Pages

Sunday, August 30, 2009

ஒட்டுப் போட்ட சினிமாப் பாட்டுக்கள்


சில திரைப்படங்களின் பாடல் ஒலி நாடாக்களிலோ அல்லது இசைத்தட்டுக்களிலோ வந்த குறித்த திரைப்படப் பாடல்களைக் கேட்டு விட்டு அந்தப் படங்களைப் பார்க்கும் போது படத்தின் காட்சியமைப்பில் மேலதிகமாகப் பாடல் வரிகள் சேர்க்கப்பட்டிருக்கும் அல்லது மாற்றப்பட்டிருக்கும். தவிர படத்தின் ரீ ரெக்கார்டிங்கின் போது மேலதிகமாகப் பாடலைப் போட்டும் கொடுப்பதுண்டு.

சில சமயங்களில் தணிக்கை உத்தரவில் பாடல் வரிகள் அமுங்கிப் போவதுமுண்டு. உதாரணமாக இந்து படத்தில் வந்த வாலி எழுதிய "சக்கரவள்ளிக் கிழங்கு சமஞ்சது எப்படி" என்ற இலக்கியத்தரமான பாடல் (!) படத்தின் காட்சியில் "சமஞ்சது" என்ற வரிகள் ஒலியற்று (mute)இருக்கும். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பாடல்களைப் போடும் போது வீரம் செறிந்த பாடல்களை இனங்கண்டு அமுக்குவதோடு, டைகர், புலி என்று சொற்கள் வரும் பாடல்களில் குறித்தசொற்கள் வரும் இடங்களை அழித்து விட்டுத்தான் போடுவார்கள். உதாரணமாக சிங்கார வேலன் திரைப்படத்தில் வரும் புதுச்சேரி கச்சேரி பாடலில் வரும் "டைகராச்சாரி வரதாச்சாரி போலப்படிச்சேன்" என்ற பாட்டுப் பகுதியில் டைகராச்சாரியை அடித்து விடுவார்கள்.

இங்கே நான் தரும் தொகுப்பு, சில திரைப்படங்களின் ஒலி நாடாக்கள்/இசைத்தட்டுக்கள் முதலில் வந்தபோது காணாமல் போன வரிகளோ அல்லது இசைப்பகுதியோ பின்னர் திரைப்படத்தில் வந்த போது சேர்க்கப்பட்டு வந்த பாடல்களாக ஐந்து பாடல்களைத் தருகின்றேன்.

அந்த வகையில் முதலில் வருவது "பத்ரகாளி" திரைப்படத்தில் வரும் பாடல். மகரிஷி எழுதிய நாவலே பத்ரகாளி என்று திரைப்படமானது பலருக்குத் தெரிந்திருக்கும். இதப் படத்திலே "கண்ணன் ஒரு கைக்குழந்தை" என்ற பி.சுசீலா, கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல். இந்தப் பாடல் வெளிவந்த போது இரண்டு சரணத்தோடு முடிவதாக இருக்கும். ஆனால் படத்திலே

மூன்றாவதாக இன்னொரு பகுதியும் எழுதப்பட்டது.

"மஞ்சள் கொண்டு நீராடி மொய் குழலில் பூச்சூடி
வஞ்சி மகள் வரும் போது ஆசை வரும் ஒரு கோடி
கட்டழகன் கண்களுக்கு மையெடுத்து எழுதட்டுமா
கண்கள் படக்கூடும் என்று பொட்டு ஒன்று வைக்கட்டுமா"

இப்படி அமையும் வண்ணம் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டு வந்தது. இதோ அந்தப்பாடல்



அடுத்ததாக வரும் பாடல் "சொல்லத்தான் நினைக்கிறேன்" திரைப்படத்தில் இருந்து வருகின்றது. மணியன் எழுதிய இலவு காத்த கிளி என்ற நாவலே பின்னர் கே.பாலசந்தரின் கைவண்ணத்தில் "சொல்லத்தான் நினைக்கிறேன்" ஆனது. இந்தப் படத்திலே இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஜானகியோடு இணைந்து ஒரு பாடலைப் பாடியிருப்பார். எம்.எஸ்.வி பாடிய பாடல்களில் அவர் ஜோடியாகப் பாடிய பாடல்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் "சொல்லத்தான் நினைக்கிறேன்" என்று இவர் ஜானகியோடு இணைந்து பாடும் பாடல் வெகு சிறப்பானதொரு மெட்டு. பின்னணியில் வளைய வரும் கிட்டார் , வயலின் இசை உறுத்தாமல் காதல் வயப்பட்ட நாயகன், நாயகி இருவரின் மன நிலையை இருவேறு கோணத்தில் இந்தப் பாடல் தந்திருக்கும். குறித்த பாடலிலும் புதிதாக ஒரு சரணம் சேர்க்கப்பட்டு வந்ததை வெறுமனே இசைத்தட்டுக்கள் மூலம் கேட்டவர்கள் பலருக்குத் தெரியாது. மேலதிகமாக அமைந்த வரிகள்

"நேரில் நின்றாள் ஓவியமாய்
என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்
நான் பாதி அவள தான் பாதி
நெஞ்சில் கலந்தாளோ கண்ணில் மலர்ந்தாளோ"

இப்படி இருக்கும், ஆனால் புதிதாக சேர்க்கப்பட்ட அந்த வரிகளைக் கேட்கும் போதே மூலப்பாடலில் இருந்த எம்.எஸ்.வி குரலுக்கும் இதற்கு சிறிய வித்தியாசம் இருப்பதைக் காணலாம். தொழில்நுட்பம் அதிகம் வளராத காலமல்லவா அது. இதோ அந்தப் பாடல்.



அடுத்ததாக "சுவரில்லாத சித்திரங்கள்" திரையில் வரும் பாடல். கங்கை அமரன் இசையமைத்து அவருக்கு வாழ் நாள் முழுவதும் பெருமை தேடித்தரும் பாடல்களில் "காதல் வைபோகமே" பாடல் தனித்துவமானது. (சமீபத்தில் ரீமிக்ஸ் பண்ணி கலைஞர் பேரன் அறிவுநிதி ஒரு வழி பண்ணிய பாட்டல்லவா இது )மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடும் பாடலிது. ஒரு தலைக்காதல் கொண்ட பாக்யராஜின் காதல் கனவும், மனமொத்த சுதாகர், சுமதி ஜோடியின் கனவுலகப்பாடலாகவும் அமையும் இந்தப் பாடலை இசைத்தட்டில் கேட்டால் திடீரென்று காதல் வைபோகமே என்று ஆரம்பித்து திடுதிப்பில் முடிவதாக இருக்கும். ஆனால் படத்தில் காட்சியமைப்புக்கு ஏற்றவாறு இதனை எடுத்தபோது மலேசியாவாசுதேவன் "காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் என்று முதல் அடிகளை மெதுவாகப் பாடி முடித்து நிதானிக்க பஸ் கிளம்பும் ஓசையுடன் பாடல் ஆரம்பிக்கும். கூடவே இரண்டாவது சரணத்தில் இடைச்செருகலாக மேலதிக இசையும் போடப்பட்டிருக்கும். கேட்டுப் பாருங்கள் புரியும்.



திரையுலகில் கலைஞானி கமல்ஹாசனுக்கு ஐம்பதாவது ஆண்டு அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு 35 ஆண்டு நிறைவாகும் இவ்வேளை இருவரும் சேர்ந்த ஆரம்ப காலப்படங்களில் ஒன்றான "மூன்று முடிச்சு" திரைப்படப்பாடல் வருகின்றது. பாடல் ஜோடிகளிலே செளந்தரராஜன் - சுசீலா, எஸ்.பி.பி - ஜானகி என்ற தனித்துவம் இருப்பது போல ஜெயச்சந்திரன் - வாணி ஜெயராம் குரல்களும் தனித்துவமான ஜோடிக்குரல்கள். இந்தப் படத்தில் அந்தாதி வடிவிலே ஒரு பாடல் அடிகள் முடிக்கும் போது அந்தத்தில் வருவது அடுத்த அடியின் முதல் அடிகளாக இருக்குமாறு இரண்டு பாடல்கள் இருக்கும். ஒன்று, ஆடி வெள்ளி தேடியுன்னை நானடைந்த நேரம், இன்னொரு பாடல் , வசந்த கால நதிகளே வைரமணி நீரலைகள். ஒரே படத்தில் இரண்டு அந்தாதிப்பாடல்களைப் பாடிய பெருமை ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் ஜோடிக்குரல்களைத் தான் சாரும். "வசந்த கால நதிகளிலே" பாடலினை பெரும்பாலான இசைத்தட்டில் கேட்கும் போது இந்த ஜோடிக்குரல்கள் மட்டுமே இருக்கும். ஆனால் வில்லன் ரஜினி, கமலை ஆற்றில் தள்ளி விட்டுப் பாடும் வரிகளான
"மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவதைகள்
விதிவகையில் முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்"
என்று எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் வரிகள் படத்தில் மேலதிகமாக அமைந்திருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலில் பின்னணி குரல் கொடுத்த பெருமை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கே சாரும். இதோ அந்த முழுப்பாடல்



நிறைவாக ஒரு பழைய இனிய பாடல். பீம்சிங் இயக்கத்தில் வெளியான பாவமன்னிப்பு திரையிலிருந்து வரும் "பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது" என்ற பி.சுசீலா பாடும் பாடல். இந்தப் பாடல் எத்தனையோ ஆண்டுகள் கழித்தும் மெட்டிலும் வரிகளிலும் கண்ணியமான தொனியைக் கொண்டு வந்து மனசில் சட்டென்று ஒட்டிக் கொள்ளும். கே.பாலசந்தர் இயக்கிய "காதல் பகடை" தொலைக்காட்சி தொடரில் பேபி தீபிகா இந்தப் பாடலைப் பாடிய காட்சியும் மறக்க முடியாத இனிமை. பாவமன்னிப்பு திரைப்படத்தில் வரும் "பாலிருக்கும் பழமிருக்கும்" பாடலில் பி.சுசீலா பாட, பின்னணியில் ம்...ம்...ம் என்று ஹம்மிங்காக மட்டும் எம்.எஸ்.வியின் குரல் இருக்கும். ஆனால் படத்திலே காட்சியமைப்பில் வரும் போது இந்தப் பாடல் முடியும் போது பி.சுசீலா எம்.எஸ்.வி இருவருமே பாடலின் முதல் அடிகளைப் பாடி முடிப்பதாக அமையும். கேட்டு அனுபவியுங்கள் ;)



29 comments:

  1. //இங்கே நான் தரும் தொகுப்பு, சில திரைப்படங்களின் ஒலி நாடாக்கள்/இசைத்தட்டுக்கள் முதலில் வந்தபோது காணாமல் போன வரிகளோ அல்லது இசைப்பகுதியோ பின்னர் திரைப்படத்தில் வந்த போது சேர்க்கப்பட்டு வந்த பாடல்களாக ஐந்து பாடல்களைத் தருகின்றேன்.//

    புதுசு புதுசா கண்டுபுடிக்கிறீங்க பாஸ் உங்களோட இந்த அப்ரோச் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு!

    கண்டினியூ!
    கண்டினியூ!! :))

    ReplyDelete
  2. //மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவதைகள்
    விதிவகையில் முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்"
    என்று எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் வரிகள் படத்தில் //

    இது முன்பு ஒருசந்தர்ப்பத்தில் கேட்டதுண்டு !

    //ரஜினிக்கு முதலில் பின்னணி குரல் கொடுத்த பெருமை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கே சாரும். //

    அட அப்படியா! வில்லன் கேரக்டருக்கேற்றார்போலவே அமைந்திருந்த குரல் :)

    ReplyDelete
  3. கலக்குறீங்க, புதுபுதுத் தகவல்களுடன் (அட்லீஸ்ட் எனக்கு)! எல்லாப் பாடல்களும் அருமை. ”வசந்தகால நதிகளிலே...” கவிஞரும் புகுந்து விளையாடியிருப்பாரு!

    ReplyDelete
  4. ஏன் இப்படி?எனக்குத் தெரிந்தவரை சொல்கிறேன்.தவறு இருந்தால் திருத்தலாம்.


    அந்த காலத்தில் LP Recordsல்தான் பாடல்கள் வரும்.அதாவது கேசட்/சிடி/டிவிடி/ யெல்லாம் கிடையாது.

    அதில் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கமும் ரிகார்ட் பாடல் செய்யப்படும்.
    டபுள் பிளெட் பாடல் அல்லது சிங்கள் பிளெட் பாடல்.

    ரேடியோவில் காலக்கெடுபிடியால்(4 நிமிஷம்) ஒரு பக்கம் மட்டும் போடுவார்கள். அடுத்த்ப் பக்கம் போடமாட்டார்கள்.அடுத்தப்பக்கத்தில்
    தான் நீங்கள் சொல்லும் மூன்றாவது சரணம் இருக்கும்.”பச்சைக்கிளி முத்துசரம்” “அழகிய தமிழ் மகள்” இதில் ஏதோ ஒன்றில் கூட மூன்றவது ச்ரணம் உண்டு. பாட்டு புஸ்கத்தில் இருக்கும் ஆனால் படத்தில் இருக்காது.

    //"சொல்லத்தான் நினைக்கிறேன்" என்று இவர் ஜானகியோடு இணைந்து பாடும் பாடல் வெகு சிறப்பானதொரு மெட்டு. பின்னணியில் வளைய வரும் கிட்டார் , வயலின் இசை உறுத்தாமல் காதல் வயப்பட்ட நாயகன், நாயகி இருவரின் மன நிலையை இருவே//

    உருக்கும் பாட்டு.கரெக்டாக சொன்னீர்கள்.அற்புதம்.மிகவும் பாதித்தப் பாட்டு.மூன்று கதாநாயகிகளுக்கு மூன்று சரணங்கள் இதில்.

    மூன்று முடிச்சும் அதே.

    நன்றி.
    நன்றி.

    ReplyDelete
  5. நாங்க ஓட்டுப் போட்டாச்சு...,

    ReplyDelete
  6. காபி அண்ணாச்சி, செம கலக்கல்! நீங்க சென்சார் ஆபீஸ்-ல்ல வேலை கிடைக்கலை-ன்னு தானே இப்படியெல்லாம் எழுதி, வெளியே கொண்டாறீங்க? :)

    யூ கன்டினியூ ஆபீசர்! பிகாஸ் வி ஆல் லைக் இட்! :))

    ReplyDelete
  7. //ரஜினிக்கு முதலில் பின்னணி குரல் கொடுத்த பெருமை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கே சாரும். //

    ஆமா! அந்தக் குரல்-லயே ரஜினிக்கு ஏற்ற ஒரு தனி கம்பீரம் தெரியும்!

    எம்.எஸ்.வி-யின் இது போன்ற கனத்த Base Voice-க்கு, அவர் கூடப் பாடப் பொருத்தமான பின்னணி பாடகி யார்? = சுசீலாம்மாவா? ஜானகியா? சொல்லுங்க பார்ப்போம் :)

    //மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவதைகள்
    விதிவகையில் முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்//

    மொத்தப் பாட்டிலேயும் கடைசியா வரும் இந்த வரிகளுக்காகவே, எம்.எஸ்.வி-யின் குரலில்...நிறுத்தி நிறுத்திக் கேட்பேன்! பாட்டின் உச்சகட்ட உணர்ச்சிகளை ஒரே நிமிடத்தில் திசை மாற்றிடும், எம்.எஸ்.வி என்ட்ரி கொடுத்தவுடன்!

