Pages

Friday, November 20, 2020

எஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 25 ❤️ தேனிசைத் தென்றல் தேவா இசையில் ஒளி வீசிய பாடும் நிலா


“தீண்ட வரும் காற்றினையே.....
 நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே.....”

இந்தப் பாட்டைத் தான் மனசு அசை போட்டது இசையமைப்பாளர் தேவாவுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசைப் பயணத்தை எழுத வேண்டும் என்று நினைத்த போது.
தமிழ் சினிமா கண்ட காதல் காவியம் “காதல் கோட்டை” எஸ்பிபியை இவ்வளவு அழகான பாடலைப் பொருத்த வேண்டும் என்ற தீர்மானத்துக்கே விழா எடுக்கலாம் “நலம் நலமறிய ஆவல்” எல்லாம் எஸ்பிபிக்கான ஆயுட் சொத்து.
அதே போல அந்தப் படத்தில் வந்த “சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது....” எஸ்பிபியைத் தன் பாட்டில் பயணிக்க விட்டு ஓரமாக நின்று ரசித்திருப்பாரோ இந்தத் தேவா, எவ்வளவு அழகுணர்ச்சியைக் கொட்டிக் கொடுத்தது அந்தப் பாட்டு.

தேவா & எஸ்பிபி கூட்டை நினைத்தால் மடை திறந்து கொட்டுமாற் போலப் பாடல்கள் பெருக்கெடுக்கும். அவ்வளவுக்கு ஏராளம் பாடல்களைக் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார். அதுவும் இளையராஜா காலத்துக்குப் பின்னால் வந்தவர்களில் தலையாயவர் தேவாவே என்ற அளவுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்களில் நிறைந்து நிற்கின்றார். அதுவும் உன்னிகிருஷ்ணன், ஹரிஹரன் போன்ற கால மாற்றத்து உள் வரவுப் பாடகர்கள் வந்த போதும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கான அரியாசனத்தைத் தேவா இன்னொருவருக்குக் கொடுக்க முன் வரவில்லை என்று சொல்லாமல் சொல்லி நிற்கும் பாடல்கள்.

ஒரு பக்கம் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்யராஜ் போன்ற எண்பதுகளின் நாயகர்களின் தொடர் தொண்ணூறுகள் ஒரு பக்கம், அப்போதுதான் நாயகனாக அடையாளப்பட்ட சரத்குமாருக்குத் தேவா கொடுத்த பாடல்கள் என்ற அளவில் ஒரு தனி அத்தியாயம், தவிர சரவணன் போன்ற அடுத்த கட்ட நாயகர்கள், பிரசாந்த், விஜய், அஜித்குமார் என்று அடுத்த தலைமுறை அடையாளங்கள் என்று எல்லோருடனும் தேவாவின்
தேனிசை பயணப்பட்ட போது எல்லாருக்கும் மகத்துவம் மிக்க பாடகராக எஸ்.பி.பாலசுப்ரமணியம் திகழ்ந்திருக்கின்றார் என்பதை அந்தந்தப் பாடல்களே சான்று பகிரும்.
இது ஒருபுறமிருக்க ராதாபாரதி, கஸ்தூரிராஜா, மணிவாசகம் போன்ற புதுமுக இயக்குநர்கள், அன்பாலயா (பிரபாகரன்), சிவசக்தி (பாண்டியன்), லஷ்மி மூவி மேக்கர்ஸ் போன்றோரின் படங்களில் தேவாவின் வெற்றிப் பாடல்களில் ஒன்றிலாவது எஸ்பிபி இருப்பார். 

தேவா முட்டி மோதி இசையமைப்பாளராக அறிமுகமாகி வெளியான படம் “மாட்டுக்கார மன்னாரு” அந்தப் படத்திலேயே எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலாவை வைத்து “ஒரு நாள் ராத்திரி”
https://www.youtube.com/watch?v=cpIbKLel9Bc என்ற பாடலைக் கொடுத்திருப்பார். அந்த ராசியில் பின்னர் வெளிவந்து அவருக்கு நல்லதொரு அடையாளமாகத் திகழ்ந்த “மனசுக்கேத்த மகராசா” படத்தில் “ஆத்து மேட்டுத் தோப்புக்குள்ளே” https://www.youtube.com/watch?v=4uM_Nu7P4lQ இதே ஜோடியை வைத்து அழகு பார்த்திருப்பார். இசைக் கோப்பிலும் பின்னது மிகுந்த முதிர்ச்சி கொண்ட பாட்டு. சுசீலா ஜோடியாக தெலுங்கு, தமிழ், கன்னடத்தில் அறிமுகமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் இங்கே தேவாவின் அறிமுகத்துக்கு இசைக்குயிலோடு சேர்ந்து பாடியிருக்கிறார் என்பது ஒரு திட்டமிடப்படாத அதிஷ்ட நிகழ்வு.
“ஆத்து மேட்டுத் தோப்புக்குள்ளே” பாடல் ஒலிப்பதிவு முடிந்ததும் எஸ்பிபி போன் செய்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்குச் சொன்னாராம் 
“அண்ணே! உங்களை மாதிரியே பாடிக் காட்டி பாட்டு வாங்குறார்” என்று தேவாவை அவர் ஆரம்பத்திலேயே அங்கீகரித்ததாக நெகிழ்ந்தார் தேவா.

இந்த மாதிரிப் பாடல்களைத் தேடி ரசிக்கும் போது தேவா இசைத்து வெளிவராத படப் பாடல்களையும் தோண்டி எடுத்து ரசித்த காலமெல்லாம் உண்டு. அப்படி ஒன்று தான் 
“கண்ணில் ஆடும் நிலவே
 சந்தோஷக் கவிதை பாடும் குயிலே”


ராமராஜன் & குஷ்பு நடிப்பில் “மண்ணுக்கேத்த மைந்தன் பாடல் அது.

பின்னாளில் தேவாவுக்கென்று தனி முத்திரைப் பாடல்களை இனம் காண இந்த “கண்ணில் ஆடும் நிலவே” பாணியிலேயே பல பாடல்களை இசையமைத்திருக்கிறார். தேவாவின் இசைக்கான தனி வடிவத்தைக் கொடுத்த பாடல்களில் இந்த எஸ்.பி.பி & சித்ரா கூட்டுப் பாடல் முக்கியமானது. தொண்ணூறுகளில் தேவா கொடுத்த ஒரு தொகைப் பாடல்களின் முன்னோடி இசை இதுவெனலாம்.

அது போலவே பின்னாளில் அஜித்குமாருக்கு அட்டகாசமான பாடல்களைக் கொடுத்த தேவாவின் “வான்மதி” பாடல்களில் “வைகறையில் வந்ததென்ன வான்மதி” https://www.youtube.com/watch?v=t7H7vKS8SqM பாடலில் எஸ்பிபி பாடும் கணத்தில் இருந்து உருகத் தொடங்கி விடுவேன், முடிந்த பின்னும் அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருக்கும் வாய்.

இன்னும் அஜித்குமாருக்குக் ஹிட் கொடுத்த வகையில் “ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்துக் கேளடியோ திரிலோத்தமா” (ஆசை), “ஓ ரங்க நாதா (நேசம்) பாட்டுகளில் எஸ்பிபியைத் துணைக்கழைத்திருப்பார் தேவா.


“தண்ணி குடமெடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது” எஸ்பிபியின் நையாண்டி நடைக்குச் சிவப்புக் கம்பளம் விரித்த பாட்டு, வைகாசி பொறந்தாச்சு தேவாவுக்குத் தேனிசைத் தென்றல் என்ற பட்டத்தை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுக்க வைத்தது. பிரசாந்தோடு தொடர்ந்த கூட்டணியில் எத்தனை எத்தனை அழகான பாடல்கள் அங்கெல்லாம் கூட எஸ்பிபி. முந்திக் கொண்டு நினைப்பில் வருவது “பெண் வேணும் ஒரு பெண் வேணும் பசும் பொன்னு நெறத்தில பொன் வேண்டும்” https://www.youtube.com/watch?v=-9TdZ5kKS5Q இந்தப் பாட்டையெல்லாம் ஈழத்துப் போர்க்கால இரவுகளில் ஒத்தடமாகக் கேட்டதெல்லாம் பசுமையாக மனசில்.
“நீலக் குயிலே நீலக் குயிலே” ( வைகாசி பொறந்தாச்சு), ஓ கிருஷ்ணா ( உனக்காகப் பிறந்தேன்), ஏ நீலக் கருங்குயிலே நெல்லித் தோப்பு பொன் மயிலே” (கிழக்கே வரும் பாட்டு), என்று பிரசாந்துக்காக ஒட்டிய எஸ்பிபி குரல்கள்.

“ஒரு கடிதம் எழுதினேன் அதில் நான் என்னை அனுப்பினேன்....” https://www.youtube.com/watch?v=WaFPjzH6ZWo விஜய் குரலோடு தொடரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல் தேவா படத்தில் தேவா இசை கூட்ட அச்சொட்டாக அந்த இருபதுகளின் இளைஞனுக்கானதாக இருக்கும்.
தேவாவோடு “ரசிகன்” படத்தோடு இணைந்த விஜய் கூட்டணியில் இணைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல் (அதற்கு முன்னர் செந்தூர பாண்டியில் விஜயகாந்துக்கான குரலாக), முதல் எழுத்தே மோகமானால் (விஷ்ணு), நில்லடி என்றது என் மனது (காலமெல்லாம் காத்திருப்பேன்), மணிமேகலையே ( காலமெல்லாம் காத்திருப்பேன்), பொட்டு வைத்துப் பூ முடிக்கும் நிலா ( நினைத்தேன் வந்தாய்), உனை நினைத்து நான் என்னை மறப்பது ( நினைத்தேன் வந்தாய்), பூஜா வா (ப்ரியமுடன்) என்று மெல்ல மெல்ல விஜய்யின் நட்சத்திர அந்தஸ்து வளர வளரத் துணை போந்தன அந்தப் பாடலெல்லாம். அதிலும் “பாரதிக்குக் கண்ணம்மா நீயெனக்கு உயிரம்மா” (ப்ரியமுடன்) பாட்டெல்லாம் ஒரு காலத்தில் திருப்பள்ளி எழுச்சி, ஏன் இப்போது மட்டும் என்னவாம் என்பார்கள் 90ஸ் கிட்ஸ்.

“ஏ ஞானம் யெப்பா ஞானம்....
 பொழுது விடிஞ்சா போகப் போவுது மானம்....”

பிரபுதேவா என்ற நடனப் புயல் நாயக வேடம் தரித்த போது கடைக்கோடி ரசிகன் வரை கொண்டு சேர்த்த பாட்டுகளில் இந்து படத்தின் இந்தப் பாடலைத் தவிர்க்க முடியாது. எஸ்பிபியின் அந்தச் சக்தி மிக்க, துடிப்பான குரலுக்கும் ஆட்டத்துக்கும் எவ்வளவு பொருத்தம் ஆகா.

இந்தப் பாட்டு வந்த காலத்தில் மின்சாரம் இல்லா ஈழத்து வாழ்வியலில் சைக்கிள் டைனமோவால் மின் பிறப்பாக்கி அலுக்க அலுக்க அலுக்கக் கேட்டது இன்னமும் சுவைக்கிறது.
இதே படத்தில் வந்து வார்த்தை விரசத்தால் அதிகம் சீண்டாவிட்டாலும் எனக்குத் தனிப்பட்ட ரீதியில் பிடித்தது “எப்படி எப்படி” பாட்டு அங்கே எஸ்பிபியின் குறும்புத் தனமும், எஸ்.ஜானகியின் சரி பாதி சேஷ்டையும் இருக்கும். “ஏ குட்டி முன்னால” பாடலும் கூடத் தவிர்க்க முடியாத ஒன்று”. அப்போது ஹிட்டடித்த “மெட்ரோ சானல்” தேவாவுக்கானது அல்ல ஆனாலும் எஸ்பிபி பொருத்தம் கருதிச் சொல்லி வைக்க வேண்டும்.

“காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே”


“பாதக் கொலுசுச் சத்தம் நதியில் கேட்குது”


வந்த சுவடே தெரியாது போன “செண்பகம்” படப் பாடல்களை இன்றும் ஈழத்து ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தேவாவின் சோக ராகத்துக்காகவும், அவற்றில் கனிந்திருக்கும் எஸ்பிபி குரலுக்காகவும்.

தொண்ணூறுகளில் தமிழ்த்திரையிசையை இப்போது திரும்பிப்பார்க்கும் போதும் ஒரு கலவையான உணர்வு தான் தோன்றும். எண்பதுகளிலே தனிக்காட்டு ராஜாவாக இசைஞானி இளையராஜா இருந்தபோது வானொலிப்பெட்டிகளுக்கு மட்டுமே அதிகம் நெருக்கமான இசை தொண்ணூறுகளிலே அள்ளிவீசப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளில் இன்னும் நெருக்கமாக வந்து சேர்ந்தது. ஆனால் திரையிசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் வரவு என்ற ஒரு புதிய அத்தியாயம் நிகழ்த்தப்பட்டது மட்டுமே முக்கியமான மைல்கல்லாக நினைவில் நிறுத்தவேண்டியிருக்கிறது. எண்பதுகளிலே பட்ஜெட் இசையமைப்பாளர்கள் என்றிருந்த சங்கர் கணேஷ், சந்திரபோஸ், எஸ்.ஏ.ராஜ்குமார் என்ற வட்டம் சிறிதாக ஆதித்யன் போன்றோரின் வரவு நிகழ்த்தப்பட்டாலும் அதையும் தாண்டி சின்ன பட்ஜெட் படங்களின் பெரு விருப்புக்குரிய தேர்வாக அமைந்தது தேவாவின் வருகை.
புதுவசந்தம் படத்தின் பெருவெற்றியைத் தக்க வைக்கமுடியாமல் தொடந்து "பெரும்புள்ளி" போன்ற படங்களின் தோல்வியோடு வில்லனாக நடிக்க ஆசைப்பட்டுத் தயாரிப்பாளராகி ஒட்டாண்டியாகிய எஸ்.ஏ.ராஜ்குமார் ஒருபக்கம், அமரன் என்ற முதல் படத்தில் கவனிக்க வைத்தாலும் அதே படத்தின் தோல்வியும் தொடந்து துறைமுகம் போன்ற படங்களும் ஆதித்யனை அடுத்த நிலை இசையமைப்பாளாராக அதிகம் உருவாக்கவில்லை.

"வைகாசி பொறந்தாச்சு" படத்தின் பெருவெற்றியோடு அளவுகணக்கில்லாமல் படங்களை ஒப்புக்கொண்டு அதில் வெற்றியின் சதவிகிதத்தையும் கூட்டிக் கொண்டு முன்னணிக்கு வந்தார் தேவா. பாடல்களைக் காப்பியடிப்பவர் என்ற பரவலான விமர்சனம் தேவா மீது. ஆனாலும் இன்றைக்கு ஹாரிஸ் ஜெயராஜையே பத்துவருஷமாக மன்னிக்கும் தமிழ் இசை ரசிகர் உலகம் பரவலாக அள்ளிப்போட்ட தேவாவைக் கருணையோடு பார்த்தது. ராஜா காலத்தில் கேட்ட மெட்டும், ஆர்ப்பாட்டமில்லாத இசைக்கோர்வையும் மட்டும் போதும், கூடவே கவிஞர் காளிதாசன் போன்ற கவிஞர்களையும் வைத்துக் கொண்டு நிதானமாகக் களத்தில் தன் ஆட்டத்தைக் காட்டினார் தேவா.

