Pages

Friday, September 27, 2013

இளையராஜா எனக்கு இன்னொரு தாய்


1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்டே எந்தப் பெரிய இலட்சியங்களோடும் உலாத்திக்கொண்டிருந்தேன் வீட்டின் கடைக்குட்டி,செல்லப்பிள்ளை வேறு. அந்த இளந்தாரி வயதிலும் அம்மா "இஞ்ச வா தீத்தி விடுறன்" என்று சோற்றுக்கவளத்தோடு வரவும் "எனக்கு புட்டும் முட்டைப்பொரியலும் தான் வேணும்" என்று அடம்பிடித்து அம்மாவை கஷ்டப்படுத்தி சாப்பிட்டு வளரும் அளவுக்கு கொடுமைக்காரன் நான். அந்த நேரம் அண்ணன் "நாட்டு நிலமை இப்பிடியே எப்பவும் இருக்காது, உனக்கு ஏதாவது செய்யவேணும்" என்று சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நேரம் டெய்லி நியூஸ் பத்திரிகையில் அவுஸ்திரேலியாவுக்கான உயர்கல்விப் படிப்பு விளம்பரமொன்று வந்திருந்தது. அண்ணனுக்கு ஏதோ பொறி தட்டியது போல அந்தக் கற்கை நெறியை ஒழுங்கு செய்வதற்கான நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு என்னை மெல்பர்னுக்கு அனுப்பி வைத்தார். எனக்கு சுட்டுப் போட்டாலும் சிங்களம் வராது ஆனால் விதி, நான்கு சிங்கள மாணவர்களுடன் என்னை அனுப்பி வைத்தது. பயணத்தில் எனக்காகவே வேண்டி கொஞ்சமே சேர்த்ததில் நிறைவாக இருந்தது ஃபைனாஸ் மியூசிக் செண்டரில் ஒலிப்பதிவு செய்த இளையராஜாவின் பாடல்கள். 

மெல்பர்னில் நான் வந்திறங்கிய இடம் St Kilda என்ற நகர்ப்பகுதி.

மெல்பர்னில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்வுக்காக நான் பயணப்படவேண்டி, நிகழ்ச்சி நடக்குமிடத்துக்கு அருகாமையிலுள்ள ஹோட்டல்களைத் தேடியபோது எனக்குத் தங்க இடம் கொடுத்த ஹோட்டல் அமைந்த இடம் St Kilda.

நான் அவுஸ்திரேலியா வந்தபோது இங்கே எனக்கென்று சொல்லிக்கொள்ளும்படி யாருமே இருக்கவில்லை. அண்ணன் தந்த கொஞ்ச டொலரையும் கணக்குப்பார்த்து ஒரு கோப்பி இலங்கை மதிப்பில் இவ்வளவா என்று மலைத்து பச்சைத்தண்ணியே போதும் என்று நிரப்பிக்கொள்வேன். வேலையும் இல்லை. நான் மெல்பர்ன் வந்த சில நாட்களிலேயே நாட்டில் யுத்த சூழல் மீண்டும் இன்னும் கடுமையாக. எங்கள் ஊரையே பெயர்த்தெடுத்துபோல காலியான நிலத்தை மட்டும் விட்டுவிட்டு கால் நடைகள் ஈறாக இராணுவக் கட்டுப்பாடில்லாத பிரதேசங்களைத் தேடி மக்கள் பெயர்ந்து கொண்டிருந்தார்கள். 1987 ஆம் ஆண்டுக்குப் பின் ஊரிலிருந்து வெளியுலகுக்கான தொலைத்தொடர்பு என்றால் வெறும் கடிதம் மட்டும் தான்.
கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு மேலாக என் பெற்றோர் எங்கே இருக்கிறார்கள், உயிருடன் இருக்கிறார்களா என்றே தெரியாத நிலை. நிதமும் காலையும் மாலையும் விமானக் குண்டு வீச்சிலும் ஷெல் தாக்குதல்களிலும் பத்து, நூறாக கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டவர்கள் குறித்த செய்திகள் மட்டும் பஞ்சமில்லாமல் வந்துகொண்டிருந்தன.
"அம்மா, உங்களை எவ்வளவெல்லாம் கஷ்டப்படுத்தியிருப்பேன், நீங்களும் அப்பாவும் எங்கே இருக்கிறீர்கள் என்றே தெரியாமல் கஷ்டப்படுகிறேன் அம்மா எப்படியாவது எங்கிருந்தாலும் பதில் போடுங்கள்" என்றெல்லாம் கடிதம் எழுதி கொழும்பிலிருக்கும் மாமாவின் முகவரிக்கு அனுப்பி வைத்தேன்.

சுற்றும் முற்றும் யாருமே இல்லாத அந்நியச் சூழல், கால்வயிறு நிறைந்தாலே போதும் என்று சொற்பமே இருக்கும் டொலரைக் கணக்குப்பார்த்து சிப்ஸையோ ஒரு வெறும் ப்ரெட் துண்டத்துடன் ஜாம் என வயிற்றுக்குமாக அந்தக் காலம் அப்போதுதான் என் துணையாக, இன்னும் நெருக்கமாக வந்தமர்ந்து கொண்டது இலங்கையிலிருந்து கொண்டுவந்த இளையராஜாவின் பாடல்கள். வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி பாட்டு ஒலிக்கும் போதெல்லாம் ஏழுகடலுக்கு அப்பாலிருந்து பறந்து வந்து என் அம்மாவே என் முதுகைத் தடவிவிடுவதுபோல உணர்வேன் சில்லிட்டு நிற்கும் மனசு. மேசையில் டேப் ரெக்கார்டரை வைத்து ராஜாவின் பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும் போது முகத்தை மேசையில் புதைத்து இறுகக் கண்களை மூடிக்கொண்டே அந்த உலகத்தில் மூழ்கிவிடுவேன். "மடை திறந்து தாவி வரும் நதியலை நான்" பாடலில் மூன்று நிமிடங்களைக் கடந்த நொடியில் ஆர்ப்பரிக்கும் வயலின் இசை போல ஓடிக்கொண்டிருந்தேன் ஓடிக்கொண்டிருந்தேன் ஓடிக் கொண்டே இருந்தேன். சில மாதங்களில் முட்டுப்பட்டு வேலை கிடைத்தாலும் நான்கு நாட்கள் இரவு எட்டு மணி முதல் காலை எட்டுமணி வரை அப்படியே ஓடிப்போய் குளித்துவிட்டு பல்கலைக்கழகம் ஓடவேண்டும். அந்நிய விருந்தாளியாக நாட்டில் எழுத்தில் வடிக்கமுடியா அவமானங்கள், வாய்விட்டுச் சொன்னாலும் புரிந்துணரமுடியா தோல்விகள் இவையெல்லாவற்றையும் புரிந்து ஒத்தடம் கொடுத்தது ஜீவனுள்ள ராஜாவின் இசை. அவை வெற்றி இலக்கைத் தொட்டபோது சந்தோஷங்களாக வெடித்தபோது "நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்" என்ற வரிகளுக்கு முன்னான கோரஸ் குரல்களாக துள்ளிக் குதித்தபோதும் எனக்கு அதை ஹெட்போன் மாட்டிக்கொண்டாட ராஜா இசையே தேவைப்பட்டது. என் துன்பங்களில் மட்டுமல்ல, இன்பங்களிலும் நான் கொண்டாடுவது ராஜாவின் பாடல்களோடுதான். ஏனென்றால் எனக்கு அதுதானே ஆதியும் அந்தமுமான பந்தம்.

புலம்பெயர்ந்து பதினெட்டு வருடங்கள் கடந்தோடி விட்டது. கடந்த பதினான்கு வருடம் என் ஆத்மதிருப்திக்காகக் கையிலெடுத்துக் கொண்ட வானொலிச்சேவையில் "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போலாகுமா" என்று ராஜாதான் அடியெடுத்துக் கொடுக்கிறார். அப்போதெல்லாம் இந்த வானொலி உலகத்திற்கெல்லாம் வருவேன் என்று கற்பனை கூடப்பண்ணியதில்லை. அதையெல்லாம் கடந்து மெல்பர்னுக்கு வந்த ராஜாவை விமான நிலையத்தில் வைத்து நம் வானொலி சார்பில் வரவேற்கும் அளவுக்கு ஆண்டவன் என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். மடை திறந்துப் பாடலில் உயரே எம்பிக்குதிக்கும் அளவுக்கு இந்த இசை நிகழ்ச்சியைக் காணும் ஆவலோடு மனம் பறக்கிறது.

பல வருஷங்கள் கழித்து நான் வந்திறங்கிய அதே St Kilda நகருக்குப் போகிறேன் இசைஞானியின் இன்னிசை நிகழ்வு காண. இன்று என்னைச் சூழவும் தெரியாத சனம் என்று மிகச்சிலரே உள்ள சூழலிலும் நான் நெருக்கமாக வைத்துக்கொள்வது இசைஞானி போட்டுக் கொடுத்த எண்ணற்ற திரவியங்களையே ஏனென்றால் எத்தனை மாறுதல் கண்டபோதும் மாறாத தாயுள்ளம் போல அது என்றுமே குறை வைத்ததில்லை. சூழ்நிலைகள் மாறும்போது பாராமுகமாய் இருக்கும் சொந்தங்கள் போலவோ, கூட இருந்தே சூது கொள்ளும் நட்புப் போல அது என்றும் வஞ்சித்ததில்லை அதனால் தான் நானும் ராஜாவின் இசைக்கு விசுவாசமாக இருக்கிறேன்.

எத்தனை பிள்ளைகளை ஈன்றெடுத்தாலும் தாய் என்றுமே அளவு பார்த்து அன்பை ஈட்டியதில்லை. ராஜாவின் கோடிக்கணக்கான இசை ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதை விட இளையராஜா எனக்கு இன்னொரு தாய் என்று சொல்வதை அறிந்தால் தாயகத்தில் இருக்கும் என் தாயும் பூரிப்பாள்.

நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம் இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம் 



 

20 comments:

  1. சூப்பர் :)))) தரிசனம் முடிஞ்சுட்டு வந்து சொல்லப்போகும் சுவாரஸ்யங்களை காணும் தருணத்திற்காக வெயிட்டிங் :))

    ReplyDelete
  2. கானா அண்ணா..

    ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது இந்த பதிவ படிக்க.

    கண்டிப்பாக பெருமிதம் தரக் கூடிய விஷயங்கள், உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் தான்.

    உங்கள் வாழ்க்கையில் நினைத்தவை எல்லாம் அடைய என் பிரார்த்தனைகள்.

    அன்புடன்
    ரேணுகா

    ReplyDelete
  3. ராஜாவின் ராகங்கள் தான் பலநேரத்தில் புலம்பெயர்நிலையில் மனதுக்கு ஒத்தடம் கொடுக்கும் ஊக்க மருந்து என்பது நிஜமான நிதர்சனம் பிரபா!

    ReplyDelete
  4. தல ஒன்னும் சொல்ல தோணல..பதிவு அப்படி...தெய்வத்தோட தரிசனம் முடிச்சிட்டு...இதே போல நிகழ்ச்சியை பகிருங்கள் ;))

    ReplyDelete
  5. பிரபா,

    நீங்கள் பலமுறை தொட்டுச்சென்ற உங்கள் வாழ்வின் பகுதிகள்தான். இங்கு இன்னொருமுறை ராஜாவையும் அருகில் வைத்துப் படிக்கும்போது அது தரும் மொத்த உருவம் கண்ணீரை வரவைத்துவிட்டது. பலரும் உணர்வதைப் போல நீங்கள் தாய் என்கிறீர்கள், ஜெயாடிவி வழங்கிய 2011 நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜ் ‘தாயுமானவர்’ என்று சொன்னார், அதுவும் சரிதான். நான் பல நேரங்களில் தந்தையாகப் பார்ப்பதுண்டு. எதுவாக இருந்தால் என்ன? தந்தையோ, தாயோ அன்பையும் அரவணைப்பையும் தர என்றும் ஓய்ந்ததில்லை, ஓயப்போவதுமில்லை. அருகிலோ தூரமோ எந்த வேறுபாடுமில்லை. நம் கூடவே வருவார், வருவார்கள், பிரபா. நமக்கென்றும் பஞ்சமில்லை.

    - செந்தில்.

    ReplyDelete
  6. அருமை!
    பல நேரங்களில் இளையராஜாவின் இசை மருந்தாகவே இருந்திருக்கிறது எனக்கும்.. இலங்கை குறித்த உம் நினைவிற்கும் நன்றி....

    concert கேட்டுவிட்டு பகிருங்கள்..படிக்க ஆவலோடு உள்ளோம்.

    ReplyDelete
  7. Sacrifices of your family and brother will not go waste. Hope u will have peaceful and happy life like what ur raja song gives u.

