Pages

Thursday, December 2, 2010

கேட்டதில் இனித்தது "என்ன குறையோ என்ன நிறையோ"


சாஸ்திரிய சங்கீத உலகில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான்கள் பலர் திரையிசை உலகுக்கு வந்து தம் தனித்துவமான இடத்தைத் தக்கவைத்துக்கொள்வது காலாகாலமாக நடந்து வரும் சமாச்சாரம். ஆனால் அதற்கும் கூட நல்லதொரு தருணம் வாய்க்கவேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம் பாடகி சுதா ரகுநாதன். இன்றைய நிலையில் சாஸ்திரிய சங்கீதப் பரப்பில் சுதா ரகுநாதன் ஒரு சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது மிகையில்லை. உள்ளூரில் மட்டுமன்றி தமிழர்கள் பரந்து வாழும் வெளிநாடுகளிலும் இவருக்கான பரந்துபட்ட ரசிகர் வட்டம் இருப்பதே அதற்குச் சான்று.
சுதா ரகுநாதனையும் திரையிசை உலகம் விட்டுவைக்கவில்லை. இசைஞானி இளையராஜா (இவன்), தேனிசைத் தென்றல் தேவா (கல்கி), வாரணம் ஆயிரம் (ஹாரிஸ் ஜெயராஜ்) என்று சுதா ரகுநாதனின் குரலைத் திரையிசைப்பாடல்களில் முன்னணி இசையமைப்பாளர்கள் இவர்கள் பொருத்திப்பார்த்தார்கள். உண்மையில் அவர்களுக்கெல்லாம் கட்டுப்படாத இந்தக் குரல் இலாவகமாக, கச்சிதமாகப் பொருந்திப் போனது என்னவோ அண்மையில் வந்த ஒரு பாடலில் தான் என்பேன். அந்தப் பாடல் தான் "மந்திரப் புன்னகை" படத்தில் வரும் "என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்"

இன்றைய முன்னணி இசையமைப்பாளர்களில் இன்னும் ரசிகர்களால் முன்னோ தூக்கி நிறுத்திப் பாராட்டப்பட வேண்டிய இசையமைப்பாளர் வித்யாசாகர் என்பேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக வித்யாசாகர் இசையமைப்பாளராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று சீசனுக்கு சீசன் வந்து போகும் நிலை இவருடையது. இவரைக் கச்சிதமாகப் பயன்படுத்தக் கூடிய இயக்குனர்களில் கரு.பழனியப்பனும் ஒருவர். பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், (இன்னும் வெளிவராத)சதுரங்கம், தற்போது வெளியாகியுள்ள மந்திரப்புன்னகை போன்ற படங்களில் இந்தக் கூட்டு எவ்வளவு தூரம் சிறப்பாக அமைந்திருக்கின்றது என்பதற்கு அந்தப் படங்களின் பாடல்களே சான்றாக விளங்கி நிற்கின்றன. இவர்களோடு இன்னொரு முக்கியமானவர், அவர் தான் பாடலாசிரியர் அறிவுமதி. ஒரு நீண்ட அஞ்ஞாதவாசம் இருந்து மீண்டவருக்கு ஒரு அறிமுகமாக இப்படம் கிட்டியிருக்கின்றது. அறிவுமதியைப் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருக்கின்றார் வித்யாசாகர். மெட்டுக்குப் பாட்டெழுதும் பெரும்பான்மைச் சூழலில் பாடல்வரிகளுக்கு மெட்டமைக்கும் சவாலை வித்யாசாகர் ஏற்கும் போது அறிவுமதி போன்ற கவிஞர்களின் பாடல்வரிகள் தான் அந்தச் சவாலுக்கு உறுதுணையாக வளைந்து கொடுத்து இசை வளையத்துக்குள் கட்டுப்பட்டுவிடுகின்றன.

சரி, இனி இந்தப் பாடலுக்கு வருவோம். ஆண்டவனிடம் தன்னை முழுமையாகக் கொடுத்து விட்ட சரணாகதி நிலையில் உள்ள ஒரு சூழ்நிலைக்கு ஒப்ப இந்தப் பாடல் பின்னப்பட்டிருக்கின்றது. இங்கே ஆண்டவன் என்ற நிலைக்குக் கண்ணன் கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றார்.
கண்ணனுக்கே பிடித்தமான புல்லாங்குழல் மெல்ல அடியெடுத்துக் கொடுக்க சுதா ரகுநாதன் முதல் அடியை ஆரம்பிக்கிறார்.

கண்ணா....கண்ணா....கண்ணா
என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்


புல்லாங்குழல் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது இடையில் உறுத்தாத மேற்கத்தேய இசைக்குப் போய் மீண்டும் மிருதங்கம் ஒரு சிறு ஆவர்த்தனம் பிடித்து சுதா ரகுநாதனிடம் ஒப்படைக்க
அவர்

நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்
வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டம் ஆகலாம்
நிழல் கூட விட்டுப் போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான் கண்ணில் மழை துடைப்பான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்தக் கண்ணனை அழகு மன்னனை
தினம் பாடி வா மனமே

என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
கண்ணன்....கண்ணன்....கண்ணன்...கண்ணன்


மீண்டும் புல்லாங்குழலோடு இம்முறை இன்னொரு கோஷ்டி மேற்கத்தேய வாத்தியங்களின் மெல்லிசை பரவ மிருதங்கம் அதைக் கைப்பற்றி சுதாவிடம் கொடுக்க

உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் தரலாம்
உறவைப்போலே கண்ணன் இருப்பான்

பனிமூட்டம் மலையை மூடலாம்
வழி கேட்டுப் பறவை வாடலாம்
புதிராகக் கேள்வி யாவிலும்
விடையாகக் கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான்..எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையாய் உலகினை அணைப்பான்
அந்தக் கண்ணனை..கனிவு மன்னனை
தினம் பாடிவா மனமே.......


அப்படியே மீண்டும் முதல் அடிகளுக்குத் தாவாமல் நின்று விடுகிறது பாடல் அப்படியே எமது நெஞ்சிலும் நின்று நிலைத்துவிடும் அளவுக்கு. ஒரு சாஸ்திரிய இசைப்பாடகிக்குத் தோதான மெட்டும், இட்டுக்கட்டத் தேர்ந்த ஒரு பாடலாசிரியரும், ரசனை மிகுந்து பொறுக்கி எடுக்கும் வல்லமை வாய்ந்த இயக்குனரும் அமைந்தால் என்ன குறை?
சுதா ரகுநாதனின் இந்தப் பாடல் காலங்கள் கடந்தும் நிற்கும் கண்ணனைப் போலே.

28 comments:

  1. அருமையா இருக்கு கானா..
    நன்றி

    ReplyDelete
  2. சுதா ரகுநாதனின் இந்தப் பாடல் காலங்கள் கடந்தும் நிற்கும் கண்ணனைப் போலே.//

    சரியாச்சொன்னீங்க..

    ReplyDelete
  3. மிக ரம்மியமாக, திரும்ப திரும்ப கேக்க்த்தோணுது பாஸ் சூப்பர்! :)

    ReplyDelete
  4. தல....செம பாட்டு தல நானும் படத்தை பார்க்கும் போது தான் கேட்டேன் (நேத்து தான்) இன்னிக்கு காலையில இருந்து 123 தளத்தில் தாவு தீருது வரவேல்ல...என்டா இதுன்னு யோசிக்கிட்டே இருந்தேன்.

    பாட்டும் போட்டு வரியும் போட்டு (அழகும் அர்த்தமும் உள்ள வரிகள்) கலக்கலாக வந்திருக்கு பதிவு...என்ன சொல்றது.

    ரசித்தேன் தல ;))

    ReplyDelete
  5. அழகு பாஸ்!

    ///இடுக்கட்டத் தேர்ந்த/// ???

    ReplyDelete
  6. இது கண்ணன் பாட்டு வலைப்பூவா? :)

    ReplyDelete
  7. இன்றைய றேடியோஸ்பதி கண்ணஸ்பதியோ? :)

    சுதா - கர்நாடக மரபிசை என்று மட்டும் ஒதுங்கி விடாமல், புது முயற்சிகள் செய்து பார்க்கக் கூடியவர், மரபிசை/திரையிசை இரண்டிலும்! ஆதவன் படத்தில் ஆன்ட்ரியாவோடு பாடும் ஏனோ ஏனோ பனித்துளி பாடலே இதற்குச் சான்று! மார்னிங் ராகா படத்திலும் இது போல் முயன்று இருப்பார்!
    ------------------------

    //இருபது ஆண்டுகளுக்கு மேலாக வித்யாசாகர் இசையமைப்பாளராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று சீசனுக்கு சீசன் வந்து போகும் நிலை இவருடையது//

    :)
    சீசன் இசையமைப்பாளரா? :)
    அற்றைத் திங்கள் வானிடம்
    அல்லிச் செண்டோ நீரிடம்
    - பாட்டு, வித்யாசாகர் கிட்ட எனக்கு மிகவும் பிடிச்சது! அதே போல் "மொழி" படப் பாடல்களும்!

    பார்த்திபன் கனவில், என்ன தவம் செய்தனை, யசோதா-ன்னு இதே போல் மெல்லிய மரபிசையாக வரும் பாட்டை, ஹரிணியைக் கொண்டு செய்திருப்பார்! அதுவும் சுகமா வருடிக் கொடுக்கும்!

    அட, நம்ம பெரியார் படத்துக்கே இசை வித்யாசாகர் தானே! அதில் வரும் தாய்-யாரோ பாட்டு, தாயாரோ-ன்னு வித்தை காட்டும்! யேசுதாஸ் பாடி இருப்பாரு!

    என்ன, குருவி படத்தில், மொழ மொழ-ன்னு யம்மா யம்மா பாட்டும் வித்யாசாகரே! :)

    வித்யாசாகர், தனக்கென்று ஒரு பாணியை உருவாக்காமல், ரொம்பவும் கலந்து கட்டி கொடுக்கறாரோ, Operating only in extremes - அதான் சோபிக்க வில்லையோ-ன்னு எனக்கு அப்பப்ப தோணும்! கா.பி அண்ணாச்சி ஆராய்ச்சி பண்ணிச் சொன்னா, கேட்டுக்கிருவோம்!
    ---------------------

    கவிஞர் அறிவுமதி பற்றியும் மறக்காமல் சொன்னதற்கு நன்றி!

    ReplyDelete
  8. பாட்டின் வரிகளில் பல சுகங்கள் இருக்கு கா.பி.

    //என்ன தவறோ என்ன சரியோ
    எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்//

    சரியிலும் துணை இருப்பான் - சிரித்து
    தவறிலும் துணை இருப்பான் - துடைத்து

    //நன்றும் வரலாம் தீதும் வரலாம்
    நண்பன் போலே கண்ணன் வருவான்//

    எனக்கு பிடிச்ச வரிகள்!

    //உண்டு எனலாம் இல்லை எனலாம்
    இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்//

    அவனை மறுதலித்தால் கூட...சிரிப்பான்...சிரித்து விட்டு...
    நன்றும் வரலாம் தீதும் வரலாம், நண்பன் போலே கண்ணன் வருவான்

    ReplyDelete
  9. //இணைந்து வரலாம்
    பிரிந்தும் அகலாது....
    கண்ணன் இருப்பான்//

    "பிரிந்தும் அகலாது"...
    ஐயோ...
    நாம் அவனை அல்ப காரணங்களுக்கெல்லாம் பிரிந்தாலும்...
    அவன் அகலாது-"இருப்பான்"!

    பிரிந்தும் அகலாது....
    பிரிந்தும் அகலாது....
    முருகா!

    ReplyDelete
  10. A brilliant rendition by a veteran singer Powerful lyrics supported ably by a superb composition
    No wonder the result is a lilting melody
    I thank the blogger for introducing this lovely song in his blog which is really soul stirring

    ReplyDelete
  11. ஆஹா, அறிவும‌தியின் அற்புத‌மான வரிக‌ள், சாக‌ரின் கத‌ம்ப‌ இசை, சுதாவின் ர‌ம்மிய‌ குர‌ல்.
    முக்க‌னிச் சுவை, நல்ல‌ கார்கால‌த்தில், கார்மேக‌னைப் ப‌ற்ற‌ வேண்டிதை பற்றிய‌ அருமையான பாட‌ல்.

    ReplyDelete
  12. அறிவுமதி அண்ணா , கண்ணனை மட்டும் படவில்லை.. தமிழர்களின் கலக்கம் தீர்க்க இங்கு கண்ணனாய் பாடியிருக்கிறார்..கண்ணனுக்கு பதிலாய் ,அண்ணன் என்று போட்டுப் பாருங்கள்.. அர்த்தம் விளங்கும். அறிவுமதி அண்ணாவுக்கு நன்றிகள் ...

    -சக்தி

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி, ஆயில்ஸ், தல கோபி

    தமிழ்ப்பிரியன்

    தானாக உண்டாக்குவது = இட்டுக்கட்டி

    ReplyDelete
  14. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  15. இப்ப தான் கேட்கிறேன். மிக மிக நன்றாக இருக்கிறது அண்ணா.

    ReplyDelete
  16. சுகமான மனதினை விட்டு நீங்காத
    அதி அற்புதம்!!

    அன்புடன்,
    ஆர்.ஆர்.ஆர்.
    keerthananjali.blogspot.com

    ReplyDelete
  17. வாங்க கே.ஆர்.எஸ் சாமி ;)

    கண்ணன் பேரைக் கேட்டாலே அப்படியே அதகளம் பண்ணிடுவீங்களே ;)

    வருகைக்கு நன்றி சுந்தர், மற்றும் வாசன்

    ReplyDelete
  18. கருத்துக்கு நன்றி சக்தி, அதே படத்தில் இந்த உணர்வோடு இன்னொரு பாட்டும் இருக்கு

    மாதேவி, வாசுகி, ஆரண்ய நிவாஸ் ஆர்.ராமமூர்த்தி

    மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  19. விட்டால் மிஸ் செய்து இருப்பேன் ! நல்ல ஒரு பாடலை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி ! கான பிரபா !!

    ReplyDelete
  20. Superb. Thanks for sharing this. I have never heard this song before. It mesmerises me...........................

    ReplyDelete
  21. it was excellent
    tks for the song and lyrics
    after raja sir vidyasagar
    has given lot of carnatic music
    based songs
    t v suresh

    ReplyDelete
  22. musictoday , Ivan Yaar , சுரேஷ்

    மிக்க நன்றி

    ReplyDelete
  23. அருமையான அறிமுகம் கானாப்ரபா.
    நான் வெகு சமீபத்தில்தான் இந்தப் பாட்டைக் கேட்டேன்.தோராயமாக ஒரு வாரத்திற்கு முன்.சக்ரவாக ராகம் என்னைக்கட்டிப் போட்டது.நிகழ்காலத்தோடு எனக்குள்ள இடைவெளி இந்தத் தாமதத்துக்குக் காரணம்.ஆனால் இந்தப் பாடலைக் கேட்ட அரைமணி நேரத்தில் என்னுடைய இடுகையை எழுதினேன்.அதற்குப் பின் நூறு முறை கேட்டுவிட்டேன் இந்தப் பாடலை.சுதாரகுநாதன் என்று தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளாமலேயே பாடல் தந்த போதையில் பாம்பே ஜெயஸ்ரீ என்றும் எழுதிவிட்டேன்.என் தளத்திலும் இதை வாசித்த ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தியும், வாசனும் இதைச் சுட்டாதது அவர்களின் பெருந்தன்மை என நினைக்கிறேன்.

    உங்கள் பதிவையும் வாசனின் உந்துதலால்தான் படித்தேன்.அற்புதம் ப்ரபா உங்கள் ரசனை.உங்களிடம் நான் கற்க நிறைய இருக்கிறது.

    ஒரு நல்ல வலைப்பூவை அறிமுகம் செய்த வாசனுக்கு நன்றி.

    ReplyDelete
  24. அன்பின் சுந்தர்ஜி,

    உங்களைப் போன்ற தீவிர இசைரசிகரின் கருத்து மனநிறைவை அளிக்கின்றது. அருமையானதொரு பாடலைப் படத்தில் ஒரு நிமிடத்துக்கும் குறைவாகக் காட்டித் துண்டாடியது பெரும் கொடுமை.

    ReplyDelete
  25. அந்தர்யாமியாய் அனைத்திலும் நிறைந்திருக்கும் கண்ணனைக் கண்முன் நிறுத்தும் பாடல். சுதாரகுநாதன் அருமையாய்ப் பாடியுள்ளார். நன்றி கானப்பிரபா.

    ReplyDelete
  26. #என்ன குறையோ எந்த நிலையோ
    என்ற வரிகளுக்கு பதிலாக
    #என்ன குறையோ என்ன நிறையோ
    என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  27. அருண் நீங்கள் சொல்வது தான் சரி, திருத்திவிடுகின்றேன் நன்றி

    ReplyDelete
  28. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பின் கமலாம்மா

    ReplyDelete