Pages

Sunday, October 3, 2010

ஷிக்கார் (The Hunt) - வேட்டையாடத் துரத்தும் பாவக்கணக்கு


"அன்று ருக்மணியின் கண்களில் தெரிஞ்ச நெருப்பு மறுநாள் தெலுங்கானாவில் தெரிந்தது"
பலராமன் (மோகன்லால்) 15 வருஷங்களுக்கு முந்திய அந்தக் கோரநினைவுகளை நினைத்துப் பார்க்கும் போது சொல்லிக் கொண்டது தான் ஷிக்கார் படத்தின் அடிநாதமும் கூட.

"ஷிக்கார்" மலையாளப்படம் குறித்த செய்திகள் வந்தபோது சிட்னியில் அது தியேட்டரில் முத்தமிட்டால் கண்டு ரசிக்க வேண்டும் என்று காத்திருந்தேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் சமுத்திரக்கனி. நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் ஒரே நாளில் தமிழகம் முழுதும் புகழப்பட்ட இயக்குனர், கூடவே சுப்ரமணியபுரம் படத்தில் வில்லன் அண்ணனாக வந்து வித்தியாசமான நடிப்பைக் கொடுத்தவர் இவரை மலையாளப்படவுலகம் வேண்டி அழைத்து நடிக்க வைக்கின்றதென்றால் அப்படி என்னதான் இந்தப் படத்தில் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடு தான் இந்தப் படம் பார்க்கும் ஆசையும். அந்த ஆசை இன்று சிட்னி தியேட்டரில் நிறைவேறிய சுகத்தோடு ஷிக்கார் பற்றி இனி.

இந்தப் படம் ஆரம்பிக்கும் போது சராசரியான நாட்டு ராஜாவு வகையறா மலையாளப் படங்களில் ஒன்றாகவே தென்பட்டது அது இடைவேளை வரை பாட்டும் கூத்துமாகத் தொடர்ந்தது. ஆனால் இடைவேளைக்குப் பின் தான் படம் சூடுபிடிக்க ஆரம்பித்து இறுதி முற்றுப்புள்ளி வரை அந்தச் சூட்டைக் காட்டி வேட்டையாடியது.

பலராமன் (மோகன்லால்) என்னும் லாரி ஓட்டுனர் நகரவாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் காடும் மலையும் தழுவிய பிரதேசத்தில் அவ்வூர் மக்களோடு வாழும் சராசரி மனிதன். அவனுக்குத் துணையாக மணியப்பன் (கலாபவன் மணி) என்னும் உதவியாளனும் சத்தியன் (லாலு அலெக்ஸ்) குடும்பமும் மட்டுமே. பலராமனின் கனவெல்லாம் காலமான தன் மனைவி காவேரி (சினேகா)யின் ஆசையாகத் தன் ஒரே மகள் கங்கா (அனன்யா)வை டாக்டர் பட்டத்துக்குப் படிக்க வைக்க வேண்டும் என்ற இலட்சியம் மட்டுமே. மாணவர் விடுதியில் தங்கிப்படித்த கங்கா தன் தந்தை பலராமனைத் தேடிக் காட்டுக்கு வந்த போது, பலராமனைச் சுற்றி அது நாள் வரை கண்ணுக்குத் தெரியாமல் துரத்திய அவனைக் குறித்த வேட்டை ஆரம்பமாகின்றது. அப்போது தான் 15 வருஷங்களுக்கு முன்னால் அவன் செய்த பாவக்கணக்குத் தீர்க்கும் காலம் வந்ததை உணர்கின்றான் அவன்.






இன்று இந்தியாவில் சூடுபிடிக்கும் விவகாரமாக ஆகிப்போயிருக்கும் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்துத் தெலுங்கானாவைத் தனி மாநிலம் ஆக்கவேண்டும் என்ற போராட்டத்தின் ஒரு பார்வையை ஷிக்கார் தொட்டுச் செல்கின்றது. நக்சலைட் தீவிரவாதி காம்ரேட் அப்துல்லா என்ற பாத்திரமாக வாழ்ந்திருக்கின்றார் நம் சமுத்திரக்கனி. உண்மையில் ஒரு போராட்டக்காரனின் எழுச்சி முகத்தை மிகவும் அன்னியப்படாத உடல்மொழி பாவங்களோடு அமைதியாக நடித்து நம் மனதில் ஆக்கிரமிக்கின்றார் சமுத்திரக்கனி. ஒரு எழுச்சியாளனாக, கவிஞனாகத் தன் சிந்தனைகளைப் பாடியும் பேசியும் பரப்பும் காம்ரேட் அப்துல்லா என்னும் சமுத்திரக்கனி, தன்னைப் பொறிவைத்துப் பிடித்து அழைத்துப் போகும் கான்ஸ்டபிள் பலராமனிடம் அவரின் பிள்ளையின் பெயர் கேட்டு அவள் பெயர் கங்கா என்று அறிந்துகொண்டு அவளுக்கும் ஒரு கவிதை எழுதித் தருகின்றேன் என்னும் போது அந்தப் புரட்சியாளனின் உள்ளே ஒளிந்துகொண்டிருக்கும் நேசத்தை நச்சென்று காட்டி வைக்கின்றது.
இப்போதுதான் தெரிகிறது சமுத்திரக்கனியைத் தேடி ஏன் மாநிலம் விட்டு மாநிலம் வந்தார்கள் என்று, அந்தளவுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றார் இவர்.



முதற்பாதியில் ஒரு சராசரி லாரி ஓட்டுனர், அடுத்த பாதியில் தன் கடந்தகால நினைவுகளில் பயணிக்கும் போது ஒரு கான்ஸ்டபிள் இதுதான் பலராமன் என்னும் மோகன்லாலின் பாத்திரம். தன்னைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத அபாயம் தன் மகளின் காதலன் ரூபத்தில் கூட வந்திருக்குமோ என்று பரிதவித்து அங்குமிங்குமாகப் பரிதவித்து அலைபாயும் மன உளைச்சலை வெகு இயல்பாகக் காட்டியிருக்கின்றார் மோகன்லால், இதெல்லாம் அவருக்குப் புதுசா என்ன?
காம்ரெட் அப்துல்லாவைக் கைது செய்ய நடத்தும் நாடகத்தில் தன் இயலாமையைக் காட்டும் போதும், கண்ணுக்கு முன்னால் அப்துல்லாவுக்கு நேரப்போகும் நிலையைக் கண்டு கையறு நிலையில் இருக்கும் போதும், மகளையும் தன்னை யும் துரத்தும் மரணதூதர்களைத் தேடும் போதும் மோகன்லால்
பலராமன் பாத்திரத்துக்குப் பெரும் பலம். மலையாளத்தின் ஒரு சூப்பர் ஹீரோ இப்படி ஒரு சாதாரண கதாபாத்திரமாக மாறும் வல்லமை அங்கு மட்டுமே எதிர்பார்க்கக் கூடியதொன்று.

இந்தப் படத்தின் பலவீனம் என்றால் ஒரு பெரும் செய்தியைத் தொக்கவைத்துக் கொண்டு இடைவேளை வரை ஏனோதானோவென்று சராசரிக்காட்சிகளோடு இழுத்துக் கொண்டு போயிருப்பது, பலம் என்னவென்றால் இடைவேளைக்குப் பின்னான அழுத்தமான கதைக்கருவை கச்சிதமாகக் காட்சிவடிவம் கொடுத்திருப்பது. காடுகளுக்குள் காமரா ஓடும்போது பரபரப்புத் தொற்றிக் கொள்கின்றது. இறுதியில் ஒரு சவாலான பிரச்சனையை எப்படி முடிக்கப் போகின்றார்கள் என்றால் அதையும் நாடகத்தனமில்லாமல் நம்பத்தக்கவகையில் முடித்திருப்பதும் நேர்த்தியாக இருக்கின்றது. மோகன்லாலுக்குத் தெரியாத அந்த நக்சலைட் தீவிரவாதி குறித்த தன்னைச் சுற்றிய சந்தேகத்தோற்றத்தை நமக்கும் ஏற்றிவிடுகின்றது படத்தின் திரைகதை அமைப்பு. தெலுங்கானா சூழலின் அந்தக் காட்சிப்பரப்பை வெகுசிறப்பாகக் காட்டி வைக்கின்றார் இயக்குனர் பத்மகுமார். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருப்பவர் சுரேஷ்குமார், கத்தி மேல் நடப்பது மாதிரியான மூலக்கதையம்சத்தை கவனமாகக் கையாண்டிருக்கின்றார்.


தலைவாசல் விஜய் (சக கான்ஸ்டபிள்), சினேகா (மோகன்லால் மனைவி காவேரி) , நடன இயக்குனர் கல்யாண் (போலீஸ் தலைமை அதிகாரி), சமுத்திரக்கனி ( காம்ரேட் அப்துல்லா)என்று தமிழ் முகங்கள் முக்கிய பாத்திரங்களில் என்றால் கூடவே இயக்குனர் லால் கெளரவ வேஷத்தில் வந்து "குதிரவாலு குலுங்குதடி குமரி நீயும் நடக்கையிலே" என்று முழு நீளத் தமிழ்ப்பாட்டையும் பாடுகின்றார். ஒரு மலையாளப்படத்தில் மலையாளப்பாட்டுக்களோடு இந்த குதிர வாலு என்ற தமிழ்ப்பாட்டும், காம்ரேட் அப்துல்லா பாடும் "பிரதிகாடின்சு" என்ற தெலுங்குப் பாடலும் என்று மூன்று மொழிப்பாடல்கள் ஒரே படத்தில் இருப்பது புதுமை. பாடல்களுக்கான இசை சமீபகாலமாக மலையாள உலகின் "இளைய"ராஜாவாக இருக்கும் எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை கடந்த வருஷம் தேசிய விருதை வாங்கிக் கொண்ட அவுசப்பச்சன்.

ஷிக்கார் - மனதை வேட்டையாடி அப்துல்லா என்ற காம்ரேட்டை முத்திரையாகப் பதிக்கின்றது.

மலையாளப்பாடல் "எந்தடி எந்தடி பனங்கிளியே"



தெலுங்குப்பாடல் "பிரதிகாடின்சு"



12 comments:

  1. ஆகா...நோட் பண்ணிக்கிட்டேன் ;))

    தல நேரம் கிடைக்கும் போது இந்த வருஷத்தின் சிறந்த மலையாள படங்கள் லிஸ்டு போடுங்களேன் பிலிஸ்.;)

    ReplyDelete
  2. ஆவலைத் தூண்டும்விதமாய்ச் சொல்லி இருக்கீங்க..... கிடைத்தால் பார்க்கிறேன்...

    ReplyDelete
  3. தல கோபி

    கண்டிப்பாகக் கொடுக்கிறேன் ;)

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி தமிழ்ப்பறவை நண்பா

    ReplyDelete
  5. நல்ல அறிமுகம் நன்றி. கானா பிரபா. சமுத்திரக்கனி என்பதுதான் தயக்கமாக இருக்கிறது. :)

    நான் தற்போதுதான் மலையாளத் திரைப்படங்களை காண ஆரம்பித்துள்ளேன். ஜெமோவின் பதிவில் விடுபட்ட நல்ல மலையாளத் திரைப்படங்களின் பட்டியலை எனக்கும் அனுப்புங்கள் நன்றி.

    ReplyDelete
  6. வணக்கம் சுரேஷ் கண்ணன்

    தமிழில் கண்ட சமுத்திரக்கனியை விட மிகவும் வித்தியாசமானதொரு அவரிடமிருந்து வெளிப்பட்டது, பார்க்கும்போது உணர்வீர்கள்.

    பட்டியல் கண்டிப்பாக வரும் ;)

    ReplyDelete
  7. denim said...

    மிக அருமையான பதிவு //

    வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  8. நல்லா சொல்லியிருக்கீங்க...

    ‘தியேட்டரை முத்தமிட்டால்’ -
    ரசனையா இருக்கு!


    ஷிக்கார்- படம் பாத்துட்டு மறுபடி வரேன்!

    ReplyDelete
  9. வாங்க சுரேகா

    படம் பாருங்க, இடைவேளைக்குப் பின் பிடிக்கும்.

    ReplyDelete
  10. குதிரைவால் பாடல் இணைப்பு தவறாக உள்ளது நண்பரே.. விமர்சனம் அருமை...

    ReplyDelete
  11. நன்றி நந்தா, அந்தப் பாடல் இணைப்பில் சிக்கல் இருப்பதால் எடுத்துவிட்டேன்

    ReplyDelete