Pages

Wednesday, January 6, 2021

எஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 32 ஏ.ஆர்.ரஹ்மானின் புத்திசை உலகில் எஸ்பிபி"செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே....."
இதை விட எத்தனையோ தேசிய விருதுக்கான அங்கீகாரப் பாடல்களை எஸ்பிபிபாடியிருக்கலாம். ஆனால் இங்கே குறித்துக் காட்டிய வரிகளைப் பாடிய பாங்கில்இன்னும் ஏதாவது விருது இருந்தால் கொடுத்து விடலாமே என்ற அளவுக்கு தமிழ்உச்சரிப்பில் உச்ச பட்ச நியாயம் காட்டியிருப்பார் எஸ்பிபி. தனக்குக் கிடைத்த ஐந்து தேசிய விருதுகளில் கே.வி.மகாதேவன், இளையராஜா, ரஹ்மான் உள்ளடங்கலாக மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களைஅடையாளப்படுத்தியிருக்கிறார். இம்மாதிரியானதொரு சாதனையை யாருமேநிகழ்த்திக் காட்டப் போவதுமில்லை, அப்பேர்ப்பட்ட வாய்ப்பும், சூழலும் இல்லை. எஸ்பிபியைப் பொறுத்த வரை எல்லா மாற்றங்களிலும் அவர் இருந்திருக்கிறார். அவரின் தனித்துவத்தைப் பேணியிருக்கின்றார். ரஹ்மானைப் பற்றி அவர் கூறும் போது “எத்தனையோ இசையமைப்பாளர்களிடம்ரஹ்மான் பணியாற்றிய போதும் தனக்கான அடையாளத்தை அவர் நிறுவிக்கொண்டார். அவர் யாரையும் பிரதி பண்ணவில்லை, தனக்கான அந்த சுகந்தத்தை(fragrance) ஏற்படுத்திக் கொண்டார்” என்றார். சொல்லப் போனால் மேற் சொன்ன எஸ்பிபியின் கூற்று அவர் வாய் வழி ரஹ்மான்பற்றியதாக இருந்தாலும், இது எஸ்பிபிக்கும் பொருந்தக் கூடியது. அதனால் தான் //எல்லா மாற்றங்களிலும் எஸ்பிபி இருந்திருக்கிறார் தன் தனித்துவத்தோடுஅடையாளப்பட்டிருக்கின்றார்// ஏன் ரஹ்மான் இசையில் எஸ்பிபி என்று எடுத்துக் கொண்டாலேயே ரஜினி, கமல், அரவிந்த்சாமி என்று தொடங்கி வினீத், அப்பாஸ், மனோஜ், ரிச்சார்ட்என்று நீளும் பட்டியலில் இன்னொரு தலைமுறைக்கான அடையாளக் குரலாகவும் இருந்திருக்கிறார். ரோஜா தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மானின் பயணத்தின் ஆரம்பம் தொட்டு எஸ்,பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கூடவே பயணத்திருக்கிறார். புதுக் குரல்களைத் தேடித் தேடிப் பயன்படுத்திய ரஹ்மானின் பாணியிலும் விதிவிலக்காக இருந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். “ஒரு பத்துப் பதினைந்து நிமிடத்தில் பாடலைப் பாடி விட்டுப் போய் விடுவார், ஒரே நாளில் சாதாரணமாகப் பத்துப் பாட்டுப் பாடுவதெல்லாம் எஸ்பிபி அவர்களால் மட்டும் தான் முடியும் அவர் ஒரு ஜீனியஸ்” என்று மனம் திறந்து பாராட்டும் ரஹ்மான், தன்னுடைய முதல் பட ஒலிப்பதிவில் ஒரு சின்ன அறையில் அமைந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் பாட வந்த எஸ்பிபி “இடம் ரொம்பச் சின்னதா இருக்கே” என்று கேட்டாராம், ஆனால் ரோஜா கொடுத்த பெரு வெற்றிக்குப் பிறகு ரஹ்மானைச் சந்தித்தவர் “சாதனைக்கு இடம் ஒரு பொருட்டே அல்ல” என்றாராம். காணொளித் தளங்களில் அவ்வப்போது கிட்டும் அரிய காணொளிகளில் 28 வருடங்களுக்கு முன்பு சிகரம் பட கெட்டப்பில் மீசை மழித்த எஸ்பிபி ரஹ்மானின் ஒலிப்பதிவுக் கூடத்தில் வைத்து “ஜப்பானில் ஒரு துணி அலங்காரத்துக்குச் சின்னச் சின்ன ஆசை என்று பதித்திருக்கிறார்கள் இதெல்லாம் எவ்வளவு பெருமை ஆனால் ரஹ்மான் இன்னும் பல உயரங்களைத் தொடுவார்,” என்று மனதார வாழ்த்தியதும்,ரஹ்மானின் பாடல்கள் ஆஸ்கார் விருதுப் பரிந்துரைக்குப் போன போது ஒரு இசை மேடையில் “ரஹ்மானுக்கு நிச்சயம் ஆஸ்கார் விருது கிடைக்கும் பாருங்கள்” என்று தீர்க்க தரிசனமாகச் சொன்னதும், “எவ்வளவு தான் ஆஸ்கார்,கிராமி விருதுகளைப் பெற்றாலும் ரஹ்மான் இன்னும் அதே பழைய பையனாக இருக்கிறாரே” என்று ஆச்சரியப்பட்டதும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற ஒரு பாடகர் மட்டுமல்ல, இசையமைப்பாளர், பல உயரங்களைத் தொட்டவரின் பொய்யா மொழியாக ஆசீர்வதித்து உயர்த்தியிருக்கின்றது. ஒருவரது திறமை என்பது ஒரு பக்கமிருக்க,இம்மாதிரியான மனதாரக் கிட்டும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் தான் ஒரு கலைஞனை மேன்மையில் உயர்த்தும். அந்தப் பண்பைக் கொடுத்தவர், கொண்டவர் எஸ்பிபி. “காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே” ரோஜா (1992) தொடங்கி “ஓ நண்பா “லிங்கா” (2014) வரை அந்தப் பயணம் தொடர்ந்திருக்கின்றது. “இதயம் பெரிதாக வாழ்ந்து பார் இன்பம் பெரிதாகி தீருமே! உன்னை எல்லாருக்கும் தந்து பார் உலகம் உனதாகி போகுமே….!” என்ற தத்துவப் பாடலோடே தன்னை நிறைவு செய்திருக்கின்றார் ரஹ்மான் கூட்டணியில். சிங்கப்பூர் ஒலி வானொலியின் தன் முனைப்புப் பாடல்களில் தவறாமல் இடம் பெறுவது “ஒருவன் ஒருவன் முதலாளி உலகின் மற்றவன் தொழிலாளி” இந்தப் பாடலில் எஸ்பிபி குரல் கொடுக்கும் கம்பீரமே கேட்கும் போது தன்னம்பிக்கையை வாரி இறைத்து விடும். பின்னாளில் அவரின் இசைக் கச்சேரிகளில் அது முகப்புப் பாடலாகவும் ஆயிற்று. என்னைப் பொறுத்தவரை “எடுடா அந்த சூரிய மேளம் அடிடா நல்ல வாலிப தாளம் எழுந்து விட்டோம் இமயம் போலே உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே”
என்ற பழநி பாரதியின் பாடல் ஈழத்தில் இக்கட்டான அந்தப் போர்க்கால வாழ்வில் எதிர் நீச்சல் போட வைத்த வலிமை மிகு பாடலாக என்றும் நினைவில் தங்கியிருக்கின்றது. எஃப் எம் 99 பண்பலை வானொலிக் குளியலைக் கொழும்பு வாழ்வியலில் கொண்டதையும் அது நினைப்பூட்டும். இந்தப் பாடலை எல்லாம் பாடும் போது சவால் எல்லாம் தூசி என்பது போல ஊதித் தள்ளும் பாங்கில் எஸ்பிபியின் தன்னம்பிக்கைக் குரல் வெளிப்படுத்தும். “ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா” இந்தப் பாடலில் அந்த “செளக்யமா” சொல்லை ஒவ்வொரு விதமாக உச்சரிக்கும் எஸ்பிபி நளினம். “பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பு” பாட்டைக் கேட்கும் போதே மாதுளைப் பழத்தை உடைத்தது போல அந்த முத்துப் பல் பிரபு மனக்கண்ணில் நிற்கப் பின்னால் அணி செய்வார் நம் எஸ்பிபி.

"அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே"

குதித்தும், பட்டாசு போல் வெடித்தும், "நறுக்குறியே" வரும் போது அருவாமணையில் நறுக்கும் நீளத்துக்குத் தன் பிரவாகத்தைத் தொட்டு நீட்டுவார்.
“என்னைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு” 90ஸ் கிட்ஸ் கடந்து இன்று மிலேனியத்தின் வெளி வாசலின் இளைய காதலருக்கும் அது காதலர் கீதமாய். தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் வரிசையில் இசைக்கருவியின் மேன்மை போற்றும் டூயட்டில் எஸ்பிபியும் ஒரு ஆகச் சிறந்த தென்னிந்திய இசைக் கருவியாய் மிளிர்ந்திருப்பார். “தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு சரக்கிருக்கிது முறுக்கிருக்குது மெட்டுப் போடு” அங்கீகரிக்கப்படாத தமிழ் மொழி வாழ்த்தோ? “என் காதலே என் காதலே நீ என்ன செய்யப் போகிறாய்?” பாடலில் சாக்ஸபோன் தான் எஸ்பிபியோ அன்றி எஸ்பிபி தான் அந்த சாக்ஸபோனோ? “வெட்ட வெளியில் போவோமா அடி சிட்டுக்குருவியின் சிறகை கேள் நட்ட நடு நிசி நேரத்தில் நாம் சற்றே உறங்கிட நிலவை கேள்” ஜூலை மாதம் வந்தால் பாட்டை எல்லாம் ஒரு முறை கேட்டால் ஒரு நூறு முறையாவது கேட்டு விட்டு ஓய்வேன். இங்கெல்லாம் ரஹ்மானும் எஸ்பியும் நேரலையில் இயங்குவார்கள்.
https://www.youtube.com/watch?v=wqUy5UVO5vs “வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌனங்கள் கூடாது வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது” அந்த “வாய்ப்பூட்டு” என்ற சொல்லில் ஒரு எள்ளல் தொனிக்குமே அங்கே எஸ்பிபி இருப்பார். இது எம்.எஸ்.வி காலம் தொட்டு ரஹ்மான் காலம் உள்ளடங்கலாக எஸ்பிபியிடமிருந்து நீக்க முடியாத முத்திரை. “மானூத்து மந்தையில மான்குட்டி பெத்த மயிலே ஹய்யோ பொட்டப்புள்ள பொறந்ததுனு பொலிகாட்டில் கூவும் குயிலே ஏ.ஆர்.ரஹ்மானுக்குக் கிராமிய இசை வருமா? என்ற நினைப்பை மாற்றிக் காட்டிய கிழக்குச் சீமையிலே “மானூத்து மந்தையிலே மாங்குட்டி பெத்த மயிலே பாடலைக் கேட்டாலேயே நாட்டுக் கோழியும், வெறுஞ் சோறும் சாப்பிட்ட பின்னால் எழும் முறுக்கேறும். வேட்டியை மடித்து முட்டிக்காலுக்கு மேல் ஏற்றி எஸ்.பி.பி அடி பின்னியிருப்பார். தமிழ், மலையாளம் என்று பயணப்பட்ட ரஹ்மானுக்கு தெலுங்கு ஒரு புது உலகம். அங்கு திறமைசாலியான இசையமைப்பாளர் என்பதை விட, மணம், குணம் நிறைந்த காரமான படைப்புகளே அதிகம் எடுபடும் சூழலில் கோட்டி போன்றோர் கோட்டை கட்டிய உலகில் அங்கும் ஒரு காலத்தில் உதவி இசையமைப்பாளராகப் பணியாற்றிய ரஹ்மான் செல்லும் போதும் தன் அடையாளத்தோட பயணிக்கிறார். “பக்கா ஜென்டில் மேன்னா? சொந்த பந்தம் இல்லா ஆளா? பூவில் படுக்கை போட்டுத் தருவேன் வருவாயா?” https://www.youtube.com/watch?v=K0QIgGAln-A ரஹ்மானோடு கூடப் பயணித்த எஸ்பிபியும் சோடை போகாத தன் நளினத்தைக் காட்டிய சூப்பர் போலீஸ் பாட்டு. மலையாளத்தில் முதன் முறை ரஹ்மான் இசையமைத்த “ஜோதா” தன் ரஹ்மானுக்கே முதல் படம் என்று