இசைஞானி இளையராஜா அதுவரை கொடுத்து வந்த இசையின் போக்கில் வந்த மாற்றம், கூடவே ஏ.ஆர்.ரஹ்மானின் மேற்கத்தேய வாத்தியக் கோர்ப்பு மற்றும் தமிழ்ச்சூழலுக்கு அந்நியப்பட்ட இசையை உள்வாங்கத் தமிழ் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட காலம். இவற்றை எல்லாம் விட உடனேயே ஒரு பட்ஜெட் படம், எங்கோ கேட்ட பாடல் மாதிரி ஈசியாக நுழையக் கூடிய மெட்டுத் தேடிய தயாரிப்பாளர்களின் நோக்கம் எல்லாம் தேவாவால் நிறைவேறியது.


“தாளம்பூ சேல மானே என் மேலே
தாகத்தைச் சொல்லுதடி”


சூரிய நமஸ்காரம் என்று ஊர் பேர் தெரியாமல் கடந்து போன படத்தில் இருந்து தேவாவின் இன்னொரு பக்கம் கிராமியத் தெம்மாங்குகள். அதிலும் அவரே ராஜா. கூடவே எஸ்பிபிக்கும் எத்தனை எத்தனை அழகுப் பாடல்கள்.
தேவாவின் 50 வது படமான “சோலையம்மா” படத்தில் வரும் “தாமிரபரணி ஆறு அது தரையில் நடக்கும் தேரு”, கூவுற குயிலு” பாடல்களோடு எஸ்பிபிக்கான இடம் இருக்கும்.

கஸ்தூரி ராஜா கூட்டணியில் முதலில் இணைந்த ஆத்தா உன் கோயிலிலே படத்தில் “ஒத்தையடிப்பாதையிலே ஊரு சனம் தூங்கலையிலே” பாட்டைத் தனித்துச் சோக ராகம் இசைத்தும், “ஏலே இளங்குயிலே” https://www.youtube.com/watch?v=X8F1PUVa3l0 தெம்மாங்குப் பாட்டிசைத்தும், ஊரோரம் கம்மாக்கர ( தாய் மனசு), என்றெல்லாம் கூட வந்ததை மறக்க முடியுமா?


கிராமிய வாசனை இல்லாமல் சென்னை நகரச்சூழலில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு கிராமத்து அடி நாதம் எப்படியிருக்கும் என்று தன் பாடல் வழியே கற்பித்தவர் இசைஞானி இளையராஜா என்று தேவா மெச்சிப் புகழ்ந்திருக்கிறார். உண்மையில் அப்படியொரு வாய்ப்பை உள்வாங்கிக் கொண்டு தன் இசையைச் செப்பனிட்டுத் தொண்ணூறுகளில் தெம்மாங்குப் பாடல்களுக்கு ஒரு தனி அந்தஸ்தைக் கொடுத்த தேவாவுக்கு உண்மையில் ஒரு பெரும் பாராட்டைக் கொடுக்க வேண்டும்.


“பார்த்தேன் சிரித்தேன் ரசித்தேன் என் ஜன்னல் வழியாக” https://www.youtube.com/watch?v=_TcO6towvVI வெளிவராத அந்த “சாமி சொன்னா சரிதான்” படப் பாடலையும் தோண்டி எடுத்துக் கேட்கத் துடிக்கும்,. அவ்வளவுக்குப் பாந்தமாக ஒலிக்கும் எஸ்பிபி & ஸ்வர்ணலதா குரல்கள்.. 

நான் நினைத்து வந்த தேன் கனவு
அது வாழ்வில் ரொம்ப தூரம்
ஏன் எனக்கு இந்த வீண் மயக்கம்
என்று நேரில் சொல்லும் நேரம்....

என்று “புதிய நிலாவே” https://www.youtube.com/watch?v=k-FlAZoOqms பாடலில் பாடும் போது எஸ்பிபிக்காகவே எழுதி வைத்ததோ என்று எண்ணத் தோன்றும்.


சரத்குமார் எல்லாம் தேவாவுக்குக் கோயில் கட்டிக் கும்பிடலாம். அவ்வளவுக்கு நியாயம் செய்து பாடல்கள் கொடுத்தவர். தழுவல் என்றாலும் சூரியனில் வரும் “பதினெட்டு வயசு”, தழுவலே இல்லாத தனித்துவமாக அதே படத்தில்
“மன்னாதி மன்னன்கள் கதை கேட்டு”,  பேண்டு மாஸ்டரில் “புதிய நிலாவே”, 

சாமுண்டியில் இரட்டைத் தேனமுது “முத்து நகையே முழு நிலவே”, “கண்ணுல பால ஊத்த வந்த”, கட்டபொம்மனில் “ப்ரியா ஓ ப்ரியா” என்று கிராமியத் தெம்மாங்கும், மேலைத் தேயமும் கொண்டு கொடுத்தவை பற்றி எழுத நினைத்தால் முடிவுறாது நீண்டு செல்லும். இவையெல்லாம் தித்திக்கும் தேனிசையில் குழைத்த எஸ்பிபி குரல் என்றாலும் 

தென்காசிச் சாரல் கூட நீயில்லாமல்
வைகாசி வெய்யில் போல வாட்டுதே.....

ஆத்மார்த்தமாக இன்னும் நேசித்து அடிக்கடி கேட்பது “சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை” https://www.youtube.com/watch?v=Aa1Zbpq1V88

“ஆசைக்கொரு ஆளாகினான்
கீதை எனும் நூலாகினான்
யமுனை நதி நீராடினான்
பாண்டவர்க்குப் போராடினான்....

கோகுலத்துக் கண்ணா கண்ணா....


இந்தப் பாட்டெல்லாம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பெரும் பாடகனுக்கு தேவா கொடுத்த விலை மதிக்கமுடியாத மாணிக்கம்.

“நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ
கால பிரம்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ
மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும்
பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும்
புன்னகைதான் பொன்னகையோ
கன்னிகை வா வா வா வா

செம்பட்டுப்பூவே வெண்மொட்டுத் தேரே.......”

இன்னும் எத்தனை எத்தனை பாடல்கள் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் நம் எஸ்பிபியை வைத்து.

தேனிசைத் தென்றல் தேவா கொடுத்ததில் இன்னும் விடுபட்டுக் கூடாத பாடல்களாக 


1. ஓ சுவர்ணமுகி வருவேன் சொன்னபடி - கருப்பு வெள்ளை
2. சந்திரனும் சூரியனும் - வாட்ச்மேன் வடிவேலு
3. செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல - வசந்தகாலப் பறவை
4. பதினெட்டு வயது – சூரியன்
5. சோறு கொண்டு போற புள்ள - என் ஆசை மச்சான்
6. பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது - பேண்டு மாஸ்டர்
7. மகராணி மகராணி மாளிகை மகராணி – ராஜபாண்டி
8. மஞ்சள் நிலாவின் ஒளியில் – திருமூர்த்தி
9. எனக்கெனப் பிறந்தவ - கிழக்குக் கரை
10. இளந்தென்றலோ கொடி மின்னலோ - வசந்த மலர்கள்
11. கல்யாணம் கச்சேரி - அவ்வை சண்முகி
12. கங்கை நதியே கங்கை நதியே - காதலே நிம்மதி
13. ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா – கட்டபொம்மன்
14. உன் புன்னகை போதுமடி - பாஸ் மார்க்
15. காலையிலும் மாலையிலும் கல்லூரி வாசலில் வந்த நிலா - சந்தைக்கி வந்த கிளி
16. நீ ஒரு பட்டம் - ரோஜாவை கிள்ளாதே
17. ஓர் தங்கக் கொலுசு நான் தந்த பரிசு - தங்கக் கொலுசு
18. தென்னமரத் தோப்புக்குள்ளே - தெற்குத் தெரு மச்சான்
19. கம்மா கரையிலே – வேடன்
20. அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே - பொண்டாட்டி ராஜ்ஜியம்
21. நேபாளக் கரையோரம் - தாய்க்குலமே தாய்க்குலமே
22. வேடந்தாங்கலில் ஒரு வெண்புறா - சூரியன் சந்திரன்
23. அங்கம் உனதங்கம்- புது மனிதன்
24. மாலையிலே தெற்கு மூலையிலே - வாசலில் ஒரு வெண்ணிலா
25. ஏ ஞானம் யெப்பா ஞானம் – இந்து
26. தூக்கணாங்குருவி ரெண்டு – ஜல்லிக்கட்டுக்காளை
27. கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு
28. கண்களில் தூது விடு – இளவரசன்
29. கிச்சடிச் சம்பா – ஊர் மரியாதை
30. கம்மா கரையிலே – வேடன்
31. தினத்தந்திக்கு – வேடன்
32. நான் ஆட்டோக்காரன் – பாட்ஷா
33. அழகு அழகு – பாட்ஷா
34. அண்ணாமல அண்ணாமல – அண்ணாமலை
35. கொண்டையில் தாழம்பூ – அண்ணாமலை
36. ஓ ராகினி – மருமகன்
37. கூட்டுக்குள்ளே – தங்கக் கொலுசு

இசையமைப்பாளர் தேவா விமர்சனங்கள் கடந்து இன்றும் கிராமப்புறத் தேநீர்ச்சாலைகளில் இருந்து பஸ் பயணம் வரை ராஜாவுக்கு அடுத்துப் பந்தி விரித்து வெகுஜன அபிமானம் பெற்றிருக்கிறார். இவர் இசையமைத்த பத்தாண்டுக்கு முந்திய பாடல்களை இன்றும் அலுக்காமல் சுருதி பிடிக்கின்றன மினி பஸ்களின் ஒலி நாடாக்கள். தொண்ணூறுகளில் கொடுத்தவை இன்று மூன்றாவது தசாப்தத்திலும் புத்துணர்வோடு ரசிக்கப்படுகின்றன.

தேவாவின் 300 படங்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியிருக்கிறார். 
“அண்ணாமலை படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய “ஒரு வெண்புறா” வை எப்படியாவது தெலுங்கிலோ, கன்னடத்திலோ வைத்தால் என்னைப் பாட வையுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொண்டாராம், அது விஷ்ணுவர்த்தனுக்காக்ப் பின்னர் கன்னடத்தில் சேர்ந்தது இப்படி


“எஸ்பிபி நமக்குப் பாடியிருக்காவிட்டால் 
நாம உலகத்துக்குத் தெரிந்திருக்க மாட்டோம்
அவரை மாதிரித் தன்மையான மனிதர் இங்கே யாருமில்லை” 

என்று அவரின் அஞ்சலியில் நெகிழ்ந்து உடைந்தார் தேனிசைத் தென்றல் தேவா.

என் வாழ்க்கையே பிருந்தாவனம்.......
நானாகவே நான் வாழ்கிறேன்........

எஸ்பிபி காற்றலையில் பாடிக் கொண்டிருக்கிறார் அசரீரி போல் நம் மனங்களில் ஒலிக்கின்றது அது.

கானா பிரபா

தேனிசைத் தென்றல் தேவாவுக்கு இனிய 70 வது பிறந்த தின வாழ்த்துகள்

#பாடும்_நிலா 
படங்கள் நன்றி : இசையமைப்பாளர் தேவா தளம்
1 comments:

Ganesh said...

தேனிசை தென்றல், பாடும் நிலா. அருமயான கூட்டணி. நீங்கள் கொடுத்திருக்கும் அனைத்து பாடல்களும் அருமை. இதை தவிர நீலகிரி மலை ஓரத்திலே (நம்ம அண்ணாச்சி), அம்மன் கோவில் வாசலிலே (தாய் மாமன்), ஊசி மலை காடு (ராஜதுரை) பாடல்களும் இந்த் கூட்டணியில் எனக்கு பிடித்த பாடல்கள்.