    எல்லாமே சூப்பர் செலக்ஷன் கா.பி அண்ணாச்சி!
    ஒட்டு போட்ட ஒங்களுக்கே எங்க ஓட்டு! :)

    ReplyDelete
  8. அருமையான தொகுப்பு தல..நன்றி ;))

    ReplyDelete
  9. அஞ்சு பாட்டும் அஞ்சு விருந்துகள். ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதம்.

    கண்ணன் ஒரு கைக்குழந்தை பாட்ட எத்தன தடவ கேட்டாலும் தெகட்டாது. இதுவும் சரி.. பெண் ஜென்மம் படத்துல வர்ர செல்லப்பிள்ளை சரவணன் பாட்டும் சரி... ஏசுதாஸ்-பி.சுசீலா காதற் பாடல்களில் சிறந்த பாடல்கள் வரிசையில் இடம் பெறும். இளையராஜாவின் இசையைக் குறிப்பிட்டுத்தான் சொல்லனுமா என்ன?!

    ReplyDelete
  10. சொல்லத்தான் நினைக்கிறேன். எம்.எஸ்.வி ஜோடியாப் பாடுன பாட்டுகளைத் தேடிப் பிடிச்சிரலாம். பொதுவாவே தனிப்பாடலாத்தான் பாடிருக்காரு. அதுல ரெண்டு இந்தப் பதிவுலயே வந்துருச்சு. ஒன்னு எஸ்.ஜானகி. ஒன்னு பி.சுசீலா. இன்னோன்னு எல்.ஆர்.ஈஸ்வரி கூட இருக்கு. ஆனா அது முழுப்பாட்டும் கெடையாது. பாட்டுக்குள்ள ஒரு பகுதியில் ரெண்டு பேரும் ஜோடியாப் பாடுவாங்க. இந்திய நாடு என் வீடு பாட்டுதான். அதுல படச்சோன் படச்சோன் எங்ஙளப் படச்சோன்ன்னு வரும். அந்த மலையாளப் பகுதியை ரெண்டு பேரும் சேந்து பாடீருப்பாங்க. அது தவிர வேற பாட்டு எனக்குத் தோணலை.

    ReplyDelete
  11. காதல் வைபோகமே.... அடடா. கலக்கல் பாட்டு. கங்கை அமரன் ஒரு நல்ல இசையமைப்பாளர். அவர் இசையில் மட்டும் கவனம் செலுத்தீருந்தா பெரிய இசையமைப்பாளரா ஆகியிருப்பாரு. வாலி சொல்வாரு... கங்கை அமரன் அண்ணன் வழியில் இசையமைக்காமல் மன்னன் வழியில் இசையமைப்பார்னு. எந்த வழியாக இருந்தால் என்ன... இந்த ரெண்டு வழிகளுமே நல்வழிகள்தான்.

    கங்கையமரன் இசைல பிடிச்ச இன்னொரு பாட்டு... நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு

    மெல்லிசை மன்னர் தனமான மெட்டு.. இசைஞானித்தனமான இசைக்கோர்வை. ரொம்ப நல்லாருக்கும். ரொம்ப ரொம்ப.

    ReplyDelete
  12. // சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலில் பின்னணி குரல் கொடுத்த பெருமை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கே சாரும். //

    ரொம்ப சரியாச் சொன்னீங்க. இந்தப் படம் 16வயதினிலேக்கு முன்னாடியே வந்துருச்சு.

    இந்தப் படத்துலதான் ஸ்ரீதேவி முதமுதலா கதாநாயகி ஆனாங்க. அந்த வகைல ஸ்ரீதேவிக்கும் இந்தப் படத்துலதான் முதன்முதலா பாடற்குரல் கெடைச்சது. ஸ்ரீதேவிக்கு மொத்தம் மூனு பாட்டு இந்தப் படத்துல.

    1. அவள் ஒரு கதாநாயகி - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி (இன்னொரு பாத்திரத்திற்கு)
    2. ஆடி வெள்ளி தேடியுன்னை - வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன்
    3. வசந்தகால நதிகளிலே - வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன், மெல்லிசை மன்னர்

    இந்த மூனுல எந்தப் பாட்டை முதலில் பதிவு பண்ணினாங்கன்னு தெரியலை. வசந்தகால நதிகளிலேயாக இருக்கவே வாய்ப்பு நிறைய உண்டு. இருந்தாலும் ஸ்ரீதேவிக்கு முதலில் குரல் கொடுத்தது வாணி ஜெயராம், பி.சுசீலான்னு சொல்லலாம்.

    குழந்தை நட்சத்திரமா ஏதாச்சும் பாட்டு இருக்கான்னு யோசிச்சேன். இருக்கு. ஆனா அதுல ஸ்ரீதேவி பாடுற மாதிரி வராது. வேற இருந்துச்சுன்னா சொல்லுங்க.

    ReplyDelete
  13. பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது... பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது. ஏன்? வயித்து வலியா இருக்கும். இது எங்கயோ படிச்ச நகைச்சுவைத் துணுக்கு.

    ஆனா இந்தப் பாட்டுல மெல்லிசை மன்னர் குரல் குடுத்திருக்காருன்னு நெறைய பேருக்குத் தெரியாது. அவரு இன்னும் பாடியிருக்கலாம். ஏனோ இசையமைக்கிறதோட நிறுத்திக்கிட்டாரு. இதைக் கூட அவர் கிட்ட உதவியாளரா இருந்த ஜி.கே.வெங்கடேஷ் வற்புறுத்தித்தான் பாடுனாருன்னும் சொல்வாங்க. இந்தப் பாட்டுக்கு வற்புறுத்துன ஜி.கே.வெங்கடேஷ் இன்னும் நாலஞ்சு பாட்டுகளுக்கும் வற்புறுத்தீருக்கக் கூடாதா! எனக்குத் தெரிஞ்சி எல்லாப் பெரிய இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியது மெல்லிசை மன்னராத்தான் இருக்கும்னு நெனைக்கிறேன்.

    வி.குமார் - எனக்கென்ன குறைச்சல்
    இசைஞானி - தாய் மூகாம்பிகை படத்துல அலைமகள் நீயேங்குற பாட்டு
    கங்கை அமரன் - ஓடம் எங்கே போகும் நதி வழியே (ராமராஜனோட முதல் படம். இந்தப் பாட்டுக்கு (சங்கர்)கணேஷ் நடிச்சிருப்பாரு)
    எஸ்.வி.ரமணன் - ஆண்டவனே உன்னை இங்கு சந்திக்க வேண்டும் (உருவங்கள் மாறலாம்)
    ஏ.ஆர்.ரகுமான் - ஆலாலகண்டா, விடைகொடு எங்கள் நாடே
    பரத்வாஜ் - மெட்டுக்கட்டித் தவிக்குது ஒரு பாட்டு (இந்தப் பாட்டுக்கு இசையமைத்தது மெல்லிசை மன்னர் என்று பாடல் எழுதிய வைரமுத்துவே கூறியிருக்கிறார். ஆனால் இசைவட்டில் அப்படிப் போடவில்லை. என்ன காரணமோ!)

    ReplyDelete
  14. வருகைக்கு நன்றி ஆயில்ஸ் ;)

    சங்கா said...

    கலக்குறீங்க, புதுபுதுத் தகவல்களுடன் (அட்லீஸ்ட் எனக்கு)!//

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  15. /ஆயில்யன் said...

    //இங்கே நான் தரும் தொகுப்பு, சில திரைப்படங்களின் ஒலி நாடாக்கள்/இசைத்தட்டுக்கள் முதலில் வந்தபோது காணாமல் போன வரிகளோ அல்லது இசைப்பகுதியோ பின்னர் திரைப்படத்தில் வந்த போது சேர்க்கப்பட்டு வந்த பாடல்களாக ஐந்து பாடல்களைத் தருகின்றேன்.//

    புதுசு புதுசா கண்டுபுடிக்கிறீங்க பாஸ் உங்களோட இந்த அப்ரோச் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு!