    ReplyDelete
  8. அருமை!
    பல நேரங்களில் இளையராஜாவின் இசை மருந்தாகவே இருந்திருக்கிறது எனக்கும்.. இலங்கை குறித்த உம் நினைவிற்கும் நன்றி....

    concert கேட்டுவிட்டு பகிருங்கள்..படிக்க ஆவலோடு உள்ளோம்.

    ReplyDelete
  9. காட்சியமைப்பை காணாமல் வெறும் ஒலியினால்...இல்லை... இல்லை ... இசையினால் நெஞ்சம் உருக்கும் இசைக்கோர்வையை தந்தருளியவர் ராஜாதான் என நிருபிக்க உங்களின் இந்த மற்றொரு பதிவும் சாட்சி.

    காணொளி கண்டு கூத்தாடும் நெஞ்சங்களுக்கு அல்ல...., ரேடியோ பொட்டியின் ஒலியலைகளை "நெஞ்சால்" கேட்ட மனதுக்கே புரியும் இந்த தாபம்.

    அற்புதமான சொல்லாடல்கள், தங்களின் வாழ்வின் நிகழ்வை கண்முன் நிலைநிறுத்தின.

    ReplyDelete
  10. Your writing made me emotional in the morning.

    Raja is always a companion for who are close to their own hearts.

    He speaks the language of the heart and that is the reason he connects with all who try to speak or understand the language of the heart.

    Feeling solace after hearing to his music is a phenomenal transformation.

    May God bless you and be close to your heart always.

    ReplyDelete
  11. இளையராசாவினது இசையால் வருடப்படாதவர்களை தமிழ் பேசும் உலகில் காண்பது அரிது. தொலைவில் செவிவழியாக நுழைந்த எத்தனையோ இசைக் கோலங்களால் கிறங்கிப் போனவர்களில் நானும் ஒருவன். இத்தனைக்கும் இந்த இசையை இரசித்ததற்காக அந்தக் கலைஞனுக்கு எந்தக் கைமாறையும் வழங்காத எத்தனையோ கோடிப் பேர்களில் நானும் ஒருவன். நாங்கள் வாங்கிய கசெற் - ஒலித் தட்டு - மற்றும் காணொலிகளுக்கு வழங்கிய காசு அவருக்குப் போய்ச் சேர்ந்திருக்குமா? எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.
    - தமிழன் என்ற தனித்துவமான தொன்மையின் நீட்சியிலான இசையை காற்றலையில் பரவிவிட்டு 'தமிழ் இசைஞனாய் தலை நிமிர்ந்து நடைபோடும்' இசைஞானியை இருகரம் கூப்பி வாழ்த்துவோம்!!

    ReplyDelete
  12. உங்கள் பதிவை படிக்கும்போது கவலையும் சந்தோஷமும் ஒரு சேர வருகிறது.

    ReplyDelete
  13. உங்கள் பதிவை படிக்கும்போது கவலையும் சந்தோஷமும் ஒரு சேர வருகிறது.

    ReplyDelete
  14. அற்புதம்.... எங்கள் மனசையும் சேர்த்து தொட்டுட்டீங்க சார். நன்றி.

    ReplyDelete

  15. ஊடகமாக்கி, உள் நுழைந்து
    மற்றோர்க்கும், உணவாகும் உன் இசை விருந்து, இசை ராஜனே,
    உன் இசைத் தென்றலால்
    வருடப்பட்டு, தாலாட்டால் வளர்க்கப்பட்ட
    இன்னொரு ஜீவனின் இனிய பதிவு...


    ReplyDelete
  16. நெகிழ்ச்சியான பதிவு! இன்ப துன்பங்களுடன், ஒவ்வொரு சம்பவங்களுடனும் ராஜாவின் இசை!

    @DineshanS

    ReplyDelete
  17. ஆழமான பதிவு பிரபா. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ராஜாவின் இசை நிச்சியமாக ஒரு தாய் தான். நானும் இதை உணர்திருக்கிறேன். ராஜாவை வானொலிப் பேட்டி நீங்கள் எடுக்க முடிந்தால் எங்களுக்கு வரப் பிரசாதமாக இருக்கும்.

    ReplyDelete
  18. For the first time I reading your feelings of the god Ilayaraja, I felt very much attached and so sent a friends request also. Thanks for sharing.

    ReplyDelete
  19. Thanks brother for this heart touching post....

    No one can give such a great feelings by music except ilayaraja(gnana desigan)......

    Thanks again gana prabha...

    ----Annamalai murugan-----

    ReplyDelete