Pages

Thursday, November 12, 2009

இசையமைப்பாளர் கங்கை அமரன்

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், "அன்னக்கிளி" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந்த ராசய்யா என்ற இளையராஜாவின் அறிமுகத்தோடு அவரது இளைய சகோதரர் அமர்சிங்கிற்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது.

இளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் "பத்ரகாளி" உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக. இங்கே நான் தொட்டுச் செல்வது இசையமைப்பாளர் கங்கை அமரன் மட்டுமே. மற்றையவையை பிறிதொரு வேளை பார்த்துக் கொள்வோம்.

அமர்சிங் என்ற கங்கை அமரன் அடிப்படையில் நல்லதொரு இசைக்கலைஞன், தன் அண்ணன்மார் பாவலர் வரதராஜன், ராசய்யாவோடு ஊர் ஊராய்ப் போய்ப் பாட்டுக் கட்டியவர். ஆரம்பத்தில் பெண் குரலுக்குப் பொருத்தமாக ராசய்யாவின் குரல் பவனி வந்து கொண்டிருந்து ஒரு கட்டத்தில் அவரின் குரல் நாண் ஆண் சுருதி பிடித்தபோது பெண் குரலுக்கு அடுத்த ரவுண்ட் கட்டியவரே இவராம்.

பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வந்த காலகட்டத்தில் "புதிய வார்ப்புகள்" படத்தில் கதாநாயகனாக அரிதாரம் பூசக்கிடைத்த பாக்கியத்தை இன்னொரு ராஜ் பறித்துக் கொண்டதால் கதாநாயக அவதாரம் மட்டும் திரையில் கிட்டாது போனாலும் இவரின் பாட்டுக் கட்டும் பணி மட்டும் ஓயாது தொடர்ந்தது.
இளையராஜாவின் இசைக்கு தேசிய அங்கீகாரம் கிட்டிய எஸ்.ஜானகிக்கு முதல் தேசிய விருதை "செந்தூரப்பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே" என்று தேன் கவியைக் குழைய விட்டு அண்ணனுக்குப் பெருமை சேர்த்தார் கவிஞர் கங்கை அமரன்.

"கோழி எப்படிய்யா கூவும்" என்று சீண்டினார் இவரைப் போல அன்று இளவட்டக் கவிஞராக இருந்த வைரமுத்து கங்கை அமரன் எடுக்கவிருந்த "கோழி கூவுது" படத் தலைப்பைக் கேட்டு விட்டு. "உங்க பேரில் வைரமுத்து இருப்பதால் வைரமும் முத்தும் கொட்டியா கிடக்குது?" என்று விட்டுக் கொடுக்காமல் பதிலடி கொடுத்த அறிமுக இயக்குனர் கங்கை அமரனுக்கும் இயக்குனராக நல்லதொரு அங்கீகாரம் கிட்டியது. கோழி கிராமங்களைத் தாண்டி நகரங்களுக்கும் கூவியது.

மீண்டும் என் முதல் பாராவுக்கே வருகின்றேன். இங்கே நான் சொல்ல வந்தது இசையமைப்பாளன் கங்கை அமரன் பற்றி. "இவன் மட்டும் ஒரே வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சிட்டிருந்தால் ஒரு நல்ல இசையமைப்பாளர் தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருப்பார்" சொன்னவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அல்லவா.

கங்கை அமரனின் பாடல்களைக் கேட்டால் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதிப்பும், 70 களில் இருந்த இளையராஜாவின் பாணியும் இருக்கும். அந்த வகையில் தொடர்ந்து அவரின் ஒரு சில பாடல்களைத் தாங்கி வரும் இசைத் தொகுப்பைக் கேளுங்கள்.

இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தது அப்போது பிரபலமாக இருந்த காஜா இயக்கத்தில் "விடுகதை ஒரு தொடர்கதை" மூலம். அந்தப் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் காலங்கள் கடந்த பின்னும் தேனாக இனிக்கும். ஒன்று "விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்.ஜானகி பாடும் பாடல். இன்னொரு பாடல் இங்கே நான் தரவிருக்கும் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் "நாயகன் அவன் ஒரு புறம்"




சம காலத்தில் வந்த இன்னொரு படம் "மலர்களே மலருங்கள்". இந்தப் படத்திலும் கங்கை அமரனுக்குப் புகழ் சேர்த்தவை பி.சுசீலா பாடிய சுட்டும் விழிச்சுடர் தான், இன்னொன்று இங்கே நான் தரும் ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி குரல்களில் 'இசைக்கவோ நம் கல்யாண ராகம்'




"அப்போல்லாம் இளையராஜாவை சந்திக்கவே முடியாத அளவுக்கு மனுஷர் பிசியா இருந்த காலத்தில் நம்ம ரேஞ்சுக்கு ஏற்றவர் கங்கை அமரன் தான் என்று முடிவு பண்ணி அவரோடு சேர்ந்து படம் பண்ணினேன்" இப்படிச் சொல்கிறார் இயக்குனர் பாக்யராஜ். சந்தர்ப்பம் அப்படி அமைந்தாலும் இயக்குனராக பாக்யராஜ் செய்த படங்களில் முந்தானை முடிச்சு நீங்கலாக இளையராஜாவோடு இணைந்து அவர் பணியாற்றிய படங்கள் பெரு வெற்றி பெற்றது இல்லை எனலாம். ஆனால் சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் இவர்கள் வரிசையில் கங்கை அமரனோடு சேர்ந்து பணியாற்றிய சுவரில்லாத சித்திரங்கள், மெளன கீதங்கள் படங்களும் வெற்றிப் படங்கள் வரிசையில் சேர்ந்து கொண்டன. சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் வரும்
"காதல் வைபோகமே" பாடலை முன்னர் இன்னொரு இசைத் தொகுப்பில் தந்ததால் நான் இங்கே தருவது மெளன கீதங்கள் படத்தில் இருந்து " மூக்குத்திப் பூ மேலே காத்து"



1990 களில் ஒரு ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு கங்கை அமரன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பரிவாரங்களோடு வருகின்றார். கங்கையும் எஸ்.பி.பியும் சேர்ந்தால் கிண்டலுக்குக் கேட்க வேண்டுமா. "இவனெல்லாம் இசையமைச்சு நான் பாடவேண்டியதாப் போச்சு பாருங்க" என்று சொல்லி ஓய்கிறார் எஸ்.பி.பி மேடையில் வைத்து. அரங்கம் அந்த நேரம் ஒரு கணம் நிசப்தமாக இருக்கிறது. அடுத்த கணம் "நீலவான ஓடையில்" பாடலை ஒரே மூச்சில் பல்லவி முழுக்கப் பாடி விட்டு கங்கை அமரனை உச்சி மோந்து கட்டிப் பிடிக்கிறார் எஸ்.பி.பி. மலையாளத்தில் "நீலவானச் சோலையில்" என்த்று பாடிச் சென்றவர் கே.ஜேசுதாஸ்."வாழ்வே மாயம்" கங்கை அமரனுக்கு வாழ்நாள் சொத்து.



அதே மேடையில் அடுத்துப் பாட வருகின்றார் எஸ்.ஜானகி. "பாலு மாதிரியே நம்ம கங்கை அமரன் இசையில் எனக்குப் பிடிச்ச பாட்டு ஒண்ணு சொல்லணும்" என்று சொல்லி விட்டு பின்னணி வாத்தியங்களைச் சைகை காட்டி விட்டுப் பாட ஆரம்பிக்கின்றது அந்தப் பாட்டுக் குயில் "அள்ளி அள்ளி வீசுதம்மா அன்பை மட்டும் அந்த நிலா நிலா". அப்போது தான் வெளி வந்த படமான "அத்த மக ரத்தினமே" படத்தின் பாடலை முதல் தடவையே அரங்கத்தில் கேட்டவர்களின் ஊனுக்குள் புகுந்து உள்ளத்துச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தது அந்தப் பாடல்.



"ஜீவா" என்றொரு படம் வந்தது. சத்யராஜ் நடித்த அந்தப் படத்தில் ஒரு பாட்டு "சங்கீதம் கேளு இனி கைத்தாளம் போடு". இளையராஜாவின் பாடல்களையே ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்த சென்னை, தூத்துக்குடி, திருச்சி வானொலிகளின் அன்றைய உங்கள் விருப்பம் நிகழ்ச்சிகளில் பங்கு போட்டுக் கொண்டது இந்தப் பாடல். கிட்டார் இசையும், கொங்கோ வாத்தியமும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு கைத்தாளம் போட வைக்கும் பாட்டு இது. இடையிசையில் வீணை லாவகமாகப் பயன்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல மேற்கத்தேயக் கலப்புக்கு இசை நகரும் சிறப்பே அழகு. நான்கு வருசத்துக்கு முன்னர் சிங்காரச் சென்னைக்குப் போனபோது தேடியலைந்து லகரி இசைத்தட்டில் தேடிப் பிடித்துப் பொக்கிஷமாக நான் பாதுகாக்கும் பாட்டு இது.




இசையமைப்பாளர் கங்கை அமரன் ஓய்ந்து விடவில்லை, இன்னொரு தொகுப்பிலும் வருவார்.

23 comments:

  1. சூப்பர் கலெக்‌ஷ்ன் பாஸ் சில் பாடங்கள் முதல் முறையாக கேட்டேன்!

    அள்ளி அள்ளி வீசுதம்மா
    மூக்குத்தி பூ மேலே - யப்பாடியோ எம்புட்டுவாட்டி கேட்டுருக்கேனாக்கும் :)))

    ReplyDelete
  2. மூக்குத்தி பூ மேலே- சோக ராகங்களுகுத்தான் ஜேசுதாஸ் என்று இருந்ததை மாற்றிய பாடல். அருமையான இசையமைப்பாளரைப்பற்றிய பதிவு அருமை.

    ReplyDelete
  3. கங்கை அமரன் - பாலு அடிக்கும் லூட்டிகள் மிகவும் ரசிக்கத்தக்கவை..

    நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் ராஜ் டிவியில் பார்த்தது. கவிஞர் வாலிக்கி பாராட்டு விழா... கங்கை அமரன் தான் நிகழ்ச்சி தொகுப்பாளர்.

    கங்கைஅமரன் : இந்த நிகழ்சியில் ஒரு வளரும் பாடகர் ஒருவர் பாட ஆசைபடுகிறார்... அவரை நான் மேடைக்கி அழைக்கிறேன்.. தம்பி கூச்ச படாம வாப்பா.. பயபடாம பாடனும் என்று கூற.. பாலு மேடையேறி வந்தார்.. பயங்கர சிரிப்பொலி தான் போங்க..

    ReplyDelete
  4. ungaloda blog super ..
    i want to have any "nadhaswaram" music as my ringtone .. I like nathaswarm .. but do not get anywhere . Can u send me to mkvsenthilkumar@gmail.com if u have anything

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்யன்

    புதுகைத் தென்றல்

    இதே படத்தில் மூக்குத்திப் பூமேலே சோகப்பாட்டு கூட இருக்கும் நிச்சயம் கேட்டிருப்பீர்கள்

    ReplyDelete
  6. அருமையான பதிவு. கங்கை அமரனின் திறமை சம்பந்தமான வெளியுலகப் பார்வை, இளையராஜாவின் புகழால் மூடப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது எனக்கு.

    ReplyDelete
  7. வித்யாசமான கலெக்ஷன். மூக்குத்திப்பூமேலே ஒரு காலத்துல எல்லா ரேடியோலயும் பாடிட்டு இருக்கும்.

    ReplyDelete
  8. அருமையான பதிவு! :)

    கலக்கிட்டீங்க தல! :)

    ReplyDelete
  9. கங்கை அமரன் - பாலு அடிக்கும் லூட்டிகள் மிகவும் ரசிக்கத்தக்கவை..//

    இசை நிகழ்ச்சியில் ஒரு பாடல் இடைவேளையில் இன்னொரு பாடல் ஆரம்பமாக முன் கங்கை அமரன் தன் குறும்பைக் காட்ட ரசிகர்கள் கடுப்பாகிக் குழப்புவார்கள். ஆனால் அவர் தான் அந்த நிகழ்ச்சியை கலகலப்பாக்குகின்றார் என்பதே தெரியாமல்

    Meenthulliyaan


    நாதஸ்வர இசை தேடித்தருகின்றேன், நன்றி

    ReplyDelete
  10. ரொம்ப சுவாரஸ்யமான கட்டுரை. என்னைப் பொறுத்தவரை கங்கை அமரன் ஒரு நல்ல தொகுப்பாளர். காம்பியரிங் ரொம்ப சுவாரஸ்யமாகச் செய்வார். இசையமைப்பில் அவர் ஓக்கே ரகம்தான்.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  11. ஸ்ரீ.கிருஷ்ணா

    வருகைக்கு மிக்க நன்றிகள்

    சின்ன அம்மிணி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்

    ReplyDelete
  12. அண்ணன் ராத்திரித்தான் கரகாட்டக்காரன் படம் பாத்தேன்..
    அது அவருடையதாகவே இருக்கும்,இளையராஜாவுக்கு இருக்கிற பெயர் இவரை ஒரு இடத்துல வச்சிருக்கு.

    காதல் வைபோகமே... மூக்குத்திப்பூமேலே... பாட்டெல்லாம் திரும்பத்திரும்ப கேட்ட பாட்டுகள்.

    ReplyDelete
  13. நிறைய பாடல்கள் முதன்முறையாக கேட்கிறேன்..நன்றி கானாஸ்..தங்கள் இசை சேவை தொடரட்டும்! :)

    ReplyDelete
  14. ரிஷான்

    சரியாகச் சொன்னீர்கள். இப்படியான பிரபலங்களின் சொந்தங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் தம் தனித்துவத்தைக் காட்ட

    மிக்க நன்றி ஹாலிவூட் பாலா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜவாஹர்

    ReplyDelete
  15. திறமையிருந்து வெளியே தெரியாமல் போன இசையமைப்பாளர்களில் கங்கை அமரனும் ஒருவர்

    ReplyDelete
  16. அட்டகாசமான கலெக்ஷன் தல..பின்னிட்டிங்க...;))

    பல பாடல்கள் இப்போது தான் கேட்கிறேன். எம்.எஸ்.வி அவர்கள் சொன்னது போல இவர் ஒரே வேலையில் இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருப்பார். ;)

    ReplyDelete
  17. ராஜாவை பற்றிய பதிவு இங்கும் http://www.ilaiyaraaja.in/ilaiyaraaja/home.html உண்டு;அப்படியே ஒரு பார்வை உடுங்கள்//

    ReplyDelete
  18. தமிழன்-கறுப்பி... said...

    அது அவருடையதாகவே இருக்கும்,இளையராஜாவுக்கு இருக்கிற பெயர் இவரை ஒரு இடத்துல வச்சிருக்கு.//

    கறுப்பி

    அதுமட்டும் காரணமில்லை, இவருக்கும் தனித்திறமை இருக்குத் தானே

    சந்தனமுல்லை, யோவாய்ஸ், தல கோபி

    வருகைக்கு நன்றி

    மணி

    சுட்டிக்கு நன்றி பார்க்கிறேன்

    ReplyDelete
  19. நன்றி அண்ணா உங்கள் தேடலுக்கும் எங்கள் வானொலியின் இசைக் களஞ்சியத்துக்கு நீங்கள் இந்த தளத்தின் மூலம் எடுத்துத் தரும் பாடல்களுக்கும் நன்றிகள்.. ;)

    சங்கீதம் கேளு எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் ஒன்று. :)
    தொடர்ந்து அசத்துங்கோ..

    ReplyDelete
  20. வாங்கோ லோஷன்

    இப்படியும் பாடல் சேகரிக்க ஒரு வழி இருக்கா ஆகா ;)

    ReplyDelete
  21. இசையமைப்பாளர் கங்கைஅமரன் பற்றிய தொகுப்பு, பாடல்கள் நன்று.

    ReplyDelete