    கண்டினியூ!
    கண்டினியூ!! :))/

    Repeattttuuuuuu...

    ReplyDelete
  16. கன்டினியூ...கன்டினியூ

    ReplyDelete
  17. //ஆயில்யன் said...

    புதுசு புதுசா கண்டுபுடிக்கிறீங்க பாஸ் உங்களோட இந்த அப்ரோச் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு!

    கண்டினியூ!
    கண்டினியூ!! :))
    //

    Repeatae :))))))))))))

    ReplyDelete
  18. Ellamae super paatukkal boss :))) Nanni for the collecctions :)

    ReplyDelete
  19. சென்சார் போர்டு கெடுபிடி எம்ஜியார் பாடல்களுக்கு நிறைய இருந்தது.

    “விவசாயி” என்ற படத்தில்
    “இருந்திடலாம் நாட்டில் பல
    வண்ணக்கொடி .....” என்று ஆரம்பித்து “அது கருப்பு சிவப்பு என்னும் வர்ணகொடி” என்று முடிவது, சென்சார் போர்டு கெடுபிடியால் “பஞ்சம் இல்லையென்னும் அன்னக்கொடி” என்று மாறியது.

    ReplyDelete
  20. கே.ரவிஷங்கர் said...

    அதில் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கமும் ரிகார்ட் பாடல் செய்யப்படும்.
    டபுள் பிளெட் பாடல் அல்லது சிங்கள் பிளெட் பாடல்.//

    வாங்க ரவிஷங்கர்

    நீங்கள் சொல்லும் கருத்தையும் ஏற்க முடிகிறது, ஆனால் அப்படியான பாடல்கள் மேலதிக சரணம் கொண்ட பாடல்களே, ஆனால் காதல் வைபோகமே போன்ற பாடலில் ஆரம்பத்திலும் இடையிலும் மெருகேற்றல் செய்யப்பட்டிருக்கு.

    எம்.ஜி.ஆர் காலத்துப் பாடல்கள் பலவற்றிற்கு தணிக்கை அமைஞ்சிருக்கு நீங்க சொல்லும் உதாரணம் கூட. இதுக்கு ஒரு தனிப்பதிவு போடணும் போல ;)


    SUREஷ் (பழனியிலிருந்து) said...

    நாங்க ஓட்டுப் போட்டாச்சு...,//

    ரொம்ப நன்றி தல ;)

    ReplyDelete
  21. தல,

    என் லேட்டஸ்ட் இசைப் பதிவு பற்றி உங்கள் கருத்து அறிய ஆவலாக உள்ளேன்.

    தலைப்பு:-

    ”பூவண்ணம்” ஷோபாவுடன் நடந்தவாறு.......

    //http://raviaditya.blogspot.com/2009/08/1.html//

    ReplyDelete
  22. வித்தியாசமான தொகுப்புகள் தாம் இரசிக்கும்படியாக.

    ஓட்டு போட்டாச்சு(நல்லவரே)

    ReplyDelete
  23. பிரபா அத்தனை பாடல்களும் தேன் தான்.பிரபா நல்லா முயற்சி.நான் அநேகமாக எல்லாப் பாடல்களையுமே முழுமையாகக் கேட்டிருக்கிறேன்.
    கேட்காதவர்களுக்கு நிறைவாய் இருக்கும்.எனக்கும்கூட.

    ReplyDelete
  24. நல்ல தொகுப்பு...

    ReplyDelete
  25. நல்ல அலசல் ...,
    ”உதய சூரியனின் பார்வையிலே
    உலகம் விழித்துகொண்ட வேளையிலே”
    கூட “புதிய சூரியன்” என்று
    மாற்றி படத்தில் வந்தது.
    ”மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்” படத்தில் “திரு.வி.க” ஆனது.

    சின்ன வயசுல பாட்டு கேட்டுட்டு,
    படம் பார்க்கும்போது குழம்பியதுண்டு.

    ReplyDelete
  26. //பரத்வாஜ் - மெட்டுக்கட்டித் தவிக்குது ஒரு பாட்டு (இந்தப் பாட்டுக்கு இசையமைத்தது மெல்லிசை மன்னர் என்று பாடல் எழுதிய வைரமுத்துவே கூறியிருக்கிறார். ஆனால் இசைவட்டில் அப்படிப் போடவில்லை. என்ன காரணமோ!//

    இசை வட்டில் பாடலுக்கு கீழே
    composed by MSV ன்னு வந்தது,
    ஆனா படத்தோட "Title Card"- ல
    போடாம விட்டுட்டாங்க.

    குலேபகாவலியில்
    ”மயக்கும் மாலை பொழுதே” கே.வி யோட பாடல்,
    ஆனா படத்தோட இசை MSV ...,
    அங்கே கே.விக்கு நடந்தது..,
    பின்னாளில் MSV க்கு
    காதல் மன்னனில் நடந்தது.

    ReplyDelete
  27. இதே போல "நிழல்கள்" படத்தில் பொன் மாலை பொழுது பாடலில் கூட மூன்றாவதாக ஒரு பாரா உண்டு.. வரிகள் நினைவில்லை அனால் பாலு சார் அதை ஒரு நிகழ்ச்சியில் பாடி காட்டினர்

    ReplyDelete
  28. kannabiran, RAVI SHANKAR (KRS)
    எம்.எஸ்.வி-யின் இது போன்ற கனத்த Base Voice-க்கு, அவர் கூடப் பாடப் பொருத்தமான பின்னணி பாடகி யார்? = சுசீலாம்மாவா?//

    வாங்க தல, எனக்கென்னமோ இருவருக்குமே ஏற்ற விதத்தில் மாற்றிப் பாடியிருக்கிறார் போலப் படுகிறது. பாலிருக்கும் பாட்டில் அடக்கி வாசிக்கிறாரே. வருகைக்கு நன்றி கண்ண தாசனே ;-)

    கோபிநாத் said...

    அருமையான தொகுப்பு தல..நன்றி ;))//

    நன்றி தல

    G.Ragavan said...

    அஞ்சு பாட்டும் அஞ்சு விருந்துகள். ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதம்.//

    ராகவன் உங்களைப் போன்ற இசைவிரும்பிகளின் கவனத்தை ஈர்ப்பது சிறப்பா இருக்கு. இதில் வரும் வசந்த கால நதிகளிலே உங்கள் தெரிவாச்சே. உங்கள் பின்னூட்டங்களை வைத்து ஒரு அழகிய பதிவே கோர்க்கலாம். மிக்க நன்றி


    நிஜமா நல்லவன், இயற்கை, G3

    மிக்க நன்றி உங்கள் வருகைக்கு

    ReplyDelete
  29. நட்புடன் ஜமால் said...

    வித்தியாசமான தொகுப்புகள் தாம் இரசிக்கும்படியாக./

    நன்றி நண்பா

    ஹேமா said...

    பிரபா அத்தனை பாடல்களும் தேன் தான்.பிரபா நல்லா முயற்சி.//

    வருகைக்கு நன்றி ஹேமா

    மிக்க நன்றி நாணல்

    கலைக்கோவரே

    தகவலோடு வந்த பின்னூட்டத்துக்கு நன்றி

    Anonymous said...

    இதே போல "நிழல்கள்" படத்தில் பொன் மாலை பொழுது பாடலில் கூட மூன்றாவதாக ஒரு பாரா உண்டு..//

    வணக்கம் நண்பரே

    என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியில் பாலு சொல்லி நானும் கேட்டிருக்கிறேன். தேடி எடுத்துப் அந்த ஒலிப்பதிவைப் போடுகின்றேன் மிக்க நன்றி

    ReplyDelete