் கதை. கார்த்திக், ஷோபனா போன்றோர் நடித்த இந்தப் படம் தமிழில் "காதல் கீதம்" என்ற பெயரில் மொழி மாறியது. இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே அட்டகாச ரகம். இந்த மெட்டுகள் அன்பின் முகவரி, சிறைப்பறவை போன்ற படங்களின் பாடல்களாகவும் வந்திருக்கின்றன. காதல் கீதம் படத்தில் "மஞ்சள் அந்தி வேளையோ", "வாழ்வா சாவா", "பெண்மை கொண்ட மெளனம்" எல்லாம் அந்தக் காலத்து இளைஞரின் காதல் கீதங்கள்.

பின்னர் கங்கை அமரன் வசனம்,பாடல்கள் எழுதிய "தம்பிக்கு ஒரு பாட்டு" படம் இயக்குநராக அசோக்குமார் இளையராஜாவோடு சேர்ந்த முக்கிய படங்களில் ஒன்று என்பதற்கு இந்தக் கூட்டணியில் விளைந்த பாடல்கள் முக்கிய காரணம். "தை மாசம் கல்யாணம் அன்று காதல் ஊர்கோலம்" ஜெயச்சந்திரன், ஸ்வர்ணலதா பாடிய தெள்ளமுதல்லவா அது.

ஒளிப்பதிவாளராக, இயக்குநராக அசோக்குமார் நினைவுகூரப்படுவார் அவர் பணியாற்றிய முன் சொன்ன படங்களுக்காக.

பிற்சேர்க்கையாக ஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமாரின் ஒளியோவியத்தில் இருந்து

பருவமே புதிய பாடல் பாடு (நெஞ்சத்தைக் கிள்ளாதே)


அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா ( நண்டு)


காற்றில் எந்தன் கீதம் (ஜானி)


Manchu Kuruse Velalo  (அபிநந்தனா)

4 comments:

  1. நண்டு பாடல் போல இவர் நினைவு என்றும் வாழும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடையடடும்.

    ReplyDelete
  2. ஆத்மா சாந்தியடைய
    இறைவனைப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  3. IT IS PITY THAT NO DIRECTORS
    FROM THE INDUSTRY WHO USED MR ASHOK KUMAR FOR THEIR FILMS
    FAILED TO TURN UP AT THE
    FUNERAL . AN ACE
    CAMERAMAN WHOSE EXEMPLARY
    BACK-LIGHT PHOTOGRAPHY HELPED
    THE MOVIES TO HAVE RICH LOOK
    WAS IGNORED BY THE INDUSTRY.

    ReplyDelete
  4. காத்தவராயன்November 26, 2014 at 3:34 AM

    "உள்ளம் கவர்ந்த கள்வனை" மறக்க முடியுமே?

    ReplyDelete