மலையாளிகளோட தேசம் இன்னும் பெருமையடித்துக் கொண்டிருக்கின்றது. அந்தப் படம் தமிழுக்கு மட்டுமல்ல, தெலுங்கு, ஹிந்திக்கும் மொழி மாறிய போது எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களே அடையாளப்பட்டார், மூலப் படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ் குரல் பயன்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய பாடல்களைத் திரட்டும் பணியில் கிட்டத்த 2 மணி நேரம் செலவழித்தேன். அதில் கிட்டிய திரட்டுப்படி மொழி மாற்றுப் படங்கள் உட்பட மொத்தம் 151 பாடல்களைப் பாடியிருக்கிறார். நேரடிப் படங்கள் என்று கணக்கு வைத்தால் 59 படங்களும், அதில் தமிழில் மட்டும் 33 படங்களிலும் எஸ்பிபி பாடியிருக்கிறார். வழக்கமாக ரஹ்மானின் படங்கள் ஒரு மொழியில் படமாகும் போது அது மற்றைய மொழிகளுக்கும் மொழி மாற்றப்படும். அவ்விதம் ஆகியவை அதிகம் தமிழில் இருந்து தெலுங்கு, ஹிந்திக்குப் போன போதும் அயல் மொழிகளிலும் எஸ்பிபி குரலே பயன்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டூயட் படம் தமிழில் இருந்து தெலுங்கு, ஹிந்திக்குப் போன போது இம்மூன்று மொழிகளிலும் சேர்த்து மொத்தம் 15 பாடல்களைப் பாடியிருக்கிறார். ஸ்வதேஷ் ஹிந்திப் படம் தமிழில் தேசம் ஆன போது எஸ்பிபி பாடிய “திரிகோண மூலம்” https://www.youtube.com/watch?v=LjWnCrOhHB0 பாடல் தான் எவ்வளவு கச்சிதமாக மொழி மாற்றிலும் அவர் பொருந்திப் போகும் பாங்கைக் காட்டுகின்றது பாருங்கள். தெனாலி படத்தின் உரிமையை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தெலுங்குக்கு வாங்கிய போது ஒரு புதுமை நிகழ்ந்தது. அந்தப் படத்தில் எஸ்பிபி, எஸ்.பி.சைலஜா, பல்லவி, சரண் என்று அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருமே ஒவ்வொரு பாட்டிலும் அங்கம் வகித்தனர். குழந்தைப் பாடகர்களாக முன்னர் பல்லவி, சரண் இணைந்து பாடிய வகையில் 27 ஆண்டுகள் கழித்து ஜோடிப் பாடகர்களாகவும் இந்தப் படத்தில் “போர்க்களம் இங்கே” பாடலின் தெலுங்கு வடிவத்தை
https://www.youtube.com/watch?v=7M4Wh9l5JeY
பாடியிருக்கிறார்கள். முந்திய பகிர்வில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சரண், பல்லவியின் நேரடிப் பாடல்களையும் அலசியிருந்தேன். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய பாடல்களின் விரிவான தொகுப்பு, மற்றும் மொழி வாரியான திரட்டை “பாடகன் சங்கதி” நூலில் கொடுக்கின்றேன். இன்று தனது 54 ஆவது பிறந்த நாளில் காலடி வைத்திருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சில வாரங்களுக்கு முன் தான் தன் தாயை இழந்த பெருஞ் சோகத்தில் இருக்கும் சூழலில் இந்தப் பகிர்வை ஒரு நினைவுப் பகிர்வாக மட்டும் அளிக்கின்றேன். வானம் உனக்கு பூமியும் உனக்கு வரப்புகளோடு சண்டைகள் எதற்கு வானம் உனக்கு பூமியும் உனக்கு வரப்புகளோடு சண்டைகள் எதற்கு வாழச் சொல்லுது இயற்கையடா வாழ்வில் துன்பம் செயற்கையடா கானா பிரபா

0 comments: