Pages

Friday, March 7, 2008

சிறப்பு நேயர் "பாசமலர்"

கடந்த வாரம் றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராக வந்து தனக்கே உரித்தான ரசனையோடு சிறப்பித்திருந்தார் ஜீ.ரா என்னும் நம்ம ஜி.ராகவன். தொடர்ந்தும் இந்தத் தொடருக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றிகள்.

இந்த வாரம் முத்தான ஐந்து பாடல்களோடு சிறப்பு நேயராக வந்திருக்கின்றார் "பாச மலர்".
வளைகுடாவில் இருந்து சுனாமியாகப் படையெடுக்கும் பதிவர் வரிசையில் புதிதாக வந்திருக்கும் இவர் ரியாத், சவுதியில் இருந்து தன் பதிவுகளைக் கொடுக்கின்றார்.
இந்த வாரம் வலைச்சரம் வாயிலாக தனக்கே உரித்தான பாணியில் ரசனை மிகு வலைச்சரம் தொடுத்துக் கொண்டிருப்பது இன்னொரு சிறப்பு.

குறிப்பிட்ட ஒரு துறையில் இல்லாது எல்லா வகையான பதிவாகவும் கலந்து கட்டித்தரும் இவர் கூடவே சக பதிவர்களையும் உற்சாகத்தோடு பின்னூட்டி வருகின்றார்.

பெட்டகம் என்பது இவரின் தனித்தளமாகும். கூடவே மதுரை மாநகரம், பேரண்ட்ஸ் கிளப் ஆகிய கூட்டுப் பதிவுகளிலும் எழுதி வருகின்றார்.


இவரின் முத்தான ஐந்து தேர்வுகளை எழுதியிருக்கும் வரி வடிவங்களிலேயே எவ்வளவு நேசித்திருக்கின்றார் என்று காட்டியிருக்கின்றார். இதோ தொடர்ந்து பதிவைப் படித்தவாறே பாடல்களைக் கேட்டு ரசியுங்கள்.


1. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே..(எஸ்.பி.பி.) (புதுப்புது அர்த்தங்கள்)

எஸ்.பி.பியின் பரமரசிகை நான். திருமண வாழ்வின் சாராம்சத்தைப் பாலுவின்குரலில் கேட்கையில் என்ன ஒரு இதம் மனதுக்கு...தன் சோகம் மறைத்துப் பிறர்க்காகப் பாடும் நாயகனின் மனதிலும் குரலிலும் இழையோடும் சோகம் ..பாலுவின் குரலில் இயல்பாக
வெளிப்படும் நேர்த்தி..

"நல்ல மனையாளின் நேசமொரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே.."

இப்பாடலை நான் விரும்புவது பாலுவின் குரலுக்காக, பாடல் தரும் செய்திக்காக..
Get this widget | Track details | eSnips Social DNA


2. காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி (எஸ்.ஜானகி) (அவர்கள்)

ஜானகி, என் அபிமானப் பாடகி. ஜானகியின் குரலில் பட்டுத் தெறிக்கும் உணர்ச்சித்துளிகள் , பாடும் கதாநாயகி முகத்தில் கூட இருக்குமா என்பது சந்தேகமே. இந்தப் பாடல் மட்டுமின்றி அவரின் பல பாடல்களுக்குப் பொருந்தும் இந்த வரிகள். கதாநாயகியின் உள்ளத்தில் கட்டுக்கடங்காத மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வார்த்தைப்பின்னலும், குரலின் செழிப்பும் மீண்டும் மீண்டும் ரசிக்கத் தூண்டும்.

"கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?"

இப்பாடலை நான் விரும்புவது ஜானகியின் குரலுக்காக, மனதைத் துள்ளச் செய்து மகிழ்ச்சியில் திளைப்பதற்காக..
Get this widget | Track details | eSnips Social DNA


3. அந்தி மழை பொழிகிறது (எஸ்.பி.பி,ஜானகி) (ராஜபார்வை)

வைரமுத்துவின் வைரவரிகளில் இசைக்கும் காதல் காவியம். காதலை அணுஅணுவாக ரசிக்கும் காதலர்களின் மனநிலை இந்தப் பாடலில் வெளிப்படும் அழகு..அடடா!! என்ன வர்ணனனகள்...காதலனும் காதலியும் சளைக்காமல் வெளிப்படுத்தும் காதல் உணர்வுகள், அடிக்குரலில் பாடும் அபிமானப் பாடகர்கள்..இந்தப் பாடல் அந்தி மழை பொழியும் நேரம், சூடான காபிக் கோப்பையைக் கையிலேந்திப் பருகியபடி சன்னலோரம் அமர்ந்து மழையை ரசிக்கும் சுகத்திற்குச் சமம்...

குறிப்பிட்டுச் சொல்லமுடியாதபடி அனைத்து வரிகளும் அருமை...

இப்பாடலை நான் விரும்புவது வைரமுத்துவின் வரிகளுக்காக, கமலின் பாவங்களைக் கண்முன் கொணரும் பாலுவின் குரலுக்காக.
Get this widget | Track details | eSnips Social DNA


4. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் (சுசீலா) (பாகப்பிரிவினை)

சுசிலாவின் குரலில் குழையும் கம்பீரம் கலந்த சோகம், ஆறுதல் கலந்த நிறைவு..ஒரு பெண்ணுக்கு நல்ல மனம் படைத்த கணவனைத் தவிர வாழ்வில் வேறு எதுவும் வேண்டாம் என்று அடித்துச் சொல்லும் பாடல்..எந்தக் குறையையும் பொருட்படுத்தாத
காதல் மனைவி பாடுகையில் சுற்றுச் சூழல் அறியாது பாடலில் லயிக்கும் மனது...

"சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே மாற்றம் காண்பதுண்டோ."

இப்பாடலை நான் விரும்புவது, ஒரு நல்ல கணவன்-மனைவியின் கம்பீரக் காதலின் அடையாள வெளிப்பாட்டுக்காக..



5. புத்தம் புது மலரே (எஸ்.பி.பி) (அமராவதி)

மீண்டும் பாலுவுக்காக..இந்தப் பாடலைக் கேட்டு நீண்ட நாட்களாயிற்று..காதலியிடம் காதலன் எதிர்பார்க்கும் சின்னச் சின்ன சுகங்கள்...ஒரு தாயிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டு பாடுவது போன்ற தொனியில் ஒலிக்கும் குரல்..சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் வரிசையாய் அடுக்கி ரசிக்க வைக்கும்... மெல்லிய வாத்தியப் பின்னனியில் இதமான ரிதம்....என் தோழியின் கணவர் பாலபாரதிதான் இசையமைப்பாளர்.


"புத்தம்புது மலரே என் ஆசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திரந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன்.."

இப்பாடலை நான் விரும்புவது சின்னச் சின்ன ரசனைக்காக, என் தோழிக்காக, பாலுவுக்காக.


இன்னும் எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் சட்டென்று நினைவில் வந்த பாடல்கள் இவை...

பிரபாவுக்கு நன்றி.

அன்புடன்,
பாசமலர்

14 comments:

  1. ஆஹா,

    இந்தவாரம் நீங்களா பாசமலர்!

    கல்யாணை மாலை எனக்கும் பிடித்த பாடல்.நல்ல செய்திகள் தரும் பாடல்தான்.

    காற்றுக்கென்ன வேலி - ஜானகியின் குரலில் இனிமை. (என் பிளாகில் இந்த வரிகளை பாத்திருப்பீங்க)

    அந்திமழை பாடலில் பாலுவின் குரல்
    கொஞ்சம் வித்தியாசமாய் நன்றாக இருக்கும்.

    தங்கதிலே ஒரு குறை இருந்தாலும்
    எவர் கீரீன் பாட்டாச்சே.

    புத்தம் புது மலரேயும் அருமை.

    நல்ல பாட்டுக்கள் தந்ததற்கு பாசமலருக்கு மதுரை மல்லி ஒரு பார்சல்.:)

    ReplyDelete
  2. ஆஹா என்ன இது? இந்தவாரம் பாசமலர் வாரமா? திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க. வலைசரத்திலும் நீங்க இங்கேயும் நீங்களா? சுசிலா பாடல் நான் அடிக்கடி கேட்டது இல்லை. ஆனா ரொம்ப நல்ல பாடல் தான். மற்ற நான்கு பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த அடிக்கடி கேட்கும் பாடல்கள். வாழ்த்துக்கள் 'பாச'மலர். யாரங்கே பாச மலருக்கு ஒரு மலர்க்கிரீடம் சூட்டுங்கள்.

    ReplyDelete
  3. பிரபா,

    மீண்டும் நன்றி..

    புதுகைத்தென்றல்,

    உங்கள் வலைப்பூவில் இந்த வரிகள் பார்த்திருக்கிறேன்..

    நிஜமா நல்லவன்,

    நன்றி..

    ReplyDelete
  4. வாவ்...
    அருமையான பாடல்கள் பாசமலர்.
    நான் தேர்வு செய்து வேறுவழியின்றி நீக்கியவை.

    நன்றிம்மா :)

    ReplyDelete
  5. அனைத்தும் அழகான பாடல்கள் பாசமலர்!

    1.)இந்த படத்தின் பாடல்கள் நிறைய நேயர்கள் தங்கள் தேர்வில் குறிப்பிட்டிருந்தார்கள் பார்த்தீர்களா?
    ஒரு பீரியடில் இளையராஜாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் பட்டையை கிளப்பும்!! அந்த மாதிரி சமயத்தில் வந்த மென்மையான இனிமையான பாடல்.

    2.)உங்கள் பதிவை பார்க்கும் முன்னரே நான் கீழ்க்கண்ட வரிகளை பின்னூட்டத்தில் எழுதினேன்!
    "கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது,மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது"
    அடா அடா!!
    கவிஞரின் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை! ஒரு பெண்ணின் மகிழ்ச்சியை மிக அழகாக வர்ணித்திருப்பார் :-)

    3.) காதல் தாகத்தில் வாடும் இரு உயிர்களின் வெளிப்பாடு அருவருப்பு இல்லாமல்,ஆபாசம் இல்லாமல் கவித்துவமாக அமைந்திருக்கும் இந்த பாடல் முழுதும்.

    4.)சுசீலா பாட்டா??ஜிரா அண்ணாச்சி உருகிட போறாரு!!
    மென்மையாக தவழ்ந்து வந்து புன்னகையை தக்க வைக்கும் பாடல்!!
    பெண் என்றாலே அன்பு,தாய்மை,பரிவு போன்ற குணங்கள் தானே தோன்றும்.இந்தப்பாடலை கேட்டாளே இந்த நற்குணங்கள் நிறம்பியவளே பெண் என்று நம்மை எண்ண வைத்து விடும் பாடல் இது!

    5.)இந்த பாடல் எனக்கு பெரியதாக சிறப்பாக என்றும் தோன்றியதில்லை,ஆனால் இன்று எஸ்.பி.பியின் குரலுடன் கேட்கும் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது!! :-)

    @கானா
    இந்த பாடலுக்கு பாட்டு முழுமையடையும் முன்னரே கோப்பு நிறைவடைந்து விடுகிறதே அண்ணாச்சி!! ;)

    ReplyDelete
  6. ரிஷான்,

    உங்கள் தெரிவும் இதில் இருந்ததா..

    CVR,

    உங்கள் விமர்சனம் நன்று..புத்தம் புது மலரே..இப்போது சர் செய்து விட்டார் பிரபா

    ReplyDelete
  7. அஞ்சு பாட்டுதான் கேக்கனும்னு சொல்லீருக்காரு பிரபா. ஆனா நீங்க அஞ்சு முத்துகளைக் கேட்டிருக்கீங்களே. எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டுங்க. ரெண்டு விஸ்வநாதன். ரெண்டு இளையராஜான்னு பிரிச்சிக் கேட்டிருக்கீங்க. :)

    ReplyDelete
  8. இந்த வாரம் பாச மலர் அக்காவா!!! சூப்பர் :)

    \\வளைகுடாவில் இருந்து சுனாமியாகப் படையெடுக்கும் பதிவர் வரிசையில் புதிதாக வந்திருக்கும் இவர் ரியாத், சவுதியில் இருந்து தன் பதிவுகளைக் கொடுக்கின்றார்.
    இந்த வாரம் வலைச்சரம் வாயிலாக தனக்கே உரித்தான பாணியில் ரசனை மிகு வலைச்சரம் தொடுத்துக் கொண்டிருப்பது இன்னொரு சிறப்பு. \\

    வளைகுடா பகுதியில் வருபவர்கள் அனைவரும் ஒரு சுனாமி தான் போல!! ;))

    \\குறிப்பிட்ட ஒரு துறையில் இல்லாது எல்லா வகையான பதிவாகவும் கலந்து கட்டித்தரும் இவர் கூடவே சக பதிவர்களையும் உற்சாகத்தோடு பின்னூட்டி வருகின்றார். \\

    சரியாக சொன்னிர்கள் தல...சக பதிவர்களை உற்சாகத்தோடு பின்னூட்டம் இடுவதில் இவருக்கு தனி இடம் உண்டு.

    \\பெட்டகம் என்பது இவரின் தனித்தளமாகும். கூடவே மதுரை மாநகரம், பேரண்ட்ஸ் கிளப் ஆகிய கூட்டுப் பதிவுகளிலும் எழுதி வருகின்றார். \\

    பெட்டகம் என்று சொல்வதை விட கவிதை பெட்டகம் என்று சொல்லாம். அவரின் அனைத்து கவிதைகளும் குறிப்பாக மொழிப்பெயர்ப்பு கவிதைகள் எழுவதில் வல்லவி இவுங்க ;))

    பெயருக்கு ஏற்றால் போல பாச மலர் உண்மையிலேயே பாச மலர் தான்.

    ReplyDelete
  9. //ரிஷான்,

    உங்கள் தெரிவும் இதில் இருந்ததா..//

    ஆமாம் பாசமலர்.
    இந்த மாதக் கடைசி வெள்ளி எனது வாரம்.
    நீங்கள் கட்டாயம் இந்தப் பக்கம் வந்து எனது தெரிவுகளைக் கேட்கவேண்டும் :)

    ReplyDelete
  10. 1. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே..(எஸ்.பி.பி.) (புதுப்புது அர்த்தங்கள்)

    என்ன சொல்ல இந்த பாடலை பத்தி....எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த பாடலின் துவக்கத்தில் ராஜாவை திரையில் காட்டுவார்கள். ராஜா மெய்மறந்து தன்னோட பாடலை எஸ்.பி.பியின் குரலில் அப்படியே ரசித்துக் கொண்டுயிப்பாரு. ஆகா...ஆகா அருமையான காட்சி அது.

    \\"நல்ல மனையாளின் நேசமொரு கோடி
    நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
    சந்தோஷ சாம்ராஜ்யமே.." \\

    வாலியோட வரிகள் என்று நினைக்கிறேன்.

    \\இப்பாடலை நான் விரும்புவது பாலுவின் குரலுக்காக, பாடல் தரும் செய்திக்காக.. \\

    எத்தனை எத்தனை திருமண மண்டபங்களில் இந்த பாடல் ஒலித்திருக்கிறது. அந்த அளவுக்கு வரிகள் அர்த்தமுள்ளதாக அமைத்திருக்கும். திரு. பாலு அவர்களை பற்றி நீங்க சொல்லிட்டிங்க அதான் நான் மீதியை சொல்லிட்டேன். ;))

    2. காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி (எஸ்.ஜானகி) (அவர்கள்)

    காற்றுக்கென்ன வேலி என்ற தொடக்கத்தில் அடிக்குரலில் ஒரு விதமாக (சரியாக சொல்ல தெரியலிங்க) பாடுறாங்க பாருங்க அற்புதம். நீங்கள் குறிப்பிட்டது போல உணர்ச்சிகளை பாடலில் வெளிப்படுத்துவதில் ஜானகி அம்மா நிகர் அவரே தான் ;))

    3. அந்தி மழை பொழிகிறது (எஸ்.பி.பி,ஜானகி) (ராஜபார்வை)

    கமலோட 100வது படம். படம் தான் சரியாக போகவில்லையே தவிர பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள்.
    \\அந்தி மழை பொழியும் நேரம், சூடான காபிக் கோப்பையைக் கையிலேந்திப் பருகியபடி சன்னலோரம் அமர்ந்து மழையை ரசிக்கும் சுகத்திற்குச் சமம்... \\

    ஆகா...நன்றாக வர்ணிச்சியிருக்கிங்க ;)))

    \\இப்பாடலை நான் விரும்புவது வைரமுத்துவின் வரிகளுக்காக, கமலின் பாவங்களைக் கண்முன் கொணரும் பாலுவின் குரலுக்காக. \\

    திரு. பாலு அவரகளின் குரல் கமலுக்கு மிக கச்சிதமாக பொறுந்தும். அன்பேசிவம் படத்தில் முதலில் பாலு அவர்களை தான் போடலாம் என்று இருந்ததாம்.

    4. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் (சுசீலா) (பாகப்பிரிவினை)

    அருமையான பாடல் ;))

    \\எந்தக் குறையையும் பொருட்படுத்தாத
    காதல் மனைவி பாடுகையில் சுற்றுச் சூழல் அறியாது பாடலில் லயிக்கும் மனது... \\

    அழகாகவும், அழமாகவும் சொல்லியிருக்கிறிர்கள் ;))

    5. புத்தம் புது மலரே (எஸ்.பி.பி) (அமராவதி)

    அருமையான காதல் பாடல் ;))

    \\ மெல்லிய வாத்தியப் பின்னனியில் இதமான ரிதம்....என் தோழியின் கணவர் பாலபாரதிதான் இசையமைப்பாளர். \\

    ஆகா....அப்படியா!!! அவருக்கு ரேடியோஸ்பதி சார்ப்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லிடுங்க ;))

    \\இன்னும் எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் சட்டென்று நினைவில் வந்த பாடல்கள் இவை... \\

    சட்டென்று நினைவில் வந்தாலும் ஒவ்வொரு பாடலும் அருமை. நல்ல தொகுப்பு.

    எனக்கு பிடித்த பல பாடல்களை மீண்டும் கேட்க தந்தமைக்கு உங்களுக்கும் தல கானாவுக்கும் மிக்க நன்றி ;))

    ReplyDelete
  11. கோபிநாத்தோட பின்னூட்டத்துக்கு ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்டே போட்டுகிறேன்;;;

    ReplyDelete
  12. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம்; எல்லாமே இனிமை.

    பாசமலர் அவர்களுக்கும், கானா பிரபாவுக்கும் நன்றி.

    ReplyDelete
  13. பழைய பாடல்களாய் இருந்தாலும் எல்லாம் அருமை.. :)

    ReplyDelete
  14. ராகவன்,கோபி, ,தமிழ்பிரியன்,
    பா.ந.இளவரசன்,ரசிகன்,

    உங்களுக்கும் பிடித்த பாடல்கள் என்பதில் சந்தோஷம்..

    ரிஷான்,

    வார வாரம் நான் தவறுவதேயில்லை..

    ReplyDelete