Pages

Tuesday, January 5, 2021

எஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 31 மலையாளக் கரையோரம் ஒளி வீசிய நிலா

"நவமேகமே..... 

குளிர் கொண்டு வா …

ஒரு செங்குறிஞ்ஞி பூவில் 

மிருது சும்பனங்கள் நல்கான்....”

மலையாளிகளோட ஹிருதயம் நிறைஞ்ஞ பாட்டுகளில் 

“தாராபதம் சேதோஹரம் ப்ரேமாமிர்தம் செய்யும்னிதா”

https://www.youtube.com/watch?v=U_mz8K7Cn7I

பாட்டுக்கும் தனி இடம் உண்டு. அந்தப் பாடலை சித்ரா ஆரம்பிக்கும் போது இந்தப் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பகுதியோடு தான் எஸ்பிபி தொடங்குவார். இந்த வரிகளை மட்டும் எடுத்து ஆலாபனை செய்யும் சேட்டன்மார்களின் காணொளிகள் யூடியூபில் கொட்டிக் கிடக்கும். அதில் குறிப்பாக மலையாளத்தின் இளம் இசையமைப்பாளர் இஷான் தேவுக்கு இந்தப் பாட்டில் அப்படி என்ன இஷ்டமோ TikTok, SoundCloud என்று தான் போகும் இடமெல்லாம் இந்த வரிகளை ஒப்புவித்துக் கொடுத்திருக்கிறார். 

மாதிரிக்கு ஒன்று

https://www.youtube.com/watch?v=RRMKck_oZHU

மலையாள மனோரமா தொலைக்காட்சி மேடை நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பாடி முடித்து விட்டு எஸ்பிபி அந்தக் கடைசி வரிகளை சித்ராவோடு மீண்டும் பாட வேண்டி வைப்பாரே ஒரு சங்கதி அப்படியே மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன. அதை இப்போது பார்க்கும் போதும்.

https://www.youtube.com/watch?v=M9Wd5KkxhUo

“தாராபதம்” பாடலின் வரிகள் தான் மலையாளம். ஆனால் பாடலின் இசையும், மலையாளத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கும் சித்ரா தான் வாழ்க்கைப்பட்ட தமிழில் பாடும் கொஞ்சம் வெட்கப் புன்னகை கொட்டிய குரலும், எஸ்பிபி அவர்கள் எந்த மொழிக்குச் சென்றாலும் விட்டுக் கொடுக்காத சங்கதிகளில் நர்த்தனம் புரியும் அவரின் குரலும், பாடல் வரிகளில் கொடுக்கும் உணர்ச்சி பேதங்களுமாக அக்மார்க் தமிழ்ப் பாடலைக் கேட்கும் உணர்வைக் கொடுக்கும்.  அதிலும் “லலல லலலா...” என்று கொடுக்கும் மேற்பூச்செல்லாம் தமிழ்ச் சூழலில் வரும் பாடல்களில் அதிகம் ஓடியாடும் சங்கதி.

மம்முட்டி, மற்றும் பின்னாளில் கவர்ச்சி வெடிகுண்டாக விளங்கிய ஸ்வேதா மேனனின் முதல் படமாக அமைந்த “அனஸ்வரம்” என்ற மலையாளப் படத்தில் இடம் பிடித்த “தாராபதம்” பாடல் எஸ்பிபி & சித்ரா ஜோடி கட்டிய பாட்டுப் போல இன்னொரு புதுமை அதே படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், மலேசியா வாசுதேவனும் குழுவினரோடு பாடும் 

“கல்லெல்லாம் கற்பூர முத்துப் போலே

ஈ புல்லெல்லாம் கஸ்தூரி முல்ல போலே”

https://www.youtube.com/watch?v=Vu33n4_mceM

மிக முக்கியமானது. ஆனால் வெளி உலகில் அதிகம் அறியப்படாத பாட்டு. இதுவும் தமிழுக்கான துள்ளிசை நடையில் அமைந்தது. இசைஞானி இளையராஜா உட்படப் பல இசையமைப்பாளர் இசையில் எஸ்பிபி & மலேசியா வாசுதேவன் கூட்டணி எண்பதுகளில் பாடியிருந்தாலும் தொண்ணூறுகளில் இசைஞானி இவ்விருவரையும் இணைத்தது, அதுவும் மலையாளத்தில் சேர்ந்தது ஒரு புதுமையான விடயம். இன்றைக்கு “அனஸ்வரம்” படம் வெளிவந்து 30 ஆண்டுகளை இந்த ஆண்டோடு தொடும் வேளை மலையாள சங்கீதத்திண்டே ஒரு முக்கியமான பாட்டாக “தாராபதம்” விளங்குவது நாற்பது வருடங்களை நோக்கி இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கும் “தும்பி வா தும்பக் குளத்தே” எஸ்.ஜானகிக்குக் கொடுத்தது போன்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு மலையாளிகள் கொடுக்கும் ஒரு அத்திப்பூ அங்கீகாரம். 

கேரள சினிமாவில் பொதுவாகவே ஆண் பாடகர்களில் நம் யுகம் அறிந்த கே.ஜே.ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், எம்.ஜி.ஶ்ரீகுமார், வேணுகோபால் என்று தொடங்கி மது பாலகிருஷ்ணன் உள்ளடலங்கலாக பொது ஒற்றுமையாக “நாசிக் குரல்” என்ற மெல்லிசை ஒட்டியிருப்பதால் என்னதான் மம்மூட்டி, மோகன்லால் போன்றோர் காட்டானாக நடித்தாலும் இவ்வகைப் பாடகர்களே அணி செய்வார்கள். அதிலும் பெரும்பாலான படங்களில் நாயகர்களுக்கான ஆட்டம், பாட்டமின்றி கதைச் சூழலுக்கான பின்னணி ஓசையாக இக்குரல்கள் பயன்படுவதும் மலையாளச் சூழலில் அதிகம் காண முடியும் ஒரு விடயம். 

காலாபாணி போன்ற பெரும் எடுப்பிலான படங்களில் கூட மலையாளத்தில் எம்.ஜி.ஶ்ரீகுமாரையும், தமிழில் மொழி மாற்றும் போது தான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையும் இளையராஜா பயன்படுத்தக் கூடிய சூழல் உருவானது. 

“செம்பூவே” பாடலை மலையாளத்திலும், தமிழிலும் கேட்கும் போது ஏன் மலையாளிகள் எம்.ஜி.ஶ்ரீகுமார்த்தனமான குரலை நேசிக்கிறார்கள் என்பதற்கும், ஏன் எஸ்பிபியை தமிழ், தெலுங்கு, கன்னடக்காரர் தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்பதற்குமான விடை கிட்டும். மலையாள வார்த்தைச் சந்தங்களில் ஒரு நெளிவு அதன் எழுத்துகள் போலே இருக்கும், அது சங்கதியாகக் கொடுக்கும் போது என்னதான் ஆண்மைத்தனமாக இருந்தாலும் அந்தச் சிணுங்கல் கேரளத்துத் தண்ணி குடித்தவர்களால் தான் கொடுக்க முடியுமோ என்ற எண்ணத்தைக் கொடுக்கும்.

பின்னாளில் ஶ்ரீ ராமராஜ்ஜியம் படம் தெலுங்கில் இருந்து தமிழ், மலையாளத்துக்குப் போன போது, தெலுங்கு, தமிழில் ஆக்கிரமித்த எஸ்பிபிக்கு “சப்தாஸ்வர” https://www.youtube.com/watch?v=3btVLtUiuCA என்ற ஒரு நிமிடத்துச் சொச்சம் இடம் பெறும் பாடலே மலையாளப் பதிப்பில் கிட்டியது. மது பாலகிருஷ்ணனுக்கு தெலுங்கில் எஸ்பிபி பாடியவை போய்ச் சேர்ந்தது.

“காக்கால கண்ணம்மா கண் விழிச்சுப் பாரம்மா”

https://www.youtube.com/watch?v=lFkuzb-cxaU

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மலையாளத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல் கொடுத்த மகோன்னதம் கொண்ட பாட்டு. இதே பாட்டில் ஜோடி சேர்ந்த எம்.ஜி.ஶ்ரீகுமார் மோகன்லாலுக்குக் குரல் கொடுத்திருப்பார். “ஒரு யாத்ரா மொழி” திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் இடம் பிடித்த அந்தப் பாட்டு, கதைப்படி ஒரு தமிழரான சிவாஜி கணேசனுக்குப் போய்ச் சேருகின்றது, வரிகளில் தமிழ் அடையாளத்தோடு இங்கே எஸ்பிபி.

ஒரு கொசுறுச் செய்தியாக இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜா மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனைத் தன் தாய் மொழியில் பாட வைத்து, அதே “எரிகனல் காற்றில்” 

https://www.youtube.com/watch?v=X5sklkQI3Tc

பாடலைத் தானும் இன்னொரு வடிவத்தில் பாடியதும் குறிப்பிடத்தக்கது. மெல்லிசை மன்னர் நம்மை விட்டுப் பிரிந்த போது இதே பாடலைக் கொடுத்துத் தான் நான் ஆராதித்தேன்.

கேரளம் சென்று இந்த ஜாம்பவன்களுக்கான ஒரு கெளரவம் இந்த “ஒரு யாத்ரா மொழி” பாடல்கள்.

சரி இனி எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் மலையாளத்துக்குச் சென்ற ரிஷி மூலத்தைப் பார்ப்போம். மலையாளத்தின் பிரபல நாயகன் பிரேம் நஸீர், குறுகிய காலத்திலேயே 520 படங்கள் அதுவும் 130 படங்கள் ஷீலாவுடன் ஜோடி சேர்ந்து என்று கின்னஸ் சாதனை படைத்தவர். அவருடைய நடிப்பில், பிரபல இயக்குநர் சேதுமாதவன் இயக்கத்தில் உருவாகிறது “கடல் பாலம்” என்ற படம்.

இந்தப் படத்தின் இசை தேவராஜன் மாஸ்டர் ( கமல்ஹாசனை “ஞாயிறு ஒளி மழையில்” பாடல் வழியாகப் பாடகராக அறிமுகப்படுத்தியவர்). அந்த சூழலில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை சேகர் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் இணை இசையமைப்பாளராக, இசை வழிநடத்துனராக இருந்த சூழலில், இந்த “கடல் பாலம்” படத்தில் ஒரு பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் பாட முடியாத சூழலில் சேகர் வந்து தேவராஜன் மாஸ்டரிடம் எஸ்பிபியை அழைத்துச் சென்று பரிந்துரைக்கின்றார். 

“இந்தப் பையன் நன்றாகப் பாடுகிறார் பாட வைப்போம் பிடிக்காவிட்டால் ஜேசுதாஸ் ஐ வைத்து ஒலிப்பதிவு செய்யலாம்” என்ற சேகரின் பரிந்துரையை தேவராஜன் மாஸ்டர் ஏற்று எஸ்பிபிக்கு பாடலைக் கொடுக்கிறார். ஆனால் அந்தப் பாடலை எஸ்பிபி பாடிய பாங்கில் அப்படியே இருக்கட்டும் என்று தேவராஜன் மாஸ்டர் முடிவு செய்கிறார்.

அதுதான்

“ஈ கடலும் மறு கடலும் பூமியும் மாவும் கடந்னு

https://www.youtube.com/watch?v=Mlmio9zweC8

எல்லா மதங்களைச் சார்ந்தவர்களைக் கண்டேன் ஆனால் மனிதனைத் தேடுகிறேன் என்ற சாராம்சத்தில் அமைந்த, மலையாளத்தின் மகோன்னதக் கவிஞர் வயலார் ரவிவர்மா வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட அறிமுகம் அங்கே கிடைக்கிறது பாருங்கள்.

1969 ஆம் ஆண்டு கடல் பலம் படத்தில் அறிமுகமான எஸ்.பி.பி அப்போது தான் அறிமுகமான இளம் பாடகர். அப்பேர்ப்பட்டவருக்கு ஒரு தத்துவப் பாட்டுக் கிட்டுகின்றது. மலையாள சினிமாவில் அறிமுகமான வகையிலும் எஸ்பிபி பொன் விழா ஆண்டைக் கொண்டாடி விட்டுத் தான் மறைந்திருக்கின்றார்.

மலையாளத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தேவராஜன், இளையராஜா வரிசையில் ஹிந்தியில் புகழ் பூத்த ரவீந்திர ஜெயின் இசைத்த “சுகம் சுககரம்” (மலையாள பாக்யராஜ் பாலசந்திர மேனன் இயக்கியது) படத்தின் இந்தப் பாடலை சித்ராவோடு பாடினார்.

சுககரம் இது சுககரம்

https://www.youtube.com/watch?v=eS4Kq2ItN-4

எஸ்பிபிக்கு தெலுங்கில் ஒரு சாஸ்திரிய அந்தஸ்துக் கொடுத்துத் தேசிய விருதையும் சூட வைத்த சங்கீத திலகம் கே.வி,மகாதேவன் அவர்கள் கே.விஸ்வநாத் உடன் இணைந்த இன்னொரு இசைச் சித்திரம் “ஸ்வாதி க்ரணம்”. இது மம்மூட்டியின் முதல் தெலுங்குப் படம். 

இந்தப் படத்தில் எஸ்பிபி தான் மம்மூட்டிக்காகத் தெலுங்குக் குரல் கொடுக்க இருந்தாராம். படத்தைப் பார்த்த எஸ்பிக்கும் பலத்த சந்தோஷம். ஆனால் மம்மூட்டி கே.விஸ்வநாத் இடம் சொன்னாராம்  "எப்படியாவது கஷ்டப்பட்டுப் பயிற்சி எடுத்து நானே பேசிவிடுகிறேன்" என்று. அதை அவர் நிரூபித்தார் என்று எஸ்பிபி பெருமிதத்தோடு சொன்னார்.

வாணி ஜெயராம் அவர்களுக்குச் சிறந்த பாடகி என்ற தேசிய விருதையும் கொடுத்தது. பின்னர் இந்தப் படம் மலையாளத்தில் “பிரவணம்” என்ற பெயரில் மொழி மாற்றிய போது

“சங்கீத சாகித்ய சமலங்கிருத்தே”

https://www.youtube.com/watch?v=RTpnNOFJ8xQ

பாடல் எஸ்பிபி குரலிலேயே அங்கும் பயணித்தது. “தேவனுக்கே பதி இந்த்ரா” பாடலும் கூட.

இசையமைப்பாளர் ரமேஷ் நாயுடுவின் இசையில் “ஆனந்த பைரவி” என்ற திரைப்படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாரான ஒரு இசைச் சித்திரம். அந்தப் பின்னர் மலையாளத்தில் மொழி மாற்றம் கண்ட போது “குருர் பிரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேஸ்வர” என்ற தோத்திரம் எஸ்பிபியின் அடையாளத்தோடே இருந்தது.

மணிரத்னம் இயக்கி நாகார்ஜீனா நடித்த கீதாஞ்சலி என்ற வெற்றிச் சித்திரம் தமிழில் இதயத்தைத் திருடாதே ஆனபோது மனோவின் குரலைத் தான் கேட்கும் வாய்ப்பு (!) தமிழ் ரசிகர்களுக்குக் கிட்டியது. ஆனால் மலையாளத்தில் அவை எஸ்.பி.பியோடே பயணித்தன. 

“ஓ பாப்பா” லாலி”, “ ஓ ப்ரியா ப்ரியா” எல்லாம்.

https://www.youtube.com/watch?v=xYptS7Q1Lp0

தமிழில் பாஸில் இயக்கிய “அரங்கேற்ற வேளை” அவரின் சீடர்கள் சித்திக் – லால் இயக்கிப் பெரு வெற்றி கண்ட “ராமோஜிராவ் ஸ்பீக்கிங்” மலையாளத்தில் “கதைக் களம் இது கதைக்களம்” 

https://www.youtube.com/watch?v=7e-yaqH9LHc

என்ற பாடலை எஸ்.பாலகிருஷ்ணன் இசையிலும்,

ஷியாம் இசையில் “முன்னேட்டம்” படத்துக்காக மம்மூட்டிக்காக 

“சிரிகொண்டு பொதியும்”

https://www.youtube.com/watch?v=9chN8lDMHmM

இசையமைப்பாளர் ஷியாம், மம்மூட்டி சேர்ந்த “அடையாளம்” படத்திலும் “ஜேம்ஸ் பாண்ட் சூப்பர் பவர்”

https://www.youtube.com/watch?v=dy-vDEzzrag

மோகன்லாலின் “பட்டர்ஃப்ளைஸ்” படத்தில் ரவீந்திரன் மாஸ்டர் இசையில் “பால் நிலாவிலே பவனிதழ் பூக்களே”

https://www.youtube.com/watch?v=qt0jaDaRv-Y

எஸ்.பி.வெங்கடேஷ் (சங்கீத ராஜன்) இசையில் கிலுக்கம் படத்தில் “ஊட்டிப் பட்டணம்” 

https://www.youtube.com/watch?v=IQAOnpFfdPM

பாடலில் தமிழில் எஸ்பிபி பாட, எம்.ஜி.ஶ்ரீகுமார், சித்ரா மலையாளத்தில் சேருவர்.

இப்படியாக மலையாள சலச்சித்திர உலகிலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு மணி மணியாய்க் கிட்டியன. அவை ஒவ்வொன்றும் தனித்துவம் பறையும் பாட்டுகள் ஆயின.

வின்ணிலாகே நிண்டே நெஞ்சு
பாடும் பாட்டும் கேட்டு ஞான்....

நவமேகமே குளிர் கொண்டு வா....

கானா பிரபா


0